ஆசிரியர் மாணவர் என்ற நிலையிலும் மாணவர் ஆசிரியர் என்ற வகையிலும் உறவுகள் வலுப்படவும் மேம்படவும் ஒன்றுக்கொன்று உறுதுணையாய் இருந்து பள்ளி என்னும் கட்டமைப்பை மேம்படுத்தவும் ஆதாரமாக உள்ள வகுப்பறையின் நிகழ்வுகளையும் அதன் வழியே ஆசிரியப் பணியில் தான் பெற்ற அனுபவங்களையும் கட்டுரையாகத் தொகுத்து வழங்கி இருக்கிறார் எழுத்தாளர் சக முத்துக்கண்ணன்
இதில் 17 தலைப்பிலான கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன ஒவ்வொரு தலைப்பும் ஆசிரியர் தனது மாணவப் பருவத்தில் தான் பெற்ற அனுபவங்களையும் தான் ஆசிரியராக இருக்கையில் மாணவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட அனுபவங்களையும் நகைச்சுவை உணர்வுடனும் எளிய மொழியிலும் தன்னைத்தானே பகடி செய்து எழுதிச் செல்கிறார்
மாணவர்கள் ஆசிரியர் எப்படிப்பட்டவர் என்பதை காணும் ஓரிரு நாட்களிலேயே அறிந்து கொள்ளும் திறமைசாலிகள். எந்த ஆசிரியரிடம் எப்படிப் பேசினால் அவரை தனது வழிக்கு கொண்டு வந்து விடலாம் என்ற தொழில் நுட்பமும் வெகு விரைவிலேயே கற்றுத் தேர்ந்து விடுவார்கள் மாணவர்கள். அந்த நிலையில் ஆசிரியரிடம் அடி வாங்கும் மாணவர் எப்படி எல்லாம் நடித்து அவரிடம் இருந்து தப்பிக்கிறான் என்பதையும் அதன் வழியே ஆசிரியரை எப்படி ஏமாற்றி மாணவர்கள் மத்தியில் ஆசிரியருக்கு சிரிப்பை வரவழைக்கிறார் என்பதையும் அழகாக எடுத்துச் சொல்கிறது முதல் கட்டுரை.
மாணவப் பருவத்தில் தனக்கு பிடித்த ஆசிரியர்களையும் தனக்கு பிடிக்காத ஆசிரியர்களையும் மாணவர்கள் ஒரே நிலையில் வைத்து பார்ப்பதில்லை ஆனால் பட்டப்பெயர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் மாணவர்கள் ஏதேனும் ஒரு பட்டப் பெயர் வைத்து தங்களுக்குள் அந்த மொழியை கொண்டு உரையாடிக் கொண்டிருப்பார்கள் அந்த வகையில் ஆசிரியர்களுக்கு வைக்கப்பட்ட பட்டப்பெயர் அவர்களுடைய பணியோடு சேர்ந்து அவர்களது மனநிலையையும் பிரதிபலிப்பை மாணவர்கள் வைத்த பட்ட பெயர்கள் வழியாக அறிய முடிகிறது
மாணவர்களின் மனதிற்குள் கல்வி தொடர்பான ஆசைகள் என்னென்ன என்பதையும் கல்வியின் வாயிலாக அவன் பெறப்போவது என்ன என்பதையும் ஆசிரியர் அறிந்து கொள்ளும் தருணம் மொட்டொன்று மலர்ந்து புன்னகைக்கும் தருணத்தை விட கடினமானது ஆனால் மாணவனின் மனநிலையை அறிந்து கொண்டும் நன்கு புரிந்து கொண்டு அவன் வாழும் சூழலையும் அவனது குடும்ப சூழலையும் கருத்தில் கொண்டு அவனை அணுகும் ஆசிரியருக்கு அது மிக எளிது. இத்தக சூழலில் ஏதேனும் ஒரு ஆசிரியர் பள்ளியில் மாணவர்களுக்கு ஆதரச நாயகனாக மாறி விடுவதும் உண்டு அந்த அடிப்படையில் தனது எல்லா விதமான கஷ்ட நஷ்டங்களையும் இயலாமையையும் மாணவன் தனது ஆதர்ச நாயகன் இடத்தில் ஒப்புவித்து விடுவான் அவரும் அவனுக்கு தகுந்தார் போல் வாழ்வாதாரங்களை அவனுக்கு அமைத்துக் கொடுப்பதும் சில வேலைகளில் நடந்து விடுகிறது.
எல்லா மாணவர்களுக்கும் பிடித்த பன்னீர் சார் பற்றிய மூன்று கட்டுரைகளை வாசிக்கும் பொழுது நம்மை அறியாமலேயே நமது மனம் ஈரமாகி விடுகிறது பன்னீர் போன்ற சில ஆசிரியர்கள் இருப்பதாலேயே இன்று வகுப்பறை என்ற கட்டமைப்புக்குள் மாட்டிக் கொண்டு முழிக்கும் நிறைய மாணவர்களின் எதிர்காலம் கல்வியின் வாயிலாக சிறப்புற அமைகிறது என்றால் மிகை இல்லை.
குழந்தைகளின் அலைவரிசையை கற்பதும் அதனோடு பயணிப்பதும் அவ்வளவு எளிதான காரியம் அல்ல வாய்ப்பிருப்பதாலேயே எல்லா ஆசிரியர்களும் அதை கற்று விடுதல் என்பது நடக்காத காரியம் அப்படி குழந்தைகளோடு விளையாடி அவர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப தம்மை வடிவமைத்துக் கொள்ளும் ஆசிரியர்களே எல்லா குழந்தைகளுக்கும் வழிகாட்டிகளாக மாறிவிடுகிறார்கள். தான் பெற்ற கல்வியையும் தான் பெற்ற அனுபவங்களையும் பெருமையாகக் கொள்ளாமல் அதிலிருந்து மாணவனைத் தள்ளி நிறுத்தாமல் அவனோடு இணைந்து தனது அனுபவங்களை அவனுக்குள் கடத்தும் போதே ஆசிரியரிடமிருந்து ஒரு மாணவன் சிறந்த மனிதநேயத்தை தேடி கண்டடைகிறான்.
மதுவினால் நடுத்தர குடும்பமும் வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பமும் எவ்விதம் சீரழிகிறது என்பதை நாம் நிறைய திரைப்படங்கள் வாயிலாக நூல்களின் மூலம் நமது கண் முன்னே நடைபெறும் நிறைய மனிதர்களின் வாயிலாகவும் உணர முடிகிறது ஆனாலும் மது குடும்பத்தை அழிப்பதோடு நின்று விடாமல் அந்த குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் கல்வியை அழிக்கிறது எதிர்காலத்தை நசுக்கி விடுகிறது இதன் மூலம் தொடரும் அந்த தலைமுறையினரே மிகுதியாக பாதிக்கப்படுவதை மதுவின் மீது பிரியம் கொண்ட நபர்கள் உணர வேண்டும்
தேர்வு முறைகள் மற்றும் தேர்வுகள் எப்படி மாணவர்களின் மனநிலையை பாதிக்கின்றன என்பதையும் தேர்வைக் கண்டு வெறுத்து கல்வியை விட்டு ஒதுங்கும் மாணவர்களைப் பற்றியும் எப்படியாவது தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பிட்டு எழுதி தேர்வை எழுதும் மாணவர்கள் பற்றியும் விவரிக்கும் பிட்டு பேப்பர் என்ற கட்டுரையின் வழியே இன்றைய கல்விமுறையின் அவலத்தை நம் கவனத்திற்கு கொண்டு வருகிறது
ஆசிரியர்களை மாணவர்கள் சதா கவனித்துக் கொண்டே இருக்கிறார்கள் வகுப்பறையில் மட்டுமின்றி பொதுவெளியிலும் அது தொடர்கிறது ஆசிரியர் நிற்கும் இடமெல்லாம் மாணவனுக்கு வகுப்பறை தான் பள்ளிக்கூடத்திற்கு மட்டுமில்லாமல் வெளியிடங்களிலும் ஆசிரியரின் நடவடிக்கைகளை கண்ணுறும் மாணவன் அதிலிருந்து தனக்கான அனுபவங்களையும் கவனிக்க ஆரம்பிக்கிறான் பள்ளிக்கூடத்திற்குள் ஆசிரியர்களுக்கு இடையிலான நட்பையும் பகையையும் பற்றி கூட மாணவர்கள் கவனமாக பேசிக்கொள்கிறார்கள் வெறும் சப்தங்களாக உதிரும் வார்த்தைகளை விட நம் நடவடிக்கை தான் நம்பும்படி கற்பிக்கும் ஒருமுறை மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தும் ஆசிரியர் எச்சில் கையாலேயே தனக்கும் ஊட்டி விட மாணவனை கேட்டுக் கொண்ட சூழலை விவரிக்கும் ஆசிரியர் மாணவர்களிடமிருந்தும் கற்றுக் கொள்வதற்கு நிறைய உள்ளன என்பதை கோடிட்டு காட்டுகிறார்
இன்றைய காலகட்டத்தை விட அன்றைய கல்வி முறையில் நீதி போதனை வகுப்புகள் மதிப்புக் கல்வி என்ற பாடவேளையில் மாணவர்களுக்கு வாழ்வியல் திறன்களும் அறம் சார்ந்த கதைகளும் வழங்கப்பட்டன இதன் வழியே சமூக வெளியில் எவ்வாறு நடந்து கொள்வது என்பதை பற்றியும் எந்தெந்த நிகழ்வுகளுக்கு தம்மைத் தாமே உருவாக்கிக் கொள்வது என்பது பற்றியும் மனிதர்களை மதிக்கும் மாண்புகளை பற்றியும் மாணவர்கள் அதிகமாக அறிந்து கொண்டனர் கதைகளின் வழியாகவும் அவை கூறும் கருத்துக்களின் வழியாகவும் தமக்குத் தானே புத்துணர்ச்சி பெற்றுக்கொண்ட அன்றைய காலகட்டத்தை இன்றைய மதிப்பெண் கல்வியுடன் ஒப்பிடும் பொழுது இன்றைய தலைமுறை கதைகளை புறக்கணிப்பதன் வேதனையை உணர முடிகிறது.
கோடை விடுமுறையில் மாணவர்கள் கிராமத்திற்கு சென்று அங்குள்ள சூழலை முழுமையாக கற்று உணர்ந்து இயற்கையை ரசித்து இயற்கையின் வழியே தன் வாழ்வில் அறிந்து கொள்வதற்கான ஏராளமான விளையாட்டுகளை விளையாடி சுதந்திர வெளிச்செயல்பாடுகளை கற்றுக் கொண்ட தருணங்கள் நமக்குள் நினைவுக்கு வருகின்றன. ஆனால் இன்றைய தலைமுறையோ கிடைக்கும் ஒவ்வொரு மணித்துளியையும் ஏதேனும் ஒரு சிறப்பு வகுப்புகளுக்குள் தம்மை புகுத்திக் கொண்டு மனம் விரும்பாத சூழலிலும் பயிற்சிகளைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டு இயற்கையை விட்டு வெகு தூரம் விலகிச் செல்கிறது.
இனம் மொழி என்ற பேதம் பார்க்காமல் ஏழை பணக்காரன் என்று வித்தியாசம் உணராமலும் மாணவர்களுக்குள் பூத்திடும் நட்பு அவர்களின் இறுதிக் காலம் வரை தொடர்ந்து அவர்களின் வாழ்வில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு உதவியாய் நிற்கின்றன அத்தகு பள்ளியின் அனுபவங்களை சிலேட்டுக்குச்சி நமக்குள் நினைவுகளை சுழல விட்டும் நினைவுகளின் வழியே நம் வாழ்வின் மாற்றங்களை நமக்கே திரும்ப எடுத்துக் கூறியும் இன்றைய கல்வி முறையோடு ஒப்பிட்டு பார்த்தும் உணர வைக்கிறது.
ஒவ்வொரு கட்டுரையும் ஒரு தேர்ந்தெடுத்த சிறுகதையை போல சிறப்பான மொழியிலும் நகைச்சுவை உணர்விலும் எழுதப்பட்டு வாசிக்கும் நம்மை நினைவுகளில் சுழல விடுகின்றன. கல்வியில் நல்லதொரு மாற்றத்தை முன்னெடுக்க விரும்பும் ஒவ்வொருவரும் வாசிக்கவும் வாசிப்பின் மூலம் வாழ்வின் சிறப்பான தருணங்களை உணர்ந்து கொள்ளவும் சமூகத்திற்கு திருப்பிச் செலுத்தவும் வழி காட்டுகிறது சிலேட்டுக்குச்சி.
நூலின் தகவல்கள்:-
நூல் : சிலேட்டுக்குச்சி
நூலாசிரியர் : சக.முத்துக்கண்ணன்
வெளியீடு : புக்ஸ் ஃபார் சில்ரன்
முதல் பதிப்பு : ஜுன் 2020
இரண்டாம் பதிப்பு : 2021 அக்டோபர்
தொடர்புக்கு : 04424332424
விலை : ரூ.110/-
பக்கம் : 112
நூலறிமுகம் எழுதியவர்:-
இளையவன் சிவா
கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.