சிந்து சீனு எழுதிய "நவம் நீ தம்" நாவல் புத்தகம் | Sindhu Seenu's Navam Nee Tham Tamil Novel Review | www.bookday.in

சிந்து சீனு எழுதிய “நவம் நீ தம்” நாவல் – நூல் அறிமுகம்

நவம் நீ தம் – இருளர் வாழ்வியல்
முத்தழகு கவியரசன்

எழுத்தாளர் சிந்து சீனு அவர்களின் படைப்புகளைக் கணிசமாக வாசித்தவன் என்கிற அடிப்படையில், எவ்வித மரபு இலக்கணத்திற்கும் உட்படாமல், நவீனத் தொனியில் மக்களின் அவலங்களையும், கடினமான வாழ்க்கையினையும், சொல்லி மாளமுடியாத துயர நிகழ்வுகளையும் தேடி அலைந்து பதிவு செய்யும் ஆவணப் போக்கை முன் வைக்கும் படிநிலை அமைப்பென்றே கூறுவது சரியானதாகும். ராசாத்தி, 1189, டாக்டர் அம்பேத்கர் நகர், அவளும் அவளும் போன்ற படைப்பு வரிசைகளில் நவம் நீ தம் இவற்றையும் கடந்து முக்கியப் படைப்பாகத் தனக்கான இடத்தைப் பிடித்திருக்கிறது.

இருளர் மக்களின் வாழ்க்கையை எந்தளவிற்குப் பிரதிபலிக்க முடியுமோ, அதன் வீரியத்தை, கடினமான சூழ்நிலையைக் கள ஆய்வு செய்து, நாவல் வகைக்குள், படர்க்கைக் கூற்றுத் தன்மையில் கொண்டு வந்திருக்கிறார். அவர் களப்பணியில் ஈடுபடும் போது, ஏற்பட்ட சிரமம் – அலைச்சல் – சேகரித்தத் தகவல்கள், மலைப் பகுதியில் பல கிலோமீட்டர் தனியாளாகப் பயணம் செய்து தகவல்களைத் திரட்டியதின் பயன், வாசிக்கும் போது உணர வைக்கிறது. இருளர் மக்களின் அறிமுகம், சடங்கு முறைகள், அவர்களின் மேல் திணிக்கப்பட்ட தீண்டாமையின் அதிகாரம், எதிர்ப்பும் சூழ்ச்சியும், ஆதிக்கச் செயல்பாடுகளுள் ஒன்றாக சிலதும், குயிலின் போராட்ட மெனப் பல்வேறு நிலைகளில் தங்களின் வாழ்க்கைக்காக, அடுத்தக்கட்ட நகர்விற்கு நகர முடியாமல் சிறைப் பட்டுக்கொண்டே சிதறுகிறார்கள்.

இருளர் மக்களின் அறிமுகம்

இம்மக்கள் தங்களுக்குள் சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வியலோடு பொருந்திப் போவதாகவும், அங்குள்ளவர்கள் உடன்படும் வகையில் அச்சட்டத் திட்டங்கள் நிலைபெறுகிறது. குறிப்பாக, இருளர் என்பதற்கான பெயர் காரணமும், இயற்கையோடு ஒன்றி வாழக்கூடியவர்கள். உடல் அடையாளத்தில் பல வேறுபாடுகளுடன் ஆண், பெண் இருவரும் சடை முடியோடும், முக்கிய நிகழ்வுக்கு மட்டுமே குளிக்கும் பழக்கம் உள்ளவர்கள். (மலைப்பகுதி என்பதால் எப்போதும் குளிராகவே இருக்கும். இன்று காலநிலை மாற்றம் அவர்களையும் மாற்ற முனைகிறது)

இவர்களின் குலதெய்வமாக கன்னியம்மா இருக்கிறாள். பெண்களையும் குல சாமியாக பாவிக்கிறார்கள். தங்களைச் சுற்றியுள்ள இக்காடே எல்லாம் தரும் தெய்வமாகவும் கருதுகின்றனர். வெளியுலகத் தொடர்பில்லாமல், தேவைக் கருதி மட்டுமே நகரத்திற்குப் பயணப்படுகிறார்கள். அதில் எப்போதும் பண்டமாற்று முறைதான். உடைகள் மட்டுமே முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கின்றனர். எழுதப் படாதச் சட்டமாக பெண்கள் சூரியன் மறைவதற்குள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.

ஏனென்றால் காடுகளில் பல ஆபத்துகள் இரவில் வருமென்பதால், பெண்களைக் கண்ணும் கருத்துமாக பாதுகாக்கின்றனர். ஆண்களை விட பெண்களுக்கே இச்சமூகத்தில் முன்னுரிமையும், மதிப்பும் அளிக்கப்படுகிறது.

ஆண்களுக்குக் கோவணமும், பெண்களுக்கு மாராப்பு மற்றும் அங்கங்களை மறைக்கும் படியான குறுகிய ஆடை, பாசிமணி, மற்றப் பொருட்களும் கொண்டு அணிந்திருக்கின்றனர். பெண்களுக்கான முழுமையான சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. உணவிற்குக் கிழங்கு வகைகளும், நெல் சோற்றைப் பார்த்ததேயில்லை. இறைச்சி, கேப்பை, கம்மங்கூல். வேட்டையாடுதலும், அதையேத் தொழிலாகவும் வைத்துக் கொள்கின்றனர். பொழுதுகளைக் கணிக்கக்கூடிய திறமைகள் அவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடுகிறது ஆச்சர்யம். வானமும், காடும் அவர்களுக்கு எல்லாப் படிப்பினைகளையும் கொடுக்கிறது. ஆடம்பரமான வாழ்க்கைக்கு இடம் கொடுக்காமல், அதனைப் புறம்தள்ளி எளிமையை முன் உதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர்.

இருளர் மக்களுக்கான தொகைக் கணக்கெடுப்பு 2011 ல் முப்பதாயிரம் என்றும், ஆனால் உண்மையானப் புள்ளிவிபரம் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். பழங்குடியினர் முப்பத்தியாறு, பட்டியல் சாதிகள் எழுபத்தியாறு என அதன் வரலாற்று உண்மைத்தன்மை சிலரால் மறைக்கப்பட்டிருக்கிறது என்பதைச் சான்றுகளுடன் நிறுவுகிறார். இம்மக்களின் தொன்மை கதையாக, ஆசிரியர் குறிப்பிடக்கூடிய செய்தி என்னவென்றால், தமிழ் மற்றும் மலையாள மொழியின் பதிவுகளில் இருண்ட மக்கள் என்றே தகவல் கிடைக்கிறது. மல்லன், மல்லி எனும் தெய்வங்களே இவர்களின் நம்பிக் கைக்கு உரிய அடையாளமாக இருக்கிறார்கள். உலகைச் சுற்றி வரும்போது, கிழவிமலை எனும் இடத்தில் ஒரு குகை அமைந்திருக்கிறது. அக்குகையின் உள்ளே சத்தம் கேட்டு பார்க்கும் போது, கொடுவன் – சப்பி என இவ்விருவரையும் பார்த்த அத்தெய்வங்கள் இனி நீங்கள் கணவன், மனைவி என அடையாளப் படுத்திவிட்டு மறைந்து விடுகின்றனர்.
வாழ்க்கையின் முதல் அடி எடுத்து வைத்தவர்கள், தொடர்ச்சியாக அவர்களின் மரபில் குப்பலிகா, ஆறுமூப்பு, செமக்காரர்கள், கரட்டி குலம், ஊஞ்சகுலம், குறுநகர்குலம், தேவனெகுலம், கொடுவேகுலம், சம்பகுலம் எனப் பன்னிரெண்டு குலங்களாகப் பிரிந்து வாழ்வதாக ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார்.

சடங்கு முறைகள்

கதையில் இடம்பெறக்கூடிய பதினான்கு வயதில் செவத்தம்மா வயதிற்கு வருகிறாள். தாய்மாமா கடம்பன் சீர் செய்ய வேண்டும். குடிசைக் கட்டி, அதில் அவளைத் தங்க வைத்தனர். ஏழாவது நாளில் குடிசையை எரித்துவிட்டு, ஆற்றில் அவளைக் குளிக்க வைத்து, வாங்கிக் கொடுத்த மாலைகளையும், கண்ணாடி வளையல்களையும், மற்றப் பொருட்களையும் அணிந்து கொள்கிறாள். ஞாயிற்றுக் கிழமையில் அவளைப் பொண்ணு கேட்கச் செல்கின்றனர். அத்தோடு தாய்மாமனுக்கும் அவளுக்கும் முறைப்படித் திருமணம் நடக்கிறது. இருவரும் ஆற்றில் குளித்துத் தங்களுக்கான பாட்டைப் பாடி வாழ்கின்றனர்.

திருமணமுறை என்று வருகிற போது, தாலிக் கட்டாமல் சேர்ந்து வாழக்கூடிய பழக்கம் உள்ளவர்கள். திருமண உறவு பந்தம் கட்டுக்குள் இல்லை. பெண்களுக்கு சுதந்திரம் கொடுக்கப்படுகிறது. அச்சுதந்திரத்தைக் கலங்கப்படுத்தாமல், ஒழுக்கமாகவும் – சிதை வில்லாமலும் வாழ்கிறார்கள். எல்லோருக்கும் தெரியும் படியான வெளிப்படையான வாழ்வால், விபச்சாரத்திற்கு அங்கு இடமில்லை.

அப்பந்தம் ஒருவருடம் கழிந்தப் பின் ஊர் கூடி, சில விசயங்களைக் கேட்பார்கள். அதாவது, இந்த உறவை இப்படியே தொடரலாமா? இல்லை வேறொருவரோடு தொடர எண்ணம் இருக்கிறதா? என்றும் அக்கூட்டத்தின் பொருண்மையாக இருக்கும். கதைக்குள் ஓர் இடத்தில், முத்தாயி எனும் வைத்தியர் செவத்தம்மாளிடம் கேட்கிறாள். வயிற்றில் பிள்ளை இருக்கிறது. ஒரு வருடம் ஆகப் போகிறது. யாருடன் வாழப் போகிறாய் என்றும், நல்ல முடிவை எடு என்றும் கூறுகிறாள். அதேப்போல் அவள் தன் கணவன் கடம்பனுடே வாழ விருப்பம் கொள்கிறாள்.

சில மாதங்கள் கழித்துக் குழந்தைப் பிறக்கிறது. கடம்பனின் அக்கா மூக்காயி அவளையும், பிறந்தக் குழந்தையையும் அருகிலிருந்த குடிசைக்கு சில நாட்கள் தங்க வைத்தனர். இது அவர்கள் சடங்கில் ஒரு விதியாக இருக்கிறது. பின் வீட்டிற்கு அழைத்து வந்து பெயரிட்டனர். பெயரிடும் முறையும் முக்கியமானது. அதை இயற்கைச் சார்ந்தே வைத்துக் கொள்கிறார்கள்.

இறப்புச் செய்தியை வரையறை செய்வதில், வயதானவர் இறந்தால், காய்ந்த குச்சிகளை எடுத்து வருவர். இளம் வயதினர் இறந்தால் பச்சைக் (இளமையான) குச்சியினை எடுத்து வருவர். இது அவர்களின் சடங்கு மரபாகப் பார்க்கப்படுகிறது. எரிப்பதும், புதைப்பதும் வழக்கத்தில் உள்ளன. சமாதியைக் “கொப்பதே” என்று அழைக்கிறார்கள்.

கன்னியம்மன் கோவில் விழா. மாசி மாதம் நடைபெறுகிறது. மஞ்சள், குங்குமம், சாமந்திப்பூ வைத்து வழிபடுகின்றனர். கிராமத்தில் கிடைக்கும் உணவு வகைகளை வைத்து வழிபாடு நடைபெறும். கன்னியம்மா கல்லருகில் ஏழு கற்கள் நடப்பட்டிருக்கிறது. அக்கா – தங்கச்சிகள் என்று குறிக்கப்படுகிறது. கன்னியம்மா கன்னியாக இறந்த பெண் தெய்வம். அவளுக்கு ஏழு தங்கைகள் என்று தகவல் கிடைக்கிறது. மாமல்லபுரத்திலும் இருளர் மக்களுக்கென்று கன்னியம்மா கோவில் இருக்கிறது. அத்தெய்வத்திற்கென்று தனிப்பட்டப் பாடலும் அவர்கள் பாடிக் கொள்கிறார்கள். வெகு விமர்சையாக அந்நிழ்வு அரங்கேறும்.

தீண்டாமையின் அதிகாரம்

இந்நாவலுக்குள் தீண்டாமை இருளர் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. உயர் சாதிக் குடிகளின் பார்வைகள் மிகவும் கொடூரமானதாகவும், அடிமைத் தனத்திலேயே அம்மக்களை வைத்திருக்கின்றார்கள். பல விதமான விதிமுறைகளுக்கு உட்படுத்தி, அவர்களின் வாழ்வு கீழ்நிலைக்கும் கீழாகவே இருந்து வருகிறது.
அவ்வூரில் இருக்கக்கூடிய ஏரிக்கும், அதன் வழியாக செல்வதற்குத் தடை விதிக்கப் பட்டிருக்கிறது. ஆனால், வேறு வழியில்லாமல் அங்கு சென்று கொண்டிருந்த இருளர் மக்களான காக்கையனுக்கும், கருப்பனுக்கும் பயங்கரமான அடி, உதைகள் கொடுக்கப் படுகிறது. எதிரில் மிதிவண்டியில் வந்த உயர்சாதி அதிகாரிகளுக்கு மரியாதைக் கொடுத்தும், அவர்களின் மேல் அதிகாரம் பேசி இருக்கிறது.

எந்தெந்த இடங்களுக்கு வரக்கூடாது, வரவேண்டும் எனும் சில விதிமுறைக் கோட்பாடுகள், இருளர் மக்களுக்கு நிம்மதியை இழக்கச் செய்கிறது. உதாரணமாக, “எம்புட்டு தைரியம் உங்களுக்கு?. நீங்க அந்த சனத்தைச் சேர்ந்தவங்க தானே. எங்களைப் பாத்து கும்புடறோம் சாமின்னு சொல்றீங்க. என்ன தைரியம் உங்களுக்கு?. அதுக்கு என்ன தகுதி இருக்கு உங்களுக்கு. வாயை மூடிட்டு போங்கடா” என்றபடி இருவரையும் ஏரியில் தள்ளிவிட்டு எதுவும் தெரியாததுபோல சைக்கிளில் கிளம்பினார்கள். (ப.25)

இதைப்போன்று வயிற்றுப் பிள்ளைக்காரியான ரமணியும், அவளின் கணவன் சந்திரனும் ஒரு இறப்பு நிகழ்வுக்குச் சென்று வரும்போது, மரியாதைக் கொடுக்க வில்லை என்று, அதிகாரி ஒருவர் அவ்விருவரையும் பயங்கர தாக்குதலுக்கு உள்ளாக்கப் பட்டதால், கரு கலைந்து அவதிப்படுகிறாள். பின்னர் காட்டிற்குள் இருக்கும் வைத்தியர் மயிலுவிடம் கொண்டு செல்லப்பட்டாள். அவளை மட்டுமே காப்பாற்ற முடிந்தது.

கொத்தடிமையாகத் தொழில் செய்ய வேண்டும். வேலை செய்த காசைக் கூட கையில் கொடுக்க மாட்டார்கள். தரையில் எறிந்து விடுவார்கள். இருளர் மக்களைப் படிக்க வைக்க வேண்டுமென்று சொன்னதற்கு, அன்றிரவு பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் அவர்களின் பகுதிக்கு வந்து, செவல மற்றும் காடனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். என்ன காரணம் என்று தெரியாமல் குழம்பி, ஊர் மக்களும், மனைவிகளும் கதறுகின்றனர்.

டவுணுக்குச் செல்ல பதினைந்து கிலோ மீட்டர் நடக்க வேண்டும். இரவில் இப்போதே பயணத்தை மேற்கொண்டால்தான், காலையிலாவது போய்ச்சேர முடியுமென்று, அவ்விருவரின் மனைவிகளும், ஊர் பெரியவர்கள் சிலரும், காவல் நிலையத்திற்கு வந்தடைகின்றனர். ஏன், எதற்கு, என்ன காரணம் என்று விபரம் கேட்க போனவர்களுக்கு, அதிகாரியின் அதிகார துணிச்சல், உடல் வலியோடு விரட்டி அடிக்கப்பட்டனர். இவ்வற்றை யெல்லாம் அருகிலிருக்கும் மாரியம்மன் கோவில் மரத்தடியில் பேசிக்கொண்டிருக்கையில், தாவா எனும் அயல்நாட்டுக்காரர், அவ்விருளர் மக்களுக்கு ஆதரவாகவும், உதவியாகவும் இருந்து காப்பாற்றுகிறார்.

தேன்வண்டு கிழவியுடன் ஒரு குட்டிப்பையன் கேள்வி கேட்பதாக நாவலுக்குள் ஒரு இடம் வருகிறது. கொடை விழாவில் நாம் ஏன் செல்லக் கூடாது. அவர்கள் நம்ம கன்னியம்மா கோவிலுக்கு வர்றாங்க. நம்ம மட்டும் போவக் கூடாதா?. என்ன அர்த்தம். படிக்காத சிறுவனுக்கும் இயல்பாக இப்படிக் கேள்வி வருகிறதே என்று அக்கிழவி அச்சப்படுகிறாள். விசயம் அவர்களுக்குத் தெரிந்தால் கொன்றே விடுவார்கள் என்றும் பதறுகிறாள். அந்தளவிற்கு அதிகாரக் கொடுமை அரங்கேறி இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் உயர் சாதி மக்களின் எண்ணங்கள் இப்படியாகவும் இருக்கிறது. இருளர் ஆண்கள் அவர்களுக்குச் செருப்பு துடைக்க வேண்டும். பெண்கள் அவர்கள் நடக்கும் போது, தங்களின் புடவைகளைத் தரையில் விரிக்க வேண்டும். இச்செயல்பாடு அதிகாரத் தீண்டாமையின் வெளிப்பாடாகவும், கால மாற்றத்தால் ஊருக்குள் தீட்டான மக்களாக அடையாளப் படுத்தப் பட்டார்கள். வாழ்வாதாரம் மோசமாக அவர்களுக்கு இருக்கிறது. இவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் எல்லாம் செய்து கொள்ள வேண்டும். தண்ணீர், உணவு உட்பட. நிழக்கிழார்களுக்கு நாள் முழுவதும் உழைத்திட வேண்டும். படிப்பறிவு அற்றவர்கள். சில நேரங்களில் காட்டிற்கே சென்றுவிடாலம் என்றும் மனதிற்குள் எண்ணங்கள் தோன்றி மறையும். பல சம்பவங்கள் இப்படியாக ஆங்காங்கே பொதிந்து கிடங்கிறது.

எதிர்ப்பும் சூழ்ச்சியும்

இருளர் மக்களுக்குக் கல்வியைக் கொடுக்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை நல்ல நிலைக்கு அமைத்திட வேண்டும் என்று கல்வியாளர்கள் கூட்டம் போட்டு சில முடிவுகளை எடுக்கிறார்கள். சாதி மதம் பார்க்காமல் அரசின் உத்தரவின் படி கல்வியை நடைமுறைப் படுத்தப்பட வேண்டுமென தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்குப் பல தடைகள் வரும். அதையெல்லாம் கடந்து நாம் சொல்லிக் கொடுக்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரி பாய் பூலே அவர்களின் பட்ட துயரத்தையும் ஆசிரியர் கதைக்குள் உதாரணமாகக் கட்டமைக்கிறார்.

வாடகை சைக்கிளில் ஆசிரியர்கள் பயணத்தை மேற்கொள்கிறார்கள். இதைக் கண்ட அங்குள்ள மக்கள், பெரியவர்கள் எதிர்மறையாகப் பேசுகின்றனர். “இந்த வாத்திங்களுக்கு சம்மா இருக்க முடியல. ஏதோ வந்தமா நம்ம பசங்க நாலு பேருக்கு பாடம் சொன்னோமா. சம்பளம் வாங்குனோமா, ஊருல பொண்டாட்டி புள்ளைங்கள சந்தோசமா வச்சிக் காப்பாத்துனோமானு இருக்குறத விட்டுட்டு தேவை இல்லாம”(ப.47) அம்மக்களின் பார்வையில் இருளர் மக்கள் அடிமை என்று கூறுகின்றனர். “அவங்க எல்லாம் அடிமை வேலை செய்யப் பொறந்தவங்க” என்றும், தங்களுக்கான நக்கல் தன்மையையும் வெளிப்படுத்தினர்.

ஏமாற்றத்தோடு திரும்புகையில், இருளர் மக்கள் அவர்களோடு உரையாடி, கேள்விக் கேட்பதற்குக்கூட அனுமதிக்கப்படவில்லை என வருத்தப் படுகிறார்கள். தங்களின் வேதனைகளை அம்மக்கள் அடுக்கடுக்காக முன் வைத்தனர். மான் கறி வைத்திருக் கிறானென்று, பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த இரண்டு பேரைக் கூட்டிச் சென்றார்கள். இன்னொரு பக்கம் திருட்டு வழக்கென்று, தங்களின் அடுத்தத் தலைமுறை எப்படியாவது கல்வியில் முன்னேற வேண்டுமென்று சம்மதம் தெரிவிக்கிறார்கள். சோறு, உணவுக் கொடுப்பதாக ஆசிரியர்கள் கூறி, கன்னியம்மா மேல் சத்தியமும் செய்கிறார்கள்.

அரசு உத்தரவின் பெயரில் கல்வி கொடுக்கப்பட்டது. இதைப் பொறுக்க முடியாமல், உயர்சாதி மக்களும், பெரியவர்களும் காவல் அதிகாரிக்கு தகவல் கொடுக்கின்றனர். ஆனால், அவர்கள் நினைத்தது நடைபெறவில்லை. அரசு உத்தரவு என்று சொன்னதும், தங்களின் அதிகாரத்தால் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் செய்யப்படுகிறது.

இருளர் மக்களுக்கென்று சாதிச்சான்றிதழ் வழங்கும் நடைமுறையைக் கோட்டாச்சியர் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனால் அவர்கள் சாதிச்சான்றிதழ் பெற்றனர். பெற்றாலும், அதற்கான சலுகைகளை, அங்குள்ள வசதியானவர்கள், அதிகார வர்க்கத்தினர்கள் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திச் சொத்துக்களைச் சேர்த்தனர். விசாரிக்க வரும் அதிகாரிகளுக்கு, மதுபானம், கோழிக்கறி என்று கொடுத்து தங்களின் கட்டுப் பாட்டிற்குள் வைத்துக் கொண்டனர்.
வீரன் எனும் சிறுவன் படிப்பில் விருப்பம் கொள்கிறான். மேல் படிப்புக்காக டவுணுக்குச் செல்லக் கூடிய நிலையில், ஊர் மக்கள் எதிர்க்கின்றனர். இப்பமே கூலி கேக்குறாங்க. படிச்சு மேல வந்துட்டான்னா பெரிய பிரச்சனை இருக்கு என்று தன் நிலைப்பாட்டை இருளர் மக்களின் மீது திணிக்கின்றனர்.

இருளர் இன குழந்தைகள் படித்து வருவதை அங்கு வசிக்கும் மற்ற சாதி மக்கள் விரும்பவில்லை. திட்டம் போட்டனர். தீண்டாமைத் தலைவிரித்தாடியது. அரசு உதவிப்பெற வீரனை சாதிச்சான்றிதழ் பெற அலைய வைத்தார்கள் சில அதிகாரிகள். அவன் நிலை அறிந்து ஒரு அலுவலக அதிகாரி சான்றிதழ் கொடுக்க உத்தரவிடுகிறார். இதற்காக உயர்ந்த சாதி மக்கள் அதிகாரியிடம் சண்டைப் போடுகிறார்கள். சாதிச் சான்றிதழ் மாற்றிக் கொடுங்கள் என்று. பின் ஆத்திரம் பொறுக்காமல் அச்சிறுவனை அம்மக்கள் அடித்துக் காயப்படுத்தினர். இதனால், அரசு அலுவலகம் ரணகளமாக மாறியது.

தினகரன், கருப்பன், விஸ்வநாதன் இம்மூவரும் வீரனைக் காப்பாற்றி அரசு மருத்துவ மனையில் சேர்க்கின்றனர். மனித உரிமைகள் ஆணையத்திடம் புகார் கொடுக்கின்றனர். காவல் ஆய்வாளர் வந்து விசாரனை நடத்தவும், அம்மக்கள் ஒன்று கூடி ஏமாற்றுகிறார்கள்.

அடுத்ததாகக் குப்பனின் போராட்ட நிலையைப் பேசுகிறது. உயர்சாதியான பெரியவர் வீட்டில் கூட்டம் நடைபெறுகிறது. அரசு இட ஒதுக்கீட்டில் இருளர் இனத்தைச் சேர்ந்த குப்பன் ஊர் தலைவர் ஆகிறார். மக்கள் இதை விரும்பவில்லை. நம்மக்கிட்ட அடிமையா இருந்தவங்கிட்டப்போயி நாம நிற்கவேண்டும் என்று.
குப்பனைப் பெயருக்கு ஊர் தலைவராக வைத்துவிட்டு, உயர்சாதி மக்களின் நீட்டும் காகிதத்திற்குக் கை நாட்டு வைத்துவிட்டு, வீட்டு வேலைசெய்து ஏழ்மையாக வாழ்கிறான். இதற்கிடையில் இருளர் மக்கள் அவரைச் சந்தித்து, நம் மக்களுக்கு மின்சார வசதி வேண்டும் எனும் கோரிக்கையை வைக்கின்றனர். இச்செய்தி அங்குள்ள வர்களுக்குக் கசப்புத் தன்மையை ஏற்படுத்துவிடுகிறது.

குப்பனும், அவரின் மக்களும் இணைந்து பி.டி.ஓ வைச் சந்தித்துக் கோரிக்கை வைக்கின்றனர். இதைக் தெரிந்துகொண்ட அம்மக்களில் சிலர் பெரியவரின் வீட்டு முன் கூட்டம் போடுகின்றனர். அவர்களுக்குச் சாராயம் கொடுத்து வீட்டுக்குப் போகச் சொல்கிறார், நான் பார்த்துக் கொள்கிறேன் என்று. அன்றிரவு காவலர் உடையுடன், இருளர் மக்களின் நான்கு பேரை அடித்து, காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்கின்றனர். அப்பெரியவரின் வன்மத்தால் இது அரங்கேறியது. நடந்த நிகழ்வைக் கூறி அவரிடம் முறையிட்டனர். இதை நீங்கள் குப்பனிடம் போய் சொல்லுங்கள் என்று அவர்களை மதிக்காமல் விரட்டி விட்டார்.

பின் குப்பனும், ஊர் மக்கள் சிலரும் காவல் நிலையத்திற்குப் புறப்பட்டனர். குப்பனும், ஒரு வயது முதிர்ந்தவரும் அனுமதிக்கப்பட்டனர். அதிகாரி வந்ததும், திருட்டுப் பசங்க. அதான் பிடிச்சுட்டு வந்தோம் என்று கூறி அதிகாரத் திமிரில் வீண்பழிச் சுமத்தப் பட்டது. அங்கு எதுவும் பயனளிக்கவில்லை. மீண்டும் பெரியவரிடம் வந்து பேசும்போது, காவல் நிலைய அதிகாரி அப்பெரியவரிடம் இலஞ்சம் வாங்கிவிட்டு சென்றது, அவர்களின் நிலையை உணர வைத்திருக்கிறது.

மின்சாரம் கேட்டதால் பொய் வழக்குப்போட்டு இருளர் மக்களை அச்சமூட்டி, தன் கட்டுப்பாட்டிற்குள் உயர்சாதி மக்களின் தலைவரான அப்பெரியவர் கொண்டு வருகிறார். அவரின் ஆணவம் அம்மக்கள் மீது காட்டப்படுகிறது. மறுநாள் அரசு நிதியிலிருந்து 20 இலட்சம் ரூபாயைக் குப்பன் கையாடல் பண்ணி விட்டான் என்று காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நடவடிக்கை அதிகார வர்க்கத்திற்கே துணைப்போகி இருக்கிறது.

ஆதிக்கச் செயல்பாடுகளுள் ஒன்றாக

கதைக்குள் காட்சிப் படுத்தப்படும் உயர்சாதிப் பெரியவரின் அதிகாரப் பிடியில், அரசு அதிகாரிகளே இலஞ்சம் வாங்கிக்கொண்டு கைக்கட்டுகிறார்கள். இப்படியென்றால் அங்கே ஒதுக்கப்படும் இருளர்களின் நிலை மோசமானது. சில சம்பவத்தினை உற்றுநோக்கும் போது, காவலர்கள் பெரியவரைக் காண வருகின்றனர். பெரியவரின் மகன் வண்டியை சரியாக சுத்தம் செய்யவில்லை என்று, இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரைத் திட்டுகிறான். மனைவி மீதும் தன் ஆண் ஆதிக்கத்தை, அதிகாரத்தைச் செலுத்துகிறான். இங்கே, இருளர் மற்றும் உயர்சாதி மக்களின் மனநிலை பெண்கள் மீது எப்படி அணுகியிருக்கிறது என்பதை வேறுபடுத்திக் காட்டுகிறார்.

அதன்பின்பு அப்பெரியவர் வந்ததும், காவலர்கள் சொல்ல வந்ததைக் கூறு கிறார்கள். மூன்று பெண்களை மேல் சாதியில் உள்ள சில வாலிபர்கள் குடித்துவிட்டு, இருளர் பெண்களைக் கற்பழித்து விட்ட செய்தியை மறைக்கச் சொல்கிறார். அப்போது சில ஆசிரியர்கள் அவர்களுக்கு ஆதரவாகக் கம்ளைண்ட் கொடுத்ததால், காவல்துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. கற்பழித்தவர்களைக் காட்டுக்குள் தலைமறைவாக இருக்க, அங்கு வேலைச் செய்யும் இருளர் ஒருவனின் துணையோடு அனுப்பி வைக்கிறார்.

காட்டிற்குள் தலைமறைவாக அனுப்பி வைத்தவர்கள் வாரங்கள் கடந்தும் காணவில்லை. அவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை. பின் இரண்டு வாரம் கழித்து, புலி அடித்து தலைமறைவானவர்கள் இறக்கின்றனர். இச்செய்தி பெரியவருக்கு அதிர்ச்சி கலந்த வருத்தத்தை ஏற்படுத்துகிறது. மனிதனை மனிதனாக மதிக்காமல், அடக்கு முறைக்கு ஆளாக்கினாலும் தெய்வம் தன் வேலையைக் காட்டும் என்பது காட்டிற்குள் இறந்தவர்களை வைத்து அனுமானிக்க முடிகிறது.

குயிலின் போராட்ட வாழ்க்கை

இப்பகுதியில் குயிலின் வாழ்வுப் போராட்டத்தைப் பதிவு செய்கிறது. புரியாத வயதில் குழந்தைத் தொழிலாளியாக அனுப்பப்படுகிறாள். குடும்ப வறுமை ஒருபுறம், நான்கு வயதாகும் போதேக் குயிலை வீட்டு வேலைக்கு அனுப்பும் படியான சூழல் உருவாகிறது. நகரத்தில் வசதியான ஒரு குடும்பம் தங்கள் குழந்தையைப் பார்த்துக் கொள்வதற்கும், வீட்டு வேலைச் செய்வதற்கும் கேட்கிறார்கள். ஊரில் உள்ளவர்கள் அவளாவது நல்லா இருக்கட்டும். நம்முடைய கஷ்டத்தை அவளும் அனுபவிக்க வேண்டாம் என்றும், உறவுகளின் வற்புறுத்தலும், அக்குடும்பத்தின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு மனம் வெறுத்துத் தான் குயில் இடம் மாறுவது மட்டுமல்லாமல், வீட்டில் ஒன்பதாவதாகப் பிறந்தவள்..

ஆனால் தனக்கு என்ன நடந்துகொண்டிருக்கிறதென்றே புரிந்துகொள்ளக் கூடிய மனம் அவளுக்கில்லை. குயிலுக்கு பதினான்கு வயதில் பருவம் அடைகிறாள். இவ்விசயம் தெரிந்ததும் அவளின் பிறந்த வீட்டிலிருந்து அழைக்க வருகிறார்கள். அவர்கள் யாரென்று தெரியாமல் கேள்விக் கேட்கிறாள்.

தன் பெற்றோரிடம் செல்ல விரும்பாதவளாக அழுகிறாள். வளர்த்தவர்கள் ஆறுதல் படுத்துகிறார்கள். நிலைமையைப் புரிய வைத்து வழியனுப்பி வைக்கின்றனர். வீட்டிற்கு வந்த இருளர் மக்களுக்கு நல்ல உணவு பரிமாறப்பட்டது. பணம் வாங்க மறுத்தாலும் புடவைகள், கண்ணாடி வளையல்கள், முகப்பூச்சுகள் இன்னும் பல பொருட்களைத் தகரப்பெட்டியில் வைத்துக் கொடுத்தனுப்பினர்.

குயிலை வளர்த்தவர்கள் டில்லிக்குப் பணி நிமித்தமாகப் புறப்பட்டனர். தமிழ் நாட்டுக்கு வரும்போதெல்லாம் வந்து பார்ப்போம் என்று நம்பிக்கை அவளுக்குக் கொடுத்தனர். தன் பெற்றோர் பேசிய மொழி குயிலுக்குச் சரியாக பிடிபடவில்லை. அவளின் நடத்தை, பேச்சு, சிரிப்பு அங்குள்ள மக்களுக்கு வித்தியாசமாக ஈர்த்தது. கன்னியம்மா கோவிலைப் பற்றிய அறிமுகம் செய்து வைத்தார்கள். தினமும் குளித்து சுத்தமான உடைகளை உடுத்தியது, அங்குள்ள பலரையும் நகைப்பிற்கு ஆழ்த்தியது.

பின்னர் குயிலுக்குத் தன் தாய்மாமாவோடு திருமணம் முடித்து, ஒரு ஆண் குழந்தையும் பிறக்கிறது. அவளின் தந்தை இறந்தப் பிறகு கணவனுடன் வேலைக்குச் செல்கிறாள். அங்கே முதலாளி வர்க்கம் குயிலின் உடல் வனப்பைப் பார்த்து கணவனுக்கு மது கொடுத்து அடிமையாக்கினார்கள். இரண்டாவதாக ஆண் குழந்தைப் பிறக்கிறது. வீட்டில் வயதான அம்மாவைப் பார்க்கும் வேலைக்குச் செல்கிறாள்.

தாய்மாமா குடித்துவிட்டுக் கொடுமை செய்கிறார். எல்லாவற்றையும் தாங்கிக் கொள்கிறாள். குழந்தைகளை நன்கு கவனித்தாள். கஷ்டப்பட்டாலும் கண்ணியமாக வாழ்கிறாள். இதற்கிடையில் இவ்விருவருக்கும் பெரும் சண்டைகள் வருகிறது. சந்தேகம் முற்றுகிறது. ஊர் மக்கள் தடுத்து உரிய ஆலோசனைகள் கொடுக்கின்றனர். இறுதியில் வீட்டைவிட்டு வெளியேறி, தன் அம்மாவின் வீட்டுக்கு குழந்தைகளுடன் வந்து சேர்கிறாள்.

வயிற்றில் பிள்ளையுடனும், கட்டிடத் தொழில் வேலையைச் செய்கிறாள். மூன்றாவதும் ஆண் குழந்தைப் பிறக்கிறது. கொத்தனார் வேலை. அங்கும் உடல் வனப்பு சார்ந்து ஏளனப் பேச்சுகள் குயிலின் மேல் விழுகிறது. தன் அம்மாவும் வேறொரு திருமணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். அதற்கு மறுப்புத் தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் தாயும் இறக்க, அரசு விடுதியில் மகன்களை படிக்க வைத்தாள். தேர்தல் நேரத்தில் எங்களுக்குத் தான் ஓட்டுப் போட வேண்டும் என்று அங்கு வசிக்கும் மக்கள் மிரட்டுகிறார்கள். எதற்கும் அவள் பயப்படவில்லை. கடைசியாக, உயர் சாதி மக்கள் அவளின் வீட்டுமுன்பு மனித மலத்தை வீசிவிட்டுச் செல்கிறார்கள். சமூக ஆர்வலர்கள் மூலமாக, காவல்துறையினரிடம் புகார் கொடுத்து கைது நடவடிக்கை எடுத்தப் பின்னர், ஊர் மக்கள் தவறு செய்ய மாட்டோம் என்று கையெழுத்துப் போட்டுக் கொடுத்தனர்.

ஆனாலும், விடாமல் குயிலியின் அண்ணன்களை மிரட்டுகிறார்கள். யாரையும் பிழைக்க விடமாட்டோமென்று. உறவுகளோடு போராடுகிறாள் குயிலி. உடன் பிறந்தவர்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். ஒருதலைப் பட்சமாகவும், துரோகம் செய்கிறார்கள். அவளின் உழைப்பால் கட்டப்பட்ட வீடும், பங்கீடு இல்லாமல் உதறப்படுகிறாள். இதற்குப் பின்னும் அம்மக்கள் இருக்கிறார்கள் என்றும் புரிந்து வேதனை அடைகிறாள்.
வீடுகட்ட அரசு மானியம் ஒதுக்கியது. குயிலுக்கு அம்மானியம் வரவில்லை. ஒரு பேராசிரியரைச் சந்தித்து முறையிடும் போது, அவளுக்கு எதிராக மானியம் கொடுத்த அதிகாரிகள் ஒன்று கூடினர். இது அரசு இடம். தவறாக பட்டா வழங்கப்பட்டது என்று வீட்டினை இடிக்க முன் வந்தனர். அப்போது வழக்கறிஞர்களின் உதவியோடு, தவறாக நடவடிக்கை எடுத்த அவர்களுக்கு அபராதத் தொகை விதிக்கப்பட்டது.

புதிதாக வந்த அதிகாரிகள், குயிலுக்குரிய மானியத் தொகையும், அதன் பின்பு தனி ஆளாக வீட்டைக் கட்டினாள். குயிலின் மூத்த மகன் சட்டம் படித்து ஒரு வழக்கறிஞரிடம் ஜீனியராகச் சேர்ந்தான். பலருக்கும் குறைவான பணத்தில் (மேஸ்திரி வேலை) வீடு கட்டித் தன்னிலையை உயர்த்தினாள். இரண்டாவது மகனும் இஞ்சினியரிங் படித்து, தனியார் கம்பனியில் வேலை. மூத்தவனுக்குத் திருமணம் முடிந்தது. உறவுகள் அதிகமாயின. தன் இறுதி மகனையும் மருத்துவராகிப் பார்க்க வேண்டுமென எண்ணினான். அதற்கான வேலைகளில் இறங்கினாள். கடினமாக உழைத்தாள். அவளின் உறவுகள் பின்னாளில் புரிந்துகொண்டு குலசாமியாக, எங்களைக் காப்பாற்ற வந்த தெய்வமாகவும் நினைத்து ஒன்று கூடினர்.

இந்நாவலில் புனைவு என்பது குயிலின் வாழ்வு முன்னேற்றம் அடையும் செய்தியும், சில இடங்களில் விரவியும் கிடக்கிறது. அவளின் இயற்பெயர் நவம் நீ தம். கதையின் முடிவிலாவது நிம்மதியைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற ஓர் எண்ணத்தில், அதைக் கொண்டு வந்ததாக உரையாடும் போது குறிப்பிட்டார். எதிர்மாறாக, நிஜ வாழ்க்கையில் குயிலுக்கு அது எட்டாமலேயே நீள்கிறது.

முடிவுரை

இவ்வாறாக நாவலுக்குள் பல கதாபாத்திரங்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை நகர்த்துவதற்கே போராடிக் கொண்டிருக்கிறார்கள். கல்வியாளர்களின் பங்களிப்பையும் ஒதுக்கி வைக்க முடியாது. முப்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியினர் இருக்கிறார்கள். அவர்களின் சிலர் மட்டுமே நகரத்திற்கு வந்து செல்வதுண்டு. அதில் ஒரு சிலர் மற்ற மொழிகளை ஓரளவு கற்றுக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்கின்றனர். மருத்துவக்கலை அறிவைக் கொண்டவர்கள் ஆதலால் சிலர் முக்கியமாக வசதியானவர்கள் அவர்களை மிரட்டித் தங்களோடும், ஊருக்கு ஒதுக்குப்புறமாக வைத்துக் கொள்கின்றனர்.

வரலாற்றைக் குறிப்படும் போது, பல்லவர்களின் ஆட்சிக் காலத்தில், காஞ்சியில் அரண்மனை ஊழியர்களுக்கும், சிற்ப வேலைப்பாடுகளுக்கும் சேவை செய்ய உதவினர். அந்நியர்கள் படையெடுப்பு, பல அரசுகள் கவிழ்தல், இதனால் வியாபாரம் செய்ய வந்தவர்கள் இருளர் மக்களை அடிமைப் படுத்தினர். தங்களின் வேட்டைக்கும் பயன் படுத்தினர். குதிரைக்குப் பின்னால் ஓடவும், வேட்டையாடிய விலங்குகளை இழுத்து வரவும் தங்களுக்குச் சாதகமாக ஏவலாளியாக்கினர். கால மாற்றங்கள் நடைபெற்றாலும், இருளர் மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவே இல்லை. கல்வி, சரியான உணவு, ஏற்றத்தாழ்வு அதிகமாக இன்று வரையிலும் இருண்மையின் சுழலிலிருந்து விலக மறுக்கிறது.

கதாபாத்திரங்கள்

1.செவத்தம்மா – 14 வயது. 2. செவத்தம்மாளின் தாய்மாமா கடம்பன் 3. தந்தை கட்டையன் 4. முத்தாயி 5. மணிகண்டன் 6. குள்ளன் 7. முனியனின் தாத்தா 8. கடம்பனின் அக்கா மூக்காயி 9. மயிலின் தந்தை சடையன் 10. மைனா 11. மைனாவின் கணவன் மயிலப்பன் 12. குயில் 13. காக்கையன் 14. கருப்பன் 15. கருப்பனின் மனைவி மல்லிகா 16. ரமணி 17. சந்திரன் 18. செவ்வந்தி 19. செவல 20. காடன் 21. அஸ்லாம் பாய் 22. தாவா 23. தினகரன் 24. பார்த்திபன் 25. முகில் 26. கோவில் பூசாரி 27. பணக்கார பெரியவர் 28. அப்பெரியவரின் மகன் 29. தேன்வண்டு 30. குட்டிப் பையன் 31. புரபசர் இளங்கோ 32. யாழினி 33. கலைச்செல்வி 34. தலைமையாசிரியர் 35. ராமஜெயம் 36. வரதன் 37. ரமேஷ் 38.சங்கரி 39. மோகனா 40. சுடர்கொடி 41.கலா 42. தாட்சாயிணி 43. லலிதா 44.பானுரேகா 45. சாருமதி 46. குமார் 47. செல்லத்துரை 48. கருப்பன் 49. நந்தக்குமார் 50.கஜேந்திரன் 51. சின்ராஜ் 52. சமூக ஆர்வலர்கள் 53. கன்னியப்பன் 54. வீரன் 55. குப்பன் 56. விஸ்வநாதன் 57. காவல் ஆய்வாளர் 58. குயிலின் தாய்மாமன் 59. பேராசரியர் 60. ஊர் காரர்கள் 61. சில காவலர்கள், மற்றும் பலர் ……………

நூலின் விவரங்கள்:

நூல் : நவம் நீ தம்
ஆசிரியர் : சிந்து சீனு
வெளியீடு : சுவடு பதிப்பகம்
தொடர்புக்கு : 9551065500 : 9791916936.

எழுதியவர்:

✍🏻 – முத்தழகு கவியரசன்
mkavi2491@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

  1. திறனாய்வு அருமை💐 பாதி வாசித்திருக்கிறேன்.. மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது உங்கள் பதிவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *