சில்லுக்கோடு – கோவை சதாசிவம் | மதிப்புரை ம.கண்ணன் 

சில்லுக்கோடு – கோவை சதாசிவம் | மதிப்புரை ம.கண்ணன் 

சில்லுக்கோடு என்ற நூலில் தாண்ட முடியாத நினைவுகளாக நமது குழந்தைப் பருவத்தின் மறக்கமுடியாத நினைவுகளாக, என்றும் நம் நெஞ்சில் இனிமையாக பூத்துக் கொண்டிருக்கும் விளையாட்டுகளை ஆசிரியர் அவர்கள் அறிமுகப்படுத்துகிறார். விளையாட்டுக்கள் அனைத்தும் இன்றைய நவீன காலச்சூழலில் மறக்கப்பட்டு, குழந்தைகளிடத்தில் அன்னியமாகிப் போன நினைவலைகளாக இருக்கிறது. இவற்றை மீட்டெடுக்கும் விதமாக அவர் நினைவில் பொதிந்துள்ளவற்றை பதிவு செய்துள்ளார்.
ஒவ்வொரு விளையாட்டை பற்றியும் அறிமுகம் செய்யும் கவிதை நன்றாக வடிவமைக்கப்பட்டள்ளது.

சடுகுடு - தமிழ் விக்கிப்பீடியா

பலிஞ்சடுகுடு

“காலத்தை யாரால்
சாகடிக்க,
வாழவைக்க முடியும்..?

காலம்,
செலவு செய்யமுடியாத
சேமிப்பு.

இறந்த காலமென்று
எதுவுமில்லை!
எல்லாம்,
இருந்த காலமே…”

சடுகுடு விளையாட்டின் ஆடுகளம் மேடு, பள்ளமற்ற சமதளமாக இருக்க வேண்டும் என்ற நியதிக்குப் பின்னால் ஒரு வாழ்வியல் போராட்டம் மறைந்துள்ளது.
குறுநில மன்னர்களின் ஆளுகைக்கு கீழ் வரையறுக்கப்பட்ட நில எல்லைக்குள் முல்லைத் திணையில் ஒரு இனக்குழுவாக இருந்த மனிதர்களின் வாழ்க்கையை மாட்டு மந்தைகள் தான் தீர்மானித்தன.

ஒரு இனக் குழுவில் மாட்டு மந்தைகள் குறைகையில் அல்லது முற்றிலும் இல்லாது போகையில் அம்மக்கள் பசியால்வாடுவார்கள். குழந்தைகளும், பெண்களும் நிலை குலைந்து போவார்கள். மாடுகள் தான் அன்றைய உணவு தட்டின் அமுதசுரபி. தமது எல்லைக்கு வெளியே உள்ள இன்னொரு இனக்குழுவின் மந்தைகளில் உள்ள மாடுகளை கவர்ந்து வந்து தனது இனக்குழுவை வாழ வைப்பவர்கள்.

களவாடப்படும் வீரர்களை “சடுகுடுப்பை” இசை எழுப்பி வழியனுப்புவார்கள். எதிரிகளிடம் அகப்படாமல் மாட்டு மந்தையிலிருந்து சில மாடுகளை ஓட்டி வந்து இனக்குழு மக்களை காப்பாற்றும் வீரர்களை உருவாக்கும் பயிற்சி களம் தான் சடுகுடு விளையாட்டு. மூச்சை அடக்கவும், கள்வனைப் பிடிக்கவும், எதிரியிடம் இருந்து மீளவும் கொடுக்கப்பட்ட பயிற்சி நீட்சிதான் சடுகுடு. சடுகுடுவின் ஆடுகளம் நீளமானது.

இந்த சடுகுடு விளையாட்டில் நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்து
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு,சடுகுடு,
சடுகுடு, சடுகுடு
கண், காது, மூக்கு, வாய் என உடலில் நான்கு புலன்களும் இயங்கும் சடுகுடு விளையாட்டு தமிழகத்தில் தோன்றி இன்று தெற்காசிய முழுவதும் “கபடி” விளையாட்டாக பரிணமித்துள்ளன. புழுதி மண்ணில் குருதி வடிய மூச்சடக்கி விளையாண்ட கபடியின் மூச்சை கடைசிவரை காப்பாற்றுவோம்.

பச்சை குதிரை !!! | CWC Walk No 180 | Sunday 12.05.2012 ...

பச்சை குதிரை

மரத்தின்
கிளைகளைப் பார்ப்பவன் மனிதன்
வேர்களைப் பார்ப்பவன் மாமனிதன்.
பச்சைகுதிரை விளையாட்டில் கால்கட்டை விரல், கணுக்கால், தொடை, நிமிர்ந்து நின்று என் விளையாடுகிற பல படிநிலைகள் உள்ளன.
பச்சைகுதிரையில் தரையில் குனிந்து கொள்ள ஒருவர் இல்லை எனில் விளையாட்டை விளையாட முடியாது. இவ்விளையாட்டில் குனிந்துவர்கள்கள் நிமிர்வதும், நிமிர்ந்தவர்கள் குனிவதும் படிநிலை மலர்ச்சி என்ற உண்மையை உணர்த்தும் விளையாட்டாக உள்ளது.

மரப்பாச்சி பொம்மை கொலு | - Dinakaran

மரப்பாச்சி

“முகக் கண்களை மூடி
அகக் கண்களை
திறந்தவர்கள்…
கண்டு ரசித்தனர்,
ஆயிரம் காட்சிகள்”

குழந்கையின் கையில் இருக்கும் மரப்பாச்சி பொம்மை, குழந்தை வளரும்போது மரப்பாச்சி பொம்மையையும் வளர்கிறது. ஒரு குழந்தைக்கு கிடைக்கின்ற அத்தனை பொருட்களையும் அந்த மரப்பாச்சி பொம்மைக்கும் கிடைக்கும். பாசமுள்ள தாயாக குழந்தைகளை மாற்றும் வல்லமை மரப்பாச்சி பொம்மைக்கு உண்டு. மரப்பாச்சி பொம்மைகள் ஈட்டி, மரம், கருங்காலி, சந்தனம், தேக்கு, வில்வம், வேம்பு போன்ற மரங்களில் அன்றைய தச்சர்களால் செதுக்கப்பட்டன. வழவழப்பான மரப்பாச்சியின் மேனியில் காலத்தின் ரேகை படிந்திருக்கும்.
பொம்மையில் ஆணும், பெண்ணும் உண்டு. விளையாடுகையில் இரண்டுக்குமிடையே உள்ள உடலமைப்பின் வேறுபாட்டை உணர்வோம். எந்த உறுப்பை மறைக்க வேண்டும், எந்த உறுப்பை தொடக்கூடாது என்ற பாலியல் அறிவு இயல்பாக ஏற்படும். குடும்ப, சமூக நிகழ்வுகளை விளையாட்டீல் நிகழ்த்துவோம். ஆண், பெண் மரப்பாச்சி பொம்மைகளுக்கு கல்யாணம் செய்து விளையாடுவோம்.
மரப்பாச்சிகள் வெறும் பொம்மைகளன்று. குழந்தைகள் உடம்புக்கு முடியாமல் படுத்துக் கிடந்தால் மரப்பாச்சியை தண்ணீரில் முக்கி கட்டையால் உரசி, கைகளில் வழித்து நெற்றியில் பூசும் வழக்கம் இருந்துள்ளது.

இன்றைய குழந்தைகள் விளையாடுகின்றனர். பொம்மைகளும் இருக்கின்றன. பொம்மைகளையும் குழந்தைகளையும் பிரிக்க முடியாது. பிறந்த நான்கு மாதம் ஆன குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கி தருகிறோம். நண்பர்களும், உறவினர்களும் குழந்தைகளுக்கு பொம்மைகளைப் பரிசளிக்கின்றனர்.
அன்போடும் பிரியத்தோடும் வாங்கித்தரும் பொம்மைகள் இந்த மண்ணுக்கும், பண்பாட்டுக்கு அன்னியமாக உள்ளது.

Kittipul game - கிட்டிப்புள்ளு - இளம் ...

கிட்டிப்புள்

“தெருவில் விழுந்த
தோழமையின் விதை
வேரோடி, விழுந்திறங்குகிறது
மனதில்…”

கிட்டிப்புள் கோடைகால விளையாட்டுகளில் ஒன்று. மழைக்காலத்தில் விளையாடுவது சிரமம். மாதக்கணக்கில் ஈரம் இருக்கும் மண்ணில் கில்லியை கிடத்த முடியாது. கிட்டிப்புள் விளையாட ஒன்றை அடிக்கும் குறையாத தாண்டை, 2 அங்குல நீளத்தில் கில்லியை செதுக்குவதுத ஒரு தனிக்கலை.
கொய்யா மரத்தில் கில்லியும், தாண்டும் செய்தால் அருமையாக இருக்கும். ஆனால் கொய்யாவை வெட்ட யாரும் விட மாட்டார்கள். வேப்பங்குச்சியில் செய்யலாம். இவை இரண்டும் இல்லையெனில் வேலிக்கருவையை விருப்பம் போல வெட்டி பயன்படுத்தலாம். இரு முனைகளும் கூறாக கில்லியை செதுக்க வேண்டும். அப்போதுதான் குழியில் இருந்து குதிக்கும். குழியிலிருந்து தாண்டால் எழுப்பப்பட்டு வான்வெளியில் சிட்டாய் பறக்கும் கில்லியை “கிட்டிப்புள்” என்று குறிப்பிடுகிறார்கள். புள் என்றால் தமிழில் பறவை என்று பொருள். கில்லி தாண்டால் எழுப்பப்பட்டு ஒரு பறவையைப் போல் பறந்து வருவதால் கிட்டிப்புள் என்ற பெயர் பொருத்தமானது.
பறந்துவரும் கில்லியை புட்டான்(கேட்ச்) பிடிக்க வேண்டும். பிடித்தால் அடுத்தவர் ஆட்டம் இழப்பார். தப்பி தொலைவில் விழுந்து விட்டால், அடிததவர் குழியின் விளிம்பில் தாண்டை குறுக்காக வைக்க வேண்டும். கில்லி எங்கிருந்து விழுந்ததோ அங்கிருந்து தாண்டை குறிபார்த்து கில்லியால் அடிக்க வேண்டும். அடித்துவிட்டால் ஆடியவர் களத்தை விட்டு வெளியேறுவார்.
மட்டைப்பந்து(கிரிக்கெட்) விளையாட்டுக்கு கிட்டிப்புள் முன்னோடி. தமிழக நாட்டுப்புறங்களில் பல காலமாக நடைமுறையில் இருந்த விளையாட்டு கிரிக்கெட் மோகத்தில் வழக்கொழிந்து போனது.

கோவை சதாசிவத்தின் 'சில்லுக்கோடு ...

சில்லுக்கோடு

“யானை பெரிதா…
பூனை பெரிதா…
இயற்கைக்கு
இரண்டும் உயிர்கள் தான்!”

சில்லுக்கோடு விளையாட்டில் செவ்வகத்தில் ஒருவருக்கு நான்கு வீதம் எட்டு கட்டங்களை வரைய வேண்டும். (வாழ்வில் மிக கவனமாக கடக்க வேண்டிய 8 கட்டங்களின குறியீடு என்பதுபோல் உள்ளது) இனி சில்லை வரிசையாக நேர்த்தியாக ஒவ்வொரு கட்டத்திலும் போட்டு நொண்டியவாறு ஒரு காலில் மிதித்து அதனை வெளியே தள்ள வேண்டும். உள்ளங்கையில் சில்லை ஏந்தி நொண்டியபடியே கட்டங்களைக் கடந்த பிறகு, புறங்கையிலும், கால்விரல் இடுக்குகளிலும் வைத்து கடக்க வேண்டும். எந்த தருணத்திலும் சில்லை நழுவ விடக்கூடாது. சில்லுதான் ஆட்டத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் காரணி. இந்த விளையாட்டில் அவதானிப்பு என்பது ரொம்பவும் அவசியம். வெற்றி இலக்கை எட்டும் வரை கவனம் பிசகக் கூடாது. வெற்றியைத் தொடும் நேரம் வந்துவிட்டது. சில்லை தலையில் வைத்து கண்களை மூடி அண்ணாந்தபடி கட்டத்திற்குள் நடக்கவேண்டும். கட்டத்தின் கோடுகளை மிதித்துவிட்டால்… இதுவரை கடந்தவை எல்லாம் வீணாகிவிடும். ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும் ரைட்டா..? ரைட்டு..?
ரைட்டா…? ரைட்டு…? என்று கேட்டுக்கொண்டே விளையாடும் விளையாட்டாக உள்ளது.

இவை போன்று இன்னும் பல்வேறு பாரம்பரியமான நமது விளையாட்டுகளை இந்நூலில் பதிவு செய்துள்ளார். பாரம்பரியமான விளையாட்டுக்களின் வழியாக குழந்தைகளுக்கு எண்களையும், மன வளர்ச்சிக்கு உதவிடுவதோடு சக மாணவர்களிடத்தில் ஒற்றுமையோடு இருக்க வேண்டும் என்பதை விளையாட்டுகளின் மூலமாக நாம் அறிய முடியும்.

 

நூல் – சில்லுக்கோடு
ஆசிரியர் – கோவை சதாசிவம்
வெளீயீடு – குறிஞ்சி பதிப்பகம்
விலை – ரூ.60
பக்கம் – 72 

 

ம.கண்ணன்
முனைவர் பட்ட ஆய்வாளர்,
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *