நூல் அறிமுகம்: சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ | கிருத்திகா பிரபா, சேலம்

கென்யா நாட்டைச்  சார்ந்த கூகி வா தியாங்கோ, எழுத்தாளர், களப்பணியாளர், பேராசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர். அரசியலில் இடதுசாரி/ தீவிர இடதுசாரி நிலைபாட்டை தனதாக்கிக் கொண்டப்  பிறகு, தனது எழுத்தையும் பணிகளையும் அந்த திசைவழியிலேயே அமைத்துக்கொண்டவர்.  “…தான் சார்ந்துள்ள சமூகத்தின் மனசாட்சியாக இருந்து, வரப்போகும் அபாயத்தை முன்கூட்டி தெரிவித்து அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து நெறிப்படுத்துவது எழுத்தாளனின் பணி.

அறிவுப்பூர்வமாகவும் ஊக்கத்துடனும் சமூகத்தின் மறு உருவாக்கத்தில் தனது பங்கைச் செலுத்துமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதுதான் அவனது எழுத்தின் அவசரமான/ அத்தியாவசியமான செய்தியாக இருக்க வேண்டும்..”, என்பது இலக்கியம் குறித்த கூகியின் பார்வை. கலை, பண்பாட்டு, இலக்கியத் தளங்களில் தொடர்ந்த அவரது இந்த பணிகள் காரணமாக 1977ல் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த சமயத்தில், சிறையதிகாரிகளின் கண்களில் மண்ணைத்தூவி மலம் துடைக்கும் தாளில் அவர் எழுதியது இந்நாவல்!

இந்நாவலை படிக்கையில் கென்யாவிற்கும், இந்தியாவிற்குமான பல ஒற்றுமைகளை உணர்ந்து வியந்ததன் விளைவே, புத்தக விமர்சனத்திற்கு இதை தேர்ந்தெடுக்க காரணம். அப்படி என்ன ஒற்றுமைகள்? இரண்டுமே பிரிட்டிஷ் காலனியாதிக்கத்தை, அடக்குமுறையை சந்தித்தவை என்பதா? பெரும் உயிர்பலி கொடுத்தும், பலரின் தியாகங்களாலும், வீரப் போராட்டங்களாலுமே இரு நாடுகளிலும் இந்த விடுதலை சாத்தியமானது என்பதாலா? இல்லை! மிகுந்த கனவுகளோடு எதிர்ப்பார்க்கப்பட்ட இந்த விடுதலையால், காலனியமாக இருந்ததற்கும் சுதந்திர நாடாக இருப்பதற்கும், எந்தவொரு வித்தியாசமும் இல்லை என்பது; ஆள்பவர்கள் தான் மாறியுள்ளார்களே தவிர மக்கள் சுரண்டப்படுவது மாறவில்லை என்ற பரிதாப நிலையில் இருப்பதே, இரண்டிற்குமான ஒற்றுமைகள்!

பெயரளவில் கூட இல்லாத தேசவுடைமையாக்கம், தேசவுடைமை ஆக்கப்பட்டவை -களையும் தனியார் சொத்தாக மாற்றும் முயற்சி, ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுடன் உறவு முறிப்பு, அந்நிய மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் நலனிற்கே முன்னுரிமை, நாட்டின் விடுதலை போராட்டத்தில் ‘நடுநிலையாளர்களாக’, ‘விலைபோனவர்களாக,’ இருந்தவர்களை தேசியவாதி, பெரும் வீரர்கள் என புகழாரம் சூட்டுவது, அந்நியர்களின் தொழில்களால்தான் நாட்டில் வேலைவாய்ப்பு உருவாக்கப்படுகிறது என்று நிறுவப்படுகிற பொய்யான பரப்புரை, மக்களின் மொழியை அவர்களிடத்தில் இருந்து பறித்து, ஏகாதிபத்தியத்தின் மொழியை திணிப்பதன் மூலம், அவர்களின் அடையாளத்தை சிதைக்க முயற்சிப்பது, விவாதமாக்கப்பட வேண்டிய விசயங்களில் இருந்து மக்களை திசை திருப்ப, அங்குள்ள பல்வேறு இனக்குழுக்களிடையே மோதல்களை உருவாக்குவது என எண்ணிலடங்கா ஒற்றுமைகள்…

1962ல் கென்யா விடுதலை பெற்றப் பிறகு, 1977ல் இந்நாவல் கூகியால் எழுதப்பட்டது. 1977ல் இருந்த கென்ய நிலைமையையும் நமது இன்றைய நிலைமையையும் பொருத்தி பார்த்தால், இரண்டிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பது விளங்கும்!

இத்தகைய ஒரு அரசியல் சூழலில் பிறந்து, வளர்கின்ற ஜசீந்தா வரீய்ங்கா என்ற ஒரு கற்பனை பெண்ணின் வாழ்க்கையை, நாவலின் அனைத்து பக்கங்களிலும் பேசப்படும் அரசியலை இணைக்கின்ற மெல்லிய இழையாக கூகி பயன்படுத்தியுள்ளார்.

காம்பூருவில் உள்ள ஒரு கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் 1953ல் பிறக்கும் ஜசீந்தாவிற்கு இரண்டு வயதாகும் போது அவள் பெற்றோர்கள் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதனால், கைது செய்யப்படுகிறார்கள். அதனால் அவள் நாகுருவில் உள்ள சித்தி வீட்டில் வளர்ந்தும், படித்தும் வருகிறாள். 1960ல் அவளது பெற்றோர்கள் விடுதலையான பிறகும் அவர்களது வறுமையாலும், படிப்பில் அவளுக்கு இருந்த ஆர்வத்தினாலும், சித்தி வீட்டிலேயே அவளை விட்டுவிடுகிறார்கள்.     பொறியாளர் ஆகும் கனவோடும், தாகத்தோடும் இருக்கும் அவளை, ஒரு துண்டு நிலத்திற்காகவும் சில எலும்புத் துண்டுகளுக்காகவும், ஒரு பணக்கார கிழவனிடம் அறிமுகப்படுத்துகிறான் அவளது சித்தப்பா! அந்த பகட்டு வாழ்க்கையில் மயங்கி தன்னையும் தன் கனவுகளையும் தொலைத்துவிடும் ஜசீந்தாவை, அவள் கருவுற்றிருக்கும் செய்தியறிந்தவுடன் அந்தக் கிழவன், எளிதில் இணங்க கூடியவளாக உள்ள அவளது கருவிற்கு தான் காரணம் அல்ல என்று சொல்லி கைவிடுகிறான்.

என்ன செய்வது என்று அறியாத அந்த இளவயதில் தற்கொலைக்கு முயலும் அவளை ஒருவர் காப்பாற்றி அவள் குடும்பத்திடம் சேர்க்கிறார். அவளது பெற்றோரின் அன்பு, அரவணைப்பு காரணமாக வாழ்க்கையில் மீண்டும் நம்பிக்கை கொள்பவள், குழந்தைப் பிறந்ததும் அதை தன் பெற்றோரிடம் விட்டுவிட்டு, டைப் ரைட்டிங், ஷார்ட் ஹான்டில் தேர்ச்சிப் பெற்று, வேலைத் தேடி நைய்ரோபி செல்கிறாள். பல தடைகளை தாண்டி பணியில் அமர்பவளை, அந்த நிறுவனத்தின் முதலாளி தவறாக அணுக முயற்சிக்கிறான். அதற்கு அவள் இணங்காததால் வேலையிலிருந்து நீக்கப்படுகிறாள்.

எங்கு சென்றாலும் வாழ்க்கை தன்னை சுற்றிசுற்றி புரட்டி போடுவதை தாங்கிக் கொள்ள இயலாமல் தனது ஊரான இல்மொராக்கிற்கே திரும்பி விடலாம் என முடிவு செய்து வாடகை காரில்(share auto போல) ஏறும் அவள், சமூகத்தின் பல்வேறு தளங்களில் இயங்கும் ஐந்து நபர்களை அங்கு சந்திக்கிறாள். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்த வங்காரி எனும் பெண், தொழிற்சங்க தலைவரான முதூரி, சுய தேடலை மேற்கொண்டுள்ள பல்கலைக்கழக மாணவன் கத்தூய்ரியா, மக்களை சுரண்டி அதன் மூலம் பணக்காரரான விரேரி, முதலாளிகளுக்கு அடியாள் வேலை செய்யும் கார் ஓட்டி முவாரா என அனைவரும் அவரவர் கொள்கைகள் பற்றி மற்றவருடன் பகிர்வதுடன், இல்மொராக்கில் மறுநாள் நடைபெற உள்ள ஒரு போட்டிக்கு செல்வதென முடிவெடுக்கிறார்கள்.

அது என்ன போட்டி? நவீன திருட்டிலும், கொள்ளையிலும் சிறந்த ஏழு நிபுணர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு வங்கி கடன்கள், நிதி நிறுவனங்களின் இயக்குனர் பதவி உள்ளிட்ட பல பரிசுகள் வழங்குவது! அந்தப் போட்டியை நடத்துவது உள்ளூர் திருடர், கொள்ளைக்காரர் அமைப்பின் தலைவர் என்பதோடு அதில் முக்கிய விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பது  ‘திருடர்கள் கொள்ளைக்காரர்களின் பன்னாட்டு அமைப்பை’ சார்ந்த தலைவர்கள் என்பதை படிக்கையில், நமக்கு நன்கு பரிச்சயமான பல பன்னாட்டு நிதி அமைப்புகள் நினைவுக்கு வருவதை தடுக்க இயலவில்லை!

போட்டியில் பங்குபெறும் ஒவ்வொருவரும் தங்கள் சுரண்டல்களின் பெருமைகளை சிறிதும் ஈரமில்லாமல் பீற்றிக்கொள்வதையும், மற்றவர்கள் அதனை கைத்தட்டி வரவேற்பதையும் கண்டு கொந்தளிக்கும் வங்காரி காவல்துறையை அங்கு அழைத்து வரவும், முராரி அப்பகுதி தொழிலாளர்களை திரட்டவும் செல்கின்றனர். ஆனால் காவல்துறை வங்காரியை கைது செய்கிறது. முராரியால் அணி திரட்டப்பட்ட தொழிலாளர்களால், போட்டி நடக்கும் இடத்திலிருந்து அங்கு குழுமியிருந்த அனைவரும் ஓட ஓட விரட்டப்படுகின்றனர். ஆனால் முராரியும் தொழிலாளர்களும் பின்னர் காவல்துறையால் கைது செய்யப்படுகின்றனர். தொழிலாளர்களின் இந்த எழுச்சி, போராட்டத்தின் மூலம் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையை ஜசீந்தாவிடத்தில்  விதைக்க, அவள் மீண்டும் நைய்ரோபி சென்று, தனது பொறியாளர் படிப்பை தொடர்ந்து கொண்டே, கார் மெக்கானிக்காகவும் பணி செய்கிறாள். அவளும் கத்தூய்ரியாவும் மணமுடிக்க முடிவு செய்து, அவன் தந்தையின் அனுமதி பெற அவன் ஊருக்கு செல்கின்றனர். இளம் வயதில் தன்னை ஏமாற்றிய கிழவன் தான் கத்தூய்ரியாவின் தந்தை என்பதை கண்டதும் அவனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, இனி வாழ்வில் எந்த இடர் வரினும் அதனை சந்திக்கும் துணிவுடன் அங்கிருந்து செல்கிறாள் ஜசீந்தா என்பதாக நாவல் நிறைவடைகிறது.

கதையின் முடிவை முன்கூட்டியே கணிக்க முடிவது இந்நாவலில் உள்ள குறையாக தோன்றினாலும், முதலாளித்துவத்தின் முன்னேற்றத்திற்காக உயிரற்ற இயந்திரமாக மாற்றப்பட்டு வரும் நாட்டின் நிலையை அழுத்தமாக சொல்வதே நாவலின் மையக்கரு என்பதால், அதில் கூகி வெற்றியே பெற்றுள்ளார்! அவரின் காத்திரமான மொழிநடையும், சமூகத்தின் அழுக்குகளை, அவலங்களை உள்ளது உள்ளவாறு வெளிப்படுத்தியுள்ள விதமும், முதலாளித்துவத்தின் நிஜ முகங்களை தோலுரித்து காட்டியுள்ளதும், அவரின் தார்மீக கோபத்தையும், இந்நிலை மாற வேண்டும் என்ற அவரின் வேட்கையையும் பறைசாற்றுகின்றன.

“இதயத்தின் குருட்டுத்தனத்துக்கும் சித்தத்தின் செவிட்டுத் தனத்துக்கும் நம்மை இட்டுச் செல்லும் சாத்தானை நாம் சிலுவையில் அறைந்தாக வேண்டும். பூமியில் வாழும் மக்களுக்கு நரகத்தை உருவாக்கி வரும் வேலையை தொடர்ந்து செய்வதற்காக அவனை அவனுடைய சீடர்கள் சிலுவையில் இருந்து கீழே இறக்கி விடாதபடி எச்சரிக்கையாக பார்த்துக்கொள்ள வேண்டும்”, என்ற கூகியின் வார்த்தைகள், நம்மை சுற்றி எது நடந்தாலும் கண்டும் காணாமல், இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டு போயிடனும்னு வாழும் பெரும்பான்மை மக்களின் எண்ணப்போக்கையும், அந்த silent consent சுரண்டுபவர்களுக்கு தரும் தைரியத்தையும்  பற்றிச் சொல்கிறது.

சிறந்த திருடன், கொள்ளைக்காரனை தேர்ந்தெடுக்கும் அந்தப் போட்டியை நடத்தும் தலைவர், தனது அறிமுக உரையில், மற்றவர் சொத்தை ஒற்றுமையாக கூடிக் கொறிக்க வசதியாக, நம் பற்களையும், நகங்களையும் தீட்டிக்கொள்ளும் உரைகல் இந்தப் போட்டி என்கிறார்! போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தான் எப்படியெல்லாம் மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்தோம், இன்னும் எந்தந்த வழிகளில் அவர்கள் உழைப்பை உறிஞ்சவும், அவர்களின் நியாயமான ஆசைகளை வியாபாரமாக்க வழிகளை வகுத்துள்ளோம் என கூச்சமேயில்லாமல் ஒப்புதல் வாக்குமூலம் தருவது, வாசகனை பதற செய்கிறது!

விதைக்காமலே அறுவடை செய்யவும், வேர்வை சிந்தாமலே பொருட்களை அபகரிக்கவும், உற்பத்தியில் பங்கேற்காமலே விநியோகம் செய்யவும் விரும்புவதே ‘ஏகாதிபத்தியம்’ என அதன் தன்மைகளைப் பற்றி பேசும் கூகி, உண்ண உணவையும், குடிக்க நீரையும், ஒதுங்க நிழலையும் அவரவர் வேர்வையே தருவதால், மூலதனமென்ற உயிரற்ற கடவுள் முன்பு மண்டியிடாமல், அவரவர் வியர்வைக்கு அவரவரே முதலாளி என்ற உண்மையை தொழிலாளி வர்க்கம் புரிந்துக் கொள்ளவேண்டிய தேவைக்குறித்தும் பேசுகிறார்.

ஆட்சி என்பது பெயரளவிற்கே ஆட்சியாளர்கள் கையில்; உண்மையில் பின்னிருந்து இயக்குவது அந்நிய முதலீடும், பெருமுதலாளிகளுமே என்பதை நாவல் காத்திரமாக பதிவு செய்கிறது. எதிர்ப்பு குரலே எழுப்பாமல், அடிமைகளாக, மௌன சாட்சிகளாக மக்கள் தங்கள் வாழ்வை தொடருகின்ற வரையில் இந்த அவல நிலையே நீடிக்கும் என்ற எச்சரிக்கையும் இதில் பொதிந்துள்ளது.

ஏகாதிபத்தியத்தின் தகிடுதத்தங்களையும், தந்திரங்களையும், அதன் பரம விசுவாசிகளான உள்நாட்டு பெரு முதலாளிகளின் மனித தன்மையற்ற சுரண்டல்களையும் வெகு காட்டமாக, வெளிப்படையாக விமர்சித்து வந்துள்ள   நாவல் என்ற வகையில் இது முற்போக்காளர்களால் கொண்டாடப்பட வேண்டிய, அனைத்து தரப்பினருக்கும் எடுத்துச் செல்ல வேண்டிய படைப்பாக உள்ளது!

சிலுவையில் தொங்கும் சாத்தான் – கூகி வா தியாங்கோ

தமிழில்: அமரந்த்தா – சிங்கராயர்

பதிப்பகம்: எதிர் வெளியீடு

முதல் பதிப்பு: டிசம்பர் 2016