நூலின் பெயர் : சிலேட்டுக்குச்சி
ஆசிரியர் : சக.முத்துக்கண்ணன்
பக்கங்கள் : 112
விலை. : ₹ 110
முதல் பதிப்பு : ஜூன் 2020
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க கிளிக் செய்க: https://thamizhbooks.com/product/silattukkuchi-by-saga-muthukannan/
நான் 7ம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும்போது எங்கள் பள்ளிக்கு சந்திரசேகர் என்ற 25 வயது மதிக்கதக்க அறிவியல் வாத்தியார் வந்தார். பார்க்க சினிமா பட ஹீரோ போல சிவந்த நிறம் அவரது உதடு லிப்ஸ்டிக் போட்டதைப்போல அவ்வளவு சிகப்பு. குழந்தை முகம் நேர்த்தியான உடை அணிந்து இன் செய்து வந்தார். உயரம் மட்டும் கொஞ்சம் குறைவு. முதல் மூன்று மாதம் அந்த குழந்தையை பார்த்து பழகிய நாங்கள் அதன்பின்பு கொடூரமான ராட்சசனை கண்டபோது பதறிவிட்டோம். ஒரு நீண்ட பிரம்பை எடுத்துவந்து அடித்து துவைப்பார். வெகுவிரைவில் தெரிந்துகொண்டோம் அவர் சட்டையை இன் செய்து வந்தால் பொண்டாட்டியோடு அன்று சண்டை இல்லை என்று அர்த்தம் இன் செய்யாமல் வந்தால் அன்று எங்களுக்கு சம்பவம் என்று அர்த்தம். அவர் மனைவி அவரோடு சண்டை செய்யாமல் இருக்க நாங்கள் அந்தோணியாரிடம் மனமுறுக வேண்டுவோம். கடைசியாக இன் செய்தாலும் செய்யாவிட்டாலும் சம்பவம் செய்யுமளவு கொடூர மனிதனானதை கடந்தே அடுத்த வகுப்புக்கு போனோம்.(ஒருசில ஆண்டில் பணிமாறுதல் வாங்கி செல்ல வைத்து பலரையும் வாழ வைத்த அந்தோணியாருக்கு நன்றி).
சந்திரசேகர் வாத்தியார்கள் போல பள்ளிக்கு 5பேர் இருப்பார்கள். சாட்டை படத்தில் வரும் சமூத்திரக்கணி போல பகவான் ஆசிரியர் போல வேறு பள்ளிக்கு மாறுதலாகி போகும் ஆசிரியர்களை போக வேண்டாம் என்று மாணவர்கள் மறிக்கும் ஆசிரியர்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள். அவர்கள்தான் மாணவர்களின் உண்மையான ஹீரோக்கள். தனது வாழ்நாளில் சந்தித்த சந்தித்து கொண்டு இருக்கும் பல ஹீரோக்களை பற்றி ஆசிரியர் சக. முத்துகண்ணன் எழுதிய 17 அருமையான கட்டுரைகள் “சிலேட்டுக்குச்சி”. எனக்கென்னமோ 17 சிறுகதைகளை வாசித்த அனுபவமே.
முத்துகண்ணன் எழுத்து நடை படிக்க படிக்க நம்மை பால்யதுக்கு அழைத்து செல்கிறது. அவரின் ஆசிரியர்களின் கற்றுக்கொடுத்த அறத்தையும், அவரோடு பயணம் செய்யும் சகஆசிரியர்களின் பல்வேறு நல்ல செயல்களையும் போலீஸ் உளவாளி போல பின்னாடியே நடந்துகொண்டு அவர்களுக்கு தெரியாமல் எல்லா ஆசிரியர்களுக்கும் பயன்பெறும் கட்டுரை தொகுப்பை கொண்டுவந்துள்ளார்.
“யார் எல்லாம் அன்சாரி வீட்டுக்கு ரம்ஜானுக்கு பிரியாணி சாப்பிட்டு இருக்கீங்க” என்று மாணவர்களை நோக்கி பன்னீர்செல்வம் வாத்தியார் கேட்கும்போது பலரும் கை தூக்குகிறார்கள். “எத்தனைபேர் அவனை பொங்கலுக்கு உங்கள் வீட்டுக்கு அழைத்தீர்கள்” என்று கேட்கும்போது யாரும் கை தூக்கவில்லை, மிக நாசுக்காக மாணவர்களுக்குள் இருக்கும் தடையை அழகாக உடைக்கும் பன்னீர்செல்வம், மக்குபிள்ளை என்று ஓரம்கட்டிய மாணவர்களையும் படிக்க வைக்கும் அழகிய வித்தையும் வாசிக்க அவ்வளவு அழகாக இருக்கிறது.
அறிவியல் வாத்தியார் இராமையாவிடம் எதிரில் வரும் எந்த மாணவர்களும் “சார் பூஸ்ட் அடிங்க“ என்று இரண்டு கைகளை நீட்டி கையை அதன் மீது அடித்து பூஸ்ட் வாங்கி போகும் மாணவர்களும் எவ்வளவு நெருக்கடியான மனநிலையில் இருந்தாலும் மாணவர்கள் கேட்டால் சிரித்த முகத்தோடு அதை சிரித்து செய்யும் மாணவர்களின் மீதான அன்பு பொழியும் வாத்தியார்கள் நமக்கும் இருந்தாலும் நன்றாக இருக்கும் என எங்க வைக்கும் கட்டுரை. பார்வையற்ற முருகன் வாத்தியார் மாணவர்களோடு இருக்கும் தாய்மை நெருக்கம் என்று 17 கதைகளை கட்டுரையாக்கி உள்ளார். இந்த தொகுப்பை வாசிக்கும் எல்லோருக்கும் நாமும் ஆசிரியர் ஆகா வேண்டுமென்ற ஆசையை வளர்க்கும் சிலேட்டுக் குச்சி. நமக்கு வாய்த்த பலதும் நம் குழந்தைகளுக்கு வாய்ப்பது இல்லை என்ற ஏக்கமும் நமக்குள் தெய்க்கும்.
மாணவர்களின் உலகத்திற்குள் ஆசிரியர்கள் நுழைந்து கற்றுக்கொள்ள “சிலேட்டுக் குச்சி “ அற்புதமான தொகுப்பு. நல்ல தொகுப்பை எழுதிய முத்துகண்ணனுக்கு வாழ்த்துக்கள். பாரதி புத்தகலாயம் வெளியிடு.
அ. கரீம்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.