தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் தோழர் ச.செந்தில்நாதன், தமிழில் முற்போக்கு இலக்கியங்களின் வளர்ச்சிக்குக் கணிசமான பங்களிப்பு செய்திருப்பவர். தனது ‘சிகரம்’ பத்திரிகை வாயிலாகவும், ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ மூலமாகவும் பல முற்போக்குச் சிந்தனையாளர்களுக்குக் களம் அமைத்துக் கொடுத்தவர்.

இந்த நேர்காணல், அவரின் இலக்கிய, இயக்கச் செயல்பாடுகளையும் ‘சிகரம்’ இதழியல் பங்களிப்புகளையும் மையமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் கடந்த 25 ஆண்டுகால இலக்கிய வரலாற்றின் ஒரு முகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

உங்களுக்கு இலக்கிய ஆர்வமும், அரசியல் ஈடுபாடும் எவ்வாறு ஏற்பட்டது?

எனக்கு இலக்கிய ஈடுபாடு கிட்டத்தட்ட 12 வயதிலேயே இருந்தது என்றே சொல்லவேண்டும். தஞ்சை மாவட்டம் (தற்போது நாகை மாவட்டம்) வேதாரண்யம் தாலுகாவில் வாய்மேடு என்ற கிராமத்தில் 1942 அக்டோபரில் பிறந்தேன். அந்தக் கிராமத்தில் அப்போது மின்சார வசதிகூட கிடையாது. தார் ரோடு கிடையாது. குக்கிராமம்.

பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், “இங்கே எத்தனை பேர் ரயில் பார்த்திருக்கிறீர்கள்?’’ என்று கேட்பார். சுமார் பத்து பேர் கை தூக்குவார்கள். ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ரயில் பார்ப்பது என்பதே அங்கு பெரிய விஷயம். அப்படிப் பார்க்க வேண்டுமானால், ஐந்து மைல் தூரத்துக்கு மேல் நடக்க வேண்டும். இப்படியான கிராமச் சூழலில் பத்திரிகை படிப்பதற்குப் போதிய வசதி அங்கு கிடையாது. எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் மிகக்குறைவு. அந்தக் கிராமத்தில் என்னுடைய தந்தையார் மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்தார். அவர் பத்திரிகைகளைத் தபாலில் வரவழைப்பார். எனக்காக ‘கல்கண்டு’ மட்டும் வரும். தமிழ்வாணன்தான் எனக்குக் கடவுள். அவர் கேள்வி பதிலில் என்ன சொல்கிறாரோ அதன்படி நடப்பதுதான் என் வேலை. உதாரணமாக, “எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பதில் எந்தவிதமான பயனும் இல்லை’’ என்று ஒருமுறை அவர் எழுதிவிட்டார். அதுவரை வாரந்தோறும் எண்ணெய்த் தேய்த்து குளித்து வந்த நான் அதற்குப் பிறகு அதை நிறுத்திவிட்டேன். காரணம், தமிழ்வாணன் சொன்னார் என்பதால்தான்.

நடுவிரல் - தமிழ்வாணன்-Tamil Books Flip PDF ...

ஆக, தமிழ்வாணனின் கதையைப் படிப்பது என்பதுதான் எனக்கு இலக்கியத்தின் மீது ஏற்பட்ட முதல் ஆர்வம். அவர் எழுதியது இலக்கியமா என்பது வேறு பிரச்சினை. அவர்போல எழுத வேண்டும் என்கிற எண்ணமும் அப்போது ஏற்பட்டது. அதற்குப் பிறகு ‘கல்கி’ வந்தது. அதையும் படிப்பேன். கல்கி மாதிரியும் எழுத ஆரம்பித்தேன்.

நான் பிறந்த பகுதி கிராமமாக இருந்தாலும்கூட மற்ற விழிப்புணர்வெல்லாம் அதிகம். பொதுவுடைமை இயக்கம் அங்கே பலமாக இருந்தது. நான் படித்த பள்ளியில் முற்போக்கு, சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களெல்லாம் ஆசிரியர்களாக இருந்தார்கள். அந்த ஆசிரியர்கள் பின்னாளில் பல அரசியல் இயக்கங்களில் ஈடுபட்டார்கள். அரசாங்கத்தில் கொடுக்கிற உதவிகளை மட்டுமே எதிர்பாராமல் கிராம மக்களிடம் வசூல் செய்து, ஒழுங்காகப் பள்ளியை வெள்ளையடித்து திருக்குறள் எழுதி இருந்தார்கள். பாரதி, பாரதிதாசன், வ.உ.சி. போன்றவர்களின் படங்களை எல்லாம் வரைந்திருந்தார்கள். எனது 12 வயதிலேயே திருக்குறள், பாரதி, பாரதிதாசன் பற்றியும் மற்றும் பல அரசியல் செய்திகளை எல்லாம் தெரிந்துகொள்ள அந்தப் பள்ளி எனக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தது.

அதற்குப் பிறகு, மேற்கொண்டு படிப்பை உத்தேசித்து திருவாரூருக்கு அருகே உள்ள அடியக்கமங்கலத்திற்கு எங்கள் குடும்பம் மாற்றலாகி வந்தது. அப்போது திருவாரூர் பள்ளியிலே நான் படிக்க ஆரம்பித்தேன். திருவாரூர் பொதுவாக கலை, இலக்கியம், அரசியல் அதிகமாக உள்ள ஊர். திரு.பி.சி.கணேசன், புலவர் சண்முகம் போன்றவர்கள் அந்தப் பள்ளியில் ஆசிரியராக இருந்தார்கள். அங்கே, திராவிட இயக்கத்தின் செல்வாக்கு அதிகமாக இருந்தது. அது பள்ளியாக இருந்தபோதிலும், கல்லூரிக்கான இலக்கணங்கள் அதில் இருக்கும். உதாரணமாக, ‘மாணவர் தமிழரசுக் கழகம்’ இருந்தது. ம.பொ.சி., ஏ.பி.நாகராசன், சின்ன அண்ணாமலை ஆகியோர் நடத்திய பத்திரிகைகளெல்லாம் அங்கு வரும். இப்படி நிறைய படிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் பி.சி.கணேசன் போன்றவர்கள் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது பாடம் அல்லாத மற்றவற்றையும் நிறைய பேசுவார்கள். இதனால், அந்தப் பள்ளியும் கலை இலக்கியச் சூழலில் ஆர்வம் ஏற்படக் காரணமாக அமைந்தது.

அரசியலைப் பொறுத்தவரையில், தமிழ்ப்பற்று நிறைய இருந்தாலும்கூட காமராஜரின் சிந்தனை, செயல்பாடு இவையெல்லாம் எனக்கு நிறையப் பிடித்திருந்தன. இயக்கரீதியாக காங்கிரஸ் ஆதரவாளனாக இல்லாதபோதிலும், நேருவின் மீதும், காமராஜரின் மீதும் ஒரு மதிப்பு இருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் ஆதரவாளராக இருந்த பலருக்கும் பெரியாரின் மீது ஒரு மரியாதை உண்டு. பெரியார் காமராஜரின் ஆட்சியைப் ‘பச்சைத் தமிழனின் ஆட்சி’ என்று பாராட்டி ஆதரித்து வந்தார். அதனாலே காமராஜ், பெரியார் போன்றவர்களின் பேச்சைக் கேட்டேன். பின்னர், தி.மு.க.விலிருந்து ஈ.வி.கே.சம்பத் விலகி தனிக்கட்சி ஆரம்பித்தார்.

அப்போது சம்பத், கண்ணதாசன் போன்றவர்களின் கூட்டங்களுக்குப் போய் அவர்களின் பேச்சையும் கேட்பேன். அதன்பிறகு ‘தீபம்’ பார்த்தசாரதி, ஜெயகாந்தன் போன்றவர்களின் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று அவர்களின் பேச்சையும் கேட்க ஆரம்பித்தேன்.
எழுதுவது என்று வருகிறபோது, ஆறாவது படிக்கும் போதிலிருந்து ஏதாவது எழுதி பத்திரிகைகளுக்குத் தொடர்ந்து அனுப்பி வந்தேன். ஆனால், அதில் எதுவும் பத்திரிகைகளில் பிரசுரமாகவில்லை. பியூசி படிக்கும்போது, ‘கழகத்தின் கோட்டை கலகலக்கிறது; காமராஜரின் கை வலுக்கிறது’ என்று ஒரு கட்டுரையை எழுதி மயிலைநாதனின் ‘பாரதம்’ பத்திரிகைக்கு அனுப்பினேன். அதை அவர்கள் பிரசுரித்திருந்தார்கள். அதுதான் அச்சில் வெளிவந்த என் முதல் கட்டுரை. அதற்குப் பிறகு, பகீரதனின் ‘கங்கை’ பத்திரிகையில் வேடிக்கையான சின்னச் சின்ன துணுக்குகள், கவிதைகள் எழுதினேன். என்னுடைய எழுத்துகள் தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் தவறாமல் வெளிவந்த பத்திரிகை இதுதான்.

அப்போதெல்லாம் எனக்கு மார்க்சிய சிந்தனை எதுவும் கிடையாது. ஆனால், நான் பிறந்த ஊரின் காரணமாக தோழர் மணலி கந்தசாமி போன்றவர்களைத் தெரியும். அவரும் என் தந்தையும் – இன்றைய அண்ணாமலைப் பல்கலைக் கழகம் – ‘மீனாட்சி கல்லூரி’ என்ற பெயரிலே இருந்தது. அங்கே ஒன்றாகப் படித்தவர்கள். அதனால் இயக்கத்தைப் பற்றித் தெரியும். ஆனால், இயக்கத்துக்குள் போவதற்கான வாய்ப்புகள் கிடையாது.

பச்சையப்பன் கல்லூரியில் பி.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. நான் வரலாறு படிக்கத்தான் ஆசைப்பட் டேன். ஆனால், என்னை ஆங்கில இலக்கியத்துக்குப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள். அதற்குப் பிறகுதான் ஆங்கில இலக்கியங்களையே படிக்க ஆரம்பித்தேன். இதனால், இலக்கியத்தின் மீது மேலும் ஆர்வம் கூடியது. அதற்குப் பின், இலக்கிய ரீதியான கட்டுரைகள் எழுத ஆரம்பித்தேன். சிலப்பதிகாரத்தையும் மில்டனின் ‘பாரடைஸ் லாஸ்ட்’டையும் ஒருமைப்படுத்தி ஒரு கட்டுரை எழுதினேன். கரந்தை தமிழ்ச் சங்கத்திலிருந்து வெளிவந்த ‘தமிழ்ச்செல்வி’யிலும், குத்தூசி குருசாமியின் பத்திரிகையிலும் என் எழுத்துகள் வெளிவந்தன.

முற்போக்கு இலக்கியங்களின் மீது முழுமையாக கவனம் செலுத்த வேண்டும் என்கிற எண்ணம் எப்போது உண்டானது?

இது போன்ற எண்ணம் ‘தாமரை’யில் எழுத ஆரம்பித்த பிறகுதான் ஏற்பட்டது. சில இலக்கிய அமைப்புகள் நடத்தும் இலக்கியக் கூட்டங்களுக்குப் போகும்போது அங்கே தி.க.சி., டி.செல்வராஜ் இருவரையும் அடிக்கடி சந்திப்பேன். தி.க.சி.யைச் சந்தித்த பிறகுதான் இலக்கியத்தை சாதாரண துணுக்குகள், கவிதைகள் எழுதுவது என்றில்லாமல் சமூக உணர்வோடு எழுதவேண்டும் என்கிற தாக்கம் உண்டாகியது. அவர் பொறுப்பேற்றிருந்த ‘தாமரை’யில் எழுத ஆரம்பித்தேன்.
என்னை முற்போக்கு இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்ததில் முக்கியமான பங்கு தி.க.சி.க்கே உண்டு. ‘தாமரை’யில் எழுதும்போதே ‘கலை இலக்கியப் பெருமன்ற’ கூட்டங்களுக்கும் போவேன். திருச்சியில் நடந்த மாநாட்டிலும் கலந்துகொண்டு பேசினேன்.

உங்கள் இலக்கிய ஆர்வத்திற்குப் பெற்றோரின் ஒத்துழைப்பு எந்த விதத்தில் அமைந்தது?

என்னுடைய இலக்கிய ஆர்வத்திற்கு எனது பெற்றோர்கள் ஓரளவு காரணமாக இருந்தார்கள். அப்போது கிராமத்தில் ரேடியோ, தொலைக்காட்சி போன்ற எதுவும் கிடையாது. அதை வைத்துக் கொள்ள மின்சாரம்கூட எங்கள் ஊரில் இல்லை. ஆகவே, கதை கேட்பது, கதை சொல்வது அப்போது அதிகம். பக்கத்து வீட்டில் ஒரு பாட்டி இருந்தார். தினமும் மாலை நேரங்களில் சிறுவர்களை அழைத்து கதை சொல்வது அவருக்குப் பொழுதுபோக்கு. இதனால் கதை கேட்கும் ஆர்வம் எனக்கு இளம் வயதிலேயே ஏற்பட்டது. ராமாயணம், மகாபாரதம் போன்றவற்றை அவர்கள் மூலமாகத்தான் தெரிந்து கொண்டேன்.

எங்கள் வீட்டில், தூங்குவதற்கு முன் அப்பா ஒரு கதை சொல்ல வேண்டும். அப்போது பெரிய புராணத்தில் இருக்கக்கூடிய நாயன்மார்கள் கதை போன்றவற்றைக் கூறுவார். என்னுடைய தாயார் பட்டினத்தார் பாடல், தாயுமானவர், அருணகிரிநாதர் போன்றவர்களின் பாடல்களை மனப்பாடமாகச் சொல்வார். இந்த வாய்ப்புக் கிடைத்தது என் இலக்கிய ஆர்வத்திற்குத் தூண்டுகோலாக அமைந்தது. சின்ன வயதிலேயே பக்தி இலக்கியங்கள் பற்றி அதிகம் கேட்டதாலே பக்தியும் அதிகமாகிவிட்டது. சுமார் 12 வயதில் எந்த காரியம் செய்தாலும், சாமி கும்பிட்டு விட்டுத்தான் செய்வேன். எங்கள் வீட்டில் வராண்டாவிற்கும் சமையல் அறைக்கும் இடையில் ஒரு சாமி அறை உண்டு. அதைக் கடந்து எத்தனை முறை சென்றாலும், அத்தனை முறையும் கை எடுத்துக் கும்பிட்டு விட்டுத்தான் செல்வேன். அந்த அளவுக்குக் கடவுளின் மீது ஒருவகை ஈடுபாடு, பக்தி! இவையெல்லாம் பின்னர் தகர்ந்தததற்குப் பெரியாரின் பேச்சைக் கேட்டதுதான் முக்கிய காரணம்.

‘தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு மதிப்பீடு’ என்றொரு விமர்சன நூலை எழுதி இருக்கிறீர்கள். அதன் இரண்டாம் பதிப்பு தற்போது வெளிவந்திருக்கிறது. அந்நூலை எழுதத் தூண்டிய சூழலையும், அந்த நூல் வெளியான விதம் பற்றியும் கூறுங்கள்…

Noolulagam » செந்தில்நாத » Page 1

நான் சென்னைக்குப் படிக்க வந்தபோது, இலக்கியக் கூட்டங்களுக்குப் போவது, இலக்கியம் படிப்பது என்பதை வழக்கப்படுத்திக் கொண்டிருந்தேன். அதன் உந்துதலால் ஏதாவது புத்தகம் எழுதவேண்டும் என்கிற வேகம் உண்டாகியது.

கல்லூரி இறுதியாண்டுத் தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்தபோது அந்த விமர்சன நூலை (தமிழ்ச் சிறுகதைகள் – ஒரு மதிப்பீடு) எழுதி முடித்தேன். அதை யாரிடம் கொடுப்பது என்று தெரியவில்லை. என்னை நன்கு அறிந்தவரும் என்னுடைய பள்ளி ஆசிரியருமான திரு.பி.சி.கணேசன் அவர்களிடம் கொடுத்தேன். அவர் சில பதிப்பாளர்களை அணுகியும் வெளியிட இயலவில்லை. அதிலே சுமார் ஆறு மாதங்கள் ஓடிவிட்டன. அதன் பின்னர் ‘நியூ செஞ்சுரி புக் -ஹவுஸ்’-ல் கொடுத்தேன். அங்கே இரண்டு வருட காலம் ஏதோ சாக்குப்போக்-குச் சொல்லி வெளியிடாமல் வைத்திருந்தார்கள். காரணம், அவர்களுடைய பார்வையோடு இந்த நூல் எழுதப்படவில்லை என்பதுதான். அதேசமயம், அந்நூலை நிராகரிக்கக்கூடிய தைரியம் அவர்களுக்குக் கிடையாது. தோழர் நா.வானமாமலை அவர்கள் புத்தக வெளியீட்டுக் குழுவில் இருந்தார். அவர் படித்து விட்டு, “பரவாயில்லை, இதில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும்கூட, ஓர் இளைஞர் முழுமையான விமர்சன நூலை முதன் முதலில் எழுதி இருக்கிறார். இதை வெளியிடுங்கள்’’ என்று சொல்லியிருக்கிறார். ஆனால், நிர்வாகம் அதை வெளியிடத் தயாராக இல்லை. சுமார் இரண்டு வருடங்களுக்கு இழுத்துப் போட்டு, பிறகுதான் வெளியிட்டார்கள். ஆக, நான் எழுதக் கொடுத்த உடனேயே நூலாக வெளிவந்திருந்தால் தமிழ்ச் சிறுகதை விமர்சனம் குறித்து முழுமையாக வெளிவந்த முதல் நூலாக இது இருந்திருக்கும். ஆனால், இந்த நூல் வெளிவருவதற்கு முன்பே இலங்கையிலிருந்து க.சிவதம்பியினுடைய நூல் வெளிவந்துவிட்டது. இப்படி என்.சி.பி.எச்-யினர் காலம் கடந்து வெளியிட்டபோதிலும், அதிலும் அவர்களுக்குத் திருப்தி கிடையாது. அதன் விளைவாக நீண்ட காலமாக இரண்டாம் பதிப்பே வெளிவரவில்லை. சுமார் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது வெளிவந்திருக்கிறது.

‘மக்கள் எழுத்தாளர் சங்க’த்தை எந்த நோக்கத்தில் ஆரம்பித்தீர்கள்? அதன் செயல்பாடு எப்படி இருந்தது?

நான் ‘தாமரை’யில் தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த காலம் அது. அப்போது கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் சரி, பொதுவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பவர்களுக்கும் சரி, ஜெயகாந்தன் என்றாலே மிக உயர்வானவர். அவருடைய எழுத்துகளை யாருமே குறை சொல்ல முடியாது. சமூகம் பற்றியும், வாழ்க்கை பற்றியும் அவர் கதைகளில் என்ன சொல்கிறாரோ, அதுதான் முற்போக்கு… இப்படியான ஒரு போக்கு வளர்ந்திருந்த காலத்தில் ‘தாமரை’ ஆசிரியர் குழுவில் இருந்த தி.க.சி. அவர்கள், ஜெயகாந்தன் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தருமாறு என்னிடம் கேட்டார். அதுவரை வெளிவந்திருந்த அவரது அனைத்துக் கதைகளையும் படித்துவிட்டு அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதித் தந்தேன். அந்தக் கட்டுரை தி.க.சி.க்கும், கலை இலக்கியப் பெருமன்றத்திற்கும் சில பிரச்சினைகளை உண்டுபண்ணிவிட்டது.

சிகரம்'ச.செந்தில்நாதனின் ...

தி.க.சி. ‘தாமரை’ப் பொறுப்பிலிருந்து வெளியேறுவதற்கு அல்லது வெளியேற்றப்படுவதற்கு எனக்கும் தி.க.சி.க்கும் இருந்த நட்பே ஒரு காரணமாகிவிட்டது. அரசியல்ரீதியாக தி.க.சி.யிடம் நான் வேறுபட்டு நின்றாலும்கூட, நட்பு என்பது நீடித்தது. ஆனால், அதைக்கூட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தி.க.சி.யைக் கலை இலக்கியப் பெருமன்றத்திலே – இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலே – இருக்கக்கூடிய ஒரு சி.பி.எம். ஆதரவாளர் என்கிற மாதிரி சிலர் நினைத்துவிட்டார்கள். ஏனென்றால், ஜெயகாந்தனைப் பற்றி அப்படி ஒரு விமர்சனம் ‘தாமரை’யிலேயே வெளிவரும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை.

மார்க்சிய விமர்சகர்களில் தலைசிறந்தவர் தி.க.சி. என்பதைச் சரியாக அடையாளம் காணத் தவறிவிட்டார்கள். தி.க.சி.யை ஒதுக்கியதன் மூலம் கலை இலக்கியப் பெருமன்றம் தேய்பிறையானது. உண்மையில் நானும் தி.க.சி.யும் இடதுசாரிகள் ஒற்றுமைக்கு உறுதுணையாக நிற்பவர்கள்.
அதன்பின், என்னைப் போன்றவர்கள் எழுதுவதற்கு வேறொரு அமைப்பு தேவையாகிவிட்டது. அப்போது ‘முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ கிடையாது. ‘செம்மலர்’ கிடையாது. அப்போது ‘கண்ணதாசன்’ இதழ் தொடர்பு ஏற்பட்டது. கண்ணதாசன் இதழின் விலை ஒரு ரூபாய். (குமுதம் விலை நாலணா. ஆனந்த விகடன் முப்பது பைசா.) மிக அதிகமான விலையில் வந்த ஒரே பத்திரிகை கண்ணதாசன்தான். கிட்டத்தட்ட 20 ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு விற்பனையாகிறது. அச்சில், அமைப்பில் அந்தக் காலகட்டத்தில் வந்த பத்திரிகைகளிலேயே மிக அழகானது ‘கண்ணதாசன்’. இன்றைக்கு தமிழ் நாட்டில் இருக்கக்கூடிய பல முற்போக்கு எழுத்தாளர்கள் அந்தப் பத்திரிகையில் எழுதி இருக்கிறார்கள். டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, நா.காமராசன், வானம்பாடி இயக்கத்தினர், இராம. கண்ணப்பன், கார்க்கி, என்.ஆர்.தாசன், கந்தர்வன் இப்படி எல்லோருமே எழுதிக் கொண்டிருந்தார்கள். அந்தக் காலகட்டத்தில் எனக்கும் கண்ணதாசனில் தொடர்பு ஏற்பட்டது.
கவிஞர் கண்ணதாசன் காங்கிரசில் சேர்ந்துவிட்டார். பத்திரிகையும் காங்கிரஸ் சார்புடையது. ஆனால், அதில் இருந்தவர்களெல்லாம் இடதுசாரி சிந்தனையாளர்கள். அதனால் நிறைய இடதுசாரி எழுத்துக்கள் வெளிவந்தன. அதில் கவிஞர் கண்ணதாசன் குறுக்கிட்டதே கிடையாது.

‘கண்ணதாசன்’ இதழில் எழுதி வந்த இடதுசாரி எழுத்தாளர் களுக்கென்று ஓர் அமைப்பு இருந்தால் நல்லது என்று நினைத்தோம். அதன்படி ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’. 1969ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. இச்சங்கத்துக்கு பின்னணி டி.செல்வராஜ், தி.க.சி. இருவரும். இந்த இருவருமே சங்கத்தில் இருக்கவில்லை. ஆனால், கூட்டங்களில் நிச்சயம் இருப்பார்கள். தி.க.சி.யும் டி.செல்வராஜும் தங்கி இருந்த அறையில்தான் கூட்டமே நடக்கும். அப்படி இல்லையென்றால் ஏதாவது பூங்காவிலே உட்கார்ந்து பேசுவோம். இப்படித்தான் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ ஆரம்பிக்கப்பட்டது.
நான் (ச.செந்தில்நாதன்), கந்தர்வன், இராம.கண் ணப்பன், கார்க்கி, ம.ந.ராமசாமி போன்றவர்கள்தான் நடத்தினோம். செயற்குழு, பொதுக்குழு என்றெல்லாம் கிடையாது. நிரந்தர நிர்வாகக்குழு செயல்பட்டது. வெளியூரிலிருந்து என்.ஆர்.தாசன் சென்னை வந்ததும் ‘மக்கள் எழுத்தாளர் சங்க’த்துடன் இணைந்தார்.

தி.க.சி. என்றொரு தோழமை | Buy Tamil & English ...

மக்கள் எழுத்தாளர் சங்கச் செய்திகள் எல்லாம் ‘கண்ணதாசன்’ இதழில் வெளிவந்தன. சி.பி.ஐ.ஆகவோ, சி.பி.எம்.ஆகவோ, நக்சலைட்டாகவோ இப்படி எந்த இயக்கத்தில் இருந்தாலும் சரி, பொதுவான இடதுசாரி சிந்தனையாளர்களுக்கும், முற்போக்காளர்களுக்கும் பொதுவான ஒரு மேடை கிடையாது. அந்த மேடையாக ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ இருக்கும் என்பதுதான் அந்த நோக்கம்.
அப்போது சென்னை வந்த நா.காமராசன், இன்குலாப் போன்றவர்களை அறிமுகப்படுத்தியதும் இந்தச் சங்கம்தான். இள வேனிலை கண்டுபிடித்து அறிமுகப்படுத்தியதும் இந்தச் சங்கம் தான். அப்போது மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் கூட்டங்கள் ஒரு பரபரப்பை ஏற்படுத்தின. ஓர் ஆண்டு – அதாவது 1969 அல்லது 1970ஆக இருக்கலாம். தீபாவளி மலர்களை முழுமையாகச் சேகரித்து ஒரு விமர்சனக் கூட்டம் நடத்தினோம். மலர்களில் எழுதிய எல்லா எழுத்தாளர்களுக்கும் அழைப்பு விடுத்தோம். அந்தக் கூட்டத்திற்கு ஜெயகாந்தன், அகிலன் உட்பட பெரும்பாலான எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். இவர்கள் எல்லோரையும் வைத்துக் கொண்டு ஒரு காரசாரமான இலக்கிய விமர்சனத்தைச் செய்தோம். இப்படியொரு கடுமையான விமர்சனம் வரும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
அகிலன் “வெளிநடப்பு செய்வேன்’’ என்று கூறிவிட்டார். ஜெயகாந்தன் ‘ஞானரதம்’ இதழில் ஒரு விமர்சனக் கட்டுரையே எழுதிவிட்டார். அந்தக் கட்டுரை அவருடைய ‘முன்னோட்டம்’ என்ற கட்டுரைத் தொகுப்பில் இடம் பெற்றிருக்கிறது.

இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன் ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ என்பது சில பேருக்குத்தான் தெரிந்தது. இந்தக் கூட்டமும் அதையொட்டி வந்த சர்ச்சைகளும் ஏறத்தாழ சென்னையில் இருக்கக் கூடிய எல்லா எழுத்தாளர்களுக்கும் தெரியப்பட்டுவிட்டது.

மக்கள் எழுத்தாளர் சங்கத்தை ஒரு மாநில அமைப்பாக உருவாக்கலாம் என்று சில நண்பர்கள் கூறினார்கள். அதன் முதல் படியாக ஒரு மாநில மாநாட்டை நடத்த முடிவு செய்தோம். இந்த மாநாட்டுக்கு வரவேற்புக்குழு அமைத்து, அதன் தலைவராக முன்னாள் மேயர் கிருஷ்ணமூர்த்தியை நியமித்தோம். அவர் சென்னைப் பனகல் பார்க் அருகே உள்ள ஒரு கல்யாண மண்டபத்தை மாநாடு நடத்த இலவசமாக வாங்கித் தந்தார். உணவுக்காக, அருகிலுள்ள கீதா ஓட்டலையும் ஏற்பாடு செய்து தந்தார். இப்படியாக அந்த மாநாட்டையே பெரிய அளவில் நடத்தத் திட்ட மிட்டிருந்தோம். கலை இலக்கியப் பெருமன்றத்திலிருந்து தொ.மு.சி.ரகுநாதன், தொழிற்சங்க தலைவர் குசேலர், கோவை வானம்பாடி அமைப்பு இப்படி பல தரப்பினரையும் அழைத்திருந்தோம். ஆனால் எங்களுடைய நோக்கத்தை யாரும் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

இந்த மாநாட்டில் தீவிரவாதிகள் கலந்து கொள்கிறார்கள். அதனால் கலந்து கொள்ளக்கூடாது என்று தொ.மு.சி.ரகுநாதன் உட்பட இடதுசாரி கட்சியினர் முடிவெடுத்து விட்டனர். ஆரம்பத்தில் பலர் நெருங்கி வந்தாலும்கூட மாநாடு நடக்கும்போது ஏனோ விலகிப் போய்விட்டார்கள். இப்படியொரு சூழ்நிலையில் அந்த மாநாடு நடந்து முடிந்தது.

அந்த மாநாட்டில் சங்கத்தை சென்னை மாநகர் மட்டுமின்றி மாநிலம் முழுமைக்குமான அமைப்பாக அமைக்க வேண்டும் என்று முடிவானது. அந்த முயற்சியையும் நாங்கள் மேற்கொண்டோம். அதற்கான ஒரு கூட்டத்தை திருச்சியில் ஒரு துவக்கப் பள்ளியில் ஏற்பாடு செய்திருந்தோம். அந்தக் காலகட்டத்தில் ‘நக்சலைட்’களின் செயல்பாடுகள் அதிகமாக இருந்தன. அதனால், யாரொருவர் சி.பி.ஐ.யிலும் இல்லாமல் சி.பி.எம்.மிலும் இல்லாமல் மார்க்சியம் பேசுகிறாரோ அவர் நக்சலைட் என்று போலீஸ் முத்திரை குத்தியது. இப்படியான தோரணையில் மக்கள் எழுத்தாளர் சங்கமும் இயங்கிய தால், அதனை நக்சலைட் இயக்கமாக இருக்கும் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்கள். அதனால் போலீஸ் விசாரணை ஆரம்பித்து விட்டது.

சேலத்தில் அந்த நேரத்தில் காந்தி சிலை உடைக்கப்பட்டது. அது பற்றிய போலீஸ் விசாரணையில் துண்டுப் பிரசுரம் ஒன்றை அச்சிட்ட அச்சகத்தைக் கண்டுபிடித்தார்கள். அந்த அச்சகத்தினுடைய அதிபர் ஓர் இலக்கியவாதியினுடைய சகோதரர். அந்த இலக்கியவாதியைக் காவல் துறையினர் அணுகி, அவரிடம் பேசியபோது, அவர் மக்கள் எழுத்தாளர் சங்கத்தினர், வானம்பாடி அமைப்பினர் போன்ற பல பெயர்களைச் சொல்லிவிட்டார். அந்தப் பெயர்களை வைத்துக்கொண்டு காவல் துறையினர் ஒவ்வொரு வரையும் போய்ப் பார்ப்பது, விசாரிப்பது என்கிற ரீதியில் நடந்து கொண்டார்கள். இதன் காரணமாக மாநில அளவில் மக்கள் எழுத்தாளர் சங்கத்தை அமைப்பதில் சில சிரமங்கள் ஏற்பட்டன. அதனால் சென்னையில் மட்டுமே இனி நடத்துவது என்கிற முடிவுக்கு வந்தோம். அந்தச் சந்தர்ப்பத்தில் ‘செம்மலர்’ வர ஆரம்பித்தது. ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’ ஆரம்பப் பணிகள் நடந்தன. அவர்களுக்கு சென்னையிலுள்ள எந்த எழுத்தாளர்களோடும் நேரடித் தொடர்பு கிடையாது. அவர்களுடைய முதல் கூட்டம் மாநில அளவில் மதுரையில் நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, சென்னை எழுத்தாளர்களை அணுக அவர்கள் முன்வந்தார்கள்.

அந்த அடிப்படையில் தோழர் கே.முத்தையா, தணிகைச்செல்வன், டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி ஆகியோர் என்னுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டார்கள். பின்னர் தோழர் கே.முத்தையா அவர்களை நான் சந்தித்தேன். அவரிடம், அரசியல் ரீதியாக எங்களுக்கு இருக்கக்கூடிய ஈடுபாடு என்பது சி.பி.எம். மீதுதான். சி.பி.ஐ., நக்சலைட்டுகளின் அரசியல் போக்கு சரியானதல்ல என்பதில் கவனமாக இருக்கிறோம். ஆனால், பொதுவாக இடதுசாரி அமைப்புகள் மத்தியிலே ஒற்றுமை என்ற ரீதியில் ஓர் அமைப்பை நடத்திக் கொண்டிருந்தோம் என்பதையும் சொன்னேன். அதன் பிறகு மக்கள் எழுத்தாளர் சங்கத்தைக் கலைத்துவிட்டு ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தோடு இணைந்தோம். சென்னையிலும் த.மு.எ.ச. உருவானது.

மக்கள் எழுத்தாளர் சங்கம், ஒரு காலகட்டத்தில் ஏற்பட்ட இடைவெளியை வெற்றிகரமாக நிறைவேற்றிய பெருமிதத்தில் தன்னை மறைத்துக் கொண்டது.

மக்கள் எழுத்தாளர் சங்கத்தின் சாதனைகளாக எதையாவது குறிப்பிட முடியுமா?

மக்கள் எழுத்தாளர் சங்கம் ஐந்து ஆண்டு காலம் மட்டுமே இயங்கி வந்த ஓர் அமைப்பு. இடதுசாரி பார்வை தமிழகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை மற்ற கலை இலக்கியவாதிகளுக்கு அழுத்தமாக உணர்த்தியது மக்கள் எழுத்தாளர் சங்கம்தான்.

அதைப் போலவே, தமிழ்நாட்டில் வளர்ந்து வரக்கூடிய இளம் எழுத்தாளர்களை அடையாளம் கண்டு அவர்களை இந்தச் சிந்தனையிலேயே போகலாம் என்று உற்சாகப்படுத்தியதும் இந்தச் சங்கம்தான்.
அந்தச் சமயத்தில் இருந்த எல்லா இடதுசாரி முற்போக்குச் சிந்தனையாளர்களும், மக்கள் எழுத்தாளர் சங்க மேடைகளில் பேசுவதைப் பெருமையாகக் கருதி இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் மக்கள் எழுத்தாளர் சங்கம் அப்போது பயன்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமல்ல, அகிலன், ஜெயகாந்தன், நா.பார்த்தசாரதி போன்றவர்கள் மீது இருக்கக்கூடிய பிரமையை முதன்முதலில் உடைத்தது எங்கள் சங்கம்தான்.

அந்தப் பணியை கலை இலக்கியப் பெருமன்றம் செய்ய வில்லை. அவர்கள் முற்போக்கு என்று சொல்லிக் கொண்டாலும்கூட, மார்க்சியம் பேசினாலும்கூட அவர்கள் இவர்களுக்கெல்லாம் ஆதரவாக இருந்துகொண்டார்களே தவிர, இவர்களின் எழுத்துகளிலே இருக்கக்கூடிய பலவீனங்களை அம்பலப்படுத்த வேண்டும் என்பதைச் செய்யவில்லை. அந்தப் பணியை அப்போது மக்கள் எழுத்தாளர் சங்கம் செய்தது.

பல இலக்கியவாதிகளை கலை இலக்கியப் பெருமன்றம் ஈர்த்தது உண்மை. அப்படிச் செய்ததும் சரியானதே. ஆனால், அதேசமயம் அவர்களுடைய படைப்பை ஒரு விமர்சன ரீதியாகப் பார்க்கத் தவறி விட்டது. சரியான விமர்சனத்தைச் சரியான நேரத்தில் செய்திருந்தால் ஜெயகாந்தன் இப்படி சரிந்துப் போயிருக்க மாட்டார்.

நீங்கள் ‘சிகரம்’ பத்திரிகையை நடத்தினீர்கள். அது இடதுசாரி முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அந்தக் காலகட்டத்தில் சரியான களமாக, ஏடாக அமைந்தது. அந்த அனுபவம் பற்றி…?

சிகரம் : Dial for Books

1975ஆம் ஆண்டு ‘சிகரம்’ பத்திரிகையை ஆரம்பித் தேன். பத்திரிகை தொடங்கிய காலத்தில் அதற்கு உறு துணையாக இருந்தவர் இளவேனில். அவர் ஏற்கெனவே ‘கார்க்கி’ பத்திரிகையை நடத்தி, அதைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டார்.

ஆகவே, ‘சிகரம்’ பத்திரிகையில் பல்வேறு பணிகளையும் அவரே செய்துகொண்டிருந்தார். ஆரம்பத்தில் ஆயிரம் பிரதிகள் அச்சடித் தோம். நூறு பிரதிகள் தவிர மற்றவை எல்லாம் விற்றன. பின்னர் இளவேனில், இயக்கத்தோடும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தோடும் கருத்து வேறுபாடு காரணமாக விலகிவிட்டார். பலர் அந்தப் பத்திரிகைக்கு ஆதரவாக இருந்து ஒத்துழை:பபு தந்தனர். விற்பனை 1000லிருந்து 1500, 2000 என்று போனது. பத்திரிகைத் தயாரிப்புச் செலவு, வரவைவிட அதிகமாகிக் கொண்டிருந்தது. அதனால் எனக்குப் பத்திரிகை நடத்துவதில் சில சிரமங்கள் ஏற்பட்டுவிட்டன. ஒன்று, எனது வழக்கறிஞர் தொழிலில் வழக்குகள் கூடுதலாகிப் போனதால், எனது கவனம் பத்திரிகை நடத்துவதில் குறைய ஆரம்பித்தது. இரண்டாவது, உடனிருந்து வேலை செய்ய சரியான நண்பர்கள் இல்லை. மூன்றாவது, பத்திரிகையில் ஏற்பட்ட நஷ்டம்… இது போன்ற பல காரணங்களால் பத்திரிகையை நிறுத்த வேண்டியதாயிற்று.

‘சிகரம்’ பத்திரிகையின் முக்கியமான அம்சம் என்று நீங்கள் கருதுவது?

தமிழம் வலை - பழைய இதழ்கள்

சிகரம் தொடங்கப்பட்டபோது 1975 ஜூனில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு விட்டது. பத்திரிகைத் தணிக்கைக்காக அப்போது தமிழ்நாட்டிலே உள்ள பத்திரிகைகளின் பட்டியல் தயார் செய்திருந்தார்கள். அந்தப் பட்டியலில் ‘சிகரம்’ தப்பிவிட்டது. ஏனென்றால், ஜூலை 1ஆம் தேதிதான் முதல் இதழே வெளிவந்தது. இதனால், பிற இதழ்களில் சில விசயங்களை எழுத முடியாதவர்கள் சிகரத்திலே எழுதினார்கள். உதாரணமாக, செம்மலருக்கு தணிகைச் செல்வன் ஒரு கவிதை அனுப்பினார். அது அதிகாரிகளால் தணிக்கைச் செய்யப்பட்டு விட்டது. அதாவது வெளியிட அனுமதிக்கவில்லை. அதைச் சிகரத்தில் வெளியிட்டோம். அந்த நிலையிலே பல பேருடைய படைப்புகளைக் கொண்டு வர முடிந்தது என்பது ஒரு முக்கியமான அம்சம்.
ஐந்தாண்டு காலம் சிகரம் வெளிவந்திருந்தது. இவற்றில் வந்த எல்லாச் சிறுகதைகளும் இன்றைக்கு ஏதாவது ஒரு புத்தகத்தில் இருந்தே தீரும். அதேபோல் பல கவிதைகளும் தொகுப்புகளில் இடம்பெற்றிருக்கும்.

இளவேனில் : Dial for Books

இளவேனிலின் ‘கவிதா’, கே.முத்தையாவின் ‘சிலப்பதிகாரம் உண்மையும் புரட்டும்’ பற்றிய கட்டுரைகள் சிகரத்தில் வெளி வந்தவைதான்.

File:சத்திய ஆவேசம்.pdf - Wikimedia Commons

சமுத்திரத்தின் ‘சத்திய ஆவேசம்’ சிகரத்தில்தான் வந்தது. பின்னர் செம்மலரில் தொடர்ந்தது.

இந்திரா பார்த்தசாரதி எழுதிய ‘குருதிப்புனல்’ என்ற நாவல் அப்போது வெளிவந்திருந்தது. அந்த நாவல் கீழவெண்மணி சம்பவத்தை வைத்து எழுதப்பட்டது. தி.மு.க. எதிர்ப்பு என்பது இடதுசாரிக் கட்சிகள் மத்தியில் வலுவாக இருந்த நேரம் அது.

குருதிப்புனல் (புதினம்) - தமிழ் ...

இதைப் பயன்படுத்திக்கொண்டு, இந்திரா பார்த்தசாரதி கீழவெண்மணி சம்பவத்தை வர்க்கப் போராட்டமாகப் பார்க்காமல், ‘ஃப்ராய்டிச’த்தைத் திணித்து, ஏதோ மனிதர்களுக்கு இருக்கக் கூடிய சில குறைபாடுகளால்தான் இவ்வாறு செய்கிறார்கள் என்பது மாதிரி எழுதி, பண்ணையாரின் செயலுக்குப் பாலியல் ரீதியாக உள்நோக்கம் கற்பித்திருந்தார்.

இந்த அம்சத்தை எல்லாம் பார்க்காமல் “கீழவெண்மணி சம்பவத்தை வைத்து ஒரு நல்ல நாவல் வந்திருக்கிறது. மிக அற்புதமாக இருக்கிறது’’ என்று சொல்லி, குறிப்பாக சில பொதுவுடைமைவாதிகளே அதை ‘ஓஹோ’வென்று பாராட்ட ஆரம்பித்து விட்டார்கள். அந்தச் சூழ்நிலையில், நான் ஒரு விமர்சனம் எழுதினேன். அது செம்மரில் வெளிவந்தது. இந்த விமர்சனம் சம்பந்தமாக இருகூறாக அணிகள் பிரிந்தன. விமர்சனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல விவாதங்கள் எழுந்தன. விவாதம் சம்பந்தமான அனைத்துக் கட்டுரைகளையும் சிகரத்தில் வெளியிட்டேன். சில முக்கிய தலைவர்களே புனைபெயரில் அந்தக் கட்டுரைகளை எழுதி இருந்தனர். ஆரம்பத்தில் என்னுடைய விமர்சனத்தைத் தவறு என்று கூறியவர்கள், பின்பு சரி என்று ஏற்றுக் கொண்டார்கள். அநேகமாக ‘குருதிப்புனல்’ பற்றிய விமர்சனங்களிலேயே என்னுடையதுதான் சரியானது என்பது இன்றைக்கு கிட்டத்தட்ட நூற்றுக்கு நூறு நிரூபணமாகிவிட்டது.

தமிழ்நாட்டில் திராவிட இயக்க ஆட்சி அமைந்ததில் கணிசமான பங்கு கலை, இலக்கியத் துறைகளுக்கு உண்டு. அவர்களின் படைப்புகள் இலக்கியத் தரம் வாய்ந்தவை அல்ல என்றொரு விமர்சனம் இருந்தபோதிலும், மக்களி டையே செல்வாக்கு பெற்றிருந்தது என்பதை மறுக்க முடி யாது. ஆனால், இடதுசாரிகளிடமிருந்து கனமான கலை இலக்கியங்கள் வந்தபோதிலும் மக்கள் மத்தியில் சரியான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இது பற்றி போதிய கவனம் செலுத்தாதது போன்ற நிலை உள்ளதே…?

திராவிட இயக்கங்களுக்கும், இடதுசாரி இயக்கங்களுக்கும் இடையே உள்ள ஒரு வேறுபாடு என்னவென்றால், இடதுசாரி இயக்கங்கள் சமூகப் பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும், வர்க்க ரீதியாகவும் பார்க்கின்றன. இந்தப் பார்வையை மக்களுக்குப் புரியவைப்பது கடினம். மாறாக, திராவிட இயக்கத்தினர் சில எதார்த்தமான, மேலோட்டமான, வெளியே தெரியக்கூடிய நிலைமை களைப் பார்த்தார்கள். அந்த எதார்த்த தன்மையை எவ்வளவு வெகுஜனத் தன்மையோடு கொடுப்பது என்பதே அவர்களுக்கு முக்கியம். உதாரணமாக தமிழ்நாட்டிலே இருக்கக்கூடிய மூட நம்பிக்கை, சாதியக் கொடுமை, குறிப்பிட்ட சாதியினுடைய ஆதிக்கம் – இவை ஏன் வந்தன? எப்படி வந்தன? என்பதற்கு விஞ்ஞானரீதியாகக் காரணங்களை சொல்லலாம். ஆனால், அவர்கள் அப்படி எல்லாம் பார்க்கவில்லை. சில எதார்த்த உண்மைகள் இருந்தன. அதை அவர்கள் கணக்கிலே எடுத்துக் கொண்டு, கலைத்தன்மை, உத்தி – இவற்றைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் மத்தியில் எப்படி பிரச்சாரத்தை எடுத்துச் செல்லலாம் என்கிற நோக்கத்திலேயே இருந்தார்கள். அந்தச் சமயத்தில் தமிழ்நாட்டில் நிறைய நாடகங்கள் நடத்தப்பட்டன. ஆகவே, நாடகத் துறையில் திராவிட இயக்கம் புகுந்தது. அப்போது இடதுசாரி இயக்கத்தினர் யாரும் நாடகங்களில் குறிப்பிடும் அளவுக்குப் புகவில்லை. தோழர் பி.ராமமூர்த்தி போன்ற தலைவர்கள்கூட ஆங்காங்கே நாடகங்களை நடத்தி இருக்கிறார்கள். ஆனால், திராவிட இயக்கத்தினர் இயக்கமாக நாடகத்தில் இறங்கினார்கள். குறிப்பாக, எம்.ஆர்.ராதா! அவரின் ‘ரெக்கார்டு’ இன்றுவரை யாராலும் உடைக்கப்பட வில்லை. ரத்தக் கண்ணீரை மட்டும் 4000க்கும் மேற்பட்ட முறை நடத்திக் காட்டியிருக்கிறார். அதைப் போலவே, அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்றவர்களெல்லாம் இந்த நாடகத் துறையிலே பிரவேசித்தார்கள்.
இவர்கள் நாடகத் துறையிலே செய்த சாதனையைக் கண்டுதான் திரையுலகம் இவர்களை அழைத்தது. இவர்களாக பெரும் முயற்சி செய்து திரைத் துறையின் கதவைத் தட்டி உள்ளே நுழையவில்லை.

இடதுசாரியினர் அரசியல் ரீதியான கட்டுரைகள் எழுதி னார்கள். அது குறிப்பிட்ட பகுதியினரைத்தான் சென்றடைய முடியும். வெகுஜனங்களைச் சென்றடையக்கூடிய ஆயுதங்களை அன்றிருந்த இடதுசாரிக் கட்சிகள் எடுக்கவில்லை. அதை திராவிட இயக்கம் கையிலெடுத்தது. நாடகத்திலிருந்து திரையுலகத்துக்கு வந் தார்கள். திரையுலகம் வளர்ந்தது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.

கலைஞர் கருணாநிதிக்கு ஒரு வாய்ப்பு என்ன வென்றால், அண்ணாவினுடைய கதைகளை கே.ஆர். ராமசாமிக்குத்தான் நடிக்கத் தருவார்கள். ஆனால், கருணாநிதி ‘பராசக்தி’க்கு வசனம் எழுதியபோது சிவாஜி கணேசனை வைத்துப் படமெடுக்கப்பட்டது. வசனம் பேசுவதில் மற்றவர்களைவிட சிவாஜிக்குத் தனித்திறமை உண்டு.

ஆகவே, பராசக்தி, கருணாநிதி வசனத்தால் மட்டுமே வெற்றிபெறவில்லை. அதை சிவாஜிகணேசன் பேசியதால்தான் வெற்றி பெற்றது. பராசக்தியின் வெற்றி என்பது திராவிட இயக்க வெற்றி யின் முக்கிய அம்சம்.

வெகுஜன சாதனங்களை முதலிலே கையிலெடுத்துக் கொண்டு அதைச் சரியாகவும் பயன்படுத்திக்கொண்டார்கள். தேசிய இயக்கம் கூட ஆங்காங்கே தொட்டதே தவிர, அவர்களால் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை. அடுத்து, கண்ணதாசன், எம்.ஜி.ஆர். போன்றவர்களும் பிரவேசித்து அந்தக் கருவியை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார்கள்.ஆக, திராவிட இயக்கங்களின் செய்திதான் மக்களைச் சென்று சேர்ந்ததே தவிர, இடதுசாரி இயக்கத்தின் செய்திகள் அவர்களைச் சென்றடையவில்லை.

இன்றைக்கும்கூட இடதுசாரி கருத்துக்களை வெளிப்படுத்துகின்ற திரைப்படமாக எந்தப் படத்தையும் சொல்ல முடியாது. ஏதோ ஒரு சில படங்களில் ஆங்காங்கே சில கருத்துகள் வந்தாலும்கூட முழுமையான படம் எதுவும் இல்லை.

இலக்கியத்தைப் பொறுத்தவரையில் திராவிட இயக்கத்தினர் அது இலக்கியத்தன்மையோடு இருக்கவேண்டும், செல்வாக்கு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் படைக்கவில்லை. அவர்களுடைய நோக்கம் எல்லாம் சமூக மாற்றம், அரசியல், சீர்திருத்தம் என்றிருந்ததாலே அவர்கள் சரியான இலக்கியம் படைக்கவேண்டும் என்பதிலே அக்கறை செலுத்தவில்லை. ஆனால், இடதுசாரிகளைப் பொறுத்தவரையில் அப்படி அல்ல. இவர்கள் ஏற்கெனவே பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியாகவும் பார்த்ததாலே அழுத்தமான இலக்கியப் படைப்புகளைத் தந்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், திராவிட இயக்கத்தினர் எழுதினார்கள். ஆனால், அவர்களுக்கு இலக்கியக் கண்ணோட்டம் இல்லை. இலக்கியத்தின் பிரச்சினைகள் தெரியவில்லை. ஆனால், இடதுசாரிகள் இலக்கியக் கண்ணோட்டம் கொண்டிருந்தார்கள்.

கலை இலக்கியங்களில் கம்யூனிஸ்டுகளின் ஈடுபாடு மிகவும் பின்னால்தான் வந்தது. ஒரு காரணம், இந்த இயக்கத்திலே இருக்கும் பல பேர் தொழிற்சங்கத் தலைவர்கள். அவர்களுக்குக் கலை இலக்கியங்கள் பற்றிய ஈடுபாடு சற்றுக் குறைவு. அது மாத்திரமல்ல, அப்போதிருந்த சென்னை மாநிலம் என்பது தமிழ்நாடு, கேரளா, கர்னாடகா, ஆந்திரா எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மாநிலம். ஆக, பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் பலருக்குத் தமிழைப் பேசத் தெரியுமே தவிர, அதில் போதிய பயிற்சி இல்லை. ஆகவே, அவர்களுக்குத் தமிழ் இலக்கியங்கள் பற்றியோ, அதன் மரபுகள் பற்றியோ தெரிய வாய்ப்பு குறைவு. தமிழ் நாட்டினுடைய நகரங்கள் தெரியுமே தவிர, கிராமங்கள் தெரியாது. ஆகவே, அவர்களுடைய பணி என்பது கலை இலக்கியப் பணி என்றில்லாமல், தொழிற்சங்கப் பணியாகவும், அரசியல் பணியாகவும் போய் விட்டது. இவர்களில் வித்தியாசமாக இருந்த ஒரு தலைவர் ஜீவா.

ஜீவா அந்த நாளிலே மேடைகளில் இலக்கியம் பேசினார். அவரிடம் சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் பொதுவாக கலை இலக்கியங்களை கம்யூனிஸ்டுகள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதை அவர் உணர்த்தினார். ‘கலை இலக்கியப் பெருமன்ற’த்தை நிறுவினார். ஆனால், ஜீவா நினைத்த அளவுக்கு கலை இலக்கியப் பெருமன்றம் சாதனைகளைச் செய்யவில்லை.
பல்வேறு பிரச்சினைகளில் ஒரு சரியான பார்வையை அவர்கள் கொடுக்கவில்லை. உதாரணமாக, நான் இப்போது சொன்ன ‘குருதிப்புனல்’ பற்றிய விசயம். ‘துலாபாரம்’ என்றொரு படம் வந்தபோது, அது பற்றிய அவர்களின் பார்வை! அந்தப் படத்தை விமர்சன ரீதியாக அவர்கள் பார்க்கவில்லை. ஆகவே, கலை இலக்கியப் பெருமன்றம் சரியான முற்போக்குப் பாதையில் செல்லவில்லை. அப்படிச் செல்லாத தனாலே, கன்னியாகுமரியிலும், வேறு சில இடங்களிலும் மட்டுமே அவ்வமைப்பு இயங்குகிறது. மற்ற இடங்களில் பெயருக்கு மட்டுமே இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் 1975ல்தான் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. அதாவது, திராவிட இயக்கம் கலை இலக்கியத் துறையில் ஈடுபட்டு கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்தச் சங்கம் ஆரம்பமானபோது ஆயிரத்துக்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்தார்கள். அப்போது கருத்தரங்குகள் நடத்துவதுதான் முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக நவீன இலக்கியங்கள் பற்றி மட்டுமே பேசுவது. இப்படி இருந்த எழுத்தாளர் சங்கம், மெல்ல மெல்ல தன்னுடைய வளர்ச்சிக் கட்டங்களைத் தொட்டது. அதிலே ஒன்று கலைத் துறையில் ஈடுபாடு காட்டுவது, வீதி நாடகங்கள் நடத்துவது, கலை இரவுகள் நடத்துவது, திரைப்படங்கள் சிலவற்றை ஆதரிக்க வேண்டும், சிறப்பிக்க வேண்டும் என்பதைக் கூட இப்போதுதான் செய்திருக்கிறோம்.
இப்போது முற்போக்கு எழுத்தாளர் சங்கம் என்று சொன்னால், தமிழ்நாட்டில் எல்லோருக்கும் தெரிகிற அமைப்பாக இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணம், ‘கலை இரவு’ எல்லா முக்கிய நகரங் களிலும் நடத்தப்படுகிறது.

ஆனால், கலை இரவுகளால் மட்டுமே வெகுஜனத்தன்மை பெற்றுவிட முடியாது. அடுத்து எல்லோரையும் சென்று அடைகிற தொலைக்காட்சி, திரைப்படங்கள் இவைகளிலே இந்தக் கருத்துக்கள் வெளிப்பட்டால்தான் அவர்களை அறியாமலே மக்கள் மத்தியில் இந்தக் கருத்துகள் போய் நிற்கும். அப்போதுதான் அரசியல்ரீதியான ஒரு மாற்றம் ஏற்பட வசதியாக இருக்கும். அந்தப் பணியை முற்போக்கு எழுத்தார் சங்கம் ஆரம்பத்திலேயே செய்யாவிட்டாலும் கூட இன்று செய்து வருகிறது. மக்களின் மனோபாவம் மாறுவது என்பது, மெல்ல மெல்ல அவர்களுக்கே வெளிப்படையாகத் தெரியாமல் ஏற்படும் மாற்றமாகும். இந்த மாற்றத்தைக் கொண்டு வருவதில் கலை இலக்கியத்திற்கு ஒரு முக்கிய பங்குண்டு. கலை இலக்கியத்தின் வெகுஜனத் தன்மையை ஒட்டி மனோபாவ மாற்றத்தின் அளவு அமையும்.

மொழிப் பிரச்சினையில், தமிழை வளர்த்தெடுப்பது, இந்தி ஆதிக்கத்திற்கு எதிராகக் குரலெழுப்புவது போன்ற செயல்பாட்டில் த.மு.எ.ச. சமீப காலமாக தீவிரம் காட்டுகிறது. இதன் விளைவாக தமிழ் வளர்ச்சி மாநாடு, இந்தி திணிப்புக்கு எதிரான கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இது போன்ற செயல்பாடுகள் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் ஏற்பட்ட நிர்ப்பந்தங்களின் வெளிப்பாடு என்றொரு கருத்து நிலவுகிறதே?

Buy Bharathidasan Kavithaigal Book Online at Low Prices in India ...

முற்போக்கு எழுத்தாளர் சங்கமும் சரி, பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட இடதுசாரிக் கட்சிகளான சி.பி.எம்., சி.பி.ஐ., கட்சிகளும் சரி, தங்களுடைய கருத்துகளைச் சுயவிமர்சனம் மற்றும் பரிசீலனை செய்து கொண்டிருக்கின்றன. அதில் எந்தத் தவறும் கிடையாது. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு குறிப்பிட்ட நிலையை எடுத்திருக்கலாம். உதாரணமாக, பாரதியை அங்கீகரித்த அளவுக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை பாரதிதாசனை அங்கீகரிக்கவில்லை. பாரதியிலிருந்து பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்திற்குப் போய் விடுவார்கள். இதில் உள்நோக்கம் எதுவும் கிடையாது. இதற்கு முக்கியக் காரணம், ஒரு சரியான மதிப்பீட்டையும், பரிசீலனையையும் யாரும் செய்ய வில்லை. செய்வதற்குப் போதுமான ஆட்கள் இல்லை. ஏனென்றால், அவர்கள் தொழிற்சங்கத் தலைவர்கள். அது சம்பந்தமாக அவர்கள் சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் யாரும் பாரதிதாசனை முழுமையாக மதிப்பீடு செய்ய வாய்ப்பைப் பெறவில்லை.

முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தொடங்கப்பட்டு, வளர்ந்து வருகிறபோது, ஒரு கேள்வி எழுந்தது. நாம் பாரதிக்கும், பட்டுக் கோட்டைக்கும் விழா எடுக்கிறோம். இடையில் பாரதிதாசன் இருக்கிறாரே – அவரைப் பற்றி ஒரு மதிப்பீடு வேண்டும் என்றோம். நான் ‘சிகரம்’ பத்திரிகை நடத்தும்போதே, இந்தப் பிரச்சினையைத் தொட்டிருக்கிறேன். பாரதிதாசனிடம் சில கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஏன், பாரதியிடம் இல்லையா? ரஷ்யப் புரட்சியையே அவர் ‘காளி கடைக்கண் வைத்தாள்’ என்றுதான் சொல்கிறார். அதற்குப் பிறகும்கூட பாரதியை நாம் ஏற்றுக் கொண்டோம்.

பாரதியாரைவிட பாரதிதாசன் சமூகப் பிரச்சினைகளைத் தொட் டிருக்கிறார். பெண்ணுரிமை போன்ற மற்ற விசயங்களையும் பேசி இருக்கிறார். அதனால் அவரையும் ஒரு முறையான அங்கீகரிப்பு செய்யவேண்டும் என்று தீர்மானித்தோம்.

மொழிப் பிரச்சினையிலும் சுயவிமர்சனத்தின் விளைவாய், இந்தி மொழிக்கு எதிராக அல்ல, அதன் ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுத்தோம். இந்திய மொழிகள் அனைத்தும் சமமாகப் பாவிக்கப்பட வேண்டும் என்ற உறுதியான நிலை எடுத்தோம். இன்று தி.மு.க. தலைவர்களே இந்த நிலையை எடுத்துப் பேசி வருகிறார்கள்.

பாரதிதாசனைப் பற்றி குறிப்பிட்டீர்கள். அதைப்போல பெரியார் ஈ.வெ.ரா.வையும் கூறலாம். தமிழ்நாட்டில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை அவர் ஏற்படுத்தினார். அவர் பற்றிய சரியான மதிப்பீட்டை திராவிட இயக்கங்களே இன்னும் முன் வைக்கவில்லை. இடதுசாரி அமைப்புகளும் அவர் பற்றிய சரியான கணிப்புக்கு இன்னும் வரவில்லையே…?

பெரியாருடைய செல்வாக்கு இரண்டு பிரச்சினைகளில் ஆழமாகத் தெரியும். அதில் ஒன்று இடஒதுக்கீடு. மண்டல் கமிஷன் வந்தபோது, வட இந்தியாவில் ஏகப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், வி.பி.சிங் அரசுக்கு எவ்வளவு நெருக்கடி தர முடியுமோ, அதை எல்லாம் எதிர்ப்பாளர்கள் தந்தபோது தமிழ்நாடு அமைதியாக இருந்ததற்குக் காரணம், பெரியார் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்த சாதனைதான். வடஇந்தியா இன்னும் மாறவில்லை. அதனால்தான் அதைச் சகித்துக் கொள்ள முடியாமல் போராட்டம் நடத்துகிறார்கள். இந்த விஷயத்தில் பெரியார் சாதனையை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. அயோத்திப் பிரச்சினையிலும் பல மாநிலங்கள் பற்றி எரிந்தன. ஆனால், தமிழ்நாடு அமைதியாக இருந்ததற்குக் காரணம், ஜெயலலிதா ஆட்சி அல்ல; பெரியார்.

பெரியார் ஆரம்ப காலத்திலிருந்தே இந்த மதப்பிரச்சினை குறித்து சரியான நிலை எடுத்திருந்தார். மூடநம்பிக்கைகளையும், கடவுள் வழிபாட்டையும் எதிர்த்துப் போராட்டம் நடத்தினாரே தவிர, முஸ்லிம்களையோ கிறித்துவர்களையோதாக்கச் சொல்லி இயக்கம் நடத்தவில்லை. அதனால்தான் தமிழ்நாட்டில் மதக் கலவரம் ஏற்படவில்லை. இது பெரியாரின் சாதனை என்பதை இப்போது எல்லோரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

சில விஷயங்களில் பெரியார் கறாராக நின்றார். தேர்தலில் நின்றால் அந்தப் பகுதி மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகச் சில ஜாலங்களைச் செய்யவேண்டும். அதனாலே தேர்தலில் நிற்பதை ஒதுக்கித் தள்ளிவிட்டார். ஆனால், அவருக்குப் பின் வந்த திராவிட இயக்கத்தினருக்கு ஆட்சியைப் பிடிப்பதே முக்கியம் என்றானபோது, தேர்தலும் முக்கியமாகிப் போயிற்று. அதற்காக எதை வீசி எறிய முடியுமோ, எதைக் கழற்றிப் போட முடியுமோ அதையெல்லாம் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவாகளுக்குப் பெரியார் வெறும் லேபிள்தான்.

பெரியார் சுயமரியாதை சமதர்மம் - Periyaar ...

இரண்டாவதாக, கடவுள், மதம் இவற்றில் பெரியார் கடைசி வரை சமரசம் செய்து கொள்ளவில்லை. தனக்குச் சரி எனப் பட்டதில் இதயபூர்வமாக உறுதியாக நின்றார். அதனால்தான் அவருக்குச் சமமான தலைவர்களாக யாரையும் சொல்ல முடிய வில்லை. அவருக்குப் பிறகு திராவிடர் கழகம் மூன்றாகச் சிதறிப் போய்விட்டது. திருவாரூர் தங்கராசை எம்.ஜி.ஆர். மடக்கி ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். வெ.ஆனைமுத்தைப் பொறுத்தவரை அவரால் என்ன முடியுமோ அதனைச் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப் போனால், மக்களுக்குத் தெரிகிறதோ, தெரியவில்லையோ, பெரியாருடைய வேலையை அவர்தான் செய்து கொண்டிருக்கிறார்.

பெரியாரை ‘தமிழ்நாட்டின் முதல் மார்க்சிஸ்ட்’ என்று சிலர் கூறுகிறார்கள். மார்க்சியத்தை தமிழ்நாட்டிற்கேற்றவாறு வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியவரே பெரியார்தான் என்றொரு கருத்தும் நிலவுகிறது. அது பற்றி…?

மார்க்சியம்: ஓர் எளிய அறிமுகம் | Buy ...

பெரியார் ரஷ்யாவுக்குச் சென்றுவந்த பிறகு அவருடைய சிந்தனையில் பலவிதமான மாற்றங்கள் ஏற்பட்டன. ஆனால், அவர் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தன்னுடைய போக்குதான் மார்க்சியம் என்று நினைத்தார். இங்கே பல்வேறு சாதிகள் இருக்கின்றன, இந்தப் பிரச்சினை ரஷ்யாவிலோ சீனாவிலோ கிடையாது. இங்கே ஒரு குறிப்பிட்ட சாதி மட்டுமே மேலோங்கி நிற்கிறது. ஆக, இது பற்றிய போராட்டத்தை முதன்மைப்படுத்திச் செய்தார். அந்தப் பாதை சரி என்று நினைப்பவர்கள் அவரை பெரிய மார்க்சிஸ்ட் என்று நினைக்கிறார்கள்.

சாதி, மதம் யாவும் வர்க்கத்தினுடைய அம்சம்தான். அதனால் வர்க்கப் போராட்டத்தின் மூலம் அதைத் தீர்த்துவிட முடியும் என்று நம்பக்கூடியவர்கள் பொதுவுடைமை இயக்கத்தில் இருக்கிறார்கள். பெரியார் நச்சு மரங்களைப் பார்த்தார். ஆனால், அதன் வேர்களைப் பார்க்க வில்லை. கம்யூனிஸ்டுகள் வேர்களைப் பார்த்தார்கள். மக்களை அடிமைப்படுத்துவதில் கடவுள் நம்பிக்கை, அதையொட்டி வரக்கூடிய தர்மம், சாஸ்திரம் போன்றவற்றிற்கும் ஒரு பங்கு உண்டு. அதைத் தகர்த்தால் சரியாகிவிடும் என்கிற நிலையிலே பெரியார் செய்தார். அவர் பகுத்தறிவுக்குத்தான் ரொம்ப முக்கியத்துவம் கொடுத்தார். கூட்டத்திலே பேசும்போதுகூட கடவுள், மூடநம்பிக்கைப் பற்றி பேசிய பிறகுதான் இந்தி எதிர்ப்பு, அரசியல் என்று வருவார். எத்தனை பேர் பின்னால் வருகிறார்கள் என்பதைப் பற்றிக் கவலைப் படாமல் வாழும் வரை இந்த விஷயங்களுக்காகவே போராடுவது என்பதில் உறுதியாக இருந்தார். ஆக, பெரியாருக்கும் மார்க்சியத்திற்கும் உள்ள சமூகக் கண்ணோட்ட முரண்பாட்டைப் பெரிதாக்கி சச்சரவுகள் செய்ய வேண்டிய அவசியம் இப்போது இல்லை.

கடவுள் மறுப்புக் கொள்கையில் பொதுவுடைமைவாதிகள் சரியாகக் கவனம் செலுத்தவில்லை. அது திராவிட இயக்கத்தினரின் வேலை என்கிற மாதிரி செயல்பாடு உள்ளது. அறியாமைக்கு எதிரான பகுத்தறிவுச் சிந்தனையை மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமல், அவர்களிடம் மாற்றத்தை ஏற்படுத்துவது எந்த அளவுக்குச் சாத்தியம்?

Noolulagam » சிகரம் ச. செந்தில்நாதன் » Page 1

வெகுஜனத்தன்மை பெற கடவுள் மறுப்பு என்பதே பெரிய தடையாக இருந்துவிடக் கூடாது. கூட்டத்தில் அது பற்றி பேசினால், மக்களை அணுகுவது, ஈர்ப்பது நடைமுறைச் சாத்தியம் இல்லாமல் போய்விடும். இங்கே 1000ல் 999 பேருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கை கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சியிலே இருப்பவர்கள் கேரளாவில் ஐயப்பன் கோயிலுக்குப் போகிறார்கள். மேற்கு வங்காளத்தில் காளி பக்தர்களாக இருக்கிறார்கள். கடவுள் எதிர்ப்பு என்பதன் பெயரால் இவர்களை விரட்டி அடிப்பதைவிட இவர்கள் நடைமுறையில் மாற்றம் பெறுவதற்கு உதவுவதுதான் சரியாக இருக்கும்.

கம்யூனிஸ்டாக வாழ்வது ஒரு லட்சியம். இதில் சில பேர் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். சிலர் குறைவாகப் பெறலாம். குறைவான மதிப்பெண்ணை வைத்து பாடமே சரியில்லை என்று சொல்லலாமா!

உங்களின் கருத்து இப்படியானபோதிலும், பொதுவுடைமை இயக்கத்தில் பிராமணிய ஆதிக்கம் இருக்கிறது. அதனால்தான் அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கையைக் கையிலெடுக்க மறுக்கிறார்கள் என்று கூறப்படுகிறதே?

கம்யூனிஸ்ட் இயக்கம் சென்னையில் தோன்றியபோது, தேசிய இயக்கத்தில் இருந்தவர்கள்தான் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு வந்தார்கள். அந்த நிலையில் தேசிய இயக்கத்தில் பிராமணர்கள்தான் முன்னிலையில் இருந்தார்கள். பிரிட்டீஷ் ஆட்சியை எதிர்க்க வேண்டுமானால், அது பற்றி விவரமாகத் தெரிந்து கொண் டிருக்கக்கூடிய மக்கள்தான் எதிர்க்க முடியும். பிராமணர்கள்தான் அப்போது அதிக அளவில் படித்த சமூகமாக இருந்தார்கள். அதனால்தான் அவர்கள் பொதுவுடைமை இயக்க அரசியலுக்கு வந்தார்கள். பிராமணத் தலைவர்கள் சிலர் இருப்பதால் அதை மட்டுமே வைத்து பிராமணிய ஆதிக்கம் என்று சொல்லிவிட முடியாது. கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கு வந்த பிறகு அவர்கள் பிராமணர்களா? பிராமணர்கள் இல்லையா? என்பது முக்கியமே இல்லை. அவர்கள் கம்யூனிஸ்டுகள். வெளியே இருந்து பார்ப்பவர்கள் வேண்டுமானால், பிராமண ஆதிக்கம் என்று கருதலாம். கட்சிக்குள் இருப்பவர்களுக்கு அப்படி ஒரு கருத்து இல்லை.

தமிழில், முற்போக்கு இலக்கியங்களின் இன்றைய வளர்ச்சிப் போக்கு எந்த அளவில் உள்ளது?

முற்போக்கு இலக்கியம் இப்போது தவிர்க்க முடியாத ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கிறது. பல்கலைக் கழகங்களில் பாடநூலாக வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாசகர்கள் மத்தியில் நல்ல அங்கீகாரம் கிடைத்துள்ளது. அதனால், வியாபாரப் பத்திரிகைகளும் முற்போக்கு இலக்கியங்களை வெளியிட முன் வந்திருக்கின்றன.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் மனிதனைப் பாடுவதில் தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி, மனிதனே பாட்டுடைத் தலைவன் என்பதை உறுதி செய்துவிட்டது.

சந்திப்பு: சூரியசந்திரன்

சாரதா,
அக்டோபர், நவம்பர் 1994

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *