தொடர் 3: சிறகுகளோடு சில நிமிடங்கள் (பஞ்சுருட்டான்கள் (Bee-eaters)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்று பஞ்சுருட்டான்கள் (Bee-eaters) பற்றிச்சொல்கிறேன். நான் இதற்கு வைத்த பெயர் ‘காந்தக் கண்ணழகி’. மை தீட்டிய மங்கையைப் போல் கொள்ளை அழகாயிருக்கும் இந்தக் குருவி. அதனால்தான் நான் அந்தப் பெயர் வைத்திருக்கிறேன்..(பார்க்க..படங்கள்)

நம் தமிழகத்தில் ஐந்து வகையான பஞ்சுருட்டான்களைக் காண இயலும்.

1.காட்டுப்பஞ்சுருட்டான்(Blue- bearded bee -eater)
2.நீலவால் பஞ்சுருட்டான் ( Blue -tailed bee-eater)
3.செந்தலைப்பஞ்சுருட்டான் ( chesnut -headed bee-eater)
4.பச்சைப்பஞ்சுருட்டான் (Small Green bee-eater)
5.ஐரோப்பியப் பஞ்சுருட்டான் (European bee-eater)

(அம்மாடியோவ்! சில வருசத்துக்கு முன்னாடி ஏதோ பச்சைக் குருவின்னு மட்டுமே தெரியும்! )

இப்போ இவற்றை அடையாளம் காண்பது எப்படின்னு பார்ப்போம்!

பெயருக்கேற்றபடி காட்டுப் பஞ்சுருட்டானில் “blue beard’ed” அதாவது அலகின் கீழ்பகுதி முதல், நெஞ்சு வரை ஒரு நீல நிற கோடு வரும்…இதனையே கருத்தில் கொண்டு “நீல தாடி” என்னும் பொருள் வரும் வகையில் அமைத்துள்ளனர்.மற்றபடி இவற்றின் உடல் முழுவதும் பச்சை நிறம்தான். வயிற்றுப் பகுதியிலும், வாலின் அடிப்பகுதியிலும் வெள்ளை, வெளிர் பச்சை நிறம் கலந்து காணப்படும்.

Imageகாட்டுப் பஞ்சுருட்டான்
(படம் – திருமலை வெங்கட்ராமன்)

அதேபோல் நீலவால் பஞ்சுருட்டான் வாலில் நீலநிறம் கொண்டது. அதனால் நீலவால் பஞ்சுருட்டான் என்று பெயர்பெறுகிறது.

Image
நீலவால் பஞ்சுருட்டான்
(படம் – திருமலை வெங்கட்ராமன்)

செந்தலைப் பஞ்சுருட்டான் சிவந்த தலை உடையது.இரண்டிற்கும் அலகிற்குக் கீழ் மஞ்சள், அடர் சிவப்பு நிறங்கள் இருக்கும் எனினும் செந்தலைப் பஞ்சுருட்டானுக்கு சரியாக கழுத்துப் பகுதியில் அடர் சிவப்பு நிறத்தில் ஒரு கோடு போன்ற பகுதியும், நீலவால் பஞ்சுருட்டானுக்கு மஞ்சள் வண்ணம் குறைவாயும், அடர் சிவப்பு அதிகமாயும் இருப்பதைக் காணலாம்..

Image

செந்தலைப் பஞ்சுருட்டான்

(படம் வை.கலைச்செல்வன்)

பச்சைப் பஞ்சுருட்டான் அலகின் கீழ்ப்பகுதி, கன்னப் பகுதியில் (கடல்) நீலநிறம் காணப்படும். கழுத்தில் அடர் பச்சை நிறக்கோடொன்று காணப்படுகிறது. வாலில் தனித்த அழகிய கம்பி போன்ற அமைப்பு இருக்கும். காட்டுப்பஞ்சுருட்டானுக்கும், செந்தலைப்பஞ்சுருட்டானுக்கும் வாலின் இறுதியில் கம்பி போன்ற அமைப்பு இராது.

Image
பச்சைப் பஞ்சுருட்டான்

(படம் வை.கலைச்செல்வன்)

ஐரோப்பியப் பஞ்சுருட்டானுக்கு மிக மிக குறைந்த நீளமுள்ள கம்பி வாலின் இறுதியில் காணப்படுகிறது. கழுத்துமுதல் வால் வரை சீரான வெளிர் நீல நிறம், கழுத்தின் மேல் முதல் அலகு வரை பளிச்சென்ற மஞ்சள் இருக்கும்..

Image
ஐரோப்பியப் பஞ்சுருட்டான்

(படம் வை.கலைச்செல்வன்)

ஐரோப்பிய பஞ்சுருட்டான், ஐரோப்பாவிலிருந்து நம் நாட்டிற்கு வருகை தருகிறது.குளிர் அதிகமாயுள்ள நாடுகளில் பனிமூடி இருப்பதால் போதிய உணவு கிடைக்காமல் வருடத்தில் சில மாதங்கள் மட்டும்,உணவுத் தேவையை பூர்த்தி செய்ய அவை இந்தியா வருகின்றன.பறவைகளின் இத்தகைய தனித்த செயல்பாட்டிற்கு ‘வலசைப்போதல்’ என்று பெயர்.கோடைகாலம் தொடங்கும்போது அவை மீண்டும் தங்கள் சொந்த நாட்டிற்கே திரும்பச் செல்கின்றன.தொடர்ந்து பல ஆண்டுகளாக குறிப்பிட்ட மாதங்களில் ( அக்டோபர் முதல் மார்ச் வரை) இவை சேலம்- மேட்டூர் பகுதியில் காணக்கிடைக்கின்றன.

ஒரு பறவையானது எந்த இடத்தில் முட்டையிட்டு, குஞ்சுபொரித்து இனவிருத்தி செய்கிறதோ அதுவே அதன் தாயகம் என்பர் பறவையியலாளர்கள்..வலசைப்போதல் குறித்த புரிதல் இல்லாத சிலர் வலசைப்பறவைகள் இங்கு வந்து இனவிருத்தி செய்கின்றன என்று கூறுவது மறுப்பிற்குரியதாகும்.

பஞ்சுருட்டான்கள் பொதுவாய் குழுவாய் வசிப்பவை..

Image

செந்தலைப் பஞ்சுருட்டான் இணைசேர்கிறது
(படம் – திருமலை வெங்கட்ராமன்)

பெயருக்கேற்றபடி இவை ஈ,தேனீ,தும்பி,குளவி,வண்டு போன்றவற்றை உட்கொள்ளும்.

பெரும்பாலும் நம் கண்களில் படுபவை பச்சைப் பஞ்சுருட்டான்கள் (Small Green bee-eaters) ஆகும்..ஏனெனில் இவை சமவெளிகளில் உள்ள மரங்கள், மின் கம்பிகளில் சுற்றித்திரிவதைக் காணலாம்.காடு, அதனை ஒட்டிய பகுதிகள் , வயல்களில் காணலாம்.கண்டம் விட்டு கண்டம் வருபவை ஐரோப்பிய பஞ்சுருட்டான்கள். பருவத்திற்கேற்ப இடம் பெயர்பவை நீல வால் பஞ்சுருட்டான்கள். பெரும்பாலும் மலைப்பகுதிகளில் காணப்படுபவை காட்டுப்பஞ்சுருட்டான்களும் செந்தலைப் பஞ்சுருட்டான்களுமாகும்.

ட்ரி…ட்ரி…ட்ரி…என ஒலியெழுப்பியபடி பறந்தபடி இரையை லாவகமாய்ப் பிடித்து எங்கிருந்து கிளம்பி வந்ததோ பெரும்பாலும் அதே கிளையில் அமர்ந்து பொறுமையாய் விழுங்குவதைக் காணலாம்..

அலகில் பற்றியுள்ள இரையை ஒன்றிரண்டு முறை கிளைகளில், அல்லது கம்பிகளில் சாத்துவதைப் பார்த்திருக்கிறேன்..இரையை உயிரிழக்கச் செய்யும் முயற்சி அல்லது, இலகுவாக விழுங்க வசதியாய் அவ்வாறு செய்யலாம் எனக் கருதுகிறேன்..பெரிய வண்ணத்துப் பூச்சியைக் கூட விழுங்கும் காட்சியைப் பார்த்துள்ளேன்..

இன்னொரு சுவாரசியமான விஷயம்..இவை நீங்கள் நினைப்பது போல் கூடு கட்டுபவை அல்ல..செங்குத்தான மண் சுவர்களில் சிறு மண் பொந்துகள் அமைத்து முட்டையிட்டு குஞ்சு பொரிப்பவை ஆகும்.இவை போன்ற ‘வங்குகள்’ பெரும்பாலும் நீர்நிலை அருகில் இருப்பதை நீங்கள் காணலாம்…

Image
காட்டுப்பஞ்சுருட்டான் ஒன்றின் வங்கு
(உள்ளே குஞ்சுப்பறவை இருக்கிறது)

மற்ற பறவைகளைப்போல இவையும் குஞ்சுப்பறவைகள் மேல் மிகுந்த அக்கறை கொண்டு சிறு பூச்சிகள்,புழுக்கள் இவற்றைக் கொண்டு வந்து ஊட்டிவிடும் காட்சியை நாம் காண இயலும்.

Image
காட்டுப்பஞ்சுருட்டான் இரையூட்டும் காட்சி
(படம் – சத்தியசீலன்)

இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்ணில் சிறு பூச்சி விழுந்தாலும் நிலைதடுமாறிப் போகிறோம்.இந்தப் பறவைகள் மட்டும் இல்லையென்றால் பூமியெங்கும் பூச்சிகளால் நிரம்பி வழியும்.பஞ்சுருட்டான் மட்டுமல்ல.ஒட்டுமொத்த பறவைகளும் பூச்சிகளை உணவாக்கிக் கொண்டு இயற்கைச் சமநிலையைப் பேணி வருகின்றன.

கடந்த மாதம் பாகிஸ்தானின் விளைநிலங்களில் பயிர்களை சூறையாடி, இந்தியாவின் எல்லைப்பகுதியையும் தொட்டு விவசாயிகளை அச்சுறுத்திய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பை நாம் மறக்கக் கூடாது.வெட்டுக்கிளிகளை அழிக்க உயிரியல் ஆயுதமாக ஒரு லட்சம் வாத்துகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியது சீனா.இது போன்ற பூச்சிகள் பிரச்சினைகளே பூமிக்கு இனி பெரும் சவாலாய் இனி இருக்கும்.பறவைகளின் அருமை அப்போதுதான் நமக்கு விளங்கும்.

அன்புடன்,
வை.கலைச்செல்வன்   
E.Mail: [email protected]

கூடுதல் படங்கள்

Image

(படம் வை.கலைச்செல்வன்)

Image

(படம் வை.கலைச்செல்வன்)