நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்

நூல் அறிமுகம் : பூவை அமுதனின் சிந்தனையாளர் சாக்ரடீஸ் – சி.பி.கிருஷ்ணன்




“சிந்தனையாளர் சாக்ரடீஸ்” என்று பூவை அமுதன் எழுதி, பிரேமா பிரசுரம் வெளியிட்ட 94 பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒரே மூச்சில் படிக்கும் அளவிற்கு சுவாரசியமானது.

”பெரிய சாக்கிரட்டீஸ் மாதிரி கேள்வி கேட்க வந்துட்டான் பார்” என்ற சொல்லாடல்  நீண்டகாலமாகவே உண்டு. சிறு வயதிலிருந்தே சாக்ரடீஸ் மீது ஓர் ஈர்ப்பு உண்டு. ஏதோ ஒரு நாட்டில் எப்போதோ வாழ்ந்து மறைந்த ஒரு நபர் இன்றளவும் நினைவு கூறப்படுகிறார் என்றால் சமுதாயத்திற்கு அவரின் அசாத்தியமான பங்களிப்பை போற்றாமல் இருக்க முடியாது.

கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் நகரத்தில் கி.மு. 469ம் வருடம் வறுமையான குடும்பத்தில் பிறந்தார் சாக்ரடீஸ். 40 வயது வரை ராணுவத்தில் பணியாற்றி மூன்று போர்களில் நேரடியாக பங்கேற்று போராடி பல பதக்கங்களை வென்றார்.  கிரேக்க நாட்டில் ஏறக்குறைய 2400 ஆண்டுகளுக்கு முன்பே குடியாட்சி இருந்தது.

உலகின் முதல் கேள்வியின் நாயகன் சாக்ரடீஸ் தான். ஏன்? எதற்காக? எப்படி? எதனால்? எவ்வாறு? என்று அடுக்கடுக்காக கேள்விகளால் மக்களின் சிந்தனையை தூண்டியவர். ”எதையும் கேள்வி கேட்காமல் ஏற்காதீர்கள்” என்று மக்களிடம் தொடர்ந்து போதனை செய்தார். ’பக்தி’ என்ற நம்பிக்கையால் சிந்திக்க தவறாதீர்கள் என்று மூடநம்பிக்கைக்கு மூடுவிழா நடத்த முனைந்த உலகத்தின் முதல் முற்போக்காளர் சாக்ரடீஸ். ”சிந்திப்பதும், சிந்திப்பதை சொல்வதும் ஒவ்வொரு தனி மனிதனின் பிறப்புரிமை ஆகும்” என்றார்.

சப்பை மூக்கும், தடித்த உதடுகளும், பெருத்த மண்டையும், பெரிய கண்களும், சரிந்த தொப்பையும். அழுக்கு ஆடையுமாக வசீகரமற்ற தோற்றம் கொண்டவர் சாக்ரட்டீஸ். ஆனால் அவர் சந்தை. கோவில், விளையாட்டுத் திடல் போன்று மக்கள் திரளாக உள்ள இடங்களுக்குச் சென்று உரத்த குரலில் பேச ஆரம்பித்துவிட்டால், இளைஞர் முதல் முதியோர் வரை ஆண், பெண் அனைவரும் ஆர்வத்துடன் அவரின் பேச்சை கேட்பார்கள். மாற்றம் விரும்பிய, எழுச்சி உள்ளம் கொண்ட இளைஞர் கூட்டம் தேன் கூட்டை மொய்க்கும் தேனீக்களாக அவரை சூழ்ந்து கொண்டனர்.

பொய்யையும், புளுகையும் மூலதனமாக வைத்து மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும் மக்களை சிந்திக்க விடாமல் தடுத்து வைத்திருந்த கூட்டம் சாக்ரடீஸை கண்டு நடுங்கியது. சாக்ரடீஸின் பகுத்தறிவுக் கொள்கைகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி விட்டால் தாங்கள் செல்லாக் காசாகி விடுவோம் என்று அஞ்சிய பழமைவாதிகளும், மதவாதிகளும் அவருக்கு எதிராக திரண்டனர்.

“அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை. புதிய மதக் கோட்பாடுகளை புகுத்துகிறார். ஏற்கனவே உள்ள நம்பிக்கையை சிதைக்கிறார்…..….இளைஞர்களை தன் பேச்சு வன்மையால் கெடுத்து விடுகிறார்” என்று சாக்ரடீஸ் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன.

”ஒரு மனிதனை குழந்தையாக தாய் ஈன்றார்; தந்தை படிக்க வைத்தார்; குரு போதித்தார்; அரசு மனிதனாக்கியது; நண்பர்கள் நல்லவனாக்கினார்கள்,  இவ்வளவு பேர் சேர்ந்து நல்லவனாக்கிய ஒருவனை நான் கொடுத்து விட்டேன் என்றால் எனக்கு அவ்வளவு பேரையும் விட அதிக சக்தி இருப்பதாகத் தானே அர்த்தம்? அதற்காக நான் பெருமைப்படுகிறேன்” என்பார் சாக்ரடீஸ்.

பெயருக்கு ஒரு விசாரணை நடத்தப்பட்டு அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. விசாரணை முடிவில் நீதிபதிகளாக அமர்ந்திருந்த 501 பேரில் சாக்ரடீஸ் குற்றவாளி என்று 281 பேரும், குற்றவாளி அல்ல என்று 220 பேரும் வாக்களித்தனர். அவருக்கு அப்போதிருந்த சட்ட திட்டங்களின் படி ஹெமலாக் என்ற கொடிய நஞ்சு கொடுக்கப்பட்டு கிமு.399ம் ஆண்டு அவரின் எழுபதாவது வயதில் கொல்லப்பட்டார்.

அவர் சிறையில் அடைக்கப்பட்ட காலத்தில், அங்கிருந்து தப்பிப்பதற்கு அவருடைய நண்பர்கள் சிலர் ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் சாக்ரடீஸ் அதனை தீர்மானமாக மறுத்துவிட்டார். ”உயிருக்கு பயந்து அடுத்த நாட்டில் கோழையாக வாழ நான் ஒருபோதும் சம்மதிக்கமாட்டேன்” என்று கூறி மரணத்தை இன் முகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்பு அவர் ஆற்றிய உரையில் “நான் இளைஞர்களைக் கெடுக்கிறேன் என்று என் மீது குற்றம் சாட்டி எனக்கு மரணதண்டனையை விதித்து விட்டீர்கள். விரைவில் என்னை நீங்கள் அழித்து விடலாம். ஆனால் என்னோடு என் கருத்துக்களையும் அழித்துவிடலாம் என்ற உங்கள் எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது. எனக்குப் பின்னால் எண்ணற்ற இளைஞர்கள் என்னைப்போலவே ஏதன்ஸ் நகர மக்களை நல்வழிப்படுத்த தோன்றிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் அத்தனை பேரையுமே உங்களால் அழித்து விட முடியாது. என்னதான் முயன்றாலும் என் கொள்கைகளை மண்ணோடு மண்ணாக்கிட முடியவே முடியாது என்பதை காலம் கட்டாயம் உங்களுக்கு மெய்ப்பித்து விடும்.” என்று குறிப்பிட்டார் சாக்ரடீஸ்.

தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த சாக்ரடீஸின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு அவரின் சீடரானார் ’உயர்ந்த’ குலத்தில் பிறந்த பிளேட்டோ. சாக்ரடீஸின் சிந்தனைகளுக்கு எழுத்து உருவம் கொடுத்தவர் அவர். பின்னாளில் ”காரல் மார்க்சின் பொதுவுடமை புரட்சி கருத்துக்களுக்கும், ரூசோவின் புரட்சி எண்ணங்களுக்கும், இங்கர்சாலின் மூடநம்பிக்கையை எதிர்த்த கருத்துக்களுக்கும் முன்னோடியாக விளங்கியவர் சாக்ரடீஸின் முற்போக்கு கருத்துக்களுக்கு எழுத்துருவம் தந்த பிளேட்டோ” என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அதிகாரி நச்சுக் கோப்பையுடன் வந்தார். ”நண்பா நான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தயவுசெய்து சொல்லு” என்று நிதானமாக அவரிடம் கேட்டார் சாக்ரடீஸ்.  ”ஐயா இந்த விஷத்தை நீங்கள் குடிக்க வேண்டும். பிறகு நடக்க வேண்டும். கால்கள் மரத்துப்போகும் வரை நடந்து கொண்டே இருக்க வேண்டும். பின்னர் படுத்துக்கொள்ளலாம். நஞ்சு தன் காரியத்தை நடத்தி முடித்து விடும்” என்று அந்த அதிகாரி வேதனையுடன் கூறினார்

சாக்ரடீஸ் மனதில் ஆண்டவனை தொழுதுவிட்டு விஷக் கோப்பையை வாய்க்கு அருகில் கொண்டு சென்று நிதானமாக பருகினார். பிறகு அவர் அமைதியாக நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் மரத்துப்போகும் உணர்வு வரும்வரை நடந்து கொண்டே இருந்தார். பின்னர் மல்லாந்து படுத்துக் கொண்டார். மரணம் அவரை தழுவிக் கொண்டது.

”பிறர் குறை காண்பவன் அரை மனிதன்; தன்குறை காண்பவனே முழு மனிதன்”
”மருத்துவ நூல் மருந்துகளின் நன்மைக்காக இல்லை; உடலின் நன்மைக்காக உள்ளது. அது போலவே ஆட்சி புரியும் கலை ஆள்பவர்களின் நன்மைக்காக இல்லை; ஆளப்படுகின்ற மக்களின் நன்மைக்காகவே இருக்கிறது”
”எங்கே என்னுடையது, உன்னுடையது என்ற எண்ணம் மறைந்து பொதுவுடமை நிலவுகிறதோ அங்கேதான் யாவருக்கும் பொதுவான மனநிறைவு ஏற்படும்”
போன்ற சாக்ரடீஸின் பல கருத்துக்கள் இன்றளவும் மக்களுக்கு வழிகாட்டியாக உள்ளன.
மக்களுக்காக அயராது பாடுபட்டவரின் வரலாறு பற்றிய இந்த நூல் அனைவருக்கும், குறிப்பாக வளரும் தலைமுறையினருக்கு மிகவும் பயனுள்ளது.

நூல் : சிந்தனையாளர் சாக்ரடீஸ்
எழுத்தாளர் : பூவை அமுதன்
பதிப்பகம் : பிரேமா பிரசுரம்
பக்கங்கள்:94

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *