தொடர் 5: சிறகுகளோடு சில நிமிடங்கள் (குக்குறுவான்கள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்று நாம் காணவிருப்பவை குக்குறுவான்கள்.

மூன்று வகை குக்குறுவான்களை நீங்கள் எளிதில் கண்டு இனங்காணலாம்..

1. காட்டுப் பச்சைக் குக்குறுவான்…Brown Headed Barbet… விலங்கியல் பெயர் Megalaima zeylanica

2. சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்.White – cheeked barbet.. விலங்கியல் பெயர் Megalaima viridis

3. செம்மார்பு குக்குறுவான். Coppersmith Barbet.. விலங்கியல் பெயர் Megalaima haemacephala.

“குட்ரூ….குட்ரூ….குட்ரூ…..”

Image
காட்டுப் பச்சைக் குக்குறுவான் (படம்- வை.கலைச்செல்வன்)

ஒருவன் ஒரு இடத்தில் கத்த ஆரம்பித்தால் காட்டின் எங்கோ ஒரு மூலையில் இருந்து இன்னொருவன்..அப்படியே இன்னொருவன் …என காடு முழுவதும் இவர்கள் குரலே கேட்கும்.

ஆனால் இவன்தான் என நீங்கள் பார்த்திருக்க / அறிந்திருக்க வாய்ப்பிருக்கிறதா என தெரியவில்லை…

காட்டின் எல்லையை நாம் மிதித்து விட்டோம் என்பதற்கு அடையாளம் இவன் குரல்…

அதுதான் Brown Headed Barbet…
காட்டுப் பச்சைக் குக்குறுவான்…ஆங்கிலப் பெயருக்கேற்றபடி தலை பழுப்பு நிறம்..கண்ணைச்சுற்றியுள்ள தடித்த (இடைவெளியில்லாத தொடர்ச்சியான) மஞ்சள் வட்டம் இதன் தனித்த அடையாளம்…அலகு பாத்தோம்னா வெளிர் சிகப்பு..இறக்கையின் இறுதிப்பகுதியும், வாலும் நல்ல பச்சை நிறம்..(தமிழகக்) குக்குறுவான்களில் இது அளவில் பெரியது.

Image
காட்டுப் பச்சைக் குக்குறுவான் (படம்- வை.கலைச்செல்வன்)

இதேபோல மலைப்பகுதியில் காணப்படும் இன்னொரு குக்குறுவான், சின்னக்குக்குறுவான் அல்லது வெண்கன்னக் குக்குறுவான்..White – cheeked barbet..கண்ணுக்குக் கீழ் கன்னப்பகுதில் அமைந்த வெண்மைப் பகுதி இப்பெயர் வரக்காரணமாயிற்று…மெல்லிய வெள்ளை நிறப் புருவமும் உண்டு..கவனிக்க …இவை தொடர்ச்சியின்றி இருக்கும்..

Image
வெண்கன்னக் குக்குறுவான் (படம்- வை.கலைச்செல்வன்)

அதாவது முன்பு பார்த்த காட்டுப் பச்சை குக்குறுவான் போல கண்ணைச்சுற்றிலும் மஞ்சள் வளையம் இதற்கு வராது… அதற்குப் பதிலாக கருப்பு நிற கோடும் மேலும் கீழும் வெள்ளை நிற கோடும் காணப்படும்.

எனவே மேற்கண்ட இரண்டை மட்டும் வேறுபடுத்த கற்றுக் கொள்ளுங்கள்…போதும்..ஏனெனில் இந்த இரண்டும் மலைப்பகுதிகளில் வசிக்கக்கூடியவை…

மூன்றாவதாக நீங்கள் காணவிருப்பது செம்மார்புக் குக்குறுவான்..

பெயருக்கேற்றபடி மார்பில் சிவப்பு நிறம்..தொண்டைப்பகுதியில் மஞ்சள் நிறம்..தலைப்பகுதியில் கொஞ்சமாய் சிவப்பு..அலகு கருப்பு நிறம்…கண்ணின் மேலும் கீழும் வெண்கன்ன குக்குறுவானுக்குச் சொன்ன அதே அமைப்பில் மஞ்சள் நிறம் இதற்கு…அவ்வளவே!

Image
செம்மார்புக் குக்குறுவான் (படம்- வை.கலைச்செல்வன்)

நீல நிறம் மட்டும் இவன் உடம்பில் இருந்திருந்தால் அழகில் இவனை அடித்துக் கொள்ள யாரும் இல்லை..உடல் நிறம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கவரும் பச்சை இல்லை என்றாலும் மற்ற வண்ணங்கள் இப்பறவைக்கு அழகூட்டுகின்றன..

குக்…குக்…குக்…குக்….என இதன் ஓசையை சாதாரண சமவெளிப்பகுதியிலேயே நீங்கள் கேட்டு ரசிக்கலாம்..

அதேபோல் இமயமலையில் காணப்படும் பெரும் குக்குறுவான் (Great Barbet) இந்தியாவிலேயே பெரிய குக்குறுவான் ஆகும்..

மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் மலபார் குக்குறுவான் முகத்தில் அதிக அளவில் சிவப்பு நிறம் கொண்டிருக்கும்…

தமிழகத்தில் அனைவரும் முதலில் நான் சொல்லியுள்ள 3 வகை குக்குறுவான்களையும் எளிதாக காணலாம்..

மேற்சொன்ன மூன்றுமே கூடுகள் கட்டுவதில்லை..பெரும்பாலும்பட்டுப் போன காய்ந்த மரங்கள், சில இடங்களில் உயிருள்ள மரங்களிலுள்ள காய்ந்த நிலையிலுள்ள கிளைகளில் பொந்து அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன..

Image
செம்மார்பு குக்குறுவான் வசிக்கும் ஒரு மரப்பொந்து

அம்மாப்பேட்டை குமரகிரி ஏரிக்கரையில் அமைந்த ஒரு வாகை மரக்கிளையில் அமைந்த பொந்தில் , செம்மார்புக்குக்குறுவானொன்று ஓடி ஓடிச் சென்று சிறு புழுக்களை எடுத்து வந்து பிள்ளைகளுக்கு ஊட்டுவதை சில ஆண்டுகளுக்கு முன் பார்த்தேன்…

பறவைத்தேடலில் எப்போது ஏற்காடு, கல்வராயன் மலைப்பகுதிக்குச் சென்றாலும் மூன்று நண்பர்களையும் பார்க்காமல் தேடல் முற்றுப் பெற்றதில்லை..

Image

குக்குறுவான் வசிக்கும் ஒரு மரப்பொந்து

கொண்டலாத்தி என்னும் நூலில் திரு.ஆசைத்தம்பி அவர்கள் குக்குறுவான் பற்றி அழகாய் இப்படி எழுதி இருப்பார்..

ஒற்றைக் கிளையில்
உச்சிக் கிளையில்
நீ

காலம் தொடங்கிய நாள்
முதலாய்
உன் அலகிலிருந்து ‘குக் குக் குக்’ சொட்டிச் சொட்டி
நிரம்பித் தளும்புகிறது காற்று

Image

நீ போய்விட்ட பிறகும்
உன் கிளையிலிருந்து சொட்டும்
உனது ‘குக் குக் குக்’
காலம் முடியும்வரை

ஒவ்வொரு சொட்டாய்ச்
சொட்டிசொட்டி
இறுதிச் சொட்டில்
வெளியேறிவிடும்
எல்லாம்..

என்னவொரு ரசனை இருந்தால் இப்படி கவிதை வடிக்க முடியும்?

அப்படியே அந்தக் காட்சியை கண்முன் நிறுத்தி விட்டாரே!
நீங்களும் பறவைகளைப் பார்த்து ரசியுங்கள்…கவிதை வடிக்கலாம்!

காட்டுப் பச்சை குக்குறுவான் ஒலியெழுப்பும் விதம்

அன்புடன்,

வை.கலைச்செல்வன்,
E.mail: [email protected]