Single house short story Era Kalaiarasi இரா.கலையரசியின் சிறுகதை ஒத்தவீடு

ஒத்தவீடு சிறுகதை – இரா.கலையரசி



கருவேலமரங்கள் முட்களை ஏந்தியபடி மழைக்கு விண்ணப்பம் போட்டுக் கொண்டிருந்தது. வழுக்கு பாறையை வழிச்சு எடுத்த தலையில சும்மாட கட்டி ஓடாத சைக்கிள மேட்டுக்கு உந்தி தள்ளிக்கு வந்தாரு கருப்பையா.

“ஏலேய்! கோவணம் கோவாலு! கொஞ்சம் புடிச்சு தள்ளுறது”னு கேட்க. “இந்தா பாருய்யா பெருசு, என்னைய அப்புடிகூப்புடாதேன்றுக்கேன்” என்று அவன் சிலும்ப, “சும்மாயா, மாப்புள”னு சொன்ன சொல்லுக்கு அப்புடியே வெளயாட்டுக்கு மாமானு சொல்லி சமாதானம் ஆயிட்டான் கோவாலு.

மலைக்கு உச்சியில வானத்த பார்த்தபடி எதையோ கேட்ட மாதிரி இருந்தது ஒத்தவீடு.

கிடுகுல அடைஞ்ச கூரைகள் கச்சிதமா தச்ச சட்டை ட்ரொசர் கணக்கா அழகா இருக்கு. புல்லுக்கு தலையாட்டியபடி அஞ்சாறு ஆடுகள் வாய்க்கு வந்தத சொல்ல முடியாமல் அசை போட்டுகிட்டு இருந்தது.

“டேய் கோவாலு, உங்கள் அய்த்த நல்லா பொடச்ச கம்புல குருணைகஞ்சி ஆக்கி வச்சிருக்கா.! வாடா! வந்து ஒரு வாய் சாப்பிட்டு போ!”னு கூப்புட்டாரு.

.”இல்ல மாமா இருக்கட்டும்” என்ற கோவாலு, “நல்ல மனசுகாரர் நீங்க! உங்கள் சொத்துல ஒரு பகுதிய ஆள் இல்லாத ஏழை சனங்களுக்கு குடுத்துட்டு, இந்த ஒத்தவீட்டுக்கு வந்துட்டீக!” என்றான். நல்லா பதமா ஆத்துன மோர எடுத்து வந்தார் கருப்பையா.

“இந்தாய்யா மாப்புள”னு ஆசையா குடுத்தாரு!? “லேய் கோவாலு! புள்ள குட்டிக எப்புடி இருக்கு?”

“அதேன் மாமு, நீங்கள் குடுத்த அந்த அரை சென்டு வீட்டுல சௌவுக்கியமா இருக்குக”னு நன்றியோடு சொன்னான் கோவாலு. கருப்பையா பெரிய பணக்காரர் இல்லை. கொஞ்சம் காடு, நிலம்னு இருந்தாரு.செல்லத்தாய ஆசைபட்டு கல்யாணம் பண்ணிகிட்டாரு.புள்ள குட்டிக பிறக்கல. பொண்டாட்டிய சாக குடுத்ததுல இருந்து இந்த ஒத்தவீட்டுக்கு வந்துட்டாரு.

“வானம் அடைச்சுக்கு வருதுயா!. போயி சேரு ஊருக்கு”னு அனுப்பி விட்டாரு கருப்பையா. மாடுகளுக்குக் கட்டி வந்த புல்லுக்கட்ட அதுக சாப்பிட உலைச்சு போட்டாரு.

“என்னாங்க? வானம் விரட்டியாருது? என்னா பண்ணிக்கு இருக்கீங்க? வா! பெரியாம்பள”னு செல்லத்தாயி கூப்பிட்டா!

“ஆத்தி! பெரிய வீட்டுக்காரவங்க உத்தரவு போட்டுட்டாங்க! இந்தா வந்துட்டேன் செல்லம்”னு உள்ள ஓடுனாரு. செவக்கி கட்டுன சேலை தலைப்புல தலையை துவட்டி விட்டா செல்லம்மாள். “என்ன ஆம்பள இப்புடியா நனையறது”னு பேசிகிட்டே கடுங்காபிய ஊத்திக் கொடுத்தாள்.

“ஏன் மனுசா? அந்த மேற்குகாட்டு வெள்ளாமைய என்ன செஞ்ச?”

“நீ சொன்னது தான் செல்லா.! மருதப்பன் மகளுக்கு சீமந்தம் செய்ய குடுத்தேன். மிச்சத்த முருகாயி கிழவிக்கு வைத்திய செலவுக்கு தந்தேன்”.

“ஆமாம் ஆம்பள! மக்கள் மனுசங்க பொழப்புக்கு நம்மால் ஆனதை தர வேண்டியது தான்” என்றாள் செல்லம்மாள்.

“நல்லா இருக்காளா சீனியம்மாள? மகள் வகுத்து பேரன்கள் என்னமோ பெரிய படிப்பு படிக்கிறாய்ங்கன்னு நிலத்த பூராவும் வித்தா, பாவம் நிமிந்துகிட்ட பயலுவ அப்புடியே தவிக்க விட்டுட்டாய்ங்க”.

“மனசு என்ன பாடுபட்டுச்சோ? விசனபட்டுக்கே கெடந்தவள்,இப்பிடி விட்டத்துல தொங்குவான்னு காங்கலயே!”னு வருத்தப் பட்டாள் செல்லா!

“நல்ல வேளை செல்லா, நமக்கு புள்ள குட்டி ஏதும் இல்ல. பெருசா வருத்தமும் இல்ல.ஏன் செல்லா, உனக்கு புள்ள இல்லன்டு வருத்தம் இருக்கா?.”

“இல்ல ஆம்பள! ஊருல இருக்ற சிறுசுக பூராவும் ஆத்தான்டு கூப்புடுதுக. அதுவே நிறைவா இருக்கு.அல்லாருக்கும் தான் இந்த பூமி.! நம்மளும் அப்புடியே வாழ்ந்துட்டு போயிருவோம்”னு சிரிச்சுகிட்டே சொன்னாள் செல்லா.

“நல்லா புழுங்கின வெள்ளை அரிசி சோத்துக்கு,வக்கனையா கருவாட்டு குழம்பு வச்சிருக்கே”னு சொல்லிகிட்டே ஒரு கும்பாவுல போட்டு பிசைஞ்சு உள்ளங்கையில வச்சா செல்லா! ஆசையாக வாங்கி வாங்கி சாப்பிட்டார் கருப்பையா.. இல்லாத ஒன்றை இருப்பதாகவே எண்ணி,மனைவியின் நினைவில் வாழ்கிறார் கருப்பையா.

“சரி பெரியாம்பள, வெள்ளன எந்திரிக்கணும். படுத்து ஒறங்கு”ன்னு விரிப்பானை விரித்து விட்டா செல்லம்மா. கண்களை மூடவும், நினைவுகளுடன் உறக்கம் அப்பிக் கொண்டது. ஒத்த மனுசனுக்குத் துணையாக ஒத்தவீடு. செல்லம்மாள் நினைவுகளை சுமந்தபடி காவல் காக்கிறாள்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *