கோவிட்-19 இரண்டாவது அலையிலிருந்து மக்களை மீட்க பல நாடுகள் போராடி வரும் ஓர் இக்கட்டான சூழ்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனை தலைமையிடமாக்க் கொண்டு செயல்பட்டு வரும் `ஃபைசர் இன்க் (Pfizer Inc.)” நிறுவனமானது அதனுடைய தடுப்பூசியை இறக்குமதி செய்யவிருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளிடம் தனது `தாதாகிரி’ யைக் காட்டிவருகிறது.
1849 ஆம் ஆண்டு ஜெர்மனியிலிருந்து புலம் பெயர்ந்து அமெரிக்கா வந்த சார்லஸ் ஃபைசர், சார்லஸ் எர்கார்ட் சகோதரர்களால் நியூயார்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம் ஃபைசர் ஆகும். இன்றைக்கு உலகளவில் இதன் வருமானம் சுமார் 42 பில்லியன் டாலர். நிறுவனத்துக்கான மொத்த சொத்து மதிப்பு சுமார் 179 பில்லியன் டாலர். 2020 ஆம் ஆண்டு இதன் நிகர வருமானம் ஏறக்குறைய 10 பில்லியன் டாலர். உலகெங்கிலும் இந்நிறுவனத்தில் சுமார் 80,000 பேர் பணியாற்றி வருகிறார்கள்.
2020 ஆம் ஆண்டு இந்நிறுவனத்துக்கான விற்பனை வருமானத்தில் 52 சதவிகிதம் அமெரிக்காவிலிருந்தும் தலா 6 சதவிகிதம் ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்தும், 36 சதவிகிதம் ஏனைய நாடுகளிலிருந்தும் கிடைத்திருக்கிறது.
புற்றுநோய், இருதயநோய், குடல் சம்பந்தப்பட்ட நோய்கள், நரம்பியல் சம்பந்தப்பட்ட நோய்கள், நோயெதிர்ப்பு மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் போன்றவற்றைத் தயாரித்து விற்பதில் உலகளவில் ஃபைசர் ஒரு முன்னணி நிறுவனமாக இருந்து வருகிறது.
கோவிட்-19 பெருந்தொற்றுக்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த உயிரியல் தொழில்நுட்ப நிறுவனமான பயோ’என் டெக் (Bio N Tech)குடன் சேர்ந்து தடுப்பூசியை கண்டுபிடித்து உலகளவில் சந்தைப்படுத்தி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30,000 பேர்களிடம் இந்தத் தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அரசு 100 மில்லியன் டோஸ் வேண்டி இந்நிறுவனத்துக்கு 1.95 பில்லியன் டாலர் கொடுத்திருக்கிறது.
இந்நிறுவனம் `யூரோப்பியன் கமிஷனுக்கு’ ஆரம்பத்தில் 200 மில்லியன் டோஸ் வழங்கவும், அதன் பின் 100 மில்லியன் டோஸ் தடுப்பூசி வழங்கவும் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அமெரிக்க அரசுக்கு இரண்டு டோஸ் 39 டாலர் என்கிற விலையில் விற்பதற்கு சம்மதித்து இருக்கிறது.
2020 ஆம் ஆண்டு மட்டும் இந்தத் தடுப்பூசி சுமார் 154 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி இருக்கிறது.
பெருந்தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்றும் பொருட்டு அனைத்து நாடுகளும் சில நிறுவனங்கள் மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வரும் தடுப்பூசிகளை நம்பியிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலைமையில், ஃபைசர் நிறுவனம் தனது தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய வேண்டுமெனில் பல நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டுமென்று லத்தீன் அமெரிக்க நாடுகளை `மிரட்ட’ ஆரம்பித்திருக்கிறது. இதில் முக்கியமான சில நிபந்தனைகள் அந்த நாடுகளின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்குமே ஊறு விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கிறது.
இந்நிறுவனத்தின் தடுப்பூசியைப் போட்டக் கொள்ளக்கூடிய லத்தீன் அமெரிக்க மக்களுக்கு ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டு அவர்கள் உடல் நலத்துக்கோ, உயிருக்கோ பாதகம் ஏற்படும்பட்சத்தில் வழக்குத் தொடுத்தால் அதற்கான நஷ்டஈட்டை அந்நாட்டு அரசுகள் வழங்க வேண்டுமேயொழிய நிறுவனம் வழங்காது, பொறுப்பேற்காது என்கிற நிபந்தனையும் அதில் ஒன்றாகும்.
இது மட்டுமல்ல, வழக்குகளினால் ஏற்படக்கூடிய செலவு, நஷ்ட ஈட்டுக்கான நிதி ஆகியவற்றிற்கு பொறுப்பேற்கும் வகையில் அந்நாட்டு ராணுவத் தளங்களையும், தூதரகக் கட்டிடங்களையும் பிணையாக வைக்க வேண்டும் என அர்ஜெண்டினா, பிரேசில் ஆகிய நாடுகளுக்கு நிபந்தனை விதித்திருக்கிறது. எனவே, இந்த நாடுகள் இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் எதிலும் கையெழுத்திடாமல் மற்ற நிறுவனங்களின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய ஆரம்பித்திருக்கிறது.
“குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் உள்ள நாடுகளில் உயிர் காக்கும் தடுப்பூசிகளைக் கட்டுப்படுத்த மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தக்கூடாது” என்று உலக சுகாதார அமைப்பின் தேசிய மற்றும் உலகளாவிய சுகாதார சட்டம் தொடர்பான ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனர் லாரன்ஸ் கோஸ்டின் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.”
ஆரம்பத்தில் இருந்தே, ஃபைசர் கோவிட்-19 தடுப்பூசி சம்பந்தமாக 100 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதிநவீன அமைப்புகளுடன் இணைந்து வேலை செய்து வருகிறது. சிலி, கொலம்பியா, கோஸ்டாரிகா, டொமினிகன் குடியரசு, ஈக்வடார், மெக்ஸிகோ, பனாமா, பெரு மற்றும் உருகுவே உள்ளிட்ட மொத்தம் ஒன்பது லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் நாடுகளுடன் இந்த நிறுவனம் விநியோக ஒப்பந்தங்களை எட்டியுள்ளது. இந்த விநியோக ஒப்பந்தங்களின் விரிவான விதிமுறைகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை. இதனால் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்கிற நோக்கத்தில் சில வளரும் நாடுகளும் ஏழ்மையில் இருக்கும் நாடுகளும் இந்நிறுவனத்தின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் எழுகிறது.
“சில பொறுப்புப் பாதுகாப்பு தேவைதான் ஆனால் நிச்சயமாக மோசடி, மொத்த அலட்சியம், தவறான மேலாண்மை, நல்ல உற்பத்தி நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியது போன்ற விஷயங்களுக்கு இழப்பீடு கேட்க நிறுவனங்களுக்கு உரிமை இல்லை.” என கோஸ்டின் மேலும் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கெல்லாம் ஃபைசர் செவிமடுக்கவில்லையென்றே தெரிகிறது.
இந்தமாதிரியான நடவடிக்கைகளின் மூலம் ஃபைசர் உலகளவில் ஒரு `தடுப்பூசி நிறவெறி’யை (Vaccine Apartheid) ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை. சர்வதேச அளவில் நிலவிவரும் பெரும் நெருக்கடியைத் தனக்குச் சாதகமாக பயன்படுத்தி ஏழை மற்றும் வளர்ந்துவரும் நாடுகளை தனது நிபந்தனைகளுக்கு அடிபணிய வைக்க நினைப்பதை `தாதாகிரி’ அல்லது `குண்டாகிரி’ என்று சொல்லாமல் வேறெப்படி சொல்லமுடியும்? `எரிகிற வீட்டில் பிடுங்கின வரை லாபம்’ என்கிற போக்கில் செயல்படும் நிறுவனத்தின் மீது உலக சுகாதார மையமும் மற்ற சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளும் கடுமையான நடவடிக்கை எடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.