நூல் அறிமுகம்: சில இடங்கள் சில புத்தகங்கள் – செ.கா.நூல்                                 :  “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர்                     :    ச.சுப்பாராவ்
வெளியீடு                    :    பாரதி புத்தகாலயம்,
                                                7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
                                                சென்னை 600 018
விலை                           :     ரூபாய்  140.00

புத்தகம் வாங்க         : https://thamizhbooks.com/product/sila-idangal-sila-puthagangal-by-subarao/

நான் வாசித்த அளவில் பயண இலக்கியத்தில் தனீ….சுவையுடைய படைப்பாக இதை என்னால் உறுதியாக சொல்ல முடியும். மிக சுவாரஸ்யமாக, ஒரே அமர்வில் , படிக்கத் தொடங்கினால் கீழே வைக்கத் தோன்றாத வகையில் கோர்வையாகத் தொகுத்து எழுதியிருக்கிறார். நான் உணர்ந்தவரை , ஐரோப்பிய தத்துவநூல்கள் பலவற்றை தமிழில் மொழிபெயர்த்த தமிழின் ஆகச் சிறந்த அர்த்தமுள்ள மொழிபெயர்ப்பாளர்களுள் இந்நூலாசிரியரும் ஒருவரல்லவா ! அவரின் ஆளுமை, ஒவ்வொரு பக்கங்களின் பலவரிகளிலும் புலப்படுகின்றது. விறுவிறுப்பைக் கூட்டுகின்றது. நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் குடும்பத்துடன் தொடங்கும் பயணம், ஆம்ஸ்டர்டாமில் குடும்பத்துடன் நாஜிக்கொடுமைகளுக்கு ஆளான ஆனி ஃப்ராங்கின் வீட்டோடே முடிவுறுகிறது.

ரோட்டர்டாமில் தொடங்கி, டென்ஹேக், பாரிஸ், பிரஸ்ஸல்ஸ், ரோம், வாடிகன், நேப்பிள்ஸ், பிஸா, பிளாரன்ஸ், வெனிஸ், அமர்ஸ்ஃபூர்ட் நாஜி வதை முகாம், ஆனிப்ராங்க் வீடு (இரண்டும் ஆம்ஸ்டர்டாம்)வரையில் தாம் குடும்பமாக சென்ற இடங்களை வெறும் அழகியல் வர்ணனைகளாகவும், கண்டுகளித்த நிகழ்வுகளின் விவரணைகளோடும் அடங்காமல், அவ்விடங்களுக்கான வரலாறு மற்றும் இலக்கியங்களில் இருந்து எடுத்துக்காட்டுகளை கையாண்டு விளக்கியிருப்பது, அந்த இடங்களின் வழியே ஆளுமைகளையும், விசித்திரமான வரலாற்றுப் போக்குகளையும் அறிந்து கொள்வதன் வழியே பிற பயண இலக்கியங்களிலிருந்து (நான் வாசித்த அளவில்) தனித்துவமுடையதாகத் தெரிந்தது.சிலைகளின் குஞ்சாமணிகளுக்குப் பதிலாக அத்திஇலைகளைப் பொறுத்தி அழகு பார்த்த போப் பத்தாவது இன்னொசன்ட், கலைவெறியனாக இருந்து சமரசம் செய்துகொள்ளாமல் , போப்பிடம் கசையடி வாங்கிய ஏஞ்சலோ எனும் மகாகலைஞனின் உழைப்பைப் போற்றிய லியொனார்டோ டாவின்சி, பிளாரன்ஸ் எனும் கலை மாநரகத்தைக் கட்டிப் பாதுகாத்த மெடிசி குடும்பத்தினரும், அவரது நன்கொடையால் வளர்த்தெடுக்கப்பட்ட உன்னதமான கலை & கலைஞர்கள் குறித்த தகவல்கள், க்ளாடியேட்டர் திரைப்படத்தின் வழியே நாம் உணர்ந்த அடிமை வீரனுக்குப் பின்னணி முற்றிலும் வேறானதும், பலியிடப்பட்ட உயிர்களின் பின்னணியில் எழுப்பப்பட்ட கொலோசியம் சார்ந்த தகவல்கள்.

அதிசயங்களின் அருங்காட்சியமாகத் திகழும் – லூவர் அருங்காட்சியகத்தின் தற்போதைய நிலை மற்றும் நாஜி தாக்குதலின் போது பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கங்கள், உலகின் தலைசிறந்த முதலாவது புத்தகக் கடையான ஷேக்ஸ்பியர் & கம்பெனியின் வாசகர்களைத் தேவதைகளாக நடத்தும் நடைமுறையும் , அந்தக் கட்டிடத்தின் பல நூற்றாண்டு கால விவரிப்புகள், மார்க்ஸ் “உலகத் தொழிலாளர்கள்ள ஒன்று கூடுங்கள் !” என்று முழக்கமிட்டதும், கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை பிறந்த இடமும், புகழ்பெற்ற மூச்சா சிறுவனின் சிலையுள்ள இடமுமான பிரஸ்ஸல்ஸ் குறித்த விவரிப்புகள், நாஜி வதை முகாம்களுள் ஒன்றான நெதர்லாந்தின் அமர்ஸ்ஃபூட் வதை முகாம் குறித்த கள விவரிப்புகள் திடுக்கிடச் செய்கின்றன.

“மனிதனின் சதைகளால் வைக்கப்பட்ட சூப்புகளை, அவர்களின் நண்பர்களையே குடிக்க வைத்த கொடுமைகள்”, அரசு நிர்வாக இயந்திரத்தின் முறையாக , அலுவலகக் கோப்புகளின் வாயிலாக, தினசரி இலக்கு நிர்ணயம் செய்து அரங்கேற்றப்பட்ட படுகொலைகள்” இவற்றோடு சேர்த்து இன்னும் பலவற்றை விவரித்தவிதமும், அதில் பகிரப்பட்ட உண்மைகளும் மனித மனதை உறையச் செய்பவை. அங்ஙனமே வின்சென்ட் வான்கா &  ஆனி ஃப்ராங்கின் துயர் மிகு வாழ்க்கைக் குறிப்புகளும் வதைமுகாமிற்கு இணையான துயரைத் தரவல்லவை.இவையெல்லாவற்றையும் கடந்து, பொதுவான மக்களின் கலாச்சாரம், உணவு, பழக்கவழக்கங்கள், அரசுகளின் அணுகுமுறைகள் உள்ளிட்டவற்றையும் ஊடாக நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது. நான் மேற்சொன்ன எல்லாவற்றையும், அதனதன் வரிசையில் ஒன்றோடொன்று பொருத்திப் பார்த்தாலே போதும், இந்நூலின் தனித்துவம் எளிதில் விளங்கவிடும். நூலாசிரியரும் மொழிபெயர்ப்பாளருமான ச.சுப்பாராவ் அவர்கள் தமது பணி ஓய்விற்குப் பின், ஐரோப்பிய யூனியனை சுற்றிக்காட்டுவதற்காக ஒரு சுற்றுலா முகமையைத் தொடங்கலாம்.அதற்கு “இர்விங்ஸ்டோன்” பெயரை வைக்கலாம்.

ஒரே ஒரு நிபந்தனை.

தோழர் சொல்லும் நூல்களை வாசித்துவிட்டு, அவருடனான நேர்காணலில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே உடன் செல்லும் வாய்ப்பு வழங்கப்படும்.

நெ. து. சுந்தர வடிவேலு அவர்களின் ஆன்மா சாந்தியடைந்திருக்கும், நூல் ஆசிரியரின் இந்த உன்னதமான பயணத்தினால் !

கலை, இலக்கிய வரலாற்றின் மேல் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் வாசிக்கவேண்டிய அற்புதமான நூல்.

வாசிக்கவும்.

—- எழுதியவர்
செ.கா.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் ஈரோடு

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)