திரைப்பட விமர்சனம்: சைலன்சர்(silencer) – அடக்கப்பட்ட குமுறல் – இரா.இரமணன்ஜனவரி 2020இல் வெளிவந்த மலையாள திரைப்படம். விசாகன் என்பவர் எழுதிய சிறுகதையை தழுவி தேசிய விருது பெற்ற பிரியநந்தன் இயக்கியுள்ளார். லால், மீரா வாசுதேவன், இர்ஷத், ஜெயராஜ் வாரியார் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மூன்று தலைமுறைகளைக் காட்டும் இதில் முதல் தலைமுறையான முக்கூடன் பொரிஞ்சு காந்திய கம்யூனிஸ்ட்வாதி என சொல்லப்படுகிறார். உழைத்து வாழவேண்டும்; எளிமையாக வாழ வேண்டும்; மற்றவர்களுக்கு முடிந்த அளவு உதவி செய்யவேண்டும் போன்ற அறநெறிகளைக் கடைப்பிடித்தவர். திரைப்படத்தின் முக்கிய பாத்திரமான அவரது மகன் இனாசுவும் அதே விழுமியங்களைப் பின்பற்றுகிறார். ஒரு சைக்கிள் கடை நடத்துகிறார். பைபிளை நன்கு கற்றுள்ள அவர் சர்ச்சுக்கு செல்வதில்லை. மூன்றாவது தலைமுறையான அவரது மகன் சன்னி பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஊர் சுற்றுகிறான். தான் ஒரு விடுதி நடத்தவேண்டும்;அதற்கு சைக்கிள் கடையை விற்று பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறான். மற்றவர்களின் வற்புறுத்தலாலும் இனாசு மிகுந்த வருத்தத்துடன் கடையை விற்று மகனுக்கு பணம் தருகிறான். சன்னி ஒரு மதுபான விடுதியும் கூடவே அதிக வட்டி வசூலிக்கும் நிதி நிறுவனமும் நடத்துகிறான். நவீன வீடு,பெரிய கார் உடன் வசதியானவனாகிறான்.

நாட்டில் நிறைய மாறுதல்கள் ஏற்படுகின்றன. சைக்கிள் போய் பைக் நடைமுறைக்கு வருகிறது. பாதிரியார் பைபிள் வாசகங்களை உபதேசித்தாலும் சன்னி தரும் பணத்தை ஏற்றுக்கொள்கிறார். வெல்லம் கலந்த தேநீருக்குப் பதிலாக சர்க்கரை கலந்த தேநீர் விற்கப்படுகிறது. எங்கும் நெறிமுறை இல்லாத நடைமுறை. இனாசுவின் மகன் சன்னியின் கொடுமையான வட்டியால் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். அதை வெளியிடாமல் இருக்க பத்திரிக்கையாளர் ஒருவர் அவனிடம் பணம் பெற்றுக்கொள்கிறார். இனாசுவின் மனைவியும் அவரை மகனுடன் அனுசரித்துப் போக சொல்கிறார். தன்னுடைய உணர்ச்சிகளை வெளிக்காட்ட முடியாத இனாசு தன்னிடமுள்ள பழைய பைக்கின் சைலன்சரை எடுத்துவிட்டு அதில் பயணிக்கிறார். அதன் சத்தம் அவரது மனக்குமுறலாக வெளிவருகிறது. அவரிடம் வேலை செய்த பீட்டர் அவ்வப்பொழுது அவருக்கு ஆறுதல் கொடுக்கிறான். இனாசுவை தன்னுடைய நிதி நிறுவனத்தின் மூன்றாவது மாடியிலுள்ள ஏசி அறையில் மேலாளராக உட்காரவைக்க வேண்டும் என்பது சன்னியின் ஆசை. இனாசி இறந்தபின் அவரது இறுதி யாத்திரையும் உயிருள்ளபோது அவரை பட்டு துணிகள், நகைகள் அணிவித்து பொது மேலாளராக அந்த அறையில் அமர வைப்பதும் மாறி மாறி காட்டும் காட்சியுடன் படம் முடிகிறது.

Silencer (2020) - Movie | Reviews, Cast & Release Date - BookMyShow

சிறப்பான நடிப்பு;குறிப்பாக முக்கிய பாத்திரத்தில் வரும் லால் இளமை,முதுமை இரண்டு காலத்திய உணர்வுகளையும் அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். இடைவேளைக்குப் பிறகு காட்சிகள் நனவோடை உத்தியாக (surreal) காட்டப்படுகிறது. வியாபாரத்தில் கூட்டாளிகளின் பிரச்சினை, தந்தையே தனக்கு எதிராக இருப்பது,ஆனாலும் அவரது பார்வையை எதிர்கொள்ள முடியாதது போன்ற உணர்வுகளால் சன்னி அவதியுறுகிறான். இனாசுவும் தன் தந்தையின் விழுமியங்களைக் காப்பாற்ற முடியாதது, மகனின் நடவடிக்கைகளை தடுக்க முடியாதது போன்றவற்றால் அலைக்கழிக்கப்படுகிறான்.

படத்தில் வரும் சில வசனங்கள் குறிப்பிடத்தக்கவை. ‘கிறிஸ்துவ மதமும் கம்யூனிஸ்ட் இயக்கமும் வளர்ச்சி அடையாது’ என்பது விவாதத்திற்குரியது. பொதுவுடைமை இயக்கம் மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தனது உத்திகளையும் செயல்பாட்டையும் மாற்றிக்கொண்டு வளர்ந்து வருகிறது. கேரளா அரசியல், சமூக நிலைமை அதைத்தான் காட்டுகிறது. முதல் இரவன்று இனாசுவின் மனைவி ‘நான் இரும்பல்ல;மனுஷி’ என்று சொன்னதாக இனாசுவே கூறுகிறான். கடுமையாக உழைப்பவர்கள்,தத்துவம்,அறநெறி தீவிரமாக பேசுபவர்கள் மனித உணர்வுகளைப் புரிந்துகொள்வதில்லை என்று மறைமுகமாக சொல்வது போல் இருக்கிறது. இனாசுவுக்கும் அவரது மனைவிக்கும் இருபது வருடங்கள் வயது வேறுபாடு என்பதுவும் அந்தக்கால பெண்கள் நிலைமையைக் காட்டுகிறது.

இனாசுவின் கல்லறையில் ‘பிறப்பு – 15.08.1947- இறப்பு —-‘ என்று காட்டுவது இனாசு ஒரு தனி மனிதன் அல்ல;இந்தியாவையே உருவகப்படுத்தியிருப்பது என்று புரிந்துகொள்ளலாம். சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறை வளர்ச்சிகளை எதிர்கொள்ள பழைய தலைமுறை தடுமாறுவதாகவும் கொள்ளலாம். காந்தியின் எளிமை, பொதுவுடமையாளர்கள் உழைப்புக்குத் தரும் மதிப்பு, எல்லோரையும் சமமாக பாவிக்க வேண்டும் என்கிற மத அறநெறி ஆகியவற்றின் கலவையாக இனாசு போன்றவர்கள் இருக்கிறார்கள்.ஆனால் இந்திய மக்கள் தங்கள் மனக்குமுறலை சைலன்சர் கழற்றிய பைக்கின் சத்தம் மூலமாக வெளிப்படுத்தப்போவதில்லை. அவர்கள் விவசாயிகளின் டெல்லி முற்றுகை, குடியுரிமை சட்டத்திற்கு எதிர்த்த பெண்களின் போராட்டம் போன்ற வெளிப்படையான நடவடிக்கைகள் மூலமே தெரிவித்துக்கொண்டிருக்கிறார்கள்.