நூல் அறிமுகம்: ஆசிரியர் சக.முத்துக்கண்ணன் “சிலேட்டுக்குச்சி” – பா. கெஜலட்சுமிநூலின் பெயர் : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
பக்கங்கள் : 112
விலை. : ₹ 110
முதல் பதிப்பு : ஜூன் 2020
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/

17 அத்தியாயங்களும் 112 பக்கங்களும் கொண்ட ‘சிலேட்டுக் குச்சி‘ எனும் கட்டுரைத் தொகுப்பு, அனைத்து ஆசிரியர்களும் வாசிக்க வேண்டிய ஒர் அரிய குறிப்பேடு. இதன் ஆசிரியர் தோழர் சக. முத்துக்கண்ணன் அவர்கள், தான் வகுப்பெடுக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராகவும் அதே நேரத்தில் தன் இளம் வயதில் மாணவனாக இருந்தும் எழுதிய அனுபவங்களின் தொகுப்பு. ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்னும் பழமொழிக்கிணங்க, சமுதாயத்தில் ஒருவன் நல்ல குடிமகனாகத் திகழ, பள்ளி பருவத்தில் அவனுள் விதைக்கப்படும் நற்சிந்தனைகளே அடித்தளமாக அமைகிறது. இதற்கு, பெற்றோர்களும், ஆசிரியர்களுமே முதன்மை காரணம். நல்ல பெற்றோர்களும், சூழலும் வசதி வாய்ப்பும் அமைந்த பிள்ளைகளுக்குப் பயிற்றுவித்து 100% தேர்ச்சி கொடுத்துள்ளோம் என மார்தட்டி விளம்பரப்படுத்தும் கல்வி நிறுவனங்களை நோக்கி, ‘தேர்வில் வெற்றிபெறுவது அல்ல கல்வி, அடிப்படை வசதிகள் அற்ற நிலையிலும், வாழ்க்கையின் அனைத்து கோணங்களையும் நின்று நிதானத்து தரிசனம் செய்யவும், சீரிய சிந்தனையோடும் நேர்த்தியான செயல்பாடோடும் அனைத்து தடைகளையும் தகர்த்து, வாழ்க்கையைக் கொண்டாட கற்றுத் தருவதே சிறந்த வாழ்க்கை கல்வி என முகத்தில் அறைந்தார் போல பேசுகிறது இந்த புத்தகம்.

ஆசிரியர் – மாணவர் உறவு உறவுகளிலே நேர்த்தியான உறவு. கற்றலும், கற்பித்தலும் ஒரேசமயத்தில் இருவருக்குள்ளும் மாற்றி மாற்றி நிகழும் தன்மை வாய்ந்தது. இந்த உறவில் வாழ்க்கை முழுவதும் முகங்கள் மாறிக்கொண்டேயிருந்தாலும், இருவரையும் அன்பு சங்கிலியால் பிணைத்து ஆழ்மனதில் வேரூன்ற வைக்கும். இருவருக்குள்ளும் வயது, வரம்பு எல்லையற்றது; எதிர்பார்ப்பற்றது; தனித்துவமானது; மரியாதையும் நேசமும் இரண்டறக் கலந்து அவரவர் தன்மைக்கேற்ப வெளிப்படுவது. மேற்கூறிய அனைத்து தன்மைகளையும் பிரதிபலிக்கும் வண்ணம் ஒவ்வொரு கட்டுரையும் அமைந்துள்ளது.

தொடர்ந்து வாசிப்பவரே சிறந்த ஆசிரியராகவும் இருக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திகழ்கிஞ இந்நூல் ஆசிரியர் தோழர் சக. முத்துக்கண்ணன் அவர்கள். சமகால நிகழ்வுகளை வாசிப்பதோடு மட்டுமல்லாமல் அதை குழந்தைகளிடம் பகிர்வதோடு, சுந்தர் ராமசாமி மற்றும் பிரபஞ்சன் சிறுகதைகளைப் பாடத்தோடு தொடர்புப்படுத்துவதால் பிடித்த ஆசிரியராகவும் விளங்குவதில் வியப்பில்லை‌. பிறரைப் புரிந்து கொள்வதில் தானே வாழ்க்கையின் முழுமையே பொதிந்துள்ளது. மாணவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு சிறந்த உளவியலாளராகவும் தடம் பதிக்கிறார் என்பதை பின்வரும் வரிகள் இயம்புகிறது. உதாரணமாக, “மாணவப் பருவம் கிடைத்ததையெல்லாம் கொண்டாட நினைக்கிற பருவம். சின்ன பையன் போன்றதொரு தோற்றம் தான் முதலில் நம்மை புரிந்து கொள்வான் என நம்ப வைக்கிறது. ஆசிரியரைப் பிடித்திருந்ததாலேயே அவர் நடத்திய பாடமும் பிடித்திருந்தது. ஆசிரியரின் அர்ப்பணிப்பு மிக்க எந்த ஒரு வகுப்பிலும் மாணவர்கள் பொய் பேசுவதில்லை. இது கட்டுப்பாடு இன்றித் தாமே நிகழும். வெறும் சப்தங்கள் ஆக உதிரும் வார்த்தைகளை விட நம் நடவடிக்கைதான் நம்பும்படி கற்பிக்கும்.” இம்மாதிரி சிந்தனையைக் கூர் தீட்டும் வரிகள் கட்டுரை முழுவதும் விரவியிருக்கின்றன.நூலாசிரியர், தன் கற்பித்தல் திறனுக்குக் காரணமாகவும், முன்மாதிரியாகவும் இருந்த பன்னீர் சார், இராமரய்யா, முருகன் சார், மாதவன் அய்யா, நூலகர் இராமு ஆகியோரின் செயல்திறன் மூலம் கிடைத்த அனுபவங்களை அள்ளி வழங்கியிருக்கிறார். “எங்களுக்குச் செரிக்க ஏதுவானதொரு தருணத்தில் சரியான அளவில் நல்ல பதிலை அவரால் பிசைந்து ஊட்ட முடிந்தது.” என மாணவர் கேட்கும் கேள்விகளை நினைவடுக்குகளில் நிலைநிறுத்தி, தக்க சமயம் பார்த்து தெளிவான பதிலளிக்கும் பன்னீர் சாரைப் பற்றி நிறைய இடங்களில் சிலாகிக்கிறார். பார்வை தெரியாத முருகன் சாரின் கற்பித்தலை இரசிக்கும் இராமரய்யாவின் நட்பு நேசிப்பிற்குரியது. திணிப்பதாக அல்லாமல், இரசிப்பதாகக் கற்றல் நிகழ்வது எத்தனை அழகானது, என ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும், அரசும் நினைத்தால் மாற்றம் ஏற்படும் நாள் வெகுதூரம் இல்லை என்று தோன்றுகிறது. பிள்ளைகளின் மனதில் இடம்பிடிக்க, “தன் அதிகாரத்தையும் அறிவாற்றலையும் கழற்றி வைத்துவிட்டு குழந்தைகளோடு தன்னை சமப்படுத்தி கொண்டாலே” போதும். “குழந்தைகளை அங்கீகரிக்கும் விஷயத்தில் முக்கியமான இடத்தில் இருப்பவர் ஆசிரியர்தான்.

சிறு கைதட்டலும், பாராட்டும், அவர்கள் சொல்வதைத் கேட்கும் நிதானமும், அவர்களுக்காக சில வார்த்தைகளுமே போதும், நாம் சொல்வதைக் கேட்க, என கற்றலை எளிமைப்படுத்துகிறார்.எந்த வாசிப்பு நம் வாழ்க்கையோடு தொடர்பு படுத்தி நம்மை சிந்தனைக்கு உள்ளாக்குகிறது அதுவே சிறந்த படைப்பை சிலேட்டு குச்சி எனும் தலைப்பை எனும் தலைப்பில் நம் பால்ய கால நினைவுகளை மீட்டெடுக்கும் வகுப்பறைக்குள் சமூகத்தையும் சமூகத்துக்குள் வகுப்பறையும் இணைக்கும் முயற்சி என இப்படைப்பை படைத்த தோழர் அவர்களுக்கு மீண்டும் நன்றி.