சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)


சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் முதல் பாகத்தின் பெருவெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் வெளிவந்துள்ளது. சினிமாவில் தான் ஒரு படம் வெற்றியடைந்தால் அதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் வெளியிடப்படுவது உண்டு. இலக்கிய உலகிலும் அது பரவியிருப்பது மகிழ்ச்சியான தொன்று. எழுத்தாளர் நம்பி அவர்கள் ஒரு கட்டுரை தொடரை கூட கதை போல சுவாரசியமாக சொல்வதில் வல்லவர் என்பதை பாகம் ஒன்றில் வாசித்தோம். 

அது இரண்டாவது பாகத்திலும் தொடர்வது சிறப்பானதொன்று. நாமறியாத உலகொன்றில் பயணித்து காக்கி சீருடைக்காரர் வெள்ளை சீருடை அணிந்தவர்களின் கறைபடிந்த கதைகளை மனித நேயத்தோடு அணுகி சட்டம் கிழித்த கோடுகளுக்குள்ளாகவே பயணித்து குற்றவாளிகளுக்குள் இருக்கும் கண்ணீர் கதையை எழுத்தாக்கம் செய்திருக்கிறார். நீண்டு கிடக்கும் பெரிய மதில்சுவர்களின் மீதேறி பெரும் பாம்பென படர்கிறது எதிலிகளின் வாழ்வு.

மொத்தம் 20 அனுபவ கதைகள் ஒரு சில கட்டுரைகள் சம்பவங்களாக வந்து போவதால் சுவாரசியம் ஏதுமில்லை. ஆனால் எனது மனதை பாதித்த கட்டுரை இரண்டு எந்திரங்களுக்கு இனம் ஏது இதயம் ஏது இலங்கைத் தமிழர் பிரச்சனையில் அன்றிலிருந்து இன்று வரை அதை உணர்ச்சிகரமான பிரச்சனையாக மாற்றி ஆதாய அறுவடைகள் செய்தவர்கள் தான் அநேகம் பேர். அதை அறிவுப்பூர்வமாக அணுகி இருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இவ்வளவு பேரவலம் நிகழ்ந்திருக்காது. அது இன்று வரை தொடர்வதற்கு பிரச்சனைகளை விசிறி விடும் இனவெறியர்கள் தான் காரணம். 

No photo description available.
                ஆசிரியர் : மதுரை நம்பி

மதுரைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சிங்களக் கைதிகளை விடுவிக்க சிங்களப் பிரதிநிதி ஒருவர் முயற்சிப்பதும் பணம் ஒன்றே பிரதான மென்று வாழும் ஆயுதம் தாங்கிய மிருகமொன்று பணத்தை பிடிங்கித் தின்பதும் கடைசியில் கொடுக்க பணம் இல்லாத போது அவரையே சுட்டு வீழ்த்துவதும் அதிகார வர்க்கங்கள் நினைத்தால் எவர் வாழ்விலும் குழி வெட்ட முடியும் என்பதை மனம் பதைபதைக்க கூறிச் செல்கிறார். ஒரு அரசு ஊழியராக இருந்த போதும் அரசின் பக்கம் சாயாமல் நியாயத்தின் பக்கம் நின்று நீதியின் நடுமுள் நடுங்காமல் உண்மைமையை பதிவு செய்திருக்கிறார். எல்லா அரசு அதிகாரிகளும் அலுவலர்களும் தங்கள் கடமையை சீரிய முறையில் செய்யத் துவங்கி விட்டால் உலகம் நேரிய முறையில் நின்று சுழலும்.

நாம் நினைப்பது போல் சட்டம் ஒன்றும் நேரானதல்ல. சாமார்த்தியக்காரர்கள் முன் நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து கிடக்கும் பேரவலத்தை சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகளும் எடைக்கு எடை விற்கும் நீதி வியாபாரிகளும் பெருகிப்போன கால கட்டத்தில், சிறைச் சாலைக்குள் அப்பாவியும், சுதந்திரமாய் சுற்றித் திரியும் குற்றவாளியும் என அவர் அவனல்ல எனும் கட்டுரையில் தண்டனை பெற்ற குற்றவாளி தனக்கு பதிலாக அப்பாவி ஒருவனை உள்ளே அனுப்பி விட்டு ஊர்சுற்றி திரிவதையும் ஒரு பத்திரிக்கையாளர் வாயிலாக அதன் உண்மை வெளி உலகிற்கு வந்து மீண்டும் நீதிமன்றம் வாயிலாக உண்மை குற்றவாளி பிடிபட்டு சிறையிலடைப்பதும் இப்படியெல்லாம் நடக்க முடியுமா எனும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் அரசுத்துறைகளில் மலிந்து கிடக்கும் லஞ்ச லாவண்யங்கள் எதையும் செய்ய வைக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வைக்கின்றது.

அரசு ஊழியர்கள் பல பேருக்கு இன்று அவர்கள் அனுபவிக்கும் சலுகைகள் உரிமைகள் யாவும் யாரால் வந்தது ஒவ்வொரு உரிமைக்கும் பின்னே ஓராயிரம் கூக்குரலின் எதிரொலி இருப்பதை மறந்து விட்டு மிகுந்த சுயநலம் மிக்கவர்களாய் மாறிப்போனார்கள். அந்த வகையில் 8 மணி நேர வேலை குறித்த விரிவான ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் தனி ஒரு நபராக துவங்கி மதுரைநம்பி உட்பட தமிழ்நாட்டில் உள்ள பிற காவலர்களுக்கும் பரவி ஒரு கட்டத்தில் 8 மணி நேர வேலைச் சட்டம் அமுலானதை விரிவாக எழுதி உள்ளார்.

தொடர்ந்து இரட்டை சுழிகள் குப்பைக் கவிஞன் ஒரு பூவின் வாசம் என உள்ளம் நொறுங்கும் துயரச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

மறு வெற்றியை உடனே அறுவடை செய்துவிடும் நோக்கத்துடன் அவசர அவசரமாக வேலை பார்த்திருப்பது முடிவடையாமல் தொக்கி நிற்கும் கட்டுரைகளில் இருந்து உணர்ந்து கொள்ள முடிகிறது அதிலும் ஏராளமான எழுத்துப் பிழைகள் வேறு கண்களை உறுத்திக்கொண்டே இருக்கின்றது சற்று பொறுமையை கடைபிடித்திருந்தால் முதல் பாகத்தின் வெற்றியை முறியடித்திருக்கலாம் இரண்டாம் பாகம் இரண்டாமிடம் தான் எழுத்தாளர் மதுரை நம்பி அவர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்…


நூலின் தகவல்கள் 

நூல் :சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – பாகம் 2

ஆசிரியர் : மதுரை நம்பி

வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்

பக்கம் : 208

விலை : ரூ.250

 

அறிமுகம் எழுதியவர் 

செ. தமிழ்ராஜ்
வண்டியூர்

மதுரை

 இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *