இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அந்திப்பொழுது அது.நாள்முழுதும் தகித்த களைப்பில் கதிரவன் ஓய்வுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்த நேரம்..

எத்தனைமுறை சென்றாலும் அன்றுதான் போவதுபோல் புதிய அனுபவம் போலவே இருக்கும், எங்களூர் சேர்வராயன் மலைகள்.

இந்தப்பகுதியில் சாதாரணமாய்ச் சுற்றித்திரிவானே அவன்? தொடர்ந்து பலவாரங்களாக வந்தும் பலனில்லாமல் எனக்கே சலிப்பாயிருந்தது.இதோ! இன்றும் ஏமாற்றமாய்த்தான் திரும்புகிறேன்..இன்னும் எத்தனை நாள் ஆகுமோ?

உருவம் மட்டும் மனதில் பதிந்தால் போதாது.எங்கேனும் புதர் மறைவிலிருந்து ஒலி எழுப்பினாலும் நாம் சரியாகக் கண்டுபிடித்துவிடவேண்டும் என்பதில் குறியாயிருந்தேன்.அதற்காக தொடர்ந்து பலநாள்கள் அப்பறவையின் ஒலியைக் காதொலிக் கருவியில் ஒலிக்கவிட்டு, கேட்டுக் கேட்டு பயிற்சி எடுத்துவந்தேன்.மறந்துவிடக் கூடாது என்பதற்காய் பறவைகளைத் தேடிக்கொண்டிருக்கும் போதெல்லாம் அந்த ஒலியை நானும் ‘ஒப்பொலி’ செய்து பார்ப்பதுண்டு..

சரி..நம் தலையில் என்ன எழுதியிருக்கிறதோ, என்று கிடைக்குமென்றிருக்கிறதோ அன்றுதான் கிடைக்கும் என்று மனதைத் தேற்றி கிளம்ப ஆயத்தமானாலும்..

‘ஒரு நாலெட்டு நடந்து பாத்துட்டு வந்துடேன் கலை’ உள்மனது சொல்ல, தட்டாமல் ஓடையையொட்டியுள்ள புதர்களை மேய்ந்தபடி நடந்தேன்.

நான் எதிர்பார்க்காத இன்ப அதிர்ச்சியொன்று காத்திருந்தது.இருள் கவிழத் தொடங்கியிருந்தமையால் இரைதேடலை முடித்துக் கொண்டிருந்தவன், இலைகள் அடர்த்தியாய் இல்லாத ஒரு கிளையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தான்.

அப்படியே படப்பதிவுக் கருவியை கீழேபோட்டுவிட்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்க ஆசைதான்..என்ன செய்வது? கூச்சலைப் பார்த்து பயந்து பறந்துவிடுவானே?
வெளிச்சம் மிகவும் குறைந்துபோயிருந்தது.படமெடுப்பது சிரமம்தான்.ஆழ்ந்த சுவாசம் ஒன்றில் வெளிக்காற்றை நன்கு உள்ளிழுத்துக் கொண்டு சிறிதும் அதிர்வாகாமல்,கருவியின் விசையை அழுத்தி நமது மாநிலப் பறவையை பதிவு செய்தேன்.

ஆம்.. முதன்முதலில் எனக்கு ஏற்காடு மலைப்பகுதியில் மரகதப்புறாவின் தரிசனம் இப்படிதான் கிடைத்தது.அந்த மகிழ்ச்சி வார்த்தைகளால் விவரிக்க இயலாதது.

இன்னொரு நாள் பணிநிமித்தமாய் அருநூற்று மலைப்பகுதிக்குச் சென்றுவிட்டு கீழிறங்கி வரும் வேளையில், முகத்திற்கு நேரே சில அடி தூரத்தில், அத்தனை வேகமாய் குறுக்கிட்டுப் பறந்து அருகிலிருந்த பாக்குத்தோப்பில் நுழைந்து வளைந்துநெளிந்து பறந்து சென்று சிலிர்க்க வைத்தது.
பாக்குத்தோப்பில் பாக்குமரங்கள் நடப்பட்டிருக்கும் இடைவெளி அறிவேன்.இது செல்லும் வேகத்திற்கு தடைகளாய் குறுக்கே வரும் அந்த பாக்கு மரங்களில் மோதாமல் எப்படி விலகிப் பறக்கிறது என்று உச்சகட்ட ஆச்சரியமடைந்தேன்.

இந்தப் புறா மட்டுமா? எல்லாப் புறாக்களுமே விரைவாய்ப் பறக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன.
என்னென்ன புறாக்களை நம் பகுதியில் பார்க்கலாம்? நான் கண்ட சில புறாக்கள் பற்றிப் பகிர்ந்து கொள்கிறேன்.

1.மாடப்புறா (Blue rock pigeon – விலங்கியல் பெயர் – Columba livia)
2.புள்ளிப்புறா (Spotted dove – விலங்கியல் பெயர்- Stigmatopelia chinensis)
3.சிறிய தவிட்டுப் புறா (Laughing dove – விலங்கியல் பெயர் – Stigmatopelia senegalensis)
4.கள்ளிப்புறா ( Eurasian collared dove – விலங்கியல் பெயர் – Stigmatopelia decaocto)
5.மரகதப்புறா ( Emerald dove – விலங்கியல் பெயர் – Chalcophaps indica)
சாம்பல் நிற உடலில், இறக்கையின் இறுதியில் இரண்டு கறுப்புப் பட்டைகள் காணப்படும்.கழுத்தில் அமைந்துள்ள மினுமினுக்கும் பச்சை,கருஞ்சிவப்பு நிறங்கள் தனித்த அடையாளம்.உயர்ந்த கட்டிடங்கள்,கோயில் மாடங்கள், பாறை இடுக்குகளிடையே வசிக்கக் கூடியது.

Image
மாடப்புறா (படம் – வை.கலைச்செல்வன்)

புள்ளிப்புறா பெயருக்கேற்றபடி (Spotted) கழுத்தின் பின்னால் கருப்புப் பகுதியில் அமைந்த தனித்த வெள்ளைப் புள்ளிகளையுடையது.தலை, மார்பு சாம்பல் நிறங்கொண்டு இறக்கைகள் பழுப்பு, அடர்பழுப்பு நிறங்களில் காணப்படும்.இறக்கைகளில் ஆங்காங்கே இளம்பழுப்பு நிற திட்டுகள் போன்ற அமைப்புள்ளது. இதனை ஊர்ப்புறங்களில் பரவலாக எல்லா இடங்களிலும் பார்க்க முடிகிறது.’குர்ர்ர்ர்…குர்ர்ர்ர்’ என இவை எழுப்பும் ஒலியினை நாம் அடிக்கடி கேட்டிருக்க முடியும்.

Image
புள்ளிப்புறா (படம் – வை.கலைச்செல்வன்)

Image
இணையாய் அமர்ந்து கதை பேசும் புள்ளிப்புறாக்கள் (படம் – வை.கலைச்செல்வன்)

சிறிய தவிட்டுப் புறா பெயருக்கேற்றபடி சிறிய உருவமுடையது.புள்ளிப்புறாவுக்கு கழுத்தின் பின்புறம் தனித்த வெள்ளைப் புள்ளிகளைக் கண்டோம் அல்லவா? அதைப்போல இதற்கு கழுத்து,நெஞ்சுப் பகுதியில் தனித்த பழுப்புநிற புள்ளிகளைக் கொண்டது..

Image
ஓய்வாக – சிறிய தவிட்டுப் புறா (படம் – வை.கலைச்செல்வன்)

Image
இரைதேடும் சிறிய தவிட்டுப் புறா (படம் – வை.கலைச்செல்வன்)

மற்ற நேரங்களைவிட இவை ஒலியெழுப்பும்போது கழுத்துப்பகுதி கொஞ்சம் புடைத்து இந்த அமைப்பு நன்றாகத் தெரிகிறது.உடல் முழுவதும் வெளிர் பழுப்புநிறம். இறக்கையின் ஓரத்தில் இளம்நீல நிறமும் காணலாம்.வறண்ட நிலங்கள்,அறுவடை செய்த நெல்வயல்கள்,காட்டுப் பகுதிகளில் இவை தரையிறங்கி எவரைப்பற்றியும் கவலை கொள்ளாமல் தானியங்கள்,தாவரப் பகுதிகளைக் கொத்தித் தின்பதைக் காணலாம்.

கள்ளிப்புறாவின் கழுத்து,மார்பு, வயிறு இவை நல்ல வெளிர் சாம்பல் நிறம்.இறக்கைகள் அடர் சாம்பல் நிறம்.பெயரில் ஐரோப்பா (Eurasian) என்று வந்தாலும் இதன் பரவல் ஆசியாவிலும் இருக்கிறது.கழுத்தின் பின்பகுதியில் அமைந்துள்ள சிறிய கருப்புப் பட்டையொன்று இதற்கு Collared dove என்று பெயர் பெற்றுத் தந்திருக்கிறது.(கட்டையின் காலரை நினைவில் வைத்துக் கொள்ளவும்).கள்ளிச்செடிகளை இருப்பிடமாகக் கொண்டு இவை வசிப்பதால் தமிழில் கள்ளிப் புறா என்றும் வழங்கப்படுகிறது.இதனையும் இணையாகவே காணலாம்.குக்கூ..குக்..குக்கூ..குக் என முறையான இடைவெளி விட்டு எழுப்பும் ஒலி, முதன்முறை கேட்பவர்களை ஆந்தையோ என்று நினைக்க வைக்கும்..

Image
கள்ளிப்புறா (படம் – வை.கலைச்செல்வன்)

மயில் நம் தேசியப்பறவை என்பதை அறிவோம்.அதேபோல மரகதப்புறா, நம் மாநிலப்பறவை.அதாவது தமிழ்நாட்டின் பறவை.ஆயிரக்கணக்கானோர் பார்வையிட்ட கண்காட்சியொன்றில் நம் மாநிலப்பறவை என்று சொல்லி பஞ்சவர்ணக்கிளி ஒன்றின் படத்தை காட்சிப்படுத்தியிருந்தார்கள்.அதேபோல பள்ளிச்சிறுவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகமொன்றில் மரகதப்புறாவிற்கு பதிலாக வேறொரு புறாவின் படம் அச்சிடப்பட்டிருந்தது.இவ்வளவு புரிதலின்றி இருப்பதைக் கண்டு வருந்தினேன்.

Image
மரகதப்புறா (படம் – வை.கலைச்செல்வன்)

அடர்ந்த காட்டுப்பகுதியில், மூங்கில் காடுகள்,மரங்களில் சுற்றித்திரிபவை மரகதப்புறாக்கள்.மரகதப்பச்சை நிறம் கொண்ட இறக்கைகள் இதற்கு அப்பெயர் பெற்றுத்தந்திருக்கிறது.சாம்பல்நிறத் தலையில் நெற்றியில் தொடங்கி புருவம்போல் செல்லும் வெண்மைநிறம் தனித்த அடையாளம்.கழுத்து, மார்பு பகுதிகள் பழுப்புநிறம்.பவளச் சிவப்பில் அமைந்த அலகு இதற்கு கூடுதல் அழகு.

இது தவிர மேற்குதொடர்ச்சி மலைகளிலுள்ள கிராமங்கள், அதனையொட்டியுள்ள பகுதிகளில் பச்சைப்புறா, சாம்பல் நெற்றிப்புறா, பெரிய பச்சைப்புறா, நீலகிரி காட்டுப்புறா முதலான வகைகளும் உண்டு.

வாழ்நாள் முழுவதும் தனது இணையுடனே வாழ்ந்து கழிப்பவை புறாக்கள்.ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குபவை.சிறுவயதில் புறாவின் துயர்நீக்க தன் சதையை சிபிச்சக்கரவர்த்தி அரிந்து கொடுத்ததாய் கதையொன்றும் உண்டு.

புறா தன் குஞ்சுகளுக்கு பாலைக் கொடுத்து வளர்க்கிறது என்னும் அரிய செய்தியை கானுயிர் கட்டுரையாளர் திரு.இராமமூர்த்தி அவர்களது கட்டுரையில் படித்து வியந்தேன்.மேலும் படிக்கும்போதுதான் பாலூட்டி விலங்குகள் போல் காம்புகளில் சுரக்காமல், சீரணமண்டத்திலேயே ஒரு அங்கமாக இருக்கும் பகுதியில் சேமித்துவைக்கப்படும் தானியங்கள் கூழாக்கப்பட்டு,குறிப்பிட்ட பருவத்தில் ஹார்மோன் மாற்றம் நிகழ்வதால் சுரக்கும் பாலில் அவை ஊறவைக்கப்பட்டு உணவை மென்மையாக்கி வாய்வழியே தன் குஞ்சுகளுக்கு ஊட்டுகின்றன என்பதை அறிந்து ஆச்சரியம் மேலிட்டது.

இலக்கியங்களில் புறாக்கள் பற்றி குறிப்புகள் நிறையவே உள்ளன. ‘புறவு’ என்னும் சொல்லால் குறிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புறாக்கள் சிறு பரல்கற்களைத் தேர்ந்து உன்ணும் பழக்கம் உடையன என்பதை,
“பொறிவரிப் புறவின் செங்கால் சேவல்
சிறுபுன் பெடையொடு சேட்புலம் போகி
அரிமண லியவிற் பரல்தேர்ந் துண்டு
வரிமரல் வாடிய வானீங்கு நனந்தலை”
என்னும் அகநானூற்றுப் பாடலால் அறியலாம்.மரபுப்படி பறவைகளில் ஆணை ‘சேவல்’ என்றும், பெண்ணை ‘பெடை’ (பெட்டை) என்றும் அழைக்கவேண்டும் என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.(புதிதாய் வாசிப்போர் குழம்பி விடக்கூடாது என்பதால் நான் ஆண்பறவை, பெண்பறவை என்னும் சொற்களைக் கையாளுகிறேன்.)

ஒரு முறை புள்ளிப் புறாவொன்று தன் இணையுடன் சேரும் காட்சியைப் படமெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது.பெண் புறா அதன்போக்கில் தரையில் முனைப்பாய் இரைதேடிக் கொண்டிருக்க ஆண் புறா (நம் வீட்டில் வளர்க்கும் சேவல் , பெட்டைக் கோழிக்கு அழைப்பு விடுப்பதைப் போல) பெண்புறாவைச் சுற்றிச் சுற்றி வந்து சின்ன சின்ன அசைவுகளை அரங்கேற்றியது.ஆண் புறாவின் அழகிய உடல்மொழி எனக்கு நடனம் போல தோன்றியது. “இப்படியே விட்டால் நம்மை இரைதேடவே விடமாட்டான்” என்று நினைத்ததோ என்னவோ பெண்புறா ஒருசமயத்தில் முட்டைகளை அட்டைகாப்பதுபோல அமர்ந்து கொள்ள, பூவிலிருந்து நிசப்தமாய் வண்ணத்துப்பூச்சி தேனெடுப்பதுபோல ஆரவாரமின்றி அமைதியாய் புணர்ந்து முடித்தது ஆண்புறா.

Image

புள்ளிப்புறாக்கள் புணர்தல் (படம் – வை.கலைச்செல்வன்)

“பிரபஞ்சத்தில் மனிதரிடத்தில் மட்டுமின்றி ஏனைய உயிர்களிடமும் இத்தனை காதல் கொட்டிக்கிடக்கிறதே!” என்றெண்ணியவாறு அவ்விடம் அகன்றேன்.

அன்புடன்,
வை.கலைச்செல்வன்,
Mobile: 96553 00204
E.mail: [email protected],

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *