தொடர் 2: சிறகுகளோடு சில நிமிடங்கள் (ஆள்காட்டிகள்) – ஆசிரியர் வை.கலைச்செல்வன்

இன்னைக்கு நாம பார்க்கப்போற தலைப்பு ஆள்காட்டிகள்.(Lapwings)

நம்மைச்சுற்றியுள்ள ஆள்காட்டிகள் இரண்டுதான்.

எனவே இன்னைக்கு உங்களுக்கு மிகச்சுலபமா இருக்குமென நினைக்கிறேன்.

1.செம்மூக்கு ஆள்காட்டி (Red-wattled Lapwing) விலங்கியல் பெயர்- Vanellus indicus.

2.மஞ்சள்மூக்கு ஆள்காட்டி (Yellow -wattled Lapwing) விலங்கியல் பெயர்- Vanellus malabaricus.

முனைவர் ரத்னம் அவர்கள் “கணந்துள்” என்னும் பொதுப் பெயரையும், மேற்கண்டவற்றை வேறுபடுத்தி அறிய செங்கண்ணி, மஞ்சள் கண்ணி என்னும் அழகிய சொற்களையும் குறிக்கிறார்.

செம்மூக்கு ஆள்காட்டி..பெயரிலேயே இவனுக்கு காரணம் இருக்கு.சிவந்த மூக்குடைய – ஆள்களைக் கண்டால் ஒலியெழுப்பிக் அறிவிக்கும் குணமுடையவன் இவன்..

Image

செம்மூக்கு ஆள்காட்டி

ஆட்களைக் கண்டால் மட்டுமல்ல..தீங்கு செய்யும் இரைகொல்லிப் பறவைகளான கழுகு,பருந்து முதலானவை வந்தால் கூட…

அப்போ மஞ்சள் மூக்கு ஆள்காட்டி?…அதேதான்… மூக்கு மஞ்சள் நிறமுடையதா ?.

தமிழில் மூக்கு என்றாலும், இங்கு நாம் ஆங்கில வார்த்தையான wattle என்பதன் பொருளையும் கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டும்..

தலையில் (குறிப்பாய் பறவையின் அலகில் இருந்து கண் வரை கவனிங்க) அல்லது கழுத்துப் பகுதியில் உள்ள சதைபோன்ற பகுதிக்கு Wattle என்று பொருள் தருகின்றனர்..நமக்கு புரியற மாதிரின்னா வான்கோழி (Turkey) எடுத்துக்கோங்களேன்…அதுக்கு நல்லா தெளிவா சதைப்பகுதிகள் முகத்தில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்..

Image

Image
அலகையும் கண்ணையும் இணைக்கும் சிவப்பு நிறப் பகுதி பாருங்க…அதுதான் wattle

அந்த அர்த்தத்தில் Red wattle, Yellow wattle என்றால் ஆள்காட்டியில் அலகில் இருந்து கண்வரை உள்ள பகுதியை கவனிங்க…சிவப்பு மூக்கு ஆள்காட்டிக்கு சிவந்த நிறமும் ( சதை தொங்குவது கிடையாது) மஞ்சள் மூக்கு ஆள்காட்டிக்கு மஞ்சள் நிறமும் அதே சமயத்தில் சதை தொங்குவது போன்ற அமைப்பும் இருக்கா பாருங்க…(முதல் முறை இந்த மஞ்சள் மூக்கு ஆள்காட்டியின் முகத்தில் உள்ள தொங்கும் மஞ்சள் நிற சதைகளைப் பார்த்துவிட்டு ஏதோ குறைபாடோடு பிறந்துவிட்டது என நினைத்து விட்டேன்)

அவ்வளவுதான்…எளிமையா புரிஞ்சிக்கிட்டீங்க…

இது போக இன்னும் சில கூடுதல் அடையாளங்கள்..

மஞ்சள்மூக்கு ஆள்காட்டி – உச்சந்தலையில் கருப்பு தொப்பி மாட்டின மாதிரி ஒரு அமைப்பு..கண்ணிலிருந்து பின் பிடரிவரை ஒரு வெள்ளைக்கோடு..கருப்பு அலகு…அதிலிருந்து தொங்கிக் கொண்டிருக்கும் மஞ்சள் சதையமைப்பு…நெஞ்சு, இறக்கைகள் வெளிர் பழுப்பு..வயிற்றின் அடிப்பகுதி நல்ல பளிச்சென்ற வெள்ளை நிறம்..

Image
மஞ்சள்மூக்கு ஆள்காட்டி இணை

செம்மூக்கு ஆள்காட்டி- உச்சந்தலையிலிருந்து மார்பு வரை கருப்பு நிறம்..கண்ணின் அருகில் வெள்ளை நிறம் தொடங்கி பக்கவாட்டில் இறங்கி வயிற்றுப் பகுதிக்கு வரும்..சிவந்த வளையம் கொண்ட கண்கள், சிவந்த மூக்கு ஆனால் மூக்கின் நுனியில் கருப்பு..உடலின் மேற்பகுதி நல்ல அடர்பழுப்பு..

Image
செம்மூக்கு ஆள்காட்டிகள்

இந்த அடையாளங்கள் போதும்னு நினைக்கிறேன்..
நம்ம பகுதியில் இவை இரண்டுதான்..

இதுபோக இந்தியாவின் வடக்குப் பகுதியில் ஆற்று ஆள்காட்டி River Lapwing, குளிர்காலத்தில் வந்து போகும் பறவைகளாக Northern Lapwing, Grey-headed Lapwing, Sociable Lapwing, White -tailed Lapwing முதலானவை இருப்பதாக அறிகிறோம்..

நிசப்தமான காடு அல்லதி அமைதியான சூழலில்
டிட்..டி… டிட்ட்டீட்ரி….டிட்ட்டீட்ரி…என்று ஒலியெழுப்பியபடி வட்டமடித்தால் அது செம்மூக்கு ஆள்காட்டிதான்..

சில சமயம் நடு இரவில் 1 மணி, 2 மணிக்கெல்லாம் எங்கள் கிராமப்பகுதியில் இதன் ஒலி வருவதைக் கண்டு “இந்நேரத்தில் இது எவனைப் பார்த்து ஒலியெழுப்புதோ?” என்று குழம்பியபடியெல்லாம் தூங்கியிருக்கிறேன்..

பறவைகள் பார்க்க நான் செல்லும்போது மற்ற பறவைகளோடு ஒப்பிட்டால் இதுவே அதிக அளவில் ஒலியெழுப்பி எச்சரிக்கை செய்கிறது..அத்தனை பறவையையும் எச்சரிக்கை செய்து அலர்ட் செய்துவிடும்..மஞ்சள் மூக்கு ஆள்காட்டி எனது அனுபவத்தில் இப்படி கலவரமாய் கத்துவதில்லை…பதுவிசாய் நடந்து கொள்கிறது..

“படிக்கும் பாடத்தில் கூட கூடு கட்டத்தெரியாத ஒரு பறவை கூறு! ..என்று கேட்டால்கூட வெளிநாட்டுப் பறவைகள் சிலவற்றின் பெயர்தான் சொல்லித்தரப்படுகிறது…நம்மிடையே,நம்முடனே வாழும் செம்மூக்கு ஆள்காட்டியை எத்தனை பேர் விடையாகக் கூறுவோம்?” என்று கூறி வருந்துவார் சூழலியலாளர் திரு.தியடோர் பாஸ்கரன் ஐயா அவர்கள்..

ஆம்…இவர்களுக்கு கூடு கட்டத்தெரியாது…முட்டைகள் தரையிலேயே வைக்கப்பட்டு இலை, சருகுகளை மூடி வைக்கிறது..

Image
ஒற்றைக்காலில் என்ன தவமோ? செம்மூக்கு ஆள்காட்டி

சேலம் கோதுமலை அடிவார கரம்பொன்றில் அமைந்திருந்த வளையில் நன்கு வளர்ந்திருந்த ஒரு ஆள்காட்டி வெளியே வருவதும் பதுங்குவதையும் தொடர்ந்து செய்வதைப் பார்க்க நேர்ந்தேன்.

சிறு விலங்கு, பறவைகளால் இவற்றின் முட்டைக்கு ஆபத்து அதிகம்..50 சதவிகிதம் வெற்றிகரமாக குஞ்சு பொரித்து வெளிவந்தால் கூட பெரிய அதிசயம்தான்…

செம்மூக்கு ஆள்காட்டியைப் பெரும்பாலும் இரைதேடியபடி …காட்டுப் பகுதிகளில்,தரிசு நிலங்களில் ஏரிக்கரைகளில் பார்த்திருக்கிறேன்..

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் ஏற்காடு மலை அடிவாரத்திலுள்ள புது ஏரியில் ஒரு கோடைக்காலத்தில் (முதல் முறையாக தண்ணீருக்குள் வாத்து கணக்காய் அமர்ந்து,) நீருக்குள் முங்கிக் குளிப்பதைக் கண்டு மெய்மறந்து நின்றேன்.

Image

Image
கோடைக்கு இதமாய் குளிக்கும் ஆள்காட்டிகள்

ஆறகளூரில் முதன்முறையாய் செம்மூக்கு ஆள்காட்டி கண்டதும், எங்கள் பகுதிகளில் காண்பதற்கு அரிய மஞ்சள் மூக்கு ஆள்காட்டியை வீட்டின் அருகில் கோயிலுக்குச் சென்றபோது கண்டதும், சாமியிடம் “ஆண்டவா! எங்கயும் போகக்கூடாது…இங்கயே செத்தநேரம் இருக்கணும்” என்று வேண்டிக்கொண்டு குடுகுடென்று ஓடி வந்து வீட்டிலிருந்த கேமராவை எடுத்துச் சென்று படம் பிடித்ததும் எனக்கு மறக்கவியலா நினைவுகள்…!

 

சேலம்- தலைவாசல், கெங்கவல்லி பகுதியில் “ஒட்டதீத்தீ” என்னும் வட்டாரச் சொல்லால் குறிக்கக் கேட்டேன்..ஒருவேளை ஆள்காட்டி எழுப்பும் ஒலியான “டிட்டீட்ரி” மருவியிருக்கலாமோ?

செம்மூக்கு ஆள்காட்டியின் ஒலியைப் பதிவு செய்த வலசையூர் – தொட்டில் ஏரியில் எனக்கு சுவாரசியமான அனுபவம் ஒன்று நிகழ்ந்தது..

ஆள்காட்டி ஒலியைப் பதிவு செய்தபின்பு சற்று தொலைவில் சென்று சீமைக் கருவேல மரமொன்றின் அடியில் அமர்ந்து கொண்டு, புதரின் உள்ளே வருவதும் போவதுமாயிருந்த மயில் உள்ளான்களைப் படமெடுக்க முனைப்புடனிருந்தேன்..

மெல்லிய தேகத்துடன், தாடி வைத்திருந்த ஒருவர் அங்கு வந்து என்னைப் பற்றியும் வந்த நோக்கம் குறித்தும் கேட்டறிந்தார்..

பின்னர் தான் இங்கு அனுமதியுடன் மீன்பிடிக்கும் பணியைச் செய்து வருவதாக அறிமுகம் செய்து கொண்டார்.

ஏரியின் அருகிலேயே வீடு இருப்பதாகக் கூறியவர் இந்த ஆள்காட்டிகள் மிகவும் உதவிகரமாக இருப்பதாகக் கூறி பெருமைப்பட்டார்..எப்படி இருக்க முடியுமெனக் கேட்டமைக்கு அவர் அளித்த பதில் வியப்பாயிருந்தது.

ஒப்பந்த அடிபடையில் மீன் பிடிக்கும் உரிமையைப் பெற்றிருந்தாலும் தான் இல்லாத சமயங்களிலும், நள்ளிரவு நேரங்களில் கூட சிலர் திருட்டுத்தனமாக மீன்களைப் பிடிக்கிறார்கள் என்றும், அவ்வாறு பிடிப்பவர்களைக் கண்டால் ஆள்காட்டி ஒலியெழுப்பி எச்சரித்து, அவர்களை விரட்ட உதவியாயிருக்கிறது என்று பெருமைப்பட்டார்…இப்பொழுது கூட தொடர்ந்து ஆள்காட்டி ஒலி எழுப்பியமையாலேயே என்ன காரணம் என அறிய வந்ததாகவும் கூறினார்..

ஆள்காட்டியால் இப்படியும் நன்மை நடக்கிறதா என வியந்தேன்..

கலைச்செல்வன்,
சேலம்.