இலக்கியப் போராட்டங்களை இவ்வளவு சுவாரசியமாக எழுத முடியுமா? நாவலை விட வாழ்க்கை சுவாரசியமானது என்பார்கள். எனக்குச் சொல்லத் தோன்றுகிறது: “இலக்கியங்களை விட இலக்கியப் போராட்டங்கள் விறுவிறுப்பானவை”. சிகரம் செந்தில்நாதன் சில ‘சீக்ரெட்’களை அவிழ்த்து விடுகிறபோது “அம்மணமான மர்மங்கள் மேலும் அழகாகத் தெரிகின்றன”. ஏனென்றால், இவருக்கு நபர்கள் முக்கியமல்ல… அவர்களின் “நாவின் நாணயங்கள்” மட்டும்தான் முக்கியம். அதனால்தான் தான் ‘சிகரம்’ இதழ் நடத்திய காலத்தில் தீபம் நா. பார்த்தசாரதியின் சுயத்தை (சங்கித் தனத்தை) அடையாளம் காட்டியவர், எம்.ஜி.ஆர் கொண்டு வந்த சினிமா தணிக்கைச் சட்ட எதிர்ப்புக் காலத்தில் அதே நபரின் நியாயத்தின் பக்கம் நின்ற அவரது துணிச்சலைக் காட்சிப்படுத்துகிறார்.
“நம்மாளுக்கு (எம்.ஜி.ஆர்) ஒரு பத்திரிகையாளர் கடிதம் எழுதினா ராமாவரம் தோட்டத்திற்கு கூப்பிட்டு வடை பொங்கல்ல (அடி, உதை) கொடுப்பார். இவனுவோ எல்லாம் புரட்சி புரட்சிங்கிறாங்க. எம்.ஜி. ஆருக்குப் புரட்சியும் தெரியாது – புண்ணாக்கும் தெரியாது”
“ஜெயகாந்தனுக்கு இணையான ஒரு எழுத்தாளன் தமிழ்நாட்டில் கிடையவே கிடையாது என்று தமிழ் இலக்கிய உலகம் ஜெயகாந்தனைப் பல்லக்கில் சுமந்து பவனி வந்த” காலத்தில் “அவர் ( ஜெயகாந்தன் ) முற்போக்கு என்று எதை நினைக்கிறாரோ அதுவே முற்போக்கு”. இது மாத்திரமல்ல, ஜெயகாந்தனின் சமுதாயப் பார்வையைக் கேள்வி கேட்டு தீவிரமான விமர்சனக் கட்டுரையையும் எழுதி இருக்கிறேன். இவ்வளவு தீவிரமான விமர்சனத்திற்கு அப்பாலும் ஜெயகாந்தன் என்னுடன் நன்றாகவே பழகியிருக்கிறார். இது போல, தி.க. சிவசங்கரன் குறித்தும், தொ.மு.சி.ரகுநாதன் குறித்தும் பல சுவாரசியமான தகவல்களையும் தெரிந்துகொள்ள முடிகிறது.
இலக்கிய ஐக்கிய முன்னணித் தந்திரங்களை வகுப்பதில் இணையற்றவர்
**************************************************************************************
1994 இல் தமிழ் வளர்ச்சி – பண்பாட்டுப் பாதுகாப்பு மாநாடு நடந்தது. அதையொட்டி 31 தமிழ் அமைப்புகளையும் ஒருங்கிணைத்துச் செயல்படும் வாய்ப்பினை சென்னை மாவட்ட த மு எ ச பயன்படுத்திக்கொண்டது. தமிழுக்கு நீதி கேட்டும் தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரியும், சென்னையில் பல அமைப்புகளைத் திரட்டுவதில் சிகரம் செந்தில்நாதனின் தீவிர முயற்சியினை அறிய முடிகிறது. இதே பொழுதில், மாணவர் நகலக உரிமையாளர் ந.அருணாசலம் அவர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்ட தமிழ்ச் சான்றோர் பேரவை தமிழைப் பயிற்று மொழியாக்கச் சாகும் வரைப் போராட்டம் அறிவித்து வெற்றி கண்டபோது தமுஎசவின் சார்பில் சி.செ வெளியிட்ட அறிக்கை முக்கியமானது. “தொடக்கக் கல்வியில் தமிழைப் பயிற்று மொழியாக்குதல், உயர்கல்வியில் தமிழ், தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை எனும் மூன்று கோரிக்கைகளை முன் வைத்துக் கடந்த சில மாதங்களாகப் பல தமிழ் அமைப்புகள் ஒன்று சேர்ந்து போராடி வந்தன. அதன் உச்ச கட்டமாகத் தமிழ்ச் சான்றோர் பேரவையின் போராட்டக் குழு நடத்திய 100 தமிழறிஞர்களின் சாகும் வரை பட்டினிப் போர் வெற்றியடைந்துள்ளது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பாராட்டுகிறது” இதன் அடிப்படையில்தான் பின்னாளில் “அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம்”, தமிழ் ஒளி நூற்றாண்டு விழாக் குழு என்று வெற்றிகரமாக பல தனி நபர்களையும், அமைப்புகளையும் ஒருங்கிணைத்து இவரால் சமூக இயக்கங்களை உருவாக்க முடிந்திருக்கிறது. தமிழ் பயிற்று மொழியாக்குவதற்கான சட்டத்திற்கு முட்டுக் கட்டை போட்டு ஒன்றிய அரசின் ஆசீர்வாதத்துடன், இன்றளவும் தீர்ப்பு வராமல் முடக்கி வைத்திருப்பது தனியார் மற்றும் ஆங்கிலப் பள்ளிகள் என்பதை அறிய முடிகிறது.
நம்ப முடியாத சமகாலத்தின் தோலுரிப்புகள்
****************************************************
ஒரு அமைச்சருக்கு இருந்த அக்கறை சக அமைச்சர்களுக்கு இல்லாத விஷயங்களை வெட்ட வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது இந்த நூல். கேரளாவில் மலையாளம் பயிற்றுமொழி. கர்நாடகாவில் கன்னடம் பயிற்றுமொழி. மேற்கு வங்கத்தில் வங்க மொழி பயிற்று மொழி. தமிழ்நாட்டிலும் ஒன்று முதல் ஐந்து வரையான வகுப்புகளில் தமிழ் கட்டாயமாக வேண்டும் என்றுதானே தமிழறிஞர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழைச் சொல்லி ஆட்சிக்கு வந்த திராவிடக் கட்சிகள் ஏன் தகிடு தத்தங்கள் செய்கின்றன என்பதையெல்லாம் தோலுரித்துக் காட்டுகிறார் தோழர் சிகரம்.
எல்லோருக்கும் ஆச்சரியமாய் இருக்கலாம். சிலரின் முகமூடிகள் கழன்று விழுகின்றன. சில திராவிட நாயகர்களின் பிம்பங்கள் அம்பலமாகின்றன.
“தமிழ் மொழியில் படித்தவருக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தர வேண்டும். ஆலயங்களில் தமிழில் அர்ச்சனை நடத்தப்பட வேண்டும். அதைக் கறாராக அரசே கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கூடங்களில் தமிழ் கட்டாயப் பாடமாக வேண்டும். அதற்காக ஆணையை அரசு வெளியிட வேண்டும். தமிழில் பொறியியல் படிக்கக் கூடிய ஏற்பாடுகளை அரசே விரைவில் கொண்டு வர வேண்டும்.” இதுபோன்ற கோரிக்கைகளைக் கேட்டு அகமகிழ்ந்து போனவர் அமைச்சர் தமிழ்க்குடிமகன்.
“உங்களது கோரிக்கை, அனைவரும் தங்கள் தாய் மொழியில் கல்வி கற்க உரிமை உண்டு என்ற அரசியல் சட்டப் பிரிவுக்கு எதிரானது. (தமிழ் நாட்டில் வாழும்) வேற்று மொழிக்காரர்கள் எதற்கு நம் தமிழ் ழியைப் படிக்க வேண்டும்?… உங்கள் வாரிசுகளை நீங்கள் ஆங்கிலம் படிக்காமல் வளர்ப்பீர்களா? என் பேரன் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில்தான் படிக்கிறான். எனவே அந்த பட்ஜெட் அறிவிப்பை நிறைவேற்ற முடியாது. அதற்கான அரசு ஆணையை வெளியிட முடியாது” என்று சொல்லி ஒரு மூத்த அமைச்சர் நிராகரிக்கிறார். அவர் வேறு யாருமல்ல… பேராசிரியர் அன்பழகன்!
கதாநாயகன் வில்லனான கதை
*************************************
சினிமாவை வைத்தே ஆட்சிக்கு வந்தவர் எம்.ஜி.ஆர் என்பதை எல்லோரும் அறிவார்கள். அவர் ஆட்சிக் கட்டிலேறியவுடன் சினிமாவுக்கே ஆப்பு வைத்தவர் என்பதை எத்தனை பேர் அறிவார்கள்?
“சட்டமன்ற உறுப்பினர்களையோ, மாநில அமைச்சர்களையோ கேலி செய்யும் வகையில் அல்லது அவதூறு செய்யும் வகையில் திரைப்படத்தின் கதை அல்லது காட்சி அமைந்தால் திரையிடும் திரையரங்கின் உரிமம் ரத்து செய்யப்படும்” என்கிற சூப்பர் தணிக்கைச் சட்டத்தை எதிர்த்துதான் தமுஎச திரைப்படக் கலை பாதுகாப்பு மாநாடு ஒன்றை நடத்தியது.
தனது திரைப்படங்களை வைத்தே ஆ ட்சிக்கு வந்த எம்.ஜி.ஆர், தனது ஆட்சிக்குத் திரைப்படங்களால் ஆபத்து வரும் என்று பயந்து திரைப்படத் தணிக்கைச் சட்டம் கொண்டுவந்தபோது, நூலாசிரியரின் விமர்சனம் மிகக் கூர்மையாக ஓர் ஊசியைப் போல தைக்கிறது: “சினிமாவில் தனக்கென்று ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி, அதையே மூலதனமாக்கி, ஆட்சியைப் பிடித்தவர், அவர் வில்லன்களை உருவாக்கியே கதாநாயகனாக வாழ்ந்தவர்.”
பெரியாருக்கு அவமரியாதை என்று ஒரு கட்டுரை இருக்கிறது. பாரதி இல்லத்தில் கவிதைத் திருவிழாவில் தாக்குதல் தொடுக்க வந்த இந்து மக்கள் கட்சி பற்றிய விவரம் குறிக்கப்படுகிறது. உண்மையில், பெரியாருக்கு அவமரியாதை அல்ல… மகாகவி பாரதியாருக்கே அவமரியாதை!
மக்கள் எழுத்தாளர் சங்கம் பிறகு தமுஎச வாக மலர்ந்த ஒரு குறிப்பிட்ட தருணத்தைத் தனது வார்த்தைகளால் வருணிப்பார் நூலாசிரியர்: “5.1.1975 அன்று மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் கடைசிக் கூட்டம் நடந்தது. செம்மலர் ஆசிரியர் கே.முத்தையா கலந்து கொண்டு பேசினார். “அவர் கூட்டத்தில் கலந்துகொண்டார். நாங்கள் அவரில் கலந்தோம்”. இவ்வாறாக மக்கள் எழுத்தாளர் சங்கம் முற்றுப் பெற்றது என்று எழுதுகிறார்.
ஒரு பெண் முதலமைச்சரின் உத்தரவின் பேரிலேயே கண்ணகி சிலை அகற்றப்பட்ட போது தமுஎசவின் முற்போக்குப் பரல்கள் தெறித்திருக்கின்றன.
திடீரெனப் பாடத்திட்டத்தில் திருக்குறள்கள் கத்தரிக்கப்பட்டபோதும், சில பாடங்களும், புதுமைப்பித்தனின் துன்பக் கேணி நீக்கப்பட்டபோதும், பட்டுக்கோட்டையார் இருட்டடிப்பு செய்யப்பட்டபோதும் இவற்றை எதிர்த்து முற்போக்குச் சங்கநாதம் முழங்கியிருக்கிறது.
அக்கிரகாரத்து அதிசய மனிதர் வ.ரா. படைப்புகளையும் முற்போக்கு கரிசல் மணி இராஜம் கிருஷ்ணன் படைப்புகளையும் நாட்டுடைமையாக்கிட தமுஎச போராடியிருக்கிறது.
எழுத்தாளர் விந்தனுக்காகவும் சில கோரிக்கைகளை முன்வைத்திருக்கிறது.
இப்படி எண்ணற்றப் போராட்டங்களின் இயங்கியலைப் புரிய வைக்கிறது இந்நூல்.
திடீர் மின்னல்
திடீர் இடி
******************
தோழர் கே.முத்தையா கேட்டார் – “பிராமண சங்கத்திலிருக்கும் ஒரு எழுத்தாளருக்கு நீங்கள் எல்லாம் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்தீர்களாமே”
“எனக்குத் தூக்கி வாரிப் போட்டது” என்கிறார் சிகரம் செந்தில்நாதன்.
விவரங்கள் நூலில் விலாவாரியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
“புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை இடதுசாரிக் கட்சிகள் வெகுகாலம் வரை ஓர் இனவாதக் கவிஞனாகவே பார்த்தன” என்று தான் சொன்னதை அப்படியே பதிவு செய்கிறார் நூலாசிரியர். இந்த மின்னல்வெட்டைப் பார்த்துத்தான் நல்லகண்ணு தோழர் இலேசாக ஓர் இடி இடித்திருக்கிறார்: “கம்யூனிஸ்டுகள் பாரதிதாசனைத் தவறாகப் புரிந்து கொள்ள வில்லை. மிகச் சரியாகப் புரிந்து கொண்டு மதித்தார்கள் என்பதே உண்மை”
பாரதிதாசனை இந்த அளவுக்கு அங்கீகரிக்க அன்றே போராடியதுதான் தனது ‘சிகரத்தின் பணி’ என்கிறார் ச.செந்தில்நாதன்.
மக்கள் எழுத்தாளர் சங்கம், மக்கள் எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் தோழர் கே.முத்தையா என்பவையும், பாரதி விழாவில் கலாட்டா மற்றும் பெரியாருக்கு அவமரியாதை என்ற இரு கட்டுரைகளும் முறையே வரிசைக் கிரமத்தில் அமைந்திருந்தால் புத்தகக் கட்டமைப்பு மேலும் கூடியிருக்கும்.
தமுஎகச போராட்டங்களுடன் தான் ஒருங்கிணைத்த பல அமைப்புகளின் போராட்டங்களையும், தனது தனிப்பட்ட சட்ட முன்னெடுப்புகளையும் இதழ்களில்/செய்தித்தாள்களில் வெளிவந்த ஆதாரபூர்வமான செய்திகளையும் இணைத்துத் தந்திருப்பது இந்த நூலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது.
பல போராட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்ட விவரங்களைப் பதிகிற அதே நேரத்தில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்கிற கோரிக்கை மட்டுமே இன்னும் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கிறது என்று முடிக்கும் நூலாசிரியர் சொல்கிறார்: “கடை விரித்தோம் கொள்வாரில்லை”. தனது ஐக்கிய முன்னணித் தந்திரங்களால் போராட்டங்களை சமூகத்தின் ‘அங்கீகாரம்’ என்கிற நல்ல விலைக்கே விற்றிருக்கிறார் சிகரம் ச.செந்தில்நாதன்.
தமிழ் இலக்கியத்தைத் தக்க வைப்பதற்கும், அது ஒரு பொதுமைப் பயிராகப் பூத்துக் குலுங்குவதற்கும் இந்தப் போராட்டங்கள் உதவுவதால் இவை அனைத்தும் இலக்கியப் போராட்டங்கள் என்று சான்றுரைக்கத் தோன்றுகிறது
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | இலக்கியப் போராட்டங்கள் |
| ஆசிரியர்: | சிகரம் ச.செந்தில்நாதன் |
| வெளியீடு: | |
| விலை: | ₹.220 5% Discount Price is ₹.209 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 நா.வே.அருள் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


இலக்கிய ஐக்கிய முன்னணித் தந்திரங்களை வகுப்பதில் இணையற்றவர் என்பது முழுமையற்று பொத்தாம் போக்காகவே இருக்கிறது. இ பாவின் குருதிப் புனல் பற்றிய அவரது கருத்தோட்டம் அதற்கேற்ப அமையவில்லை என்றே இன்றும் கருதுகிறேன். ஒரு விரிவான தளத்தில் குருதிப்புனலை அவர் காணவில்லையோ என்ற சந்தேகம் இன்னமும் உள்ளது. அதே நேரத்தில் தீண்டத்தகாததாக கருதப்பட்ட அப்புதினம் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இடதுசாரி பத்திரிகையொன்றில் வாரந்தோறும் வெளியிடப்பட்டு வந்ததையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.