“கடந்த சில இரவுகளாக நான் ஒரு நிமிடம் கூட தூங்கவில்லை. தாங்கமுடியாத அளவுக்கு நான் பயமுறுத்தப்படுகிறேன். சித்திரவதைகளின் மூலம் குற்றுயிராக்கப்படுகிறேன். மருத்துவ வசதி ஏதும் தரப்படவில்லை..”- கென் சரோ விவா.
யார் இந்த கென் சரோ விவா. நாம் நைஜீரியாவுக்குப் போக வேண்டும். நைஜர் டெல்டா பகுதிகள் முழுவதும் அங்குள்ள எண்ணெய் வளங்களுக்காக ஷெல் கம்பெனியால் சூறையாடப்பட்டது. அந்த நிலங்களில் பதிக்கப்பட்ட குழாய்களின் துருப்பிடித்து உடைந்த துளைகளில் இருந்து வெளியேறும் எண்ணெய்க் கசிவால் எந்நேரமும் – நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக – தீ ஜீவாலைகள் எரிந்து கொண்டிருந்தன. பூமியின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தீ ஜீவாலைகள் தெரிவதாக விண்வெளி வீர்ர்களே கூறியதாக பதிவுகள் இருக்கின்றன.
அங்கு அப்போதிருந்த சர்வாதிகார ராணுவ அரசுக்கும் ஷெல் கம்பெனிக்கும் இடையிலான கள்ளக் கூட்டு காரணமாக இரக்கமின்றி நிலங்கள் சூறையாடப்பட்டன. அப்பகுதியில் வாழ்ந்த ஓகோனி மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர். அம்மக்கள் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றனர். ஓகோனி மக்களின் இனக்குழுத் தலைவர் ஒருவரின் மகன் தான் கென்சரோ விவா.
அந்த மக்களின் துயரங்களை தன் எழுத்துகளால் உலகமறியச் செய்தவர். நைட் ரைடு, சோஸா பாய் போன்றவை ஆப்பிரிக்க இலக்கிய உலகில் மட்டுமின்றி உலக அளவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய அவரது படைப்புகள் என்று போற்றப்படுகிறது. பத்திரிக்கைகள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் ஓகோனி மக்களின் துயரங்களையும் சர்வாதிகார ராணுவ அரசின் கொடுமைகளையும் அம்பலப்படுத்தியவர் கென் சரோ விவா. மோசாப் என்ற ஓகோனி மக்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்கத்தை தொடங்கி நடத்தினார். அனைத்து தரப்பிலிருந்தும் ஆதரவு பெருகியது. இயக்கங்கள் நடந்தன.
விளைவாக நாற்பதாண்டுகள் நைஜர் டெல்டாவில் எரிந்த தீ ஜீவாலைகள் அணைந்தன. மாறாக, கொள்ளை இலாபம் பறிபோனதால் ஷெல் கம்பெனி முதலாளிகளின் வயிறு எரியத் தொடங்கியது. பங்கு கிடைக்காமல் போனதால் சர்வாதிகார இராணுவ அரசு அதிகாரிகளும் பதறிப்போயினர். விளைவாக ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டது. திட்டமிட்டு அரசே கலவரங்களை நடத்தியது. சில ஓகோனி அரசியல் தலைவர்களைக் கொலையும் செய்தது. கொலைப்பழியை சாமர்த்தியமாக சூழலியல் போராளியாக, ஓகோனி மக்களின் நம்பிக்கை நாயகனாக விளங்கிய கென்சரோ விவா மற்றும் அவர்களின் எட்டு தோழர்களின் மீது சுமத்தி அவர்களைச் சிறையில் அடைத்தது.
சிறையில் கை கால்களில் இரும்புச் சங்கிலிகள் பூட்டப்பட்டன. குடும்பத்தினரையும் வழக்கறிஞரையும் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. மாதங்கள், ஆண்டுகள் கடந்த பிறகு தான் அவர் தன் வழக்கறிஞரைச் சந்திக்க முடிந்தது. விவா அப்போது கொடுத்த கடிதத்தில் இருந்த வரிகள் தான் நாம் முதல் பத்தியில் வாசித்தவை.
வழக்கு நடந்தது. திரைக்கதையின் படியே தீர்ப்பும் எழுதப்பட்டது. கென்சரோ விவா மற்றும் அவரது எட்டு தோழர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒன்று.. இரண்டு.. மூன்று.. நான்கு.. ஐந்து முறை தூக்கிலிடப்பட்டார் விவா. அதன் பிறகே நிம்மதியடைந்தார்கள் அரசும் முதலாளிகளும்! தலைவனை இழந்த ஓகோனி மக்கள் நிலைகுலைந்தனர்..! ஒப்பந்தங்கள் மீண்டும் கையெழுத்தாகின… தீ ஜீவாலைகள் மீண்டும் எரியத் தொடங்கின.
முந்தைய சம்பவம் இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி. இப்போது இந்தியாவுக்கு வருவோம்.. இது இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதி. நாடுகள் வேறு. அரசுகள் வேறு. அங்கே சர்வாதிகார இராணுவ அரசு. இங்கே ஜனநாயக இந்திய அரசு. அங்கே ஓகோனி மக்கள். இங்கே ஜார்கண்ட் பழங்குடி மக்கள்.. அங்கே கென்சரோ விவா.. இங்கே..?
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 5-ம் அட்டவணையின் பரிந்துரைப் படி ஆதிவாசி மக்களின் பாதுகாப்பு, நலன் மற்றும் மேம்பாடு குறித்த அனைத்திலும் ஆளுநருக்கு ஆலோசனை வழங்க, பழங்குடி மக்களை மட்டுமே அங்கமாகக் கொண்ட பழங்குடியின ஆலோசனைக் குழு நிறுவப்படாதது குறித்து பேசியதற்காகவும்
இந்தியப் பழங்குடி இனங்கள், கிராமசபை வழியாகத் தங்களை சிறப்பாக வழிநடத்தும் வளமையான சமூக மற்றும் கலாச்சார சுயாட்சியைக் கொண்டவை என எடுத்துரைக்கும் பழங்குடியினர் கிராமப் பஞ்சாயத்து சட்டம் நிராகரிக்கப்படுவது குறித்து பேசியதற்காகவும்
பழங்குடியின மக்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும் தங்கள் நிலங்களைக் கனிம வளங்களுக்காக தோண்டுவதைக் கட்டுப்படுத்தவுமான உச்சநீதிமன்றத்தின் 1997ஆம் ஆண்டைய தீர்ப்பு குறித்து அரசுகளின் மவுனம் குறித்து கேள்வி எழுப்பியதற்காகவும்
அரசின் மனித தன்மையற்ற செயலான, பழங்குடியினருக்கும் ஏனைய வனவாழ் மக்களுக்கும் வன உரிமைச் சட்டம் வாயிலாக இழைக்கப்பட்ட வரலாற்று அநீதி குறித்து வருந்தியதற்காகவும்
ஜார்கண்ட் மாநில அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டம் விவசாய நிலங்களையும் விட்டுவைக்காதது குறித்து பேசியவர்.. காடுகளில் உள்ள தனியாருக்குச் சொந்தமில்லாத அனைத்து இடங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்கும் இட வங்கி குறித்து எதிர்ப்பு தெரிவித்ததற்காகவும்
பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகள் சுமத்தி சிறையில் அடைக்கப்பட்ட பழங்குடியின மக்களை விடுவிக்கப் போராடியதற்காகவும் பிணை வாங்க வாதாடியதற்காகவும் பாதிரியார் ஸ்டேன் லூர்து சாமி என்கிற ஸ்டேன் சாமி அவர்களுக்காக ஒரு திரைக்கதை உருவாக்கப்பட்டது..
நமது திருச்சி மாவட்டத்தில் பிறந்து ஜார்கண்ட் பழங்குடியின மக்களுக்காகவே முழுவதும் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட 84 வயதான பாதிரியார் ஸ்டேன் சுவாமி கேட்கிறார் : கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பழங்குடியினரின் சுய நிர்வாகம், நிலம், நீர், காடு சார்ந்த உரிமைகளுக்காகவும் அவர்களுடைய ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகவும் உழைத்ததைத் தவிர வேறு என்ன குற்றம் நான் செய்து விட்டேன்..?
இதற்கு மேல் வேறென்ன குற்றம் செய்ய வேண்டும். தேசப் பாதுகாப்புச் சட்டம் பாய்ந்தது. பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டியுள்ளார் – என இந்தப் பெரியவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மும்பை சிறையில் அடைக்கப்பட்டார். பிணை மறுக்கப்பட்டது..
நடுக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் சுயமாக உணவெடுக்க, நீர் அருந்த முடியவில்லை. உறிஞ்சு குழாய் பெறுவதற்காக நீதிமன்றத்தில் போராடினார். வாரங்கள் பல கடந்து அதை வழங்க முன்வந்தது சிறை நிர்வாகம். அரசு, நீதி மற்றும் சிறைத் துறையுடன் கொரானா தொற்றும் கூட்டணி சேர்ந்து கடந்த மாதம் ஜூலை 5ஆம் தேதி அவரைக் கொன்று போட்டது. அது மரணம் அல்ல நிறுவனப் படுகொலை என்றே அழைக்கப்பட வேண்டும் என்று தேசமெங்கும் குரல்கள் ஒலிக்கின்றன. சர்வதேச அளவிலும் குரல்கள் கேட்கின்றன.
தேசங்கள் வேறுபட்டாலும் அரசமுறை வேறுபட்டாலும் நீதி ஒன்றாகத் தான் இருக்கின்றது. அதற்காக அதிகாரத்திற்கு எதிரான குரல்கள் ஓய்ந்து விடுமா என்ன?
“நான் வாய் திறவாமல் இருக்கும்போது சலனம் அடைகிறேன். வாய் திறவாமல் அமைதியாக இருப்பது ஒரு பாவம்..!” என்றார் ஸ்டேன் சாமி.
“அமைதியாக இருப்பது தேசத் துரோகம்” – என்றார் கென் சரோ விவா.
நான் அமைதியாக இருக்கப் போவதில்லை..!
– தேனி சுந்தர்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
காலத்தின் குரல்.
காலம் எப்படியெல்லாம் மனிதனை தன் வாக்கை பயணம் செய்ய வழிவகை செய்கிறது என்பதை தெளிவாக கட்டுரை முன் வைக்கிறது
சிறப்பான பதிவு தோழர்! மௌனம் சாதிக்கும் ஒவ்வொரு வினாடியும் பாசிசம் நம்மை கார்பரேட்டுகளிடம் விலைபேசி விற்பதை துரிதப்படுத்துவார்கள். பகாசுர கொள்ளை நிறுவன அமெரிக்க தலையிலான கார்பரேட்டுகளை உலகம் முழுவதும் பரவச் செய்வதிலேயே குறியாக இருக்கின்றனர். இன்று ஸ்டேன் சுவாமி. நாளை மதவெறிக்கு எதிரானவர்கள் அனைவரும் காவு வாங்கப்படுவர். பாசிசத்தை தேர்தல் மூலம் வேரறுக்க முடியாது என்று கூறிய ஆனந்த் டெண்டுல்ம்பே அவர்களின் கருத்துப்படிதான் காலம் நகர்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது. எப்படியும் வேரறுப்போம் பாசிசத்தை. நன்றி! நன்றி!! நன்றி!!!
மனித மாண்பினை உயர்த்திப் பிடிக்கும் ஒவ்வொரு மனிதனையும் உலுக்கி எடுக்கும் உங்களின் வரிகள்..
கட்டுரையின் துவக்க வரிகளாக கென் சாரோ அவர்களின் வார்த்தைவரிகளை கொடுத்திருப்பது கட்டுரையை ஒரு பதைப்பதைப்புடன் வாசிக்க தூண்டுகிறது மனித நேயத்தையும் ஒடுக்குமுறையை கையாளும் பாசிச அரசுகளின் மீதும் கோபம் கொப்பளிக்கிறது…
ஆம் … அமைதி சுடுகாட்டில் மட்டுமே நிலவும்… உயிரோட்டமுள்ள நாட்டில் அநீதி கண்டு நாம் கண்மூடி அமைதியாக இருக்க முடியாது…
அமைதியை ஒழிக்கும் சுந்தரின் குரலுக்கு பின் ஓராயிரம் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்.. அதில் எனது குரலும் பின்னணியாய்…