சிலம்பரசன் சின்னக்கருப்பன் கவிதைகரட்டு மேட்டில் இருக்கும்
புளிய மரத்தின் கொம்புகளில்
தூக்கிட்டுக் கொண்ட
எம் உழுகுடிகளின்
மண்டையோடுகளில்
குருதியை நிரப்பி
குளிர்பானங்களாக பருகத்தந்தார்கள்.
வாங்கிப் பருகினோம்.
பருக பருக பசியெடுத்தது.
தீ மூட்டி
உடல்களை வாட்டி
அவித்த வள்ளிக்கிழங்கைப்
போலிருந்த சதைப்பிண்டங்களை
தின்னத் தந்தார்கள்.
பங்கிட்டுக் கொண்டோம்.
மிஞ்சிய எழும்புகளை
உருவியெடுத்து வேலிகளாக
கட்டிக் கொண்டார்கள்.
இப்போது
பூதாகாரக் கட்டிடங்களால்
சூழப்பட்ட எம் குறுநிலத்தில்
விளைவித்திருந்த
பூர்வீக உழுகுடிகளிடம்
விலைப் பேசி படியாதிருக்க
விரட்டி அடித்தார்கள்.
மீதமிருக்கும் உயிர்களை
கைகளில் பிடித்து நடக்கலாயினோம்.
அப்பா ! அப்பா !
எங்கு நாம் போகிறோம்.
நம் நெடுநாளைய தாகம் தீர
களத்திற்கு போகிறோம்.
அம்மா! அம்மா !
நாம் அங்கு போய் தான்
ஆக வேண்டுமா?
ஆம் மகனே.
பசியோடிருக்கும் நம் குடிகளுக்கு
சூடான ரொட்டிகளை
வார்த்து தர வேண்டாமா.
அது இருக்கட்டும்.
கைகளில்
வளைந்த கழுத்துடைய
கருக்கு அரிவாளை
எதற்கு எடுத்துச் செல்கிறோம்.
அதோ !
வானத்தைப் பார் மகனே
நம் மூதாதையரின் தலைகள்
மாரியாய் பொழிகிறது.
– சிலம்பரசன் சின்னக்கருப்பன்