நூல் அறிமுகம்: ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் “சிலேட்டுக்குச்சி” – மாணிக்க முனிராஜ்



புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி
ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/
“நீரைத் தேடி ஓடும் வேரைப் போல தன்னை ஒத்த மனவயது கொண்ட ஆசிரியர்களை, பெற்றோர்களைத் தேடி அலைகிறார்கள் குழந்தைகள்” என முன்னுரையில் தன்முகம் காட்டும் முத்துக்கண்ணன், தன் பெயருக்குப் பிறப்பால் வந்த (சக) முன்னெழுத்துகளின் இயல்பைப் போலவே நூல் முழுதும் குழந்தைகளின் ஒரு சகாவாகவே திரிகிறார்.
குழந்தைகளைப் பொறுத்தவரை “சும்மா சொல்வது” வேறு “பொய் சொல்வது” வேறு. அப்படி சும்மா சொன்ன மனோஜால் ஆசிரியர் படும் பாடு, ஆசிரியர்களுக்கு விதவிதமாக மாணவர்கள் சூட்டும் ‘பட்டப்பெயர்கள்’, “பெய்யெனப் பெய்து தீர்த்த” 200 மில்லி லிட்டர் நியாயம் கொண்ட ஒண்ணுக்கு சம்பவம், சட்டையின் உள்பக்கம் எழுதிய பிட்டு போன்றவையெல்லாம் சிரிப்பால் ஒரு புறம் சிந்திக்க வைக்கின்றன.
மறுபுறம், வகுப்பில் கடைசி மாணவனான அன்சாரியின் கைகளில் கலர் சாக்பீஸ் கொடுத்து பின்னர் அவனிடம் வாங்கி எழுதி அவனைப் பெருமைப்படுத்திய பன்னீர் சாரும்,
“எல்லாஞ் சாப்டிங்களா?” எனக் கேட்டு விட்டு அட்டன்டன்ஸ் எடுக்கும் ராமரய்யாவும்,
கண்பார்வைக்கு இணையாக காதுகளிலேயே பார்க்கும் திறம் படைத்த முருகன் சாரும்,
பெண் குழந்தைகளின் மானம் காத்த சுந்தர் சாரும், கதைகளின் வாசற்கதவைத் திறந்தவிட்ட மாதவன் ஐயாவும், குழந்தைகளுக்கான பிரச்சனைகளைச் சொல்ல வாய்ப்பு தந்து அவர்களுக்காக பிரே பண்ணும் அற்புதம்மேரி டீச்சரும், எப்போதும் குழந்தைகளின் மனங்கவர்ந்த ஆசிரியராக விளங்கும் பஞ்சம்மா டீச்சரும் குழந்தைகளைக் கையாளும் விதமும், அவர்களின் மீது அன்பைச் சொரியும் விதமும் கண்களைக் குளமாக்குகின்றன.
‘தொக்குச்சிய்யம்’, ‘தொண்ணச் சோறு’ போன்ற வெவ்வேறு பதங்களின் விளக்கமும், அவற்றின் மூலம் வெளிப்படும் ஆழமும் அழுத்தமுமான உணர்வுகளும் சொற்களுக்கு உயிருள்ளதை உரக்கச் சொல்கின்றன.
“ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்தவொரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடின்றி தானே நிகழும். கட்டுப்படுத்தி எதைத்தான் நிரந்தரமாக சாதித்து விட முடிகிறது?” என்கிறார். எவ்வளவு பெரிய உண்மை. இன்றைக்கு கட்டுப்பாடு மிகுந்ததாகச் சொல்லப்படும் பள்ளிக்கூடத்தை நோக்கி ஒரு கூட்டம் மொய்த்துக் கொண்டிருக்கிறது.
பீகாருக்கு போலாமா சார்..
‘ஆணுக்குள் ஒரு எக்ஸ்’ என்ற 10 ஆவது கட்டுரையில், அரசு சீருடை அணிந்த மாணவர்களைத் தனது காரில் சுற்றுலா அழைத்து வந்த அந்தப் பெயர் தெரியாத ஆசிரியர், ஏழெட்டு வயது பெண் குழந்தை வயிற்றால் கழிந்ததால் கேன் வாட்டரைக் கொண்டு சுத்தம் செய்ததைச் சொல்லும் இறுதி வரிகளில் இப்படி முடிக்கிறார், “அந்தப் பொண்ணு மட்டும் யூனிஃபார்ம்ல இல்லாட்டி அவங்கப்பான்னு நெனச்சிருப்பேங்க”… “அவரு பிள்ளெங்களுக்கு செஞ்சா அப்பான்னு சொல்லலாம். அடுத்தவங்க பிள்ளெங்களுக்கு செஞ்சா அம்மான்னுதானே சொல்லணும்”
இந்நூலின் வகைமை பெயரளவிற்கு கட்டுரைத் தொகுப்பு என்று இருந்தாலும் 17 அத்தியாயங்களைக் கொண்ட ஒரு சிறுகதைத் தொகுப்பைப் போலவே வாசிப்பவர்களுக்கான அனுபவத்தைத் தருகிறது இந்த நூல். ஒவ்வொரு கதையின் முடிவிலும் மனதில் தைப்பதைப் போன்ற ஒரு கிளைமாக்ஸில் முடிக்கிறார் ஆசிரியர்.
குடிக்கும் அப்பாக்களைக் கண்டறிய கண்ணை மூடி கையுயர்த்தச் சொல்கிறார். வகுப்பில் ஒரே ஒரு மாணவனைத் தவிர எல்லோரும் கையை உயர்த்துகின்றனர். அந்த ஒரு மாணவனை மட்டும் தனியே அழைத்து கேட்கிறார். “அவனுக்கு அப்பா இல்லை”! இன்றைய அப்பாக்களின் குடிநோயால் நாளைய சமூகமே அழுகிப் பாழாகும் அவலநிலையை எதிர்நோக்கி உள்ளதை ‘மணல் கடிகாரம்’ என்ற அத்தியாயயம் தெளிவாகக் காட்சிப்படுத்துகிறது.
“விட்டு விடுங்கள் வீதிகள் பார்த்துக்கொள்ளும்” என்று கோடைவிடுமுறையில் குழந்தைகளின் சுதந்திரத்திற்காக அரை கூவல் விடுக்கிறார். எத்தனைப் பெற்றோர் காதுகளில் இது சென்று சேரும் என்பது தெரியவில்லை.
தான் குழந்தையாக இருந்தபோது தனக்கு நேர்ந்ததையும், தன்னிடம் தன் வகுப்பில் உள்ள குழந்தைகள் வழியாகத் தான் உணர்ந்ததையும் மிகுந்த நகைச்சுவையோடும், குழந்தைகள் மீது சமூகம் காட்டவேண்டிய அலாதியான அக்கறையோடும் எழுதப்பட்டுள்ள நூல் இது.
குழந்தைகளின் குழந்தைமையை மேலும் புரிந்துகொள்ளவும், அவர்களின் சுற்றமறிந்து, சூழலறிந்து அவர்களுக்குத் தேவையானதை, தேவையான அளவில், தேவையான நேரத்தில் ஊட்டக் கூடிய பக்குவத்தை மேம்படுத்திக் கொள்ளவும், தாங்கள் நழுவவிட்ட இடங்களில் தங்களை சரிப்படுத்தி நிலைநிறுத்திக்கொள்ளவும் ஆசிரியராகப் பணிபுரிகிற ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல் ‘சிலேட்டுக்குச்சி’.
புத்தகத்தின் பெயர்: சிலேட்டுக்குச்சி
ஆசிரியர்: சக.முத்துக்கண்ணன்
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம்
பக்கங்கள்: 112
விலை: ₹110
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/
– மாணிக்க முனிராஜ்