நூலறிமுகம்: சிறகைவிரிபற - தானப்பன் கதிர்

நூலறிமுகம்: சிறகைவிரிபற – தானப்பன் கதிர்

 

 

 

பட்டி மண்டபப் பேச்சாளரான பாரதி பாஸ்கரின் இண்டாவது நூல் இது. புராண, இதிகாசங்களில் வரும் சம்பவங்களோடு தான் சிறு வயதினில் உற்று நோக்கிய, உணர்ந்த சம்பவங்கள், மன்னர் காலத்துச் சம்பவங்கள் போன்றவற்றை தோரணமாக்கித் தந்திருக்கின்றார்.

பெரும்பாலும் பேச்சாளர்களுக்கு எழுத வராது. பல எழுத்தாளர்களுக்கு மேடைப் பேச்சு அமையாது. இதனை முறியடித்து வெற்றி கண்டிருக்கிறார் பாரதிபாஸ்கர் என்று பட்டிமன்றங்களில் உடன் பேசும் ராஜா வாழ்த்துரை வழங்கி இருக்கின்றார். மேலும்

“அக்கமாதேவி முதல் ஆண்டாள் நாச்சியார் வரை…
அருணகிரிநாதர் முதல் ஆழ்வாராதிகள் வரை…
பகவான் ரமணர் முதல் பரமாச்சாரியார் வரை…
பத்ரிநாத் முதல் பார்த்தசாரதி கோவில் வரை…
பகவத்கீதை முதல் பைபிள் வரை… தத்தாத்ரேயர் முதல் தாஸ்தாவேஸ்கி வரை…
ஐசக் நியூட்டன் முதல் ஐபிஎல் கிரிக்கெட் வரை…
ஜூலியஸ் சீசர் முதல் ஜூலியா ராபர்ட்ஸ் வரை..” என கட்டுரைக் குவியல்களாய் எழுதி எழுத்தில் மிளிர்கிறார் என்றும் மகுடம் சூட்டியிருக்கிறார்.

ஏதேதோ தரிசனங்களைக் கண்டு மானுடம் பரவசத்தில் ஆழ்ந்து தருணங்களில் மட்டுமே கலையும் இலக்கியமும் தோன்றியிருக்கின்றன என்ற தெளிவு, பேச்சு மேடைகளில் ஏறிய பின்பு தனக்குள் பிறந்தது. அப்படிப்பட்ட மகத்தான தரிசனங்களைக் காண மனமென்னும் கதவுத் திறக்க வேண்டுமே. கதவைத் திறக்கும் தாழ்பாள் எட்டாத குட்டிச் சிறுமி கதவுக்கும் தரைக்கும் இடையே இருக்கும் கோடு போன்ற இடைவெளியில் தரையோடு கன்னம் இருத்தி, வெளியே பார்க்க முயலும் எளிய முயற்சியே இந்தக் கட்டுரை என்று தன்னடக்கத்துடன் தன்னுரை வழங்கியிருக்கின்றார். ஆனால், அந்த தன்னடக்கத்தை மீறி கட்டுரைகளில் மிளிரச் செய்திருக்கின்றார் என்பதே உண்மை.

“சிறகை விரி! பற” என்னும் கட்டுரையில் “பசங்க” படத்தில் வரும் ஒரு காட்சியை அறிமுகம் செய்து, பாரதியின் குருவை நமக்கு அறிமுகம் செய்கின்றார். பாரதியார் புதுச்சேரியில் இருக்கும்பொழுது பெய்யும் கன மழையில் ஒரு வீடு இடிந்து விடுகிறது. பாரதியாரும் நண்பர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்கினாறார்கள். இப்போது ஒரு கிழவி வந்து தன் வீடு இடிந்து விட்டது என்று புது வீடு கட்ட உதவுமாறும் கேட்கிறாள். பழைய வீடு எங்கே என்ற பாரதிக்கு வெறும் சட்டங்கள் மட்டுமே பாக்கி என்று இடிந்த தன் விடிந்த வீட்டைக் காட்டி “காற்று அதிகம் உள்ளே வந்தாலோ அல்லது வெளியே போனாலோ இந்த உடம்பு கூட வெறும் சட்டம் தான்” என்று சொல்கிறாள். அடுத்தநாள் சுதேசமித்திரனில் ஒரு கவிதை கட்டுரை வாயிலாக இதனை பதிவு செய்து கிழவி தனது குருவான அதிசயத்தை எழுதுகிறார் பாரதி. இப்படித்தான் குருவும் சிஷ்யனும இருந்திருக்கின்றார்கள்.

நீலகண்ட பிரம்மச்சாரி என்ற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா என்றார் கம்மிய குரலில். ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி என்ன ஆச்சு என்று பாரதி பதற, சாப்பிட்டு நாளாச்சு என்கிறார் அவர்.வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க எழுதிய பாடல்தான் “இனி ஒரு விதி செய்வோம் – அதை எந்நாளும் காப்போம் தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்” பசியை அன்னை இட்ட அடிவயிற்றுத் தீ என்பார் பட்டினத்தார். அதை உணர்ந்தவர் பாரதி அந்த வரிகளைத் தருகிறார்.

பரமக்குடி அருகிலிருக்கும் ஊர் இளையான்குடி. அங்கு வீற்றிருக்கும் ஈசனுக்கு கைக்குத்தல் அரிசி சாதம் கீரையும் தான் படைக்கப்படுகிறது. இளையான்குடி மாறனார் ஈசனுக்கு படைத்தது அது.அதனால் ஆலயத்தில் அவருக்கு அவ்வாறு வழங்கப்படுகிறது. ஈசன் திருவிளையாடல் நிகழ்த்திய தலம் அது. சிவனடியார் வேடத்தில் அவர் வீட்டிற்கு வர கூரையின் மூங்கிலைப் பிடுங்கி விறகாக்கி, விதைத்த நெல்லை அரிசியாக்கி தோட்டத்துக் கீரையை சமைத்து சிவனடியாருக்கு வழங்குகின்றனர். இதற்கு பக்கபலமாக உதவிய அவரது மனைவியின் பெயர் எங்கும் இல்லை அந்தப் பெயரே முதல் நாயன்மார் என அறிவித்திருக்க வேண்டும் என்று விசனப்படுகின்றார் கட்டுரையாளர்.

காஞ்சிபுரம் திருவெஃகா என்ற கோவில் பெருமாளின பெயர் “சொன்ன வண்ணம் செய்த பெருமாள்”. இக்கோயில் பற்றிய தகவல் சிறப்பு. அரசன் அங்கு பூஜை செய்து கொண்டிருந்த திருமழிசை ஆழ்வாரை நகரத்தை விட்டு வெளியேறச் சொல்ல அவரும் கோயில் சயன கோலத்தில் இருந்த பெருமாள் “எழுந்திரு, போகலாம்” என்று சொல்ல அதன்படியே அவரும் தன் பாம்புப் படுக்கையை சுருட்டிக்கொண்டு உடன் சென்றுவிட்டாராம். அதை பார்த்த உடன் மற்ற தேவதைகளும் செல்ல கோயில் காலியாகிவிட்டது. அரசன் தவறை உணர்ந்து ஆழ்வாரிடம் மன்னிப்பு கேட்க, மீண்டும் திருமாலிடம் ஆழ்வார் “சரி வாரும் திரும்பச் செல்லலாம்” என்று சொல்ல அவரும் திரும்ப வந்து படுத்துக்கொண்டாராம். இதற்காக அவர் இரு பாடல்கள் எழுதி இருக்கின்றார்.கோபத்திற்கு ஒரு பாடல், சமாதானமான பின் இரண்டாம் பாடல்.

“கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள். என்பது முதல் பாடல்.
இரண்டாம் பாடல் என்னவென்றால்,

“கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழித்தான் நீயுழன்றன் பந்நாகப் பாய் படுத்துக்கொள்” அழகான வெண்பாக்களில் துணிவுடைய செந்நாப் புலவன் என்ற சொற்றொடர்களில் என்ன ஒரு கம்பீரம். இந்த கட்டுரையில் இவரது தமிழ் பற்றி நேசம் கண்டு வியந்து நின்றேன்.

” தாயாக ஆசைப்பட்ட ஆண்கள் ” எனும் தலைப்பில் பிள்ளைத்தமிழ் குறித்து எழுதி இருப்பது சிறப்பு. குமரகுருபரர் பாடிய மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ் குறித்த சிறு குறிப்பு அழகு. “உள்ளத்தில் நல்ல உள்ளம்” என்னும் தலைப்பில் கர்ணன் படத்தை தன் மகள் பார்த்து வந்த சிலாகித்து கதை எழுதி, அந்த கதை மாண்பை மீண்டும் நமக்கு நினைவூட்டி இருப்பார். ” நோய்க்கு மருந்து” எனும் கட்டுரையில் ஆன்மீகம் வளர்த்திருக்க வேண்டிய கருணைக்கு தான் பஞ்சம். ஆன்மீகவாதிகளின் ஒரே சொத்தாக இருந்திருக்க வேண்டிய எளிமைக்குத்தான் தற்பொழுது பஞ்சம் என்று சொல்லி ஒரு புதுக்கவிதையோடு முடித்திருப்பார்.

“கோவிலுக்குப் போனேன் கூட்டநெரிசல்
தப்பித்து வெளியே வந்து
படியில் அமர்ந்தேன் காற்றாட என்னத்துக்குத்தான் “நெருக்கிறாங்களோ” தெரியலை என்றேன்
“எனக்கும் தெரியலை” என்றார் அருகில் வந்து அமர்ந்த கடவுள். அவருடைய தற்போதைய கவிதை வாசிப்பும் இதி்ல் தெரிகின்றது.

“அண்ணன் என்னடா தம்பி என்னடா” என்ற கட்டுரையில் 28 வயது வாலிபன் மரணத்தை முத்தமிடும் இறுதி கணத்தில், தன் சகோதரனை நினைத்த நேசத்தின் அழகைச் சொல்லும் அந்த கடிதம் உலக இலக்கியங்களில் ஒன்றாகிவிட்டது. குறிப்பிட்ட அவர் தஸ்தயேவ்ஸ்கி. உலகத்தின் மிகச் சிறந்த எழுத்தாளராக மதிக்கப்படுகின்ற ரஷ்ய எழுத்தாளர். இதனோடு கம்பராமாயணத்தை கோர்த்த விதமும் அழகு. “பரதனுக்கு பட்டாபிஷேகம் நீ காட்டுக்கு போக வேண்டும் என்று தந்தை சொன்னார் என்று சொன்ன கைகேயிடம் “என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேனே பெற்றதன்றோ” என்று ராமன் சொன்னதாக எடுத்துக்காட்டியிருப்பது கட்டுரையின் சிறப்பு.

இப்படி ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியும் சிலாகித்துக் கொண்டே செல்லலாம். கைதேர்ந்த எழுத்தாளரைப் போன்று கட்டுரையினை வடித்திருப்பதில் ஆச்சரியம் மேலிடுகிறது. அதைவிட எத்தனைப் புத்தகங்களை இவர் வாசித்திருப்பார் என்ற வியப்பிலிருந்தும் மீள இயலவில்லை. சில கட்டுரைகளை நகைச்சுவையுடனும், சிலவற்றை கொஞ்சம் கடின சொற்றொடர்களுடனும், சிலவற்றில் ரௌத்திரத்துடனும் எழுதியிருப்பது எழுத்தின் ஆழத்தினை பறைசாற்றுகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒன்றும் சும்மா பிரபலத்திற்காக பாராட்டுரை தரவில்லை. படித்து அதனில் திளைத்துப் பின் எழுதியிருப்பது நன்கு தெரிகிறது. அந்த வரிகள்..
” சிறகை விரி. பற “என்ற ஆன்மீக நூல் எல்லோரையும் சிந்திக்க வைக்கும், பிரமிக்க வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. உண்மை. பிரமிக்கத்தான் வைத்திருக்கிறது. வாசித்து அனைவரும் உணரலாம்.

சிறகைவிரிபற
பாரதி பாஸ்கர்
விகடன் பிரசுரம்
விலை : ரூ.75
பக்கங்கள்:  135
முதற்பதிப்பு :மே 2013

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *