நூல் அறிமுகம்: நுணுக்கங்களை உற்றுப் பார்க்கவும் – ஹரிஷ் குணசேகரன்நூல்                                 :  “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர்                     :    ச.சுப்பாராவ்
வெளியீடு                    :    பாரதி புத்தகாலயம்,
                                                7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
                                                சென்னை 600 018
விலை                           :     ரூபாய்  140.00

புத்தகம் வாங்க         : https://thamizhbooks.com/product/sila-idangal-sila-puthagangal-by-subarao/

போன புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் சுப்பாராவ் எழுதிய ‘சில இடங்கள்… சில புத்தகங்கள்…’ புத்தகத்தை வாங்கி வாசிக்காமலேயே வைத்திருந்தேன். இத்தாலியில் இரண்டரை வருடங்கள் செலவழித்தும், ஷெங்கன் ஸ்டூடண்ட் விஸாவில் இருந்தும் நான் எங்கும் போனதிலை. சியன்னா, ரோம் மட்டுமே சென்றிருக்கிறேன். அதிகம் வெளியில் போனால் செலவு பிடிக்கும் என்பதால் அறையிலேயே முடங்கி, வேகமாக மாஸ்டர் படிப்பை முடிப்பதிலேயே கண்ணாய் இருந்தேன். சியன்னாவில் இருந்து ஃப்ளோரென்ஸ் ஒன்றரை மணிநேர தூரம் தான். ஆனால் நான் அறையை விட்டு நகர வில்லை. 2016 செப்டம்பரில் இத்தாலி போன போது எனக்கும் ஐரோப்பா முழுவதும் சுற்றிப் பார்க்கவென்று ஒரு லிஸ்ட் இருந்தது. சூழலால் அந்த லிஸ்டை புதைத்து விட்டு போராடி மாஸ்டர் டிகிரி வாங்கிய பின் இந்தியா திரும்பினேன். சாவகாசமாக என்றாவது ஒருநாள் இத்தாலியை, ஐரோப்பாவின் முக்கிய இடங்களை டூரிஸ்ட் விஸாவில் சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்று நினைத்தபடி தான் இத்தாலியை விட்டு வெளியேறினேன். இத்தாலியின் ரெஸிடென்ஸ் பெர்மிட்டை புதுப்பித்துக் கொண்டு அங்கு வேலை தேட வாய்ப்பிருந்தது. ஆனால் நான் சியன்னா திரும்பவில்லை. சென்னையிலேயே வேலை தேடிக் கொண்டு இருந்து விட்டேன்.

2019 டிசம்பரில் இந்தப் புத்தகம் வெளிவந்தது. நான் 2019 பிப்ரவரி – மார்ச்சில் தான் பட்டம் வாங்கிவிட்டு சென்னை திரும்பினேன். 2016ல் இந்தப் புத்தகம் எனக்கு கிடைத்திருந்தால் என்னுடைய மனநிலை மாறியிருக்குமோ என்னமோ? ரோம், வாடிகன் நகரங்களில் முக்கிய இடங்களை ஒரே நாளில் சுற்றிப் பார்த்தேன் நண்பனோடு.‌ வாடிகன் அருங்காட்சியகம் சுற்றிப் பார்க்கவில்லை. கலோசியம் கவர் ஆகும்படி ஒரு பாலத்தில் நின்று ஃபோட்டோ எடுத்தேன். உண்மையில் அதற்கெல்லாம் எனக்கு நேரம் இருந்ததில்லை. அதில் பணம் செலவழிக்கவும் எனக்கு விருப்பமில்லை. ஒவ்வொரு யூரோவும் விழுங்கிய இந்திய ரூபாய்களை நினைத்தால் எனக்கு மயக்கமே வந்தது. சியன்னாவில் என்னுடைய சூழல் என்னை அவ்வளவு மகிழ்ச்சியாக வைத்திருக்கவில்லை (கடைசி ஆறு மாதங்களைத் தவிர்த்து). ‘சில இடங்கள்… சில புத்தகங்கள்…’ புத்தகத்தை ஒரு வழியாகத் திறக்கும் பக்குவம் வந்தது.முப்பத்தைந்து ஆண்டுகளாக ஆங்கில நாவல்கள் வழியாக, இர்வின் வாலஸ் எழுத்தில், டேன் பிரவுன் நாவலில் (இன்னும் புத்தகங்களை சுட்டிக் காட்டியபடி செல்கிறார்!) தரிசித்த இடங்களை நமக்கும் காட்டுகிறார் சுப்பாராவ். இதை வாசித்ததும் பிரமித்துப் போனேன். பயணக் கட்டுரைகளை, அனுபவங்களை மொழி ஆளுமை உள்ள யார் வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் பயணம் போன இடங்களுக்குத் தொடர்புள்ள புத்தகங்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஓவியர்கள், அவர்தம் சோகக் கதைகள் (வான்காவினுடையது) வழி நமக்கு ஒரு புதிய உலகத்தைக் காட்ட அனுபவமிக்க வாசகராக இருக்கும் எழுத்தாளரால் தான் முடியும். ஐரோப்பாவில் சில முக்கிய நகரங்களுக்கு இடங்களுக்கு நம்மை விரல் பிடித்து அழைத்து செல்கிறார். அவர் பார்க்காமல் போன ஆன் ஃப்ராங்க் அருங்காட்சியகம், பிஸா சாய்ந்த கோபுரம் ஆகியவற்றை நாமும் தவற விடுகிறோம். வரலாற்று தகவல், சுவாரஸியமான நிகழ்வுகளை ஆங்காங்கே தூவி செல்கிறார். ஐரோப்பாவை, சுற்றிப் பார்க்கும் இடங்களின் ஜனநாயகத் தன்மையை உச்சி முகர்கிறார். ஆகஸ்ட் மாதம் ஐரோப்பாவில் குளிர் அதிகம் இருக்காது என்கிறார். உண்மைதான், நானும் உணர்ந்திருக்கிறேன். ஐரோப்பிய தெரு குழாய்களில் ஜில்லென்று நல்ல தண்ணீர் கொட்டிக் கொண்டே இருக்கும் என்கிறார். நான் கூட சியன்னாவில் அப்படி வயிறு முட்ட தண்ணீர் குடித்து இதுபோல இந்தியாவில் ஏன் கிடைப்பதில்லை என்று நினைத்ததுண்டு. ஈஃபில் டவர் போன போது லெமன் சாதம் கட்டிக் கொண்டு போய் சாப்பிட்டதை சொல்லி, மதுரை மீனாட்சி கோயில் சோதனையில் பாக்கு பாக்கெட்டை கூட அனுமதிக்காததை சுட்டிக் காட்டுகிறார். ஈஃபில் டவர் எந்தத் தெருவிலிருந்தும் தெரிகிறது, மதுரை மீனாட்சி கோயில் கோபுரம் போல என்கிறார். உண்மை தான், நான் கூட சியன்னா டெல் கேம்போ சதுக்கத்தின் டவரை குறுகலான தெருக்கள் வழியாகப் பார்த்திருக்கிறேன். பஸ், ட்ராம், மெட்ரோ, ரயில், வாட்டர் பஸ் எல்லாவற்றுக்கும் ஒரே பாஸ் தான் என்கிறார். கூகிள் மேப்பில் நடக்க பத்து நிமிடம் காட்டினால், இந்தியர்களுக்கு இருபது நிமிடங்கள் கூடுதலாக எடுக்கும் என்கிறார். ஏ.கே.செட்டியாரின் ‘ஐரோப்பா வழியாக’ நூல் தொடங்கி பல நூல்களை நமக்குப் பரிந்துரைக்கிறார். அவர் காட்டிய இடங்களை இன்னும் அறிந்துகொள்ள அது தொடர்பான திரைப்படங்களைப் பரிந்துரைக்கிறார். என்ன சொல்ல வருகிறேன் என்றால்.. ஒரு பக்கத்தில் பயண வழிகாட்டியாக, வரலாற்று தகவல்களை எடுத்து சொல்பவராக இருந்து கொண்டு மறு பக்கத்தில் நீண்ட வாசிப்பின் வழியே தான் தரிசித்தவற்றை நமக்கும் காட்டுகிறார். இந்தப் புத்தகத்தின் வெற்றியாக இதைத் தான் பார்க்கிறேன்.ஐரோப்பாவை சுற்றிப் பார்க்க முடியாத என்னை ஆசுவாசப்படுத்தி, தேற்றி, வா போகலாமென்று அழைத்து சென்று அந்த இடத்தின் முக்கியத்துவத்தை சொல்கிறார். ஒரு படி மேலே போய், இது இந்த நாவலில் இந்த இடத்தில் வருகிறது தெரியுமா? என்கிறார். தெரியாது என்றதும், இந்தப் படத்தில் வந்தது அதையாவது பார்த்தாயா என்கிறார். இல்லை என்றதும், புத்தகம் வாசிக்க சொல்லி, படம் பார்க்க சொல்லி பரிந்துரைக்கிறார். புத்தகத்தை வாசிக்கும்போது இப்படித் தான் உணர்ந்தேன். வெறும் 137 பக்கங்களில் நமக்கு இந்த அனுபவத்தைக் கடத்துகிறார். லட்சங்கள் செலவு செய்து அவர் பயணம் செய்ததன் விளைவாக, தமிழ் வாசகர்கள் நமக்கு 140 ரூபாயில் ‘சில இடங்கள்… சில புத்தகங்கள்…’ வாசிக்க கிடைக்கிறது.

தனிப்பட்ட முறையில் விஷயங்களை, கலை சம்பந்தப்பட்ட நுணுக்கங்களை உற்றுப் பார்க்க இந்நூல் எனக்கு அறிவுறுத்துகிறது. உதாரணமாக சியன்னா கத்தீட்ரல் (மாணவனாக இருந்ததால் எனக்கு அப்போது அனுமதி இலவசம்) போன போது அதன் கலைத் தன்மையை, அழகை, பிரம்மாண்டத்தை, திரைச்சீலை ஓவியங்களை, மேற்கூரை ஓவியங்களை வண்ணங்களை இன்னும் முகர்ந்திருக்க வேண்டும். பெர்னினிக்கும் சியன்னா கத்தீட்ரலுக்கும் இருக்கும் தொடர்பை நான் கூகுளில் பார்த்து தெரிந்து கொண்டாவது போயிருக்க வேண்டும், என்று இந்தப் புத்தகம் யோசிக்க வைக்கிறது. அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
புத்தகம் வாசித்த பிறகு, நெட்ஃப்ளிக்ஸில் சுப்பாராவ் பரிந்துரைத்த Angels & Demons திரைப்படம் பார்த்தேன். கல்லூரி காலத்தில் பார்த்ததற்கும் தற்போது பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசத்தை உணர்ந்தேன். அவர் சொன்ன காட்சிகளை கவனித்தேன். அவர் பரிந்துரைத்த Inferno, Davinci Code திரைப்படங்களை அடுத்து மறுபடியும் பார்க்க இருக்கிறேன். வாசிக்கும் ஒவ்வொருவரையும் மேலும் கலையை நோக்கி நுட்பங்களை நோக்கி நகரத் தூண்டும் இப்புத்தகம்.