Siraikkul olinthirukkum natchathirangal சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்

சிறைச்சாலை ஓர் இருண்ட உலகம். உயர்ந்த மதில்களுக்குள் என்ன நடக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிவதில்லை. தெரிந்துகொள்ள வெளியுலகம் மெனக்கெடுவதும் இல்லை. இதற்கு எதிர்மறையாக சிறை வளாகத்துக்குள் கட்டுண்டு கிடக்கும் தண்டனைக் கைதிகள் வெளியுலகு குறித்த சிந்தனைகளுடனேயே வாழ்நாட்களைக் கழிப்பது என்னவொரு முரண்! மதுரை மத்திய சிறைச்சாலையில் பல்லாண்டுகளும் தமிழ்நாட்டின் மற்ற சிறைகளில் சில ஆண்டுகளும் காவலராக முப்பதாண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள மதுரை நம்பி தன் பணிக்கால அனுபவங்களை ‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ என்ற பெயரில் எழுத்தோவியமாகத் தீட்டி வருகிறார். இந்நூலின் இரண்டாம் பாகம் தற்போது வெளிவந்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. மதுரை நம்பி சிறைச்சாலைக்குள் நம் கைகளைப் பிடித்துக் கூட்டிச் செல்கிறார். சிறைக்குள் நடக்கும் பல நிகழ்வுகளையும் உணச்சிப் பூர்வமாக அவர் சொல்லிச் செல்லும்போது நம் நெஞ்சம் நெகிழ்கின்றது. மூட்டா சங்கத்தின் சிறை நிரப்புப் போராட்டங்களில் கலந்து கொண்டு மதுரை மத்திய சிறையில் நான்குமுறை சிறைவாசம் பெற்றிருந்தமையால் மதுரை நம்பி விளக்கிச் செல்லும் சிறை வளாகம் எனக்கு நன்கு பரிச்சயமானதாகவே இருக்கிறது.

‘சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்’ முதல் பாகத்தில் காணப்படும் விறுவிறுப்பு இரண்டாம் பாகத்திலும் வெளிப்படுகிறது, பல்சுவையுடனான இருபது கட்டுரைகளின் இத்தொகுப்பில் மதுரை நம்பி பணிக்கால அனுபவங்களை மிகவும் நேர்மையாகவும், நேர்த்தியாகவும் கூறுகிறார். “Sometimes fact is stranger than fiction” என் ஆங்கிலத்தில் ஒரு சொலவடை உண்டு. அதேபோல் மதுரை மத்திய சிறைச்சாலைச் சம்பவங்களும் நம்ப முடியாத அளவிற்கு பிரமிப்பூட்டுவதாக இருக்கிறது.

‘ஒரு பூவின் வாசம்’ கட்டுரை சோகத்துடன் முடியும் ஒரு காதல் காவியமாகிறது. இளம் மனைவியைப் பிரிந்து சிறையில் வாடும் நடராஜனின் துயர்மிகு வாழ்வு கல் நெஞ்சையும் கரையச் செய்யும். நடராஜனும், செல்வியும் தெருவோர வியாபாரிகள். செல்வி பூ வியாபாரி; நடராஜன் பழ வியாபாரி. இருவரும் காதலித்துத் திருமணம் முடித்து அன்னியோன்னியமாக வாழ்கின்றனர். ஒரு கொடூரமான நாளில் ரௌடிகளுக்கும், கடைக்காரர்களுக்கும் நடந்த சண்டையில் ஒரு ரௌடி இறந்து போகிறான். கொலை வழக்கில் நடராஜன் கைதாகி முதலில் மதுரை சிறையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்படுகிறான்.

விசாரணைக் கைதியாக இருக்கும்போது செல்வி அவனைப் பார்க்க சிறைக்கும் வரும்போது இருவரும் உணர்ச்சிப் பெருக்கத்தில் கதறி அழுவார்கள். கைதிகள் எல்லோரும் சேர்ந்து ஆறுதல் கூறுவார்கள். வழக்கு முடிந்து நடராஜன் ஆயுள் தண்டனை பெற்று தண்டனைக் கைதியாகிறான். சிறையில் அவனைப் பார்க்க வரும் செல்வி ஒரு முறை நடராஜனுக்கு புதுச் சட்டை, வேஷ்டியைக் கொடுத்துச் செல்கிறாள். செல்லுக்குள் வந்து செல்வி கொடுத்துச் சென்ற சட்டையின் பையில் அவள் தாலியைக் கழற்றிக் கொடுத்திருந்தாள். அதிர்ச்சி அடைந்த நடராஜன் கதறி அழுகிறான். பின்னர் அமைதியடைந்து செல்வி அவள் விரும்பிய வாழ்வை வாழட்டும். அவளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று உறவினர்களுக்குச் சொல்லி விடுகிறான். செல்வி தற்கொலை செய்து கொண்ட செய்தி சில நாட்கள் கழித்து வருகிறது. நடராஜன் அவளை நினைத்தே நாட்களைக் கழிக்கும்போது மேல்முறையீட்டில் அவனுக்கு விடுதலை கிடைக்கிறது. செல்வி இல்லாத உலகில் அவள் கழற்றிக் கொடுத்த தாழியுடன் வெளிவருகிறான் பித்துப்பிடித்தவானக.

தொகுப்பின் முதல் இரண்டு கட்டுரைகளில் மதுரைச் சிறையில் அடைக்கப்பட்ட ஈழப் போராளிகள் பலரைப் பற்றி அறிய வருகிறோம். இலங்கை பொதுவுடமைக் கட்சியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்ற போராளி விடுதலைச் சிறுத்தைகள்போல் அல்லாமல் மார்க்சிய கண்ணோட்டத்தில் ஈழத் தமிழர் பிரச்சனையை விளக்குவது இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டை ஒத்ததாக இருக்கிறது. “இன்றைக்கு தமிழ் இளைஞர்கள் பல குழுக்களாக ஆயுதங்கள் ஏந்திப் போராடுகிறார்கள் என்றால், அதற்கு முன்னோடியாகச் செயல்பட்டவன் ஒரு சிங்கள் இளைஞன் என்பதை மறக்கக்கூடாது. அவன் பெயர் ரோவன விஜய வீரா. 1971இல் அவனைப் பின்பற்றி ஏராளமான சிங்கள இளைஞர்களும் தமிழ் இளைஞர்களும் முதலாளித்துவ இலங்கை அரசைச் தூக்கி எறிய ஆயுதம் ஏந்திப் போராடினார்கள். அப்போது இலங்கையின் வடக்குப் பகுதி தமிழர்களிடமிருந்து போதிய ஆதரவு கிடைக்காமல் போனது. அந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு இந்திய ராணுவம் வந்தது. 17,000 சிங்கள, தமிழ் இளைஞர்களை ரத்தக் களரியில் மூழ்கடித்துக் கொன்றனர். அந்தப் போராட்டத்தை வடக்கில் இருந்த தமிழர்கள் ஆதரவு அளித்து அது வெற்றி பெற்றிருக்கும் பட்சத்தில் இன்றைய தமிழ் மக்களுக்கு நல்ல தீர்வு கிடைத்திருக்கும்”. என்று பாலசுப்பிரமணியம் நீண்ட உரையை சிறைக்குள் ஆற்றிட அவரைச் சுற்றியிருந்த கைதிகள் அனைவரும் ஈழப் பிரச்சனை குறித்த மார்க்சியப் பார்வை அறிந்து வியக்கிறார்கள்.

”வீண்போகும் தியாகங்கள்” கட்டுரையில் 1960களில் நக்சல்பாரி இயக்கப் போராளிகளால் இந்திய சிறைச்சாலைகள் நிரம்பின. ஆற்றல் மிக்க அந்தப் போராளிகளில் சிலர் கொலை வழக்குகளில் கைதாகி மதுரை சிறையிலும் இருந்துள்ளனர். அவர்கள் இருந்த எல்லா சிறைகளிலும் மார்க்சியம் குறித்த தத்துவார்த்த விவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன. இதன் விளைவாக தோழர்கள் தியாகு, லெனின் போன்றோர் நக்சல் பாதை தவறானது சிபிஎம்மின் கட்சித் திட்டமே சரியானது என்றறிந்து அக்கட்சியைத் தேர்ந்தெடுத்தனர் என்று அன்றிருந்த நிலைமையை மிகச் சரியாக மதுரை நம்பி சான்றுகளுடன் சொல்கிறார்.
மதுரை நம்பி சிறைக்குள் ஒரு ’கம்யூனிஸ்ட்’ காவலராகவே பணியாற்றியுள்ளார். உயரதிகாரிகளும் இதை அறிந்தேயிருந்துள்ளனர். சிறையில் நக்சல் இயக்கப் போராளிகள் பாலமுருகன், விவேக், மகாலிங்கம் போன்றோருடன் மதுரை நம்பி மார்க்சியம் குறித்து ஆழ்ந்த விவாதங்கள் நடத்தியுள்ளார். விசாரணைக் கைதியாகவே சிறையில் ஐந்தாண்டுகள் இருந்த தோழர் விவேக்கிடம், “உங்கள் இயக்கத்தில் பல தியாகிகள் உருவாகிக் கொண்டே இருக்கிறார்கள். நீங்களும் உங்கள் லட்சியத்திற்காக பல தியாகங்களைச் செய்கிறீர்கள். ஆனால் சமூகத்தில் ஏதேனும் சிறு மாற்றத்தையோ அல்லது மக்களைத் திரட்டுவதில் ஏதாவது முன்னேற்றமோ ஏற்பட்டுள்ளதா? இதே உத்வேகத்தோடு மக்கள் மத்தியில் உங்களைப் போன்றவர்கள் வேலை செய்திருந்தால் எவ்வளவு பெரிய சமூக மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கு முடியும்” என்று மதுரை நம்பி கேட்டதும் தோழர் விவேக் திகைத்து நின்றுள்ளார். இருப்பினும் இவர்களின் தியாக மிக்க அர்ப்பணிப்பு வாழ்வையும், லட்சிய உறுதியையும் ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் பின்பற்ற வேண்டியவை என்பதில் எந்தத் தயக்கமும் இல்லை என்றும் மதுரை நம்பி வியந்து பாராட்டுகிறார்.

மனித மனம் புரிந்துகொள்ள முடியாத வினோதம்! ’குப்பைக் கவிஞன்’ என்ற கட்டுரையில் மதுரை சிறையில் இருந்த கவி கண்ணன் என்ற கைதியின் கவித்துவத்தைப் பாராட்டுகிறார். சிறையின் அறிவிப்புப் பலகையில் ஒரு மார்ச் மாதம் எட்டாம் நாள் “பெண் தூங்கும் எரிமலை/ விழித்தால் விடுதலை/ என்று எழுதி அனைவரையும் அசத்தினான் அந்தக் குப்பைக் கவிஞன். ஆனால் அதே குப்பைக் கவிஞன் ஒரு முறை பரோலில் போய்விட்டு திரும்பும்போது அவனுடன் வந்த அவன் மனைவி சிறைக் கண்காணிப்பாளரிடம் கதறி அழுது, “அய்யா! என் கணவனை எந்தக் காரணத்துக்காகவும் பரோலில் விடாதீர்கள்! இதோ பாருங்கள் அவர் எனக்குச் செய்த கொடுமைகளை” என்று சொல்லி உடல் முழுவதும் இருந்த தீக்காயங்களைக் காட்டினார். ஒரு கவிதை எழுதுபவனால் எப்படி இவ்வளவு வன்முறையாளனாக இருக்க முடியும் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டதை விளக்குகிறார். எந்த மனதுக்குள் என்னவிருக்கும் என்று யாரறிவார்? மதுரை நம்பி கவிஞராகவும் சிறைக்குள் வலம்வந்துள்ளார். இவரின் கவிதைகளை மெச்சி சிறை அதிகாரிகள் பாராட்டியுள்ளனர். பொருத்தமான பாரதியார், பாவேந்தர் கவிதை வரிகளை சிறையில் விழாக்கள் நடக்கும்போது எழுதிவைத்து மதுரை நம்பி அசத்துவதுண்டு. ஒரு முறை மார்ட்டின் நியோ மெய்லர் என்ற ஜெர்மன் பாதிரியாரின் “அவர்கள் முதலில் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடி வந்தார்கள்……” என்ற கவிதை வரிகளைப் பாடி அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளார்.

‘எப்படி வந்தது எட்டு மணி நேரம்?’ என்ற கட்டுரையில் காவலர்கள் ரகசியமாக சங்கமாக இணைந்ததால்தான் காவலர்களுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பது உறுதியானது என்று சப்தமின்றி நடந்த ஒரு போராட்டத்தை விளக்குகிறார் மதுரை நம்பி. இப்போராட்டத்தின் நாயகனாக இருந்த சி.பி.ராஜேந்திரன் என்ற காவலரை மனதாறப் பாராட்டுகிறார். போராட்டத்தை முன்னெடுத்த சி.பி.ஆருடன் இணைந்து மதுரை நம்பி உட்படப் பல காவலர்களும் செய்த முயற்சியால்தான் வெற்றி கிட்டியது என்பதை இன்றைய தலைமுறைக் காவலர்களுக்குத் தெரிவிக்கிறார். எட்டு மணி நேர வேலை ஏதோ அதுவாக வந்தது என்று இளைய தலைமுறை நினைக்கக் கூடாதல்லவா?

”உளவுக்கும் தொழிலுக்கும்….” என்ற கட்டுரையில் சிறைத்துறையில் சமீப காலங்களில் வந்துள்ள நல்ல மாற்றங்கள் குறித்துப் பேசுகிறார். சிறைத்துறை தற்போது ‘சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை” என்றழைக்கப்படுவதே நல்ல மாற்றம்தானே. சிறைத்துறையில் சீருடைப் பணியாளர்களாக இளம் அதிகாரிகள் முதல் உயர் அதிகாரிகள் வரை பெண்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது மற்றொரு நல்ல மாற்றமாகும் என்கிறார். சிறை உற்பத்திக் கூடங்களில் ஊறுகாய் முதல் மக்களுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. சிறை அங்காடிகள், நர்சரி கார்டன்கள், பெட்ரோல் பங்க் என்று சிறைத்துறையில் ஒரு தொழிற் புரட்சியே நடந்துவருவதைச் சுட்டிக்காட்டுகிறார். சிறை நூலகங்களும் இன்று சிறப்புடன் நடக்கின்றன. எழுத்தாளர் இமயம் இந்து தமிழ் திசை நாளிதழில் சிறை நூலகங்களின் அவலநிலை குறித்து கட்டுரை எழுதியது பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டது. இமயம் கட்டுரை எழுதுவதற்கு மதுரை நம்பியிடமிருந்துதான் தரவுகள் பெற்றுள்ளார்.

சிறைகளின் மிகப் பெரும் துயரம் வளாகத்துக்குள் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, கத்தி, செல்போன் போன்றவை எப்படியேனும் நுழைந்துவிடுவதாகும். சிறைக்காவலர்களின் துணையின்றி இது சாத்தியமே இல்லை என்பதால் சிறைக்காவலர்களைக் கண்காணிக்க சிறைக்குள் இன்று வலம் பொருந்திய உளவுத்துறை இயங்குவதாகும். ’ஆப்பரேஷன் செல் டீம்’ என்றும் ’க்யுக் ரிகவரி டீம்’ என்றும் உளவுப் படைகள் மத்திய சிறைச்சாலைகளின் நியமிக்கப்பட்டு சிறையில் இருக்கும் தாதாக்களின் கொட்டத்தை அடக்க முயற்சிகள் நடப்பதைக் குறிப்பிடுகிறார்.

சிறைச்சாலைகளுக்குள் புதைந்து கிடக்கும் இன்னும் சில மர்மங்களை மதுரை நம்பி தன் நேர்த்தியான கட்டுரைகள் மூலம் வெளியுலகிற்கு கொணர்ந்திடுவார் என்று நம்புவோம்.

 

                  நூலின் தகவல்கள் 

நூல் : சிறைக்குள் ஒளிரும் நட்சத்திரங்கள்” – பாகம்-2

ஆசிரியர் : மதுரை நம்பி

வெளியீடு : டிஸ்கவரி புக் பாலஸ் (பி) லிட்., சென்னை-78

நூலை பெற :  44 2433 2924 https://thamizhbooks.com/product/siraiyil-olirum-natchathirangal/

விலை : ரூ.250/-

 

நூலறிமுகம்  எழுதியவர் 

பேரா.பெ.விஜயகுமார்

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *