நூல் அறிமுகம்: சிங்காரவேலர் களஞ்சியத்திலிருந்து மேலும் ஒரு நன்முத்து – மயிலை பாலு

சிங்காரவேலரும் பாரதிதாசனும் – பா. வீரமணிநூல்: சிங்காரவேலரும் பாரதிதாசனும்
ஆசிரியர் : பா.வீரமணி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
7, இளங்கோ சால தேனாம்பேட்டை
சென்னை-600 018 தொபேசி 044-24332924, 24332424
பக்கம்: 160
விலை ரூ.160
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/singaravelarum-bharathidasanum/

‘சிங்காரவேலரின் சிந்தனைக் களஞ்சிய’ சொத்தினைத் தமிழகத்திற்கு உடைமைக்கியவர் தோழர் பா. வீரமணி அவர்கள். பெரும் கடமையை நிறைவேற்றியதான நிம்மதியோடு நின்றுவிடாமல் அந்தக் களஞ்சியம் அந்நாளில் எவ்வாறெல்லாம் பிறரையும் சிந்திக்கத் தூண்டியிருக்கிறது? அது கொண்டு நமது பார்வையை எவ்வாறு விரிவாக்கிக் கொள்வது என்ற ஆவல் உந்த, “சிங்காரவேலரின் சிந்தனையும் தொண்டும்”, “சிங்காரவேலரின் பன்னோக்குப் பார்வை”, “சிங்காரவேலரும் பிற சிந்தனையாளர்களும்” போன்ற நூல்களை அவர் எழுதியுள்ளார். அந்த வரிசையில் மேலும் ஒரு ஆய்வு முத்தாக “சிங்காரவேலரும் பாரதிதாசனும்” என்ற நூலினை இப்போது தந்துள்ளார்.

பேராசிரியர் மு. நாகநாதன், பேராசிரியர் வீ. அரசு ஆகியோரின் அணிந்துரையும் மதிப்புரையும் நமது சிந்தனைக்கு விருந்தளித்து நூலுக்குள் நம்மை அழைத்துச் செல்கின்றன. இவை இரண்டும் நூல் குறித்தும் நூலாசிரியர் குறித்தும் அணிந்துரைத்து மதிப்பிடுவதோடு சிங்காரவேலரைப் புதிய கோணத்தில் அணுகத் தூண்டுகின்றன.

வள்ளுவர் வழி நன்றியறிதலோடு நூல் உருவாகத் தூண்டுதலாய் இருந்ததற்காக ஆசிரியர் கீ.வீரமணி அவர்களுக்கு சமர்ப்பணத்தை நூலாசிரியர் அன்பளிப்பாக வழங்கியிருக்கிறார்.

நூலின் நுவல் பொருளுக்குக் கட்டியம் கூறுவதாகத் தொடக்கத்தில் பாரதிதாசனின் பாடல் பொருத்தமாக இடம்பெற்றுள்ளது.

“சிங்காரவேலனைப் போல்
சிந்தனைச் சிற்பி
எங்கேனும் கண்டதுண்டோ?” எனத் தொடங்கி,
போர்க்குணம் மிகுந்த
நற்செயல் முன்னோடி
பொதுவுடமைக் கேகுக
அவன் பின்னாடி”

என்பது ஈறாக அமையும் அந்தப் பாடல் சிங்காரவேலரை பாரதிதாசன் மனம் தோய்ந்து கற்றிருப்பதையும், கடைப்பிடித்திருப்பதையும் காட்டுகிறது.
அடுத்தடுத்த ஆர்வத்துடன் உள் செல்லும் வாசகர்களுக்குப் “புது உலகம்” என்று சிங்காரவேலர் தொடங்கிய இதழ் பற்றிய கட்டுரை முதலாவதாக அமைகிறது. இந்த இதழுக்கும் பாரதிதாசனுக்குமான தொடர்பை அதிர்ச்சி கலந்த செய்தியாகத் தோழர் வீரமணி குறிப்பிடுகிறார்.“நல்லறிவும் பெருநோக்கும்
கேட்பீராயின்
நம் தோழர் சிங்காரவேலர்
கண்ட
வெல்லுதமிழ் புது உலகம்
என்னு மாத
வெளியீட்டை வாசித்தல்
வேண்டும் என்போம்”

என்று தொடங்கி நான்கு பத்தி 16 வரி கவிதையைப் புது உலகம் முதல் இதழில் (1.5.1935) பாரதிதாசன் எழுதியிருக்கிறார். இதில் என்ன அதிர்ச்சி
இருக்கிறது? பாரதிதாசன் கவிதை தொகுப்பை வெளியிட்டவர்கள் இந்தப் பாடலை அதில் சேர்க்கவில்லை என்பதுதான் அந்த அதிர்ச்சி! இதுபோல் எத்தனை கவிதைகளைத் தவறவிட்டார்களோ என்ற மெய்யான ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகிறது இக்கட்டுரை வரி.

தமிழகத்தில் அறிவியல், சமூகவியல், பொருளாதாரம், அறியாமை அகற்றுதல் போன்றவற்றில் இருபெரும் ஆளுமைகளின் ஒற்றுமையை ஒப்பிட்டுக் காட்டுவதற்கு —
இயேசு பெருமான், குவெட்டா பூகம்பம், தமிழ்க்கல்வியும் இந்தி எதிர்ப்பும், உலக சமாதானம், அறிவியல் நோக்கு, கடவுள் மறுப்பு, தாழ்த்தப்பட்டோர் மேம்பாடு, பெண் முன்னேற்றம், தொழிலாளர் நலன், பொதுவுடைமைச் சிந்தனைகள் — என பதினொரு தலைப்புகள் தெரிவுசெய்யப்பட்டுள்ளன. முற்கூறிய புது உலகம் என்பதையும் சேர்த்து 12.

சாமானிய மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் இயல் (உரைநடைத்) தமிழை பயன்படுத்தியவர் சிங்காரவேலர். இசை (கவிதை)த்தமிழைப் பயன்படுத்தியவர் பாரதிதாசன். முன்னவர் உரைநடையில் சொல்லுகின்ற கருத்துக்களை நான் கவிதைகளில் தருகிறேன் என்று சிங்காரவேலரைத் தேடிப்படித்து பாரதிதாசன் தந்திருப்பதை ஆவண ஆதாரங்களுடன் இந்நூல் முன்வைக்கிறது. எடுத்துக்காட்டுகளாக ஒன்றிரண்டை இங்குப் பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்.
“தமிழ்நாட்டில் வழங்கிவரும் பாஷைகளில் தமிழ் பாஷை ஒரு புராதன பாஷையாகும். தமிழ்நாட்டில் வாழும் மக்களில் பெரும்பான்மையோர் தமிழ் பாஷையில் பிறந்து, வளர்ந்து, படித்து, அநாதி காலமாக வாழ்ந்து வருகின்றனர்”
(குடியரசு – ஜூன், 1938)

“மூலமென்றே சொல்லல்
முத்தமிழாம் – புவி
மூர்க்கம் தவிர்த்ததும்
அப்புத்தமுதாம்
ஞாலமெல்லாம் தமிழ்;
தமிழர்களே – புவி
நாமெனவே
குதித்தாடுவோமே
(இசை அமுது – முதல்
தொகுதி, 1939 )

மொழியை பாஷை என சிங்காரவேலரையும் எழுதவைக்கும் அளவுக்கு வடமொழி ஆதிக்கம் அன்று இருந்ததும் இங்கு நினைக்கத்தக்கது.

சிங்காரவேலர் போரின் கொடூரத்தை எண்ணி அக்காலத்தில் சில கட்டுரைகளை தாம் நடத்திய புது உலகம் இதழில் தொடர்ந்து எழுதி வந்துள்ளார். விடுதலைக்கு மார்க்கம், முசோலினி முழக்கம், சமாதான நடவடிக்கைகள் உட்பட ஏழு கட்டுரைகளைத் தோழர் வீரமணி மாதம், ஆண்டு குறிப்பிட்டு எடுத்துக்காட்டியுள்ளார். காலம் முன்பின்னாக இருந்தாலும் சிங்காரவேலரின் கருத்தினைப் புரட்சிக்கவிஞர் வழிமொழிவதாக,

“புதியதோர் உலகம்
செய்வோம் – கெட்ட
போரிடும் உலகத்தை
வேரொடு சாய்ப்போம்”

என்ற கவிதை வரிகள் உள்ளன. இதேபோல் மேலும் சில கருத்துக்களிலும் இருபெரும் ஆளுமைகளும் ஒன்றுபட்டிருப்பது நூலில் விரிவாகத் தரப்பட்டுள்ளது.நாட்டின் அவமானமாக 21ஆம் நூற்றாண்டிலும் நடைமுறையில் இருக்கின்ற தீண்டாமையை எண்ணி 90 ஆண்டுகளுக்கு முன் சிங்காரவேலரும் பாரதிதாசனும் வருந்தியிருக்கிறார்கள். ” நான்கில் ஒரு பகுதியினர் தாழ்த்தப்பட்டோர் எனப்படுபவர். தங்கள் ஆண்டைகளுக்குத் தொண்டூழியம் செய்வதைத் தவிர நாட்டு மக்களின் பிற வர்க்கங்களுடன் வேறெந்தச் சமூக உறவும் இல்லாத மானுடச் சமுதாயத்தைச் சேர்ந்த உயிரினம்” — என்ற சிந்தனைச் சிற்பியின் வருத்தத்திற்கு இணையாக,

” தீண்டாமை என்னுமொரு
பேய் இந்தத்
தேசத்தில் மாத்திரமே
திரியக் கண்டோம்
………. …….. ………. …………
கூண்டோடு மாய்வ
தறிந்தும் – இந்தக்
குற்றச் செயலுக்கு
நாணுவதில்லை நாம்”

என்ற புரட்சிக் கவிஞரின் பாடல் உள்ளது. இருவரின் சொற்களிலும் அறச்சீற்றம் அடிநாதமாக உள்ளதை மேலும் பல சான்றுகளுடன் தோழர் வீரமணி விவரித்துள்ளார்.

“மதங்களை ஒழிக்க, சாதியை நாட்டை விட்டு விரட்ட, பெண்மக்கள் ஆண்மக்களுடன் சகல சமத்துவம் பெறச்செய்யவும் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களை மீட்பதற்கும் “

அரசியல் ஆதரவு வேண்டும் என்பதை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கும் சிங்காரவேலர் இதற்கான அரசியலாகப் பொதுவுடைமை அரசியலை முன்மொழிகிறார். இதற்கான விடிவுகாலம் பொதுவுடைமைக் கொள்கையில்தான் இருக்கிறது எனத் திண்ணமாகக் கூறினார். சிங்காரவேலரின் கருத்துக்களை,

“பொதுவுடமைக் கொள்கை
திசை எட்டும் சேர்ப்போம்
புனிதமோடதை எங்கள்
உயிரென்று காப்போம்” என பாரதிதாசன் சாறுபிழிந்து தந்துள்ளார்.

அதுமட்டுமின்றி சிங்காரவேலரின் சொல், செயல், வாழ்க்கை மூச்சு பற்றி உளம் தோய்ந்து, தோய்ந்து எழுதிய கவிதையில்,

“மூலதனத்தின் பொருள்
புரிந்ததும் அவனால்
புதுவுலகக் கனா
முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை
கிளைத்ததும் அவனால்
கூடின அறிவியல்
அரசியல் அவனால்”

என்று தாம் பெற்ற கருத்தூற்றத்தால் முத்துமுத்தாக சொல் தேர்ந்து கவிதைச் சரம் தொடுத்துள்ளார் பாரதிதாசன். சிங்காரவேலரையும் பாரதிதாசனையும் ஒப்பு நோக்கும் இந்த நூல் மேலும் பல ஆய்வுகளுக்கு வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. அடுத்தத் தலைமுறை இந்த அறிவுச்சுடரைக் கையிலெடுத்து தொடர் ஓட்டமாக முன்செல்லவேண்டும் என்ற அவாவை ஏற்படுத்துவதாக நூலின் பேசுபொருள் அமைந்துள்ளது.

இந்நூலுக்கான அணிந்துரையில், “சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் அறிவு வழித்தோன்றல்” என்ற அடைமொழியைத் தோழர் பா. வீரமணி அவர்களுக்குப் பேராசிரியர் மு.நாகநாதன் அவர்கள் வழங்கியிருப்பது சாலப் பொருத்தம் என்பதை வீரமணி அவர்களின் நூல்களைத் தொடர்ந்து வாசிப்போர் நன்கு உணர்வர்.