“சிட்டு” என்னும் பெயர் பல பறவைகளின் பெயர்களில் பின்னொட்டாய் வருகிறது.
இருந்தாலும் நம்மிடையே மிகச்சாதாரணமாய் சுற்றிக் கொண்டிருக்கும் சில சிட்டுகள் பற்றியே இன்று காணப்போகிறோம்..இவை அனைத்துமே கருப்பு, பழுப்பு,சாம்பல் நிறங்களில் இருப்பதால் திடீரென்று பார்ப்பவற்கு இனம்காண கொஞ்சம் கடினமாயிருக்கும்.
அடிக்கடி இவை நம்மைச் சுற்றி வருவதால் பார்த்த மாத்திரத்தில் இனி நீங்கள் பொத்தம்பொதுவாய் சிட்டு என்று சொல்லாமல் நீங்களும் ஆண் , பெண் வேறுபாடுகூட எளிதில் கண்டுபிடிக்கும் அளவிற்கு இக்கட்டுரையில் சொல்லித்தரப் போகிறேன்..
எளிதில் கண்ணுக்குப் புலப்படும் தன்மை, உருவத்தின் அளவு கொண்டு கீழ்க்கண்டவாறு (சிறியதிலிருந்து பெரியதாக) வரிசைப்படுத்தலாம்…
1.புதர்ச்சிட்டு (Pied Bushchat விலங்கியல் பெயர் -Saxicola caprata)
2.கருஞ்சிட்டு / இந்திய ராபின்
(Indian Robin விலங்கியல் பெயர் – Saxicoloides fulicatus)
3.கொண்டு கரிச்சான் அல்லது குண்டு கரிச்சான்
(Oriental Magpie Robin விலங்கியல் பெயர் – Copsychus saularis)
இந்த மூன்றின் பரவலும் இந்தியா முழுவதும் இருக்கிறது..எனவே இதனை நீங்கள் அடையாளப்படுத்த தெரிந்து கொள்வது மிக அவசியமாகும்..
புதர்ச்சிட்டு – ஆண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
புதர்ச்சிட்டு / கருப்பு வெள்ளை புதர்ச்சிட்டு எல்லா இடங்களிலும் பார்க்க முடியும்..புதர்ச்சிட்டு என்றாலும் புதர்கள் மட்டுமின்றி , வீடுகளில் உள்ள இண்டு இடுக்குகளிலும் வசிப்பதைப் பார்த்துள்ளேன்..ஆணின் நிறம் நல்ல கருப்பு..வால் பகுதியில் மலவாயைச் (vent) சுற்றியுள்ள வெள்ளை நிறம் தனித்த அடையாளம்..
புதர்ச்சிட்டு – பெண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
பெண்பறவை பழுப்பு நிறம் ..ஆங்காங்கே வயிற்றுப்பகுதியில் வெளிர் பழுப்பும் காணப்படும்..இளம்பருவக் குருவியில் காணப்படும் பொரிப்புள்ளிகள் இது வேறுவகை புதுப்பறவையோ என நம்மை குழப்பும்.(காண்க புதர்ச்சிட்டு, இளம்பறவை படம்) .பக்கத்தில் உள்ள ஒரு வீட்டின் செங்கல் சுவர் இடுக்கொன்றில் புதர்ச்சிட்டு இணையொன்று முட்டையிட்டு குஞ்சு பொரித்து அவற்றிற்கு அடிக்கடி புழு பூச்சிகளை பிடித்து உண்ணக் கொடுத்ததைக் கண்டுள்ளேன்.
கருஞ்சிட்டை (Indian Robin) எப்படி புதர்ச்சிட்டிலிருந்து நாம் பிரித்தறிவது? (இரண்டுமே முழுக்கருப்பாய் உள்ளதே!)
ரொம்ப சுலபம்..அளவில் புதர்ச்சிட்டை விட கருஞ்சிட்டு கொஞ்சம் பெரியது.கருஞ்சிட்டின் வால் ‘டிக்’ அடித்தது போல வானத்தைப் பார்த்தபடி இருக்கும்..புதர்ச்சிட்டு அப்படி அல்ல…அதன் வால் நுனி பூமியைப் பார்த்தபடி இருக்கும்…இன்னொரு தனித்த அடையாளம் கருஞ்சிட்டின் வால் பகுதியில் நல்ல தெளிவான செம்பழுப்பு இருக்கும்..(புதர்ச்சிட்டுக்கு வெள்ளை என பார்த்தோம்).
கருஞ்சிட்டு – ஆண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
அவ்வளவுதாங்க..புரிஞ்சிகிட்டீங்க!. பெண் கருஞ்சிட்டு பழுப்புநிறம்.ஆண் போலவே இதற்கும் வாலடியில் செம்பழுப்பு நிறம் காணப்படும்.
கருஞ்சிட்டு – பெண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
கொண்டு கரிச்சான்கள், மேற்கண்ட இரண்டையும் விட அளவில் பெரியவை.தலை, மார்பு கருப்பு நிறமும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறமும் கொண்டது.இவையும் டிக் குறி வடிவில் பெரும்பாலும் வாலை வைத்திருக்கும்.
கொண்டு கரிச்சான்- ஆண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
ஆண் பறவைக்கு கருப்பு வரும் இடங்களில் எல்லாம் சாம்பல் நிறமாய் மாற்றி கற்பனை செய்தால் அதுதான் பெண்பறவை.. கீழே பாருங்கள்.
கொண்டு கரிச்சான்- பெண்பறவை ( படம் – வை.கலைச்செல்வன்)
இனி மூன்றைப் பற்றியும் பொதுவாய் சில கருத்துகள் சொல்கிறேன்..
மேற்கண்ட மூன்று பறவையிலுமே ஆண், பெண்பறவைகளுக்கு இறக்கைகளில் ஒரு வெள்ளை நிறப் பட்டை காணப்படும்..white wing patch என ஆங்கிலத்தில் சொல்வார்கள்.பெண்பறவைகளுக்கு இது தெளிவாய் காணப்படுவதில்லை.அதுபோல என் கிராமப்புற வீட்டருகே புதர்ச்சிட்டு, கொண்டுகரிச்சான் இவைகளை அடிக்கடி பார்த்துள்ளேன்.. ஆனால் கருஞ்சிட்டு கொஞ்சம் நம்மை விட்டு விலகியே வசிக்கிறது..
இவை அனைத்துமே பெரும்பாலும் இணையாகவே இருக்கின்றன..குறிப்பாய் கொண்டு கரிச்சான் தவிர மற்ற இரண்டிலும் ஆண் குருவியைப் பார்த்தால் சில அடி தூரத்திலேயே பெண் குருவியையும் நிச்சயம் பார்ப்பேன்..
ஒப்பிட்டு அறிவதற்காக ஆண், பெண் சிட்டு இரண்டையும் ஒரே படத்தில் வழங்கியிருப்பது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் என நம்புகிறேன்..
இளம்பருவ புதர்ச்சிட்டு புதிதாய் பார்ப்பவர்களுக்கு “இது என்ன புதுவிதமான பறவையினமோ?” என ஐயம் கொள்ளச்செய்யும்..கீழே கவனியுங்கள்..
இளம்பருவ புதர்ச்சிட்டு ( படம் – வை.கலைச்செல்வன்)
சிட்டுகள் அனைத்துமே அழகாய்ப் பாடக்கூடியவை..குறிப்பாய் கொண்டு கரிச்சானின் குரலில் நம் மனதைப் பறிகொடுக்கலாம்.
ஒருமுறை வீட்டிற்கு அருகிலேயே ஜோடி புதர்ச்சிட்டு காலை வேளையில் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.சிறு சிறு புழுக்களை வாயில் கவ்வியபடி வருவதும் அந்த செங்கல் சுவரில் இருந்த சிறு பொந்திற்குள் நுழைவதுமாக இருந்தன..அங்கு நுழைந்தவுடன் கீச் கீச் என்ற ஒலி அதிகமாக இருந்தது…கண்டிப்பாக அவைகள் குஞ்சு பொரித்திருக்க வேண்டும்…அவைகளுக்கு இரையூட்டும் நேரமாக இது இருக்கும்…
மெல்ல அவைகள் இரை கொண்டு வர கிளம்பிய நேரம்…அருகில் சென்று பார்த்தபோது எனது அனுமானம் சரியாக இருந்தது….நான்கு பிள்ளைகள்…நேற்று அல்லது சில நாட்களுக்கு முன்புதான் கண் திறந்திருக்க வேண்டும்…”பொசு பொசு”வென்று இப்போதுதான் முடிகள் முளைக்க ஆரம்பித்திருக்கின்றன…
பிள்ளைகளுக்கு உணவூட்டுவதில் பெற்றோர் பறவைகளுக்கு நிகர் எதுவுமில்லை…
பரபரப்பான காலை வேளையில் எங்கோ பறந்து செல்லும் ….
சில விநாடிகள்தாம்…
வாயில் ஏதேனும் புழு, பூச்சியோடு வரும்…
வாயில் கவ்விக் கொண்டு வரும்போது எக்காரணம் கொண்டும் அவை, ” இந்த உணவு சுவையாயிருக்கிறது, நாம் அடுத்த முறை பிள்ளைகளுக்குக் கொடுக்கலாம்” என நினைத்து அவை தவறியும் விழுங்குவதில்லை…
வாயில் இரையுடன் ஒரு பறவை நீண்ட நேரம் இருப்பின், முதலில் அது குஞ்சு பொரித்திருக்கிறது என்பதை அறியலாம்…
குஞ்சுப் பறவைகள் அவற்றின் எடையைக் காட்டிலும் அதிகமாக உண்பவை…
எனவே பெற்றோர் பறவைகள் பம்பரமாய்ச் சுழன்று கொண்டு வர வேண்டும்…
இன்னொரு விஷயம், பெற்றோர் பறவைகள் திடுமென வந்து இரை கொடுத்துவிட்டு பறப்பதில்லை…
முதலில் உயரமான இடத்தில் இரையுடன் வந்து அமரும்…எதுவும் குறுக்கீடு இல்லை என அது தெரிந்து கொண்டால் மெல்ல அதைவிட உயரம் குறைந்த அடுத்த இடத்திற்கு வரும்..
இப்படியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட படிநிலைகளில் படிப்படியாய் (step by step) (1,2,3,4) சேய்ப்பறவையை சென்றடையும்..
தாய் புதர்ச்சிட்டொன்று இரையூட்டும் காட்சிகள் (படங்கள் – வை.கலைச்செல்வன்)
…எந்த நிலையில் இதில் குறுக்கீடு ஏற்பட்டாலும் பின்னோக்கி பெரும்பாலும். பழைய இடத்திலேயே வந்து அமர்கின்றன..(உற்றுநோக்கலில் கண்டது)
தாய் புதர்ச்சிட்டு ஓடி ஓடி உணவைக் கொண்டுவர , “நானும் சளைத்தவன் இல்லை” என தந்தை புதர்ச்சிட்டும் இரை கொண்டு வரும் காட்சியைக் காண கண்கோடி வேண்டும்..
பறவைகள் பார்க்கத் தொடங்கிய புதிதில் கூடுகட்டி குஞ்சு பொரித்திருந்த புதர்ச்சிட்டுகளை நான் முட்டாள்தனமாக மிக அருகில் சென்று பார்த்துவிட்டேன்..அடுத்த நாளே அதிலிருந்த மூன்று குஞ்சுகளும் பறந்து விட்டன..அதிலொன்று வழிதவறி என் வீட்டிற்குள்ளேயே வந்துவிட்டது.
பணிமுடிந்து வந்த மாலை வேளையில், கோழிக்கூடையில் கவிழ்த்து வைத்திருந்த அந்த குருவிக்குஞ்சைப் பற்றி அம்மா சொல்லவே, நல்லவேளையாக அதனை எடுத்துச்சென்று அதன் கூட்டில் வைத்தேன்..மற்ற இரண்டைப்பற்றி தகவலேதும் இல்லை…இரண்டு நாள் கழித்துப் பார்க்கும் பொழுது அந்த கூட்டில் ஒரு குடும்பம் வாழ்ந்ததற்கான தடயமே இல்லாமல் போயிருந்தது..எனக்கு அழுகையே வந்துவிட்டது…
“எக்காரணம் கொண்டும் பறவைகளைக் கண்காணிப்போர் கூடுகளையோ. முட்டைகளையோ, குஞ்சு பொரித்தபின் அக்குஞ்சுகளையோ கண்டிப்பாகத் தொட்டு கையாளக் கூடாது..” என்று உணர்த்திய நிகழ்வு இது..
இந்தக்கட்டுரை முடிவில் உங்களுக்கு நான் சொல்ல வரும் செய்தியும் இதுதான்…
அடுத்த கட்டுரையில் பார்ப்போம் நண்பர்களே!
அன்புடன்,
வை.கலைச்செல்வன்,
Mobile: 9655300204
E.mail: [email protected]
Super sir..