நூல் : “சில இடங்கள் . . . சில புத்தகங்கள் . . .”
ஆசிரியர் : ச. சுப்பாராவ்
வெளியீடு : பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை,
சென்னை 600 018
விலை : ரூபாய் 140.00
புத்தகம் வாங்க : https://thamizhbooks.com/
பயணங்களில் பல நேரம் நாம் திட்டமிட்டபடி, திட்டமிட்டவற்றைப் பார்க்க முடியாமல் போய்விடும். அந்த ஏமாற்றத்தை ஏதேனும் ஒரு இடம் சமன் செய்து நம்மை சந்தோஷத்தில் ஆழ்த்திவிடும். என் பாரீஸ் பயணத்திலும் அப்படித்தான் நடந்தது. பாரீஸில் எல்லோரும் பார்க்கும் இடங்கள் தவிர வாசகர்கள், எழுத்தாளர்கள் பார்க்க என்று பல இடங்கள் உண்டு. இன்ன காரணம் என்றில்லாமல் பாரீஸில் விக்டர் ஹியூகோ அருங்காட்சியகத்திற்குச் செல்ல வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை இருந்தது. அந்த அருங்காட்சியகத்தில் மராமத்துப் பணிகள் நடந்து கொண்டிருந்ததால் அனுமதி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். இது முதல் ஏமாற்றம்.
அடுத்ததாக அலெக்ஸாண்டர் டூமாஸ் கட்டி வாழ்ந்த மாண்டி கிறிஸ்டோ கோட்டை. பயணத்திற்கு சில மாதங்கள் முன்பு தான் அவரது வாழ்க்கை வரலாற்றைப் படித்திருந்தேன். இணையத்தில் கோட்டையின் படத்தைப் பார்ததால், சிறுவயதில் சோவியத் வெளியீடாக வந்த நவரத்தின மலை என்ற சிறுவர் கதைப் புத்தகத்தின் அட்டையில் இருந்ததைப் போன்ற பிரும்மாண்டமான கோட்டையாக இருந்த்து. அதைப் பார்க்கவும் திட்டம் போட்டோம். ஆனால் அது வெகு தொலைவு. ஒரு முழு நாளும் அதற்கே போய் விடும் என்பதால் அதைக் கைவிட நேர்ந்தது. இது இரண்டாவது ஏமாற்றம். லூவர் அருங்காட்சியகத்திலிருந்து பஸ் பிடித்து நாட்டர் டாம் தேவாலயம் பார்க்கச் சென்றோம். சமீபத்திய தீவிபத்தின் காரணமாக அங்கும் மராமத்துப் பணி. சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி இல்லை. மற்றொரு ஏமாற்றம். பார்க்க வேண்டிய பட்டியலில் இணையம் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி என்ற புத்தகக் கடையைத் திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கொண்டிருந்தது. மதிய உணவிற்குப் பிறகு அதைத் தேடலாம் என்று முடிவு செய்தோம்.
நாட்டர் டாம் தேவாலயத்திற்கு முன்பாக செய்ன் நதி ஆர்ப்பாட்டமின்றி ஆனால் வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறது. எதிர் கரையில் வரிசையாக உணவகங்கள். நதியின் குறுக்கே அருகில் இருந்த பாலத்தின் வழி எதிர் கரை சென்றோம். செய்ன் நதியின் மீது நகருக்குள் சுமார் 45 பாலங்கள் உள்ளன. ஒவ்வொரு பாலத்திற்கும் நீண்ட நெடிய வரலாறு உண்டு. நாங்கள் கடந்து சென்ற பாலத்தின் பெயர் பாண்ட் செயிண்ட் மைக்கேல். 1857ல் கட்டப்பட்டது. நதியை ஒட்டி ஓவியம் வரைந்து விற்கும் பாரீஸ் ஓவியர்கள். பழைய புத்தகக் கடைகள். சாலைக்கு மறுபுறம் வரிசையாக உணவகங்கள். ஒரு உணவகத்தில் மதிய உணவை முடித்துவிட்டு கூகுளாரிடம் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி பற்றி விசாரித்தோம். அவர் எட்டு மீட்டர் தொலைவு என்றார். உணவகத்திலிருந்து வெளியே வந்து இடதுபுறமா வலதுபுறமா என்று ஒரு கணம் யோசித்து வலதுபுறம் திரும்பினோம்.
பிளாட்பாரத்தில் போன நூற்றாண்டின் பழங்கால ஃபவுண்டன். ரொம்ப பெரியதாக இல்லாமல் சின்னதாக. அதன் நான்கு பக்கமும் குடிநீர் குழாய்கள். அவற்றில் குடிநீர் பிடிக்கும் சுற்றுலாப் பயணிகள். நதியில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பிரும்மாண்டமான படகுகள். எதிரே சாரங்கள் கட்டிய நாட்டர் டாம் தேவாலயம். குழாய்க்கருகே பிளாட்பாரத்தில் ஒரு கலைஞன் கிட்டாரிலும், மற்றொருவன் டிரம்பெட்டிலும் மேற்கத்திய சங்கீத்த்தைப் பொழிய, தண்ணீர் பிடிக்கும் சுற்றுலாப் பயணிகள் அவர்களுக்கு யூரோவாகக் கொட்டுகிறார்கள்.
அவர்களுக்கு அப்பால் பிளாட்பாரத்திலேயே போடப்பட்ட மேஜை நாற்காலிகளில் தேநீர் அருந்தும், ஸ்நாக்ஸ் சாப்பிடும் சுற்றுலாப் பயணிகள். பார்வை அப்படியே திரும்பினால், நான் நிற்கும் இடத்திற்கு நேர் எதிரிலேயே ஷேக்ஸ்பியர் அண்டு கம்பெனி என்று பச்சை நிற மரப் பலகை போர்டு. நடுவே சின்னதாக பிரேம் போடப்பட்ட ஷேக்ஸ்பியர் படம். அது அவரது காலத்திலேயே பிரேம் செய்யப்பட்டது போல அத்தனை பழசு. என்னுள் ஒரு கண்டேன் சீதையை உணர்வு.
கடை வாசலில் கடைக்காரர்களே நடத்தும் பழைய புத்தகக் கடை. அதோடு உட்கார்ந்து கொள்ள இரண்டு மூன்று மர பெஞ்சுகள். அதில் ஒரு பெஞ்சில் ‘we spend our life: its ours, trying to bring together in the same instant a ray of sunshine and a free bench – Samuel Beckett’ என்று எழுதியிருந்தது. கடையின் இடதுபுறச் சுவரில் நான்கு கரும்பலகைகளில் சாக்பீஸில் எழுதப்பட்டது போல் தோற்றமளிக்கும் பெயிண்ட் வாசகங்கள். ஒரு பலகையின் வாசகம் ‘This store has rooms like chapters ina novel and the fact is Tolstoyand Dostayevsky are more real to me than my next door neighbors and even stranger to me is the fact that even before I wa born Dostoyevsky wrote the story of my life in a book called ‘The Idiot’, என்று எழுதியிருக்கிறது.
மற்றொரு பலகையில் அந்தக் கடை இருந்த இடத்தில் பழங்காலத்தில் என்னென்ன இருந்தன என்ற தகவல். 100 ஆண்டுகளுக்கு முன் அங்கு ஒரு மதுக்கூடம் இருந்ததாம். கிபி 1600ல் இந்த இடத்தில் லா மெய்சன் டூ மஸ்டியர் என்ற ஒரு மடாலயம் இருந்ததாம். அங்கு விளக்கேற்றுவதற்கு லேம்பியர் என்று ஒரு துறவி இருப்பாராம். அவரது வேலையைத்தான் நான் இந்தக் கடையில் கடந்த ஐம்பதாண்டுகளாகச் செய்து வருகிறேன் என்று கடை முதலாளி எழுதி வைத்திருக்கிறார்.
கடைக்குள் நுழைந்தோம். பழங்கால உத்திரக்கட்டை போட்ட மேற்கூரை. கால் வைக்க இடமில்லாமல் எங்கும் புத்தகங்கள். ஒண்டுக்குடித்தனங்கள் இருக்கும் ஸ்டோர் எனப்படும் பழங்கால வீடுகள் போல் வரிசையாக நிலைக்கதவுகள். சின்னச் சின்னதாக அறைகள். கடையை உருவாக்கியவரான ஜார்ஜ் விட்மன், “ நான் இந்த புத்தகக் கடையை ஒரு நாவலை உருவாக்குவது போல உருவாக்கினேன். ஒவ்வொரு அறையையும் ஒரு அத்தியாயத்தை உருவாக்குவது போல் உருவாக்கினேன். புத்தகத்தைத் திறக்கும்போது, தமது கற்பனையில் கண்ட மாயஉலகின் கதவைத் திறப்பது போல உணர்ந்தவாறு வாசகன் திறப்பானே, அதுபோலவே எனது கடையின் கதவுகளை அவன் திறக்க வேண்டும் என்று விரும்பினேன்,“ என்று சொல்லியிருக்கிறார்.
உண்மையில் அப்படியான ஒரு மாய உலகம்தான். 1919ல் சில்வியா பீச் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட கடை. எஸ்ரா பவுண்ட், ஹெமிங்வே, ஜேம்ஸ் ஜாய்ஸ் என்று பெரிய பெரிய படைப்பாளிகள் தினமும் வந்து உட்கார்ந்து இலக்கியம் பேசிச் சென்ற கடை. ஹெமிங்வேயின் முதல் நூலான த்ரீ ஸ்டோரீஸ் அண்ட் டென் நாவல்ஸ் என்ற நூலை சில்வியா பீச்தான் வெளியிட்டாராம். யாரும் பதிப்பிக்க அஞ்சிய ஜேம்ஸ் ஜாய்ஸின் யுலிசிஸையும் ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனிதான் பதிப்பித்தது.
ஹிட்லர் பாரீஸை ஆக்கிரமித்தபோது. கடை மூடப்பட்டது. 1951ல் முன்பு குறிப்பிட்ட ஜார்ஜ் விட்மன் என்ற அமெரிக்கர் இதே பெயரில் கடையை இதே இடத்தில் நடத்த ஆரம்பித்தார். உரிமையாளர் மாறினாலும் கடையின் பாரம்பரியம் மாறவில்லை. உண்மையில் விட்மன் சில்வியா மீது பெரும் மரியாதை வைத்திருந்தார். தனது மகளுக்கு அவரது பெயரைத்தான் வைத்தார். அந்த இரண்டாம் சில்வியாதான் இப்போது கடையின் முதலாளி.
ஜார்ஜ் விட்மன் பெருமந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் நாடோடியாகத் திரிந்தவர். இவர்களை ஹோபோ என்று சொல்வார்கள். ( இந்த ஹோபோக்கள் பற்றி அப்டன் சிங்க்ளரின் தி ஜங்கிள் நாவலில் விரிவாக வரும். ஜாக் லண்டன் கூட ஹோபோவாகத் திரிந்தவர்தான்) ஹோபோவாகத் திரிந்த காலத்தில் சகமனிதர்கள் காட்டிய அன்பும், ஆதரவும் விட்மனின் மனதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின. புத்தகக் கடையை லாபகரமாக நடத்திய காலத்திலும், “உன்னால் முடிந்ததைக் கொடு, உனக்குத் தேவையானதை மட்டும் பெற்றுக் கொள்” என்ற கொள்கையில் உறுதியாக இருந்தார். நாடோடிகள் போல் திரியும் எழுத்தாளர்கள், வாசகர்களுக்கு தன் கடையில் ஒரு புதுமையான ஏற்பாட்டையும் செய்தார். அதற்கு முன் கடையின் தோற்றம் பற்றி இன்னும் கொஞ்சம்.
உத்திரக் கட்டையை முட்டும் அளவிற்கு உள்ள அலமாரிகள் முழுக்க புத்தகங்கள். அவற்றை எடுக்க ஆங்காங்கே ஏணிகள். ஆங்காங்கே நம் ஊர் ரயில் நிலையங்களில் இருப்பதைப் போன்ற பெரிய ரோமன் எண்கள் எழுதப்பட்ட கடிகாரங்கள். பள்பளவென்று மின்னும் கிராமபோன்கள். மிகமிகப் புராதனமான டைப்ரைட்டர்கள். கடை பழங்கால சத்திரம் மாதிரி உள்ளே போய்க் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அறையிலும் ஒவ்வொரு பிரிவு.. ஒவ்வொரு பிரிவினுள்ளும் துணைப்பிரிவுகள். வரலாறு என்றால் முதல் உலகப் போருக்கு, இரண்டாம் உலகப் போருக்கு, பனிப்போருக்கு என்று தனித்தனி அலமாரிகள். அகதா கிறிஸ்டிக்கு ஒரு தனி அலமாரி. ஷேக்ஸ்பியருக்கு ஒரு தனி அறை….
மிகக் குறுகலான மாடிப்படி. படியேறும் இடத்தில் மேலே ஒரு பலகையில் மங்கலான எழுத்தில், (முதல் முதலாளி சில்வியா காலத்தில் எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்!) ‘Be not inhsopitable to strangers – lest they be angels in disguise’ என்று W.B.Yeatsன் வரிகளை எழுதி வைத்திருக்கிறார்கள். உண்மையில் கடை அப்படித்தான். அந்த மாடி முழுவதும் அரிய புத்தகங்கள். அவை விற்பனைக்கல்ல. உட்கார்ந்து படித்துக் கொள்ளலாம். மாறுவேடத்தில் வரும் தேவதைகளான வாசகர்களுக்காகவும், எழுத்தாளர்களுக்காகவும் விட்மன் ஏற்படுத்திய மிகப் புதுமையான ஏற்பாடு ஒன்று கடையில் இருக்கிறது. அங்கு யார் வேண்டுமானாலும் தங்கிப் படிக்கலாம். ஒரு நாளில் ஒரு முழு புத்தகத்தை வாசித்து முடித்துவிட வேண்டும். கடையில் இரண்டு மணிநேரம் அவர்கள் தரும் ஏதாவது ஒரு வேலையைச் செய்ய வேண்டும். தன் வாழ்க்கைக் குறிப்பாக ஒரு பக்க அளவில் தன்னைப் பற்றி எழுதித் தர வேண்டும் என்ற மூன்று நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் அங்கு தங்கிக் கொள்ளலாம்.
இப்படித் தங்குபவர்களை டம்பிள் வீட் என்று அழைக்கிறார்கள். டம்பிள் வீட் என்பது காற்றடிக்கும் திசையில் பறந்து செல்லும் ஒருவித வடஅமெரிக்கச் செடியின் மலராகும். இவர்கள் தங்கிப் படிக்கவும், உறங்கவும் ஆங்காங்கே பழங்கால வெல்வெட் நாற்காலிகள், படுக்கைகள் உள்ளன. 13 படுக்கைகள் உள்ளனவாம். அதுபோக, மேலே சேந்தியில், தரையில் எல்லாம் படுத்து உறங்குபவர்களும் உண்டு. இதுவரை இப்படி சுமார் 30000 பேர் தங்கியிருக்கிறார்களாம். அவர்களது வாழ்க்கை வரலாறுகளில் முக்கியமானவற்றைத் தொகுத்து கடையின் கதையாக Shakespear and Company: Paris: A History of the Rag & Bone Shop of the Heart என்று பெரிய புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். 2012ல் நாதன் இங்லாண்டர் என்ற அமெரிக்க நாவலாசிரியருக்கு இந்தக் கடையில் வைத்துக் கல்யாணமே நடந்திருக்கிறது. கடையில் பகல் முழுக்க வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளின் தொல்லை என்பதால், உள்ளூர் வாடிக்கையாளர்கள் வந்து ஆரஅமர புத்தகஙக்கள் பார்த்து வாங்குவதற்காக கடை இரவு பதினோரு மணி வரை திறந்திருக்குமாம்.
கடையில் மேலாளர் போன்றிருந்த பெண்ணிடம், நான் இந்தியாவின், தமிழ்நாட்டின் எழுத்தாளன் என்று அறிமுகம் செய்து கொண்டு, கடை உரிமையாளரைச் சந்திக்க முடியுமா என்று கேட்டேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு நேரம் ஒதுக்குவதாகச் சொன்னார். என் பயணத்திட்டம் அதற்கு இடம்தரவில்லை. அவரிடமே மேற்சொன்ன விபரங்களை அறிந்தேன். குழந்தைகள், இளைஞர்கள் மிக அதிக எண்ணிக்கையில் வருவதாக மிகவும் பெருமையாக, மகிழ்ச்சியாகச் சொன்னார். கடையில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான புத்தகங்கள் விற்பனைக்கு இருப்பதாகச் சொன்னார். ஒரு நாளைக்கு சராசரியாக எத்தனை புத்தகங்கள் விற்கும் என்று கேட்டேன். சொல்லமாட்டாராம்.
கடையில் ஆங்காங்கே பெரிய பெரிய பூனைகள். புத்தக அலமாரிகளின் நெரிசலுக்கு நடுவே மிகப் பழங்காலத்து பியானோ வேறு ஒன்று. அதன் அருகிலேயே புலிக்குட்டி சைசிற்கு ஒரு பெரிய பூனையார் தூங்கிக் கொண்டிருந்தார். பியானோ மீது ” புஜ்ஜிமா தூங்கிக் கொண்டிருப்பதால், தயவு செய்து யாரும் பியானோவை வாசித்து அவளை எழுப்பிவிட வேண்டாம் என்று கம்பெனி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்,” என்று ஒரு அட்டையில் மார்க்கர் பேனாவால் எழுதி வைத்திருந்தார்கள். பாரீஸ் நகரத்துப் புத்தகப் பிரியர்களுக்கு நம் கர்நாடக சங்கீத்த்தின் மகத்துவத்தை என்னால் காட்ட முடியாமல் போனது!
கடையில் புத்தக வெளியீட்டு விழா, புத்தக வாசிப்பு, புத்தக அறிமுகம் என்று எப்போதும் ஏதாவது நடந்து கொண்டே இருக்கிறது. சில ஆண்டுகளாக ஷேக்ஸ்பியர் அண்ட் கம்பெனி குறுநாவல் போட்டி நடத்தி பரிசு தந்து வருகிறது. முதல் பரிசு பத்தாயிரம் யூரோ. நமது பணத்தில் சுமார் எட்டு லட்சம். எனக்கு மயக்கமே வந்துவிட்டது. இங்கு சாகித்ய அகடமியே ஒரு லட்சம்தான் தருகிறது. அடியேன் அதிகபட்சமாக ஒரு முறை 15000 பரிசாக வாங்கியதோடு சரி!
கடைக்குப் பக்கத்தில் வாடிக்கையாளர்களுக்காக அவர்களே உணவகமும் நடத்துகிறார்கள். சுத்த சைவம். அங்கு லெமன் டீ மிகவும் விசேஷமாம். கடைக்கு வரும் கூட்டம் முழுவதும் பிரசாதமாக அந்த லெமன் டீயையும் சாப்பிடுவதால், அங்கே நிற்கக் கூட இடமில்லை.
கடைக்குள் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று ஏகக் கெடுபிடி. ஆனாலும் நமது இந்தியப் பாரம்பரியத்திற்கேற்ப திருட்டுத்தனமாக எடுத்துக் கொண்டோம். கடை பற்றி நம் கருத்தை எழுதி ஒட்டி வைக்க சுவரில் பெரிய பலகை வைத்திருக்கிறார்கள். பக்கத்தில் காகிதம், பேனா, ஒட்டவதற்கு செலோ டேப் என்று எல்லாம் பக்காவாக. மதுரையில் நான் புத்தகம் வாங்கிய கடைகள் கண் முன் வந்து போயின. சென்ட்ரல் சினிமா சந்தில் கவிஞர் மீராவின் அன்னம். மாடியில் மிகச் சிறிய இருட்டான கடை. மேலக்கோபுர வாசலில் மீனாட்சி புத்தக நிலையம். அதே இருட்டு.
எட்வர்ட் ஹாலைத் தாண்டி பெரியார் பஸ்ஸ்டாண்ட் போகும் பாதையில் இன்று பழமுதிர்ச்சோலை ஒன்று இருக்கும் இடத்தில் இருந்த கென்னடி புக் ஷாப் என்ற ஆங்கிலப் பழைய புத்தகங்கள் விற்கும் பெட்டிக்கடை. நான் புத்தகம் வாங்கிய கடைகளிலேயே ஆகப் பெரிய கடை அதே மேலக்கோபுர வாசலில் இருக்கும என்சிபிஹெச் மட்டும்தான். ”மதுரையில் இப்படியான ஒரு புத்தகக்கடை என்று வருமோ?” என்ற என் ஆதங்கத்தை தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுதி ஒட்டி வைத்தேன். எத்தனையோ மொழிகளுக்கு நடுவே என் தமிழ் வாசகமும் காற்றில் படபடத்ததைப் பார்க்க அத்தனை சந்தோஷமாக இருந்த்து.
மாப்பிள்ளை ஸ்ரீராம் வில்லியம் டார்லிம்ப்பிளின் ஃபிரம் தி மௌண்டன் என்ற புத்தகத்தை வாங்கித் தந்தார். கடை வாசலில் அவர் என்னிடம் அதைத் தரும்போது மனைவியும், மகளும் புகைப்படம் எடுத்தார்கள். மேலிருந்து கந்தர்வர்கள், கின்னரர்கள், கிம்புருடர்கள் இன்னிசை மழை பொழிந்தார்களோ, தேவர்கள் பூமாரி பொழிந்தார்களோ என்று தெரியவில்லை. முன் சொன்ன ஃபவுண்டனிலிருந்து ஜில்லென்று நீர் மேலே தெறித்தது. கடைவாசல் கிடார், டிரெம்பெட் கலைஞர்கள் உண்மையாகவே இசைமழை பொழிந்து கொண்டிருந்தார்கள். சட்டென்று ஒரு இடம் ஸ்ரீ வள்ளி தேவ சேனா பதே…. மாதிரி இருந்தது. எங்கும் ஒரே குளிர்ச்சி….
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிகப் பொருத்தமான தலைப்பிலான இந்தப் புத்தகம் வழமையான பயணக்கட்டுரைகளிலிருந்து மாறுபட்டது. புத்தகங்கள் வழியாக தரிசித்த இடங்களை நேரில் காணும் பொழுது ஏற்படும் பரவசத்தை மிக அழகாக விவரித்திருக்கிறார். எழுத்தாளர் Shakespeare and Company புத்தக்கடையில் என்றால் அவரது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அந்தக்கடையிலேயே தங்கி புத்தகங்களை வாசிக்க நேர்ந்தால் வாழ்க்கையின் மிக அழகான நாட்களாக அவை இருக்கும். நான் மீண்டும் மீண்டும் படிக்கும் புத்தகமாகிவிட்டது.
நன்றி…
மிக அருமையான பதிவு. கூடவே இருந்தபடி அந்த அனுபவங்களை பெற்றது போன்ற ஓர் உணர்வு ஏற்பட்டது. புத்தகக் காதலர்களுக்கே உரிய வகையில் எழுத்தின் வலிமையை மிக அழகாக, எளிதாக வழங்கிய தோழர் சுப்பாராவ் அவர்களது பணி தொடர்ந்து பயணிக்கட்டும்.
வீ. பா. கணேசன்
மிக்க நன்றியும், மகிழ்ச்சியும்