தொடர் 6: சிறகுகளோடு சில நிமிடங்கள் (மீன் கொத்திகள் (Kingfishers)) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்று நாம் பார்க்கவிருப்பவை மீன் கொத்திகள்..

இலக்கியங்களில் மணிச்சிரல், சிறுசிரல் என்னும் பெயர்களில் மீன்கொத்தி குறிப்பிடப்படும்.சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பதிற்றுப்பத்து,அகநானூறு, ஐங்குறுநூறு ஆகிய நூல்களில் நம்மிடையே இருக்கும் சிரால் மீன்கொத்தியைப் பற்றிய குறிப்பு காணப்படுவதை, முனைவர் ரத்னம் அவர்கள் சான்றுகளோடு தம் நூலில் விளக்குவார்.

“பனிவளர் தளவின் சிரல்வாய்ச் செம்முகை ஆடு சிறைவண் டவிழ்ப்ப” என ஐங்குறுநூறு (பாடல் 447) பாடலில் முல்லை மொட்டினை மீன்கொத்தியின் அலகிற்கு ஒப்பிட்டது சிறப்பு.

நம்மிடையே காணப்படும் சில மீன்கொத்திகளைப் பார்ப்போமா?

1.சிரல் மீன்கொத்தி/ -Common Kingfisher/Small blue Kingfisher (விலங்கியல் பெயர் – Alcedo atthis)

2.வெண்மார்பு மீன்கொத்தி -White-throated Kingfisher (விலங்கியல் பெயர் – Halcyon smyrnensis)

3.பொரி மீன்கொத்தி/ கருப்பு வெள்ளை மீன்கொத்தி -Pied Kingfisher (விலங்கியல் பெயர் – Ceryle rudis)

இவை மூன்றின் பரவலும் இந்தியா முழுமையும் உண்டு.அப்படி இருந்தும் கூட எனது பறவைகள் தேடலில் சிரல் மீன்கொத்தி, வெண்மார்பு மீன்கொத்தியைப் பார்க்கும் அளவிற்கு இந்த கருப்பு வெள்ளை மீன்கொத்தியைப் (Pied kingfisher) பார்க்க முடிவதில்லை.

இங்கு Pied என்ற பதம்பற்றி சொல்கிறேன்.நேரடியாக தமிழ் பொருள் பார்க்கும்பொழுது “பல வண்ணங்களால் ஆன” என பொருள் தந்தாலும், பறவைகளில் Pied என்னும் அடைமொழியில் இருக்கும் பறவைகளை நினைவூட்டிப் பார்த்தோமானால் பெரும்பாலும் உடல் முழுவதும் கருப்பு, வெள்ளை என இரண்டே நிறங்களில் அமைந்த பறவைகளுக்கு மட்டுமே அந்த அடைமொழி வழங்கியிருக்கிறார்கள்.

Pied Harrier, Pied cuckoo, Pied Bushchat , Pied Heron, Pied Lapwing என பல எடுத்துக்காட்டு சொல்லலாம்..எனவே “Pied” என்கிற வார்த்தை குறிப்பெடுத்து வையுங்கள்..அடையாளப்படுத்த உதவும்..

இந்த மூன்று வகை இல்லாம, மேற்குத்தொடர்ச்சி சார்ந்த மலைகிராமப் பகுதிகள்ள இருக்கும் சிறு மீன்கொத்தி (Oriental Dwarf Kingfisher விலங்கியல் பெயர் – Ceyx erithaca) , பெரிய அலகு மீன்கொத்தி/ மலை மீன்கொத்தி (Stork-billed Kingfisher விலங்கியல் பெயர் – Pelargopsis capensis) கடற்கரை சார்ந்த பகுதிகள்ள காணப்படும் கருந்தலை மீன்கொத்தி (Black – capped Kingfisher விலங்கியல் பெயர் Halcyon pileata) இவற்றையும் தமிழகப் பகுதிகளில் காணப்படும் மீன்கொத்திகளாக சொல்லலாம்.

நம்ம ஊர்ப்புறப் பகுதிகளில் காணப்படும் மூன்று மீன்கொத்திகளைப் பற்றி கொஞ்சம் விரிவா பார்ப்போம்.

சிரல் மீன்கொத்தி உருவத்தில் சிறியது ..அழகான பறவை..மேல்பகுதி பளிச்சென்ற நீல நிறம்..வயிற்றுப்பகுதி நல்ல பிரகாசமான பழுப்பு நிறம் வெண்மையும் சில இடங்களில் உண்டு.சிறிய அழகிய கருப்பு அலகோடு, கண்பின் புருவக் கோடாக ஒரு பழுப்புத் திட்டும், தொடர்ந்து வெள்ளை நிற திட்டும் காணப்படும்.இதன் உள் இனமான Alcedo atthis taprobana என்னும் மீன்கொத்தி மற்றொரு உள் இனமான Alcedo atthis bengalensis ஐ விட நல்ல பிரகாசமான நீல நிற இறக்கைகளோடு முதுகுப் பகுதியில் தடித்த வெளிர் வெண்மைக் கோடோடு காணப்படுகிறது.இரண்டாவது பச்சை கலந்த நீல நிற இறக்கை கொண்டுள்ளது.படங்களைப் பாருங்கள் புரியும்..

Image

சிரல் மீன்கொத்தி (Alcedo atthis taprobana) படம்- வை.கலைச்செல்வன்

நீர்நிலை ஒட்டியுள்ள சிறு செடிகள், புதர்களிலும் நீர்நிலைகளில் காய்ந்த போய் வெளியே நீட்டிக் கொண்டுள்ள தாவரக் கிளைகளிலும், இவை தாழ்வாக அமர்ந்து கொண்டு தலை மற்றும் வால்பகுதியை மேலும் கீழும் தூக்கிப்போட்டு அசைப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்..

Image

சிரல் மீன்கொத்தி (Alcedo atthis bengalensis) படம்- வை.கலைச்செல்வன்

சிச்சி…சிச்சி…என்னும் ஒலியெழுப்பும்..நீர்நிலை ஒட்டியே இவ்வகை மீன் கொத்தியைப் பார்த்திருக்கிறேன்.

இரண்டாவதாய் இருக்கும் வெண்மார்பு மீன்கொத்தி பெயருக்கேற்றாற்போல் வெண்மை நிறத் தொண்டை மற்றும் மார்பு உடையது.இறக்கைகள் நீலநிறம், தலை வயிறு அடர் பழுப்பு.அலகு அடர் சிவப்பு.

Image

வெண்மார்பு மீன்கொத்தி படம்- வை.கலைச்செல்வன்

இது பெயருக்குத்தான் மீன்கொத்தி..பெரும்பாலும் இது ஊர்ப்புறத்தே நீர்நிலை அல்லாத இடங்களில் சாதாரணமாய் மின்கம்பிகளில் நாள் முழுவதும் தவம் கிடக்கப் பார்த்திருக்கிறேன்..குறிப்பாய் வயல்வெளிகளின் ஊடே செல்லும் மின் கம்பங்களில் எனக்கு சாதாரணமாய்க் கிடைக்கிறது..அதே போல மீன் மட்டுமல்ல, தவளை, ஓணான், மண்புழு என வகைவகையாய் சாப்பிடுவதைப் பார்த்துள்ளேன்..

Image

வெண்மார்பு மீன்கொத்தி படம்- வை.கலைச்செல்வன்

சமீபத்தில் வேப்பிலைப்பட்டி அருகே ஒரு மின்கம்பியில் சிறு ஓணானோடு அமர்ந்திருந்த வெண்மார்பு மீன் கொத்தி , திடுமெனப் பறந்துசென்று அங்கிருந்த கிணற்றுக்குள் பாய்ந்து, உடனே சுவற்றில் அடித்த பந்துபோல வாயில் ஓணான் இல்லாமல் வெளியே வந்தது. எனது அனுமானம் சரி எனில் கிணற்றின் பக்கவாட்டு சுவர்களில் வங்கு அமைத்து அது சமீபத்தில்தான் குஞ்சு பொரித்திருக்க வேண்டும்..(மீன்கொத்திகள் அனைத்துமே வங்கு அமைத்து குஞ்சு பொரிப்பவை.பஞ்சுருட்டான் பற்றிய கட்டுரையில் உங்களுக்கு வங்கு குறித்து படத்துடன் சொல்லிருப்பது நினைவிருக்கலாம்.) குஞ்சுகளுக்கு இரையூட்டும் நேரமாய் அது இருந்திருக்கும்..அது சாப்பிட நினைத்திருந்தால் நான் பார்க்கும்படியாக மின்கம்பியிலேயே அமர்ந்து உண்டிருக்காதா? 🙂

மூன்றாவதாய் உள்ள கருப்பு வெள்ளை மீன்கொத்தி பெயருக்கேற்றாற்போல உடல் முழுவதும் கருப்பு, வெள்ளை, பட்டைகள் கலந்து காணப்படுவது.கருப்பு அலகுடன், கருப்புநிற கண் பின் புருவங்கள் உடையது.மற்ற எந்த மீன்கொத்திக்கும் இல்லாத அமைப்பாக கருப்பு, வெள்ளைக் கோடுகள் கொண்ட தலை உச்சி மற்றும் கொண்டை கொண்டது.( Crown and crest) . நாம முன்ன வகுப்புகள்ள பார்த்த கொண்டைக்குருவிகள் (bulbuls) மற்றும் கருங்கொண்டை மைனா( Brahminy starling) இவற்றின் சிலிர்த்து நிற்கும் கொண்டைகளை ஞாபகப்படுத்திக்கொள்ளுங்கள்.!

Image

பொரி மீன்கொத்தி/ கருப்பு வெள்ளை மீன்கொத்தி படம்- வை.கலைச்செல்வன்

Image

பொரி மீன்கொத்தி இணை படம்- வை.கலைச்செல்வன்

இதனுடைய தனித்த இரைபிடிக்கும் பண்பு பறவை ஆர்வலர்களை அப்படியே உறைய வைக்கும்.

ஆமாங்க…நீர்நிலை மேற்பரப்பில் 15-20 அடி உயரத்தில் ஒரே இடத்தில் இறக்கைகளை அடித்துப் பறக்கும்.. இரையின் அசைவுகளை அவ்வளவு உயரத்திலிருந்து நுணுக்கமாய் கண்காணிக்கும் .சரியான நேரத்தில் இரையை இலக்காக்கி செங்குத்தான நீர்ப்பரப்பை நோக்கி படுவேகமாய் தண்ணீருக்குள் சென்று மீனை வாயில் கவ்வியபடி மேலே பறந்துபோகும்..

மீனை மட்டுமா? நம்ம மனசையும்தான்.. 🙂 🙂

அடுத்த கட்டுரையில் சந்திப்போம்!

அன்புடன்,
வை.கலைச்செல்வன் ,
E.mail: [email protected]