சில இடங்கள்…சில புத்தகங்கள்… – நூல் அறிமுகம்
என்ற புத்தகத்தை ச.சுப்பராவ் அவர்கள் எழுதியுள்ளார். இந்தப் புத்தகம் ஐரோப்பாவிற்கு தன் மகள் வீட்டிற்கு பயணம் செய்யும் எழுத்தாளின் அனுபவத்தை தொகுத்து எழுதியுள்ளார். ஐரோப்பா நகரங்களின் அழகினை எழுத்தாளர் புத்தகத்தில் படித்து தெரிந்தபோது இருந்த நிகழ்வுகளை வைத்து, நிஜத்தில் எப்படி இருக்கிறது என்பதுதான் புத்தகத்தின் கருத்தாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை படிக்கும்போது நிறைய சுவாரஸ்யம் நிறைந்து இருப்பதை அறிய முடிகிறது. அப்படி என்ன இருக்கிறது? என்று தோன்றலாம். இந்தியாவின் கட்டமைப்பு, கலாச்சாரம் நமக்கு இயல்பாக இருக்கும். அதுபோல் நெதர்லாந்துக்கு பயணம் செய்ய எழுத்தாளர் அனுபங்களைச் சொல்லும்போது, அது நமக்கு புதியதாகவே தோன்றும்.
ரோட்டர்ராம் என்ற புதிய நகரம் இரண்டாம் உலகப்போரில் உருவாக்கப்பட்டது. இங்கு சாலையில் வாகனங்கள் அதிகம் செல்வதில்லை, இங்கு வசிக்கும் மக்கள் சைக்கிளில் பயணம் செய்கிறார்கள். இங்கு சளி, இருமல் மாத்திரைகள் மருத்துவர்கள் தருவதில்லை. இரண்டு நாட்களில் சரி ஆகிவிடும் என்று வீட்டிற்கு அனுப்புகிறார்கள். டிஜிட்டல் மையமான உலகத்தில் லிப்டில் ஏறுவதற்கும் மகள் வீட்டில் செல்வதற்கும் ஒரு பின்கோடு மட்டுமே இருக்கும். ரோட்டர்ராம் மத்தியில் இருக்கும் சந்தையின் அழகையும், ஐரோப்பியர்கள் நாயின் மீது வைக்கும் பாசத்தையும், வீட்டில் வேலை செய்யும் பெண் மெயில் மூலம் உறுதி செய்யும் முறையையும் புத்தகத்தில் கூறுகிறார்.
ஹேக் என்ற வார்த்தை கேட்டவுடன் சர்வதேச நீதிமன்றமும், வான்கோவின் வாழ்க்கையும் தான் எழுத்தாளர் புத்தகத்தில் படித்ததாக நியாபகம் வருகிறது. ஹேக் பயணம் செய்யும் எழுத்தாளர் அங்கு நீதிமன்றம் சென்று சமாதன மரத்தில் ” உலகினை அழித்திடும் யுத்தமே வேண்டாம், வேண்டும் சமாதனம் என்றும் சமாதனம்” என்று மரத்தில் எழுதி கட்டிவிட்டு வருகிறார். வின்கோவின் வாழ்க்கையில் 138 ஷென்விக் தெருவில் பயணம் செய்தபோது அவர் இருப்பதுபோல் உள்ள உணர்வை கொண்டு வருகிறார். மதப்போதகராக வாழ்க்கையை முன்னெடுத்த வின்கொவின் வாழ்க்கை என்ன ஆனது என்றும் ஹேக் கடற்கரையில் சுறாவளி வீசும், கடலின் கொந்தளிப்போடு நிகழ்வுகளை பகிர்ந்திருக்கிறார்.
“பாரிஸூக்குப் போ” எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னதாக சொல்லும் புத்தகத்தின் சொல்கிறார். ஜெர்மனியின் படைத்தளபதி கோல்டிட்ஸ் நாஜி படைகளை கொண்டு பாரிஸ் சென்று நடந்ததைக் குறித்தும், கோல்டிட்ஸ் ஏன் தொடர்ந்து பொய் சொல்கிறார்?.. என்ற கேள்விக்கு பதில் புத்தகத்தில் இருக்கிறது. ஈஃபில் கோபுரமும், ஆர்க் டி ட்ரயம்அஃப் ( இந்தியா கேட் போன்றது), நாட்டர்ராம் தேவலாயம், படகுகளில் சவாரி, பாலங்கள் நிறைந்த பாரீஸ் நகரத்தை கடந்து செல்கிறார்.
நாய் வளர்க்க வேண்டும் என்றால் முதலில் நாய் வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்று படிக்க வேண்டும். அதுபோல் பாரிஸில் லூவர் அருட்காட்சியம் செல்வதற்கு முன், அது குறித்து சில நாவல்களையும், சில திரைப்படங்களையும் எழுத்தாளர் பார்க்கிறார். 4000 ஆண்டுகள் பழைமையான கல்வெட்டும், மனிதன் நாகரிகமும், கலைத்திறனும் நிறைந்தாக இருக்கிறது. 460000 கலைப்பொருட்கள் இருப்பதாகவும் பார்ப்பதற்கே மூன்று மாதங்கள் ஆகும் என்று கூறுகிறார். அதில் முக்கியமாக விங்க்டு விக்டரியும், வீனஸ் என்ற சிலையும், மோனா லிசாவும் ஒவியத்தை இரண்டாம் உலகப்போரின் போது எப்படி பாதுகாக்க முயற்சி எடுத்ததாக இருக்கிறது. அதிசியங்களின் அருட்காட்சியம் லூவர் என்றே அழைக்கலாம்.
சில நேரங்களில், சில இடங்களில் செல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். ஹியூகோ அருட்காட்சியம், மாண்டி கிறிஸ்டோ கோட்டை, நாட்டர் டாம் தேவலாயம் என்று நாவல் படித்த இடங்களுக்கு எழுத்தாளரும் செல்ல வேண்டும் என்று நினைத்தார். அதற்கான சூழ்நிலை ஏன் அமையவில்லை என்பது குறித்து எழுதிருக்கிறார். பாரீஸ் உள்ள ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனிக்கு செல்கிறார். பழங்கால நடைமுறையில் கடையும், ஜார்ஜ் விட்மன் உருவாக்கிய வரலாறுகளையும், ஒரு லட்சம் அதிகமாக புத்தகத்தையும் பெற்று பூனைகளும், பியோனாவும் இருப்பதையும் சொல்லி தமிழ்நாட்டிலும் இப்படி ஒரு புத்தகக்கடையை எதிர்பார்ப்பதாக முடித்திருப்பார்.
பாரிஸிருந்து பெல்ஜியத்திற்கு செல்லும் எழுத்தாளர் 315 கி.மீ பயணத்தை ஒன்றைகால் மணி நேரத்தில் இரயில் கடந்து சென்றாக சொல்கிறார். பிரஸ்ஸல்ஸ் நகரம் என்பது அருட்காட்சியம், ஒவியங்கள் நிறைந்த நகரம் என்று அழைக்கலாம். ” உலக தொழிலாளிகளே! ஒன்று கூடுங்கள்!
இழப்பதற்கு ஒன்றுமில்லை அடிமை சங்கிலியைத் தவிர. ஆனால் வெல்வதற்கோ ஒரு பொன்னுலகம் இருக்கிறது” என்று மார்க்ஸ் எழுதினார். பாரிஸில் நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ் பிரஸ்ஸல்ஸில் வந்து எழுதினார். எங்கெல்சும் இங்கு தான் புனிதக்குடும்பம் எழுதினார். இப்போது எழுத்தாளர் அந்த இடத்திற்குச் சென்றபோது என்னவாக இருந்தது என்று புத்தகத்தில் கூறுகிறார். எழுத்தாளர் தன் சிந்தனையில்
பிரஸ்ஸல்ஸ் இடத்தைப் கம்யூனிஸ்ட் அறிக்கை பிறந்த இடமாக சொல்கிறார்.
அடுத்தக்கட்ட பயணமாக இத்தாலியில் உள்ள ரோம் நகருக்கு எழுத்தாளர் செல்கிறார். கலோசியம் என்ற அருட்காட்சியம் குறித்தும் விலங்குகள் – மனிதர்கள் மோதல்கள் பற்றியும் கூறுகிறார். ரோமன் ஃபோரம் இடத்திற்குச் சென்றபோது மதுரை நாயக்கர் மஹாலில் உள்ள தூண்களை போன்ற வடிவமைப்பை பார்த்தாக சொல்கிறார். பாலன்டைன் மலைக்கு சென்று கீழே பார்க்கும்போது கிடைக்கும் தருணங்களையும் கூறுகிறார். கமலும், திரிஷாவும் நடித்த படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டு பேரன் பேத்தியின் நினைவுகளோடு ரோமில் இருந்து கிளம்புகிறார்.
இத்தாலியில் நாட்டிற்கு நாடு என்று வாடிகன் என்ற குட்டி நாடு இருக்கிறது. இங்கு இருக்கும் புனித பீட்டர் தேவாலயம் எப்படி இருந்தது, வழிபாடுகள் மற்றும் அங்கு இருக்கும் பியட்டா சிலையும், உயரமான பலிபீடமும் இருக்கிறது. போப்பாண்டவர்களின் செயல்பாடுகளும் பீட்டர் தேவாலயத்தின் கலையும், பிரம்மாண்டத்தையும் அழகாக எழுத்தாளர் எடுத்துக் கூறுகிறார். வாடிகன் சிட்டியின் அழகை வர்ணித்து, ” தான் முதலில் கலைஞன், பிறகுதான் கிறிஸ்துவன்” என்று நிருபிக்கும் மைக்கல் ஏஞ்சலோ – போப் மோதல் குறித்தும் பேசப்பட்டிருக்கிறது. 5633 சதுர அடிக்கு மேற்கூரையின் ஒவியம் புகழ்பெற்ற சாதனையாக இன்றும் பேசப்படுகிறது.
ரோமிலிருந்து பிஸா சாய்ந்த கோபுத்தை நோக்கி அடுத்த பயணத்தை தொடங்குகிறார். 900 ஆண்டுகள் பழமையான சாய்ந்த கோபுரமாக இருக்க காரணம் என்னவென்றால் அந்த ஊரில் இருக்கும் கட்டிடம் எல்லாமே சாய்வாகதான் இருக்கும் என்று புத்தகத்தில் கூறுகிறார். வெளிநாட்டு பயணங்களில் சில நேரங்களில் எழுத்தாளர் நினைத்தது போல் நேரமின்மை காரணமாக பார்க்க இயலாமல் சென்றதாக வருத்தத்தோடு கூறுகிறார்.
பீஸாவில் இருந்து ஃபிளாரன்ஸிற்கு எழுத்தாளர் சென்றார். மிகவும் அழகான நகரம் என்று யுனெஸ்கோ பாரம்பரிய நினைவுச் சின்னமாக ஃபிளாரன்ஸ் நகரம் அறிவிக்கப்பட்டது. டேவிட் சிலை, விச்சோ அரண்மனை, டான்டே முகமூடி என்று பயணம் செய்து கருத்துக்களை பதிவு செய்கிறார். தங்கும் விடுதிகளில் டியூப் லைட் இல்லை, சீலிங் பேன் இருக்கவில்லை என்று கூறி ஃபிளாரன்ஸின் இருந்து தப்பியதாக சொல்கிறார். சான்டா மரியா கத்தீட்ரல் சென்று மீண்டும் பயணத்தை தொடர்ந்தார். பின்பு சாப்பாட்டிற்கு 2 யூரோவூம், சுற்றுலாவுக்கு 2 யூரோ வரியாக வாங்குகிறார்கள். ஜூலியஸ் சீஸர், சிஸரோ, வீனஸம், மார்க்ஸ்யும் ஆகிய அற்புதச் சிலைகளை வரிசையாக பார்த்துவிட்டு செல்கிறார்கள். இந்த நகரத்தில் ஓவியங்கள் நிறைந்து இருப்பதாகவும், வெச்சியோ பாலத்தின் தோற்றம் 600 ஆண்டுகள் பழமையானது. நிறைய வரலாற்று சின்னங்களையும், கட்டிடங்கள், சிலைகளிலும் 500 ஆண்டுகள் கடந்து ஃபிளாரன்ஸில் நகரத்தில் இருக்கிறது. எழுத்தாளர் ஒரு சிற்பியாக இந்த நகரத்தில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்.
நீரில் இருக்கும் வெனீஸ் நகரத்திற்கு பயணம் செய்யும்போது, அங்கு உலகில் இரண்டாவது புத்தகக் கடைக்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து மார்க் தேவாலயம் மற்றும் புரோனா தீவிற்கு செல்கிறார். இத்தாலின் புகழ்பெற்ற இனிப்புப் பண்டமான புஸாலோவும் இங்குதான் இருக்கிறது. அடுத்ததாக நெதர்லாந்தின் மிகவும் மோசமான இடமான அமர்ஸ்ஃபூர்ட் வதை முகாம்க்கு செல்கிறார். அங்கு நடந்த நாஜிப் படைகள் செய்த கொடுமைகளை கண்முன் கொண்டு வருகிறார். வான்கேவின் மனநிலைமை சரியில்லாமல் போனபோதும் ஒவியங்களோடு இருந்ததும், ஹிட்லர் என்ற பாசித்தின் அடையாளம் மக்களை எப்படி துன்புறுத்தியது குறித்து ஆன் டைரியில் இருந்தாக எழுத்தாளர் கூறுகிறார். கடைசியாக நாம் நிறைய நிறைய மாற வேண்டும் சொல்லிக்கொண்டே முடித்திருப்பார்.
இந்தப் புத்தகம் முழுவதும் நெதர்லாந்து பயணத்தின் போது எப்படி இருந்தது, நம்ம ஊர் எப்படி இருக்கிறது. புத்தகத்தில் படித்ததை பார்த்துக்கொண்டே, சில படத்தின் பாடல்களின் மெட்டுக்களோடு இணைந்து இருப்பதாக நான் அறிகிறேன். ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு வரலாறுகளை மனதில் பேச வைத்து தான் செல்லும் என்பதில் இந்த புத்தகமும் செல்கிறது. மொத்தத்தில் அருமையான எழுத்துகளில் அனுபங்களில் நிறைந்து இருக்கிறது.
தொடரட்டும் பயணங்கள்
நன்றி தோழர் ச.சுப்பாராவ்.
நூலின் தகவல்கள் :
நூல் : சில இடங்கள்… சில புத்தகங்கள்…
ஆசிரியர் : ச.சுப்பாராவ்
விலை : ரூ. 140
வெளியீடு : பாரதி புத்தகலாயம்
தொடர்புக்கு : 044 24332924
நூல் அறிமுகம் எழுதியவர் :
சு.வினோத்குமார்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.