தொடர் 12: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சில்லைகள் (Munia’s)) – வை.கலைச்செல்வன்

தொடர் 12: சிறகுகளோடு சில நிமிடங்கள் (சில்லைகள் (Munia’s)) – வை.கலைச்செல்வன்

இன்றைக்கு  நாம் பாக்கவிருப்பவை சில்லைகள்.

சில்லைகள் குட்டியான அழகுப்பறவைகள்.

தினையுண்ணிகள் என்றும் இவற்றை அழைக்கலாம். இவற்றின் அலகின் அமைப்பு சிறுதானியங்களான தினை,கம்பு, சோளம் முதலானவற்றை உண்ணும் வகையில் (சிறிய தடித்த முக்கோண வடிவில்) அமைந்திருப்பதால் இந்த வகை அலகினை தினையுண்ணி அலகு (Grain Eating) என அழைக்கலாம்.

நாம் பார்க்கும், நம்மிடையே வசிக்கும் சில்லைகள் இனங்களாவன:

1.வெண்தொண்டைச் சில்லை(white -throated munia/Indian silverbill – விலங்கியல்  பெயர் – Euodice malabarica)

2.வெண்முதுகுச் சில்லை (white -rumped munia விலங்கியல்  பெயர் – Lonchura striata)

3.கருந்தொண்டைச் சில்லை (Black -throated munia விலங்கியல்  பெயர் – Lonchura kelaarti)

4.புள்ளிச் சில்லை (Scaly-breasted munia விலங்கியல்  பெயர் Lonchura punctulata)

5.கருந்தலைச் சில்லை/ மூவர்ணச் சில்லை (Black – headed munia/ Tricoloured munia விலங்கியல் பெயர் Lonchura malacca)

இவற்றின் பெயர்களைப் பார்க்கும்போது  முந்தைய கட்டுரையில் பறவைகளின் உடல்  பாகங்களை ஆங்கிலத்தில் சொன்னது எவ்வளவு பயனுடையது என நீங்கள் ஊகிக்க முடியும்.

வெண்தொண்டைச் சில்லை (white -throated munia) தொண்டை,கழுத்து, வால்பகுதி வரை வெண்மை நிறம்.இந்த வெண்மை பளிச்சென இல்லாமல் சற்று பழுப்பு தோய்ந்திருக்கும்.உச்சந்தலை தலை முதல் வால் வரை இளம்பழுப்பிலிருந்து அடர்பழுப்பாக கூடிக்கொண்டே போகும்.

Image

வெண்தொண்டைச் சில்லைகள் படம் – வை.கலைச்செல்வன்

                                      Image                வெண்தொண்டைச் சில்லை படம் – வை.கலைச்செல்வன்

Image

வெண்தொண்டைச் சில்லை இணை படம் – வை.கலைச்செல்வன்

வெண்முதுகுச்சில்லை (white -rumped munia) தலைமுதல் மார்பு வரையும், முதுகு,வால்பகுதி வரையும் அடர்பழுப்பு நிறம். மார்பு முதல் பிட்டப்பகுதிவரை நல்ல வெள்ளை.

    ImageImage        வெண்முதுகுச்சில்லைகள் படம் – வை.கலைச்செல்வன்

Image

வெண்முதுகுச்சில்லை இணை படம் – வை.கலைச்செல்வன்

கருந்தொண்டை சில்லையின் (Black -throated munia) தலை, முதுகு , வால் பகுதி அடர்பழுப்பு மார்பு, வயிறு இளம்பழுப்பு.தொண்டையில் உள்ள கருப்புநிறம் இதற்கு கருந்தொண்டைச்சில்லை என பெயர் பெற்றுத்தந்திருக்கிறது.மற்ற எல்லா சில்லைகளையும் சமவெளிப்பகுதியில் பார்த்துள்ளேன்.ஆனால் இவற்றை மலைப்பகுதியில் பெரும்பாலும் காணலாம்.நான் முதன்முதலில் இவைகளை ஏற்காட்டில் கண்டேன்.

Image

கருந்தொண்டை சில்லை படம் : ஏஞ்சலின் மனோ

புள்ளிச்சில்லையானது (Scaly-breasted munia)

தலை, முதுகு, வால் பகுதிகளில் அடர் காவி நிறம் கொண்டும், மார்பு, வயிற்றுப் பகுதிகளில் சிறு சிறு கருப்பு வளையங்களை தனித்த அடையாளமாகப் பெற்றிருக்கிறது.

Image

புள்ளிச் சில்லை  படம் – வை.கலைச்செல்வன்

Image

குளித்துவிட்டு சிறகு உலர்த்தும் புள்ளிச்சில்லை  படம் – வை.கலைச்செல்வன்

Image

புள்ளிச்சில்லை இணை படம் – வை.கலைச்செல்வன்

கருந்தலைச்சில்லை (Black – headed munia/ Tricoloured munia)

பெயருக்கு ஏற்றபடி கருப்பு தலை, வயிற்றில் கருப்பு, குறுக்கே பிரித்து பக்கவாட்டில் விரியும் தடிமனான வெள்ளைக்கோட்டை கொண்டுள்ளது.இறக்கைகள் அடர்காவி நிறம் என மூன்று வண்ணங்கள் பளிச்சென பார்க்கும்போதே தெரிவதால் மூவண்ணச்சில்லை என்னும் பெயரும் இதற்குண்டு.

Image

கருந்தலைச்சில்லை படம் – வை.கலைச்செல்வன்

மேற்கண்ட சில்லைகள் அனைத்தும் குழுவாய் வசிப்பவை.. இந்தியா முழுவதும் இவை பரவலாய் உள்ளன.(கருந்தொண்டை சில்லை நீங்கலாக) . சில்லைகளை எந்த அளவில் பார்த்துள்ளீர்கள் எனத்தெரியாது.ஆனால் கிராமங்களில் விவசாயம் நிலம் வைத்துள்ளவர்களின் வீடுகளிலும், அவர்களது வாசல்களிலும் நிறைய சில்லைகள் திரிவதைக் கண்டிருக்கிறேன்.

புள்ளிச்சில்லைகளும், கருந்தலைச்சில்லைகளும் ஒற்றுமையாய் ஒரு சோளக்காட்டில் விளைந்திருந்த சோளங்களைச் சாப்பிடும் காட்சியை எங்களூரில் சில மாதங்களுக்கு முன்பு பதிவு செய்தேன்.

சில்லை இனங்கள் அனைத்தும் கூடுகட்டி குஞ்சு பொரிப்பவை.கிணற்றின் பக்கவாட்டுச் சுவர்களில் உள்ள துளைகளில் கூட புல் முதலானவற்றைக் கொண்டு கூடமைத்து வசித்து வருவதைப் பார்த்திருக்கிறேன்.

வயல்களின் நடுவே வீடமைத்துக் குடியிருக்கும் விவசாயிகளின் வீடுகளிலும், அவர்களது மாட்டுத்தொழுவம் முதலான இடங்களில் சில்லைகளின் கூடுகளை நிறையவே பார்த்திருக்கிறேன்..

கருவேல மரத்தில் , வைக்கோல் கொண்டு வெண்தொண்டைச் சில்லைகள் கூடமைக்கின்றன..

பாட்டி வீட்டு மாதுளை மரத்திலும் சில்லை இணையொன்று கூடுகட்டி குஞ்சு பொரித்திருந்தது…இரைகொண்டு ஊட்ட வரும் வேளையில் ‘கீச் கீச்’ என கத்துவது அவ்வளவு அழகாயிருக்கும்… சிட்டுக்குருவிகள் போல ( House sparrow) .சில்லைகள் குட்டியாய் அழகாய் இருப்பதால் வேட்டையாளர்களால் பிடிக்கப்பட்டு செயற்கையாய் வண்ணங்கள் பூசி விற்கப்படுகின்றன. ( கலர் கோழிக்குஞ்சுகள் போல).இது வருந்தத்தக்க ஒன்று..தவிர்க்கப்பட வேண்டும்.

அடுத்த கட்டுரையில் சந்திப்போம் நண்பர்களே!

அன்புடன்,

வை.கலைச்செல்வன்

Mobile: 96553 00204,

E.mail: [email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *