தொடர் 13: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நாகணவாய்/மைனா) – வை.கலைச்செல்வன்

தொடர் 13: சிறகுகளோடு சில நிமிடங்கள் (நாகணவாய்/மைனா) – வை.கலைச்செல்வன்

“மைனா… மைனா நெஞ்சுக்குள்ளே… ஒரு மைனா மைனா குருவி மனசார பாடுது … மைனாவே….மைனாவே இது என்ன மாயம் ? கொஞ்சும் மைனாக்களே…கொஞ்சும் மைனாக்களே…” இப்படியாக மனதை மயக்கும் மைனா பாடல்கள் திரையிசையில் பலவுண்டு.. அதனாலேயோ என்னவோ மைனாவைப்பற்றி பல கவிதைகளும், பாடல்களும் வெளிவந்துள்ளன.

நம் மனித இனத்துடன் நெருங்கி வாழும் ஒரு பறவையினம் மைனாக்கள்.’நாகணவாய்’ என்னும் பழந்தமிழ் பெயரை மறந்து வடமொழியிலிருந்து வந்த ‘மைனா’ என்னும் சொல்லைப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்…. மூன்று வகை மைனாக்கள் எளிதில் நம் கண்ணுக்குப் புலப்படும்..எந்த சீசனிலும் பார்க்கலாம்.. நான் கண்ட சில மைனாக்களை, எளிதில் பார்க்கும் தன்மை கொண்டு  வரிசைப்படுத்தியுள்ளேன்..

1.Common Myna – மைனா/நாகணவாய்.( விலங்கியல்  பெயர்- Acridotheres tristis)

2.Brahminy Starling – கருங்கொண்டை மைனா /நாகணவாய்.( விலங்கியல்  பெயர்- Sturnus pagodarum)

3.Jungle Myna -காட்டு மைனா (விலங்கியல் பெயர்- Acridotheres fuscus)

4.Lesser Hill Myna – மலை மைனா (விலங்கியல் பெயர்- Gracula indica)

5.Rosy Starling – ரோசா மைனா / சூறைக்குருவி/ சூரமாறி (விலங்கியல் பெயர்- Pastor roseus)

இதில் கடைசியாய் இருப்பது மட்டும் வலசை வருவது..மற்ற நான்கையும் நாம் பார்க்கும் வாய்ப்பதிகம்..அதில் முதல் மூன்று சாதாரணமாய் எல்லோரும் பார்க்கலாம்..

Image

மைனா (படம்- வை.கலைச்செல்வன்)

சாதாரண மைனாவை நீங்கள் மேய்ச்சல் நிலங்கள், கால்நடைகள் அருகில், வீடுகளுக்கு அருகில், வயல்களில் என எல்லா இடங்களிலும் காணலாம்.. நன்றாக ‘ஒப்பொலி’ எழுப்பும்..அதாவது மிமிக்ரி செய்வது போல் குரலை மாற்றி மாற்றி ஒலி எழுப்பும்.. மஞ்சள் கால்கள்,மஞ்சள் அலகு, கண்ணருகில் மைதீட்டியது போன்ற மஞ்சள் அமைப்பு இவை இதன் தனித்த அடையாளம்..உடல் அடர் பழுப்பு நிறம்..

“அசையாமல் இரு” என்று

அறிவுறுத்திவிட்டு,

அலகுக்கு மஞ்சள் வண்ணத்தை

ஆண்டவன் தீட்டுகையில்…

பொறுமையிழந்த மைனா..

“போதும் விடு…புறப்படணும்…”

என்றுகூறி பறக்க

எத்தனிக்கையில்…

சிதறிய மஞ்சள் வண்ணம்

சின்னக் கண்ணை அழகுபடுத்தியதோ…?!?!

இப்படி ஒரு கவிதை  எழுதினேன் சில மாதங்கள் முன்பு..

கருங்கொண்டை நாகணவாய் , தலையில் கருப்பு நிற தொப்பி அணிந்தது மாதிரி இருப்பது இதன் தனித்த அடையாளம்..சில சமயங்களில் அது சிலிர்த்து நம்ம வயசுப்பசங்க ஸ்பைக் கட்டிங் பண்ணியிருப்பது மாதிரி வேடிக்கை காட்டும்…பிடரி வரைக்கும் வந்து “பங்க்” விட்டது போலிருக்கும்..அலகு முழுமையாய் மஞ்சளாய் இருக்காமல் அலகின் முதல் பாதி மஞ்சளாயும், தலையை ஒட்டியுள்ள பாதி நல்ல பளபளப்பான நீல நிறமாயும் இருக்கும்..இறக்கைகள் வெள்ளைகலந்த வெளிர் பழுப்பு நிறத்திலும் கழுத்து, வயிறு ஆரஞ்சு கலந்த பழுப்பு நிறத்திலும் இருக்கும்…படங்களைப் பார்த்தால் தெளிவாகும்..

Image

கருங்கொண்டை நாகணவாய் (படம்- வை.கலைச்செல்வன்)

Image

கருங்கொண்டை நாகணவாய் இணை  (படம்- வை.கலைச்செல்வன்)

காட்டுமைனா , நம் ஊர்ப்பகுதியில் சுற்றித்திரியும் மைனா போல் இருந்தாலும் பளிச்சென தெரியும் அடையாளமாய் கண்ணருகில் தீட்டிய மஞ்சள் மை காட்டு மைனாவிற்கு இருக்காது..அலகின் மேல் பகுதியுல் குத்திட்டு சிலிர்த்து நிக்கும் சில முடிகள்  இதன் தனித்த அடையாளம்..உடலின் நிறம் கருப்பு, அடர் சாம்பல், வெளிர் சாம்பல் என தலையிலிருந்து வால் வரை அமைந்திருக்கும்..

Image

காட்டுமைனா (படம்- வை.கலைச்செல்வன்)

மேற்கண்ட மூன்று மைனாக்களையும் நீங்கள் பார்த்தவுடன் இனம்காண முடியும்…

நான்காவதாய் உள்ள மலை மைனா, சாதாரண மைனாவைவிட உருவில் கொஞ்சம் பெரிது..கண் அருகில் கீழே ஒரு மஞ்சள் புள்ளியினையும், பிடரி வரையில் மஞ்சள் நீட்சியினையும் கொண்டு, மேற்குத்தொடர்ச்சி மலையினை இருப்பிடமாகக் கொண்டுள்ளது. இவ்வகை மைனாக்கள் நன்கு பழக்கப்படுத்தப்பட்டால் கிளிகள் பேசுவதைப் போலவே நன்கு பேசுகின்றன என்னும் காரணத்தால், பிடிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுகின்றனவாம்..

ஐந்தாவதாய் உள்ள ரோசா மைனாக்கள் / சூறைக்குருவிகளை அம்மாப்பேட்டை குமரகிரி ஏரிப்பகுதிக்குள் அமைந்துள்ள கொடுக்காய்ப் புளி மரங்களில் பெருங்கூட்டமாய் (நூற்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில்) சில ஆண்டுகளுக்கு முன் அமர்ந்திருக்கக் கண்டேன்..இது பருவத்திற்குமட்டும் தென்பகுதிக்கு வந்து செல்வதால் இதையும் நம்மில் பெரும்பாலோனோர் கண்டிருக்க வாய்ப்பில்லை..

Image

ரோசா மைனாக்கள் (படம்- வை.கலைச்செல்வன்)

எங்கள் கிராமப் பகுதிகளில் காய்ந்த தென்னை/பனை மரங்களில் உள்ள பொந்துகளில் குஞ்சு மைனாக்கள் அம்மா மைனா கொண்டு இரையை உண்பதற்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக் கிடக்கும் காட்சியினை கண்டு ரசித்திருக்கிறேன்.. பல இடங்களில் காய்ந்த தென்னைகளில் கிளிக்கும் , மைனாவுக்குமாய் சின்னச் சின்ன சண்டைகளைப் பார்த்திருக்கிறேன்…

Image

குஞ்சு மைனாக்கள் உணவிற்காய் காத்திருக்கும் காட்சி

(படம்- வை.கலைச்செல்வன்)

Image

குஞ்சு மைனாக்கள் உணவிற்காய் காத்திருக்கும் காட்சி

(படம்- வை.கலைச்செல்வன்)

மைனாக்களில் ஏற்படும் சண்டை பெரும்பாலும் எல்லை (Territory) மீறுவதால் அமையும் என படித்துள்ளேன்..தனது எல்லையை தெளிவாக அமைத்துக் கொண்டு வாழும் என்பதையும், அதனை மீறி அந்நியர் வரும்போது சண்டை நடக்கும் எனவும் கருதுகிறேன்…பெரும்பாலும் இந்த சண்டைகளில் இரண்டு மைனாக்கள் சேர்ந்து ஒரு மைனாவை நையப்புடைப்பதைப் பார்த்திருக்கிறேன்.. மற்ற மைனாக்கள் “சண்டையை விலக்கலாமா ? வேண்டாமா? ” என்ற ஐயத்துடனேயே பின்னாடியே தாவித்தாவி ஓடிக்கொண்டிருக்கும்.யாரேனும் வழிப்போக்கர்கள் சென்றாலும் சட்டை செய்யாது தனது கடமையே கண்ணாய் சண்டையிட்டுக் கொண்டிருக்கும்.(சேவல்கள் இரண்டு சண்டையிட்டால் விலக்கி விடும்போது விலக்கி விடுபவன் மனிதன் என்பது அறியாமலே அவை தம் சண்டையை தொடரும்..சண்டைக் கோழிகள் அல்ல…சாதாரண சேவல்களே அப்படித்தான்..என் அனுபவத்தில்)

Image

Image

ஆக்ரோஷமான மைனாக்கள் சண்டை (படம்- வை.கலைச்செல்வன்)

தொட்டபெட்டா மலைப்பகுதியில் மைனா போன்றே தோற்றமளிக்கும் பறவையினம் ஒன்று உள்ளது..அவை மைனாக்கள் அல்ல.. Indian Black bird என்னும் பறவையினமாகும்….

Image

மைனா போன்றே தோற்றமளிக்கும் Indian Black bird (படம்- வை.கலைச்செல்வன்)

ஒரு சமயம் சிறுவன் ஒருவன் வேட்டையாடி விளையாடுவதற்காய் கால்களில் கயிறு கட்டி வைத்திருந்த மைனா ஒன்றினை , அவன் கால்களில் விழாத குறையாய் கேட்டும் தரவில்லை..

Image

காப்பாற்றப்பட்ட மைனா (படம்- வை.கலைச்செல்வன்)

இறுதியில் கொஞ்சம் அவனுக்குக் காசு கொடுத்து வாங்கி ஏரிப்புதூர் அருகே உள்ள தேங்கல்மலைப் பகுதியில் விட்டு வந்தேன்… அவனுடைய மகிழ்ச்சியைக் குலைத்துவிட்டோம் என்றெண்ணினாலும், ஒரு பறவையின் வாழ்க்கையைக் காப்பாற்றி அதனைச் சுதந்திரமாக்கினோம் என்ற மகிழ்ச்சியில் அது அடிபட்டுப் போனது..

அன்புடன்,

வை.கலைச்செல்வன்,

Mobile: 96553 00204,

E.Mail: [email protected]

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *