“கவிஞர் தமிழ்ஒளி” – நூல் அறிமுகம்
தமிழ்ஒளி என்பவர் யார்?
இந்தக் கேள்வியைக் கேட்டால் இன்றைய நவீன கவிஞர்கள் எத்தனை பேருக்குத்
தெரியும் என்று எனக்குத் தெரியவில்லை.
பாரதி என்றதும் மகாகவி என்கிறோம். பாரதிதாசன் என்றதும் புரட்சிக் கவி
என்கிறோம். தமிழ் ஒளி என்றதும்… நம்மில் பலர் விழிக்கிறோம்.
ஆனால், உண்மை நிலை என்ன?
திருத்தக்க தேவர், கம்பன், இளங்கோ, என்கிற காவிய மரபில் வந்தவன் கவிஞர்
தமிழ்ஒளி. யாரும் தன்னை அவ்வளவு சீக்கிரத்தில் அங்கீகரிக்க மாட்டார்கள்
என்று தெரிந்துதானோ என்னவோ, அவன் தன்னைத் தானே கவிஞர் தமிழ்ஒளி என்று பறை
சாற்றிக் கொண்டான்.
அவன் வேகமும் விவேகமும் ஆச்சரியப்பட வைக்கின்றன. எழுதுவதற்கு முன்பே
விருதுகளைத் தேடுகிற நவீன இலக்கிய உலகில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
தன்னையும் சமூகத்தையும் ஒன்றாய்ப் பின்னிப் பிணைத்து வைக்கக் கவிதை
என்னும் கயிற்றினை எடுத்துக் கட்டிப் போட்டுக் கொண்டவன்தான் தமிழ்ஒளி.
பாரதி புத்தகாலயம், கவிஞர் தமிழ்ஒளி பற்றிய பதினாறு பதினாறே பக்கங்களில்
ஒரு நூல் வெளியிட்டிருக்கிறார்கள் தமுஎகசவின் முன்னத்தி எர், வழக்குரைஞர்
சிகரம் ச.செந்தில்நாதன் தமுஎகச கருத்தரங்கில் ஆற்றிய உரைச் சுருக்கம்
இது. இதை நூல் என்று ஏற்கலாமா? அல்லது ஒரு சிறு பிரசுரம் என்று
சொல்லலாமா? சில சிந்தனையாளர்களுக்குக் கேள்வி எழலாம். “அக்கினிக்
குஞ்சொன்று கண்டேன். அதை ஆங்கோர் பொந்திடை வைத்தேன்… வெந்து தணிந்தது
காடு… தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?” என்கிற
பாரதியின் அளவுகோலின் படி இதனை மிகச் சிறந்த நூல் என்பேன் நான்.
காரணம்?… தமிழ் மண்ணில் காணாமல் அடிக்கப்பட்ட ஒரு கவிஞர் பற்றிய நூல்.
அவன் காணடிக்கப்பட்டதால் சமூகத்தில் எத்துணை பெரிய இழப்பு என்று கணக்கிட
வைக்கிற சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நெருப்பு வேள்விதான் இந்தச்
சின்ன நூல்.
சிகரம் செந்தில்நாதன் காணடிக்கப்பட்டுக் கால தாமதமாகக்
கண்டுபிடிக்கப்பட்ட கவிஞர்களைக் குறிப்பிட்டுவிட்டு அல்லது “கோடி
காட்டிவிட்டு” இன்னும் ஒரு கவிஞனைப் பற்றிக் கண்டுபிடிப்பையே நிகழ்த்தாத
இலக்கிய உலகிற்கு அவனைப் பற்றி எடுத்துரைக்கிறார்.
அவர் நூலிலிருந்து…
“தமிழ் நாட்டில் பல கவிஞர்கள் காலம் கடந்தே
அங்கீகரிக்கப்பட்டிருக்கிறார்கள்… பாரதி இறந்தபோது அவர் வீட்டில் பத்துப்
பதினைந்து பேர்தான் இருந்தார்கள்; எட்டு ஆண்டுகள் கழித்துதான் பாரதி
பற்றிய முதல் கூட்டம் நடந்திருக்கிறது. பாரதிதாசன் மரணம் அடைகிறபோது
சென்னை மருத்துவமனையில் சாதாரண நோயாளியைப் போலவே
அனுமதிக்கப்ட்டிருந்தார். தரைப் படுக்கையில்தான் கிடத்தப்பட்டிருந்தார்.
டாக்டர் மு.வரதராசன் அச்செய்தியைக் கேள்விட்பபட்டு மருத்துவமனைக்குச்
சென்று, அவர் யார் என்பதைக் கூறிய பிறகுதான் அவருக்குக் கட்டில்
கிடைத்தது….
“பல இடதுசாரி முற்போக்குக் கவிஞர்கள் தமிழ் ஒளிக்கு முன்பே
இருந்திருக்கிறார்கள். தோழர் ஜீவா அவர்களைப் பெரிய அளவில் கவிஞர் என்று
சொல்ல முடியாவிட்டாலும் அவர் கவிதை எழுதி இருக்கிறார், ஆனால் அவர் கூட மே
தினத்தை வரவேற்று எழுதவில்லை. திருமூர்த்தி எழுதவில்லை, பட்டுக்கோட்டை
கல்யாண சுந்தரம் எழுதவில்லை, பாவலர் வரதராஜன் எழுதவில்லை. ஆனால் முதல்
முதலில் மே தினத்தை வரவேற்றுக் கவிதை எழுதியவர் கவிஞர் தமிழ்ஒளிதான்.
(சிகரம் செந்தில்நாதன் தமிழ் இலக்கிய விமர்சகர் என்றால் இந்தத் தகவலுடன்
முடித்திருக்கக் கூடும். அவர் ஒரு வழக்குரைஞர் என்பதால், “முன்னணி”
இதழில் 1949 மே மாதம் என்கிற புள்ளிவிவரத்தையும் தருகிறார்.)
“கோழிக்கு முன் எழுந்து கொத்தடிமைப் போல் உழைத்து
பாடுபட்ட ஏழை முகம் பார்த்து பதைபதைத்துக்
கண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக”… என்று தொடங்கும் அந்த மே தின
வரவேற்புக் கவிதை.
ஒவ்வொரு ஆண்டும் மே தின நிகழ்ச்சிகளில் இவருடைய மே தினக் கவிதையை
அச்சிட்டு மக்களுக்குக் கொடுப்பதை ஒரு வழக்கமாக வைத்துக்கொள்ளம் ஆலோசனையை
வழங்குகிறார். மே தின நிகழ்ச்சியை சுதந்திர தினக் கொண்டாட்ட ஆரஞ்சு
மிட்டாய்ச் சடங்காக ஆகிவிடாமல் உயிர்த்துடிப்புடன் நடத்துவதற்காக இது
அவரது முதற் கட்ட முன்வைப்பு.
இந்தச் சிறு நூலிலிருந்து அவர் அளிக்கிற தகவல்கள் மிக மிக
முக்கியமானவையாக இருக்கின்றன…
1935 – 36 இல் தொடங்கப்பட்ட அகில இந்திய முற்போக்கு எழுத்தாளர்
சங்கத்தின் முதல் சென்னைக் கிளைச் செயலாளர்.
பாரதிதாசன் உதவியினால் கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயிலும்
வாய்ப்பினைப் பெற்றார். கல்லூரிப் படிப்பை முடிக்க முடியாமல் போனதற்கான
காரணத்தை ( தமிழ்ஒளி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்கிற பின்னணி
என்பது அவரைத் தனிமைப்படுத்துவதற்கும், அவரைச் சிறுமைப்படுத்துவதற்கும்,
அவருடைய மனதை நோகடிப்பதற்கும் ஒரு வாய்பபாக இருந்தததாகச் சில குறிப்புகள்
நமக்குச் சொல்கின்றன ) கோடிட்டுக் காட்டுகிறார். (அண்ணல் அம்பேத்கரின்
பள்ளிக்கால நினைவுகள் வருவதைத் தவிர்க்க முடியாதல்லவா?)
1949 இல் அவர் ஒரு கம்யூனிஸ்டாக மாறியிருக்கிறார்.
அவரது மார்க்சியப் புரிதலுக்கும் ஞானத்திற்கும் காரணங்கள் சொல்கிறார்.
பின்னாளில் செயலிழந்து போனாலும், 1952 இல் நாரண.துரைக்கண்ணனால்
தொடங்கப்பட்ட முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் நிர்வாகக் குழு
உறுப்பினராகப் பங்காற்றியிருக்கிறார் தமிழ்ஒளி.
தமிழ்ஒளி, வதந்திகளையும் பொய்ச் செய்திகளையும் தவிர்த்து, கம்யூனிஸ்ட்
கட்சியிலிருந்து விலகியதற்கான உண்மையான காரணத்தை அறிய விழைகிற முய்ற்சி.
கம்யூனிஸ்டுகள் வர்க்கப் போராட்டத்தில் தங்கள் தீவிரத்தைக் காட்டிக்
கொண்டிருந்தபோது, தமிழ்ஒளி சாதியப் பிரச்சனைகளிலும், தீர்வுகள்
சொல்வதிலும் தன் முனைப்பைக் காட்டியிருக்கிறார். அதன் விளைவுதான்
சாதியப் பிரச்சனையின் மையமாகவே இயற்றப்பட்ட ‘வீராயி காவியம்’.
அந்த நாளில் ‘தமிழ்ஒளி’ என்று பெயர் வைத்துக் கொண்ட ஒரு இடதுசாரிக் கவிஞர்.
அப்போதிருந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் அவ்வளவு தீர்மானமாக வீரமான
இந்தி எதிர்ப்புக் குரல் இல்லாத போது, இந்தி சமஸ்கிருதத்திற்கு எதிரான
போர்க்குரல் கொடுத்தவர் தமிழ்ஒளி.
தமிழ்ஒளியின் பன்முகப் படைப்பாளுமையைச் சுட்டிக்காட்டுதல்
தொடக்கத்தில், பாரதி, பாரதிதாசன் மீது அன்றையப் புறக்கணிப்புகள் பற்றிக்
(புறக்கணிப்புகள் என்பதை விடத் தமிழ் நாட்டின் கண்டுகொள்ளாமை என்று
சொல்வது பொருத்தமாயிருக்கும் என்று கருதுகிறேன்) குறிப்பிட்டிருந்தோம்.
கவிஞர் தமிழ்ஒளி கடைசியாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்தான்
சிகிச்சை பெற்றிருக்கிறார். சரி, கவிஞர் தமிழ்ஒளியின் இறுதிக்
காலத்தில் தமிழ்ஒளியின் வாக்குமூலத்தைப் பார்க்கலாம்… “என்னடா தமிழன்?
ஜிப்மர் மருத்துவமனையில் எனக்கு வைத்தியம் பார்த்தவன் ஒரு தமிழன்,
அவனிடம் நான் என்னை ஒரு கவிஞன் என்று சொன்னேன். ஆனால் அவன் என்னைக்
கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. புறக்கணிப்புச் செய்தான்.
இன்னும் எத்தனை காலத்திற்கு ஒரு மகத்தான மக்கள் கவிஞனை மக்களாகிய நாம்
புறக்கணிக்கப் போகிறோம்? இந்தக் கேள்வியை விதைத்த இச் சிறு நூலினை
அறிவின் அக்கினிக் குஞ்சு என்று கருதுகிறேன். தமுஎகச கருத்தரங்கில்
சிகரம் ச.செந்தில்நாதன் அவர்கள் ஆற்றிய உரைச் சுருக்கம்தான் இது. இதனைத்
தொகுத்தவர் சு.இளவரசி. இது ஒரு பாரதி புத்தகாலய வெளியீடு.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | கவிஞர் தமிழ்ஒளி |
| ஆசிரியர்: | சிகரம் ச.செந்தில்நாதன் |
| வெளியீடு: |
பாரதி புத்தகாலயம்
|
| விலை: | ₹.20 |
| அறிமுகம் எழுதியவர்: |
✍🏻 நா.வே.அருள் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி
2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது ஏப்ரல் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8
தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

