சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் – நூல் அறிமுகம்
விசித்திர மனிதர்கள் நிறைந்தது தான் இந்த உலகம் என்றால், அந்த விசித்திர மனிதர்களையெல்லாம் வடிகட்டினால்! கிடைக்கும் விடைதான் ‘சிறையில் ஓளிரும் நட்சத்திரங்கள்’.
செய்த தவறை எண்ணியோ, வருந்தியோ சிந்தை கலங்கிடும் சிறை மனிதர்களில், சில மனிதர்கள் நட்சத்திரங்களாகவும் ஒளிர்கிறார்கள்.
கோபம், சில நொடிதான் மின்னி மறையும் எரி நட்சத்திரம் போல் சிறையில் வந்து விழுகிறார்கள், அனலில் விழுந்த இரும்புத் துண்டாய். அடித்து நொறுக்கி உருப்படியாக்கி வெளியே தள்ளுகிறது சிறை. அதற்கும் இதற்குமான இடைவெளியில் சில இரும்புத் துண்டுகள் ஒளிர்கிறது நட்சத்திரங்களாக.
அந்த அனல் படுத்தும் பாட்டிலும், சில இரும்புத் துண்டுகள் குதூகலமாய் அதகளமும் செய்கிறது. அப்படியான ஒரு ஆள் தான் கில்லாடி கிருஷ்ணன். சிறைக்குள் தான் இருக்கிறான். ஆனால், படுபயங்கர நியாயவாதியாக இருக்கிறான்.
சிறையின் வரலாற்றில் என்றும் காணாத ஒரு போராட்டம். அந்தப் போராட்டத்தில் தலைமையும் யோசனையும் கில்லாடி கிருஷ்ணன் தான். சிறைச் சுவரை உடைத்தெடுத்து செங்கலையும், மேல் தளத்தில் பதித்திருந்த தட்டோடுகளையும் பிரித்தெடுத்து ஆயுதங்களாக பயன்படுத்துகிறார்கள். போராட்டம் முடிவுற்றது. ஆனால் சிறைத்துறை வன்மம் வைத்து காத்திருக்கிறது. சத்தமில்லாமல் வேறு சிறைக்கு மாற்றுகிறது. பெரும் கலவரத்துக்கு காரணமாக இருந்தவனை நிர்வாகம் சும்மா விடுமா? துணிமணிகளை எடுத்துக்கொண்டு விடைபெற வரும் கில்லாடிகிருஷ்ணனை. ஒரு அறைக்குள் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே பெரும்.. பெரும் குண்டாந் தடிகள் தயாராக இருக்கிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை உணர்ந்து கொண்ட கிருஷ்ணன். சட்டை வேட்டியை களைந்து விட்டு டவுசரோடு, “ஐயா அடிக்கப் போறீங்களாங்கய்யா அடிங்கய்யா” என்று பணிவோடு கூறியபடி, மண்டியிடுகிறார் அடிப்பதற்கு தோதாக. மிகவும் பலசாலிகளான இரண்டு இளைஞர்கள் பெரும் தடிகளைக் கொண்டு அடிக்கிறார்கள் தலையைத் தவிர எல்லா இடத்திலும் அடி விழுகிறது. அடி பொறுக்க முடியாமல் ஒரு கட்டத்தில் கழிந்து விடுகிறார்.
அறையெங்கும் மலம் நாறுகிறது. அப்போதும் கிருஷ்ணன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறார். “ஐயா மன்னித்து விடுங்கள் நானே சுத்தம் செய்து விடுகிறேன்”. ஓடிச் சென்று கழிவறையில் தன்னை சுத்தம் செய்து கொண்டு வேறு டவுசரை மாட்டிக்கொண்டு வாளியை தண்ணீர் பிடித்து வந்து அறையை சுத்தம் செய்து விட்டு மீண்டும் அதே பொசிஷனில் மண்டியிட்டு, “இப்போது அடிக்கிளாங்கய்யா” என்கிறார். அந்த இரக்கமற்ற அதிகாரிகள். இன்னும் இவன் இவ்வளவு தெளிவாக இருக்கிறானே என்று நினைத்து அடிக்கத் துவங்குகிறார்கள், அடிக்கிறார்கள் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அடித்தவர்கள் களைத்துப் போய், போய்த் தொலை என்கிறார்கள். தள்ளாடி எழுந்து நின்ற கிருஷ்ணன், “ஐயா நான் போறேன் உங்களுக்கு திருப்தி தானே குறை ஒன்றும் இல்லையே “ இந்த இரண்டு சொற்களால் வாங்கிய அனைத்து அடியையும் திருப்பிக் கொடுத்தது போல் எனக்குத் தோன்றியது. நிச்சயம் அந்தக் காவலர்கள் உள்ளுக்குள் செத்துப் போய் இருக்க வேண்டும். 10 பேரை அடிப்பவன் அல்ல 10 பேரிடம் அடி வாங்குபவனே வீரன். கில்லாடி கிருஷ்ணமூர்த்தி என் மனதில் பெரும் ஹீரோவாக மிளிர்கிறார்.
செத்துப்போன ஒரு போலீஸ்காரரின் மகன், “அடப்பாவிகளா எங்க அப்பாவை கொன்று விட்டீர்களே” என்று கத்துகிறான். அப்போது கில்லாடி கிருஷ்ணன் பதறுகிறார்.
“உங்க அப்பா செத்து போயிட்டாரா அய்யய்யோ எங்களுக்கு அவர் அப்பா மாதிரி நாங்க சொல்லுவோமா. இதோ செங்கல ஏறிகிறோம் கல்லுகளை எறிகிறோம் யார் மீதாவது படுகிறதா “ என்கிற போதும். சென்னையிலிருந்து வந்த உயர் அதிகாரி ஐ ஜி கேட்கிறார்,
“நீ தான் கில்லாடி கிருஷ்ணா?”
“ஐயா கிருஷ்ணன் என்பது என் பேரு கில்லாடிங்குறது யாரோ வச்ச பேருங்கய்யா
“ என்கிற போதும் கில்லாடி கிருஷ்ணன், கில்லாடி கிருஷ்ணன் தான்
இதுவரை எவரும் செல்லாத தொகுதி
எந்த இலக்கியமும் சொல்லாத பகுதி
சிறையில் அமர்ந்து எழுதியிருக்கிறார்கள்
எவரும் சிறையை எழுதவில்லை
எழுதியிருக்கலாம், சிறை அனுபவங்களை
அங்கொன்றும் இங்கொன்றுமான கட்டுரைகளைகளாக
ஆனால், தனது மொத்த ஆயுளையும் சிறையில் கழித்து ஓர் அதிகாரி, சுவாரஸ்யம் இல்லாத ஒரு கட்டுரையாக எழுதாமல், கதை கதையாக எழுதி இருக்கிறார். சிறு.. சிறு கதை என்று கூட சொல்ல மாட்டேன் இது நாவல் வடிவம் தான். சுவாரசியம் இல்லாத எந்த எழுத்தும் எப்படி எழுதினாலும், எவர் எழுதினாலும் படிப்பது, காலனி இன்றி சுடுமணலில் நடப்பது போன்றது தான். அதுவும் அத்தனையும் உண்மை. இந்த கதையில் வரும் கதாபாத்திரங்கள் பல இன்னும் உயிரோடு இருக்கிறது.
புனைவின்றி உண்மையை மட்டும் நாவலாக இவ்வளவு சுவாரசியமாக எழுதி இருக்கிறார் என்றால், மதுரை நம்பியை, மதுரை பெற்றதற்கு பெருமை கொள்ளலாம்.
மதுரை மத்தியச் சிறையில் கில்லாடி கிருஷ்ணன் தலைமையில் நடந்த போராட்டம் என்பது பெரும் உண்ணாவிரதமாக மட்டுமே ஆரம்பிக்கப்பட்டது.
மாவட்ட ஆட்சித் தலைவரை வரச் சொல்லுங்கள் எங்கள் கோரிக்கையை அவர் நிறைவேற்றுவார். என்று கைதிகள் தரப்பில் பேசப்படுகிறது. ஆனால் மாவட்ட ஆட்சித் தலைவரோ, என்னால் வர இயலாது என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் அவ்வளவுதான். என்று சொல்லி விடுகிறார். அதன் பிறகு தான் உண்ணாவிரதம் கலவரமாக மாறுகிறது.
ஆனால் அதற்கு முன் சுதந்திர தினத்தன்று சிறையில் வந்து கொடியேற்றிய மாவட்ட ஆட்சித் தலைவர், உங்கள் குறைகள் எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறுங்கள் நான் நிறைவேற்றித் தருகிறேன். என்று வீர உரை ஆற்றிச் சென்றிருந்தார். போராட்டம் நடக்கிறது ஆட்சித் தலைவர் வந்து ஆறுதலாக இரண்டு ஒரு வார்த்தை சொல்லி இருந்தால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்திருக்கும். ஆனால், சில கைதிகளும் ஒரு போலீஸ்காரரின் மரணத்தோடும், சென்னையிலிருந்து உயர் அதிகாரியான ஐ ஜியின் வருகையினாலுமே அந்தப் போராட்டம் நிறைவு பெறுகிறது.
ஆனால் விதி என்பதா! காலச்சக்கரத்தின் சதி என்பதா! காலம் தான் எவ்வளவு ஆச்சரியங்களை தன் கைக்குள் வைத்திருக்கிறது. எந்த மாவட்ட ஆட்சித் தலைவர் போராட்டத்தின் போது பேச்சு வார்த்தைக்கு வர மறுத்தாரோ அதே ஆட்சித் தலைவர் இரண்டொரு மாதத்தில் கைதியாக அதே சிறைச்சாலைக்கு வருகிறார்.
சிறைக் கதவுகளின் கம்பிகளையும், சிறைச் சுவரின் ஒவ்வொரு செங்கல்களின் கதைகளையும், அங்கே வடிந்து நிரம்பிய கண்ணீரையும், எழுந்த அடங்கிய கோபங்களையும் சுவை குன்றாமல் சொற்களைக் கொண்டே சித்திரம் வரைந்திருக்கிறார் எழுத்தாளர் மதுரை நம்பி.
கதையே இல்லாமல் எத்தனையோ திரைப்படங்கள். திரைத்துறையினர் மட்டும் மதுரை நம்பி யிடம் வந்தால் ஆயிரம் கதைகளுக்கான கதைக் கரு கிடைக்கும்.
ஒரு ஈ எரும்பைக் கூட கொல்ல மாட்டேனென்ற அகிம்சைவாதியாக, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வள்ளலார்களாக இருக்கிறார்கள். ஆனால் சிறையில் இருக்கிறார்கள். என்ன செய்து விட்டு வந்தீர்கள் என்று கேட்டால், கொலை, அதுவும் இரட்டை கொலை என்கிறார்.
நூறு முறை சிறை சென்ற பால்ச்சாமி முத்துராமலிங்கத் தேவருக்கு பணிவடை செய்தவர் என்கிறார். அவர் எந்த அறையில் தங்கியிருந்தார் என்று கேட்டபோது ஒரு அறையை காட்டுகிறார். பணி ஓய்வு பெற்ற 95 வயது முன்னாள் சிறை அதிகாரியைச் சென்றும் விசாரிக்கிறார். விசாரித்ததில் பால்ச்சாமி சொன்னது சரிதான் என்று தெரிய வருகிறது.
சிறைத்துறை தலைவரிடம் இருந்து ஒரு ஆணை வருகிறது. சுதந்திரா போராட்ட வீரர்கள் சிறைகளில் இருந்திருந்தால் அந்த ஆவணங்களை திரட்டி அனுப்புமாறு.
மதுரை சரக சிறைத்துறை துணைத் தலைவர். நம்ம எழுத்தாளரிடம் கேட்கிறார், “சுதந்திர போராட்டத்திலும் அதற்கு பின்னும் முக்கிய தலைவர்கள் சிறையில் கைதியாக இருந்த விவரங்கள் உங்களுக்கு தெரியுமா “ என்று கேட்கிறார்.
முக்கியமான பல தலைவர்களின் பெயர்களையும் சொல்கிறார். “அவர்கள் இங்கே இருந்ததற்கான ஆவணங்கள் எங்கே இருக்கிறது என்று தெரியுமா”
“ஆவணங்கள் கிடைப்பது சிரமம் சார். சுதந்திர போராட்ட தியாகிகள் என்று போலிச் சான்றிதழ்கள் வழங்கியதால். சில அதிகாரிகளின் மேல் குற்றம் சுமத்தப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. அப்போது அனுப்பப்பட்ட முக்கிய ஆவணங்கள் எதுவும் திரும்பப் பெறாமல் இருக்கிறது. என்று மதுரை நம்பி சொன்னதும்.
“முத்துராமலிங்கத் தேவர் இருந்ததாகச் சொன்னீர்களே அது எந்த பிளாக் எந்த அறை?”
“தெரியும் சார் ஆனா மன்னிக்கனும் நான் சொல்ல மாட்டேன்” என்கிறார்.
“ஏன்?”
மற்றவைகளை நூல் படித்து தெரிந்து கொள்ளுங்கள் எல்லாவற்றையும் நானே சொல்லிவிடக்கூடாது என்று நினைக்கிறேன்.
சிறையில் உள்ள நிர்வாக ஒழுங்கு பற்றி நன்றாக தெரிந்து கொள்ள முடிந்தது. அரசியல் கட்சிகளின் போராட்டங்களின் போது சிறை வந்த தலைவர்கள், தொண்டர்கள் அவர்களின் நடவடிக்கைகள். நாமே சிறையின் உள்ளிருந்து அனைத்தையும் அருகில் இருந்து பார்த்ததைப் போன்ற உணர்வை ஏற்படுகிறது மதுரை நம்பியின் எழுத்து. இன்னும் நிறைய அவர் எழுத வேண்டும் என வாழ்த்தி விடைபெறுகிறேன் நன்றி வணக்கம்.
நூலின் தகவல்கள் :
நூல் : சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்
ஆசிரியர் : மதுரை நம்பி
வெளியீடு : டிஸ்கவரி புக் பேலஸ்
தொடர்பு எண் : (044) 48557525
நூல் அறிமுகம் எழுதியவர் :
பொன் விக்ரம்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மிக்க மகிழ்ச்சி.நன்றி தோழர்.
சக எழுத்தாளரிடமிருந்து இப்படியொரு அங்கீகாரம்.ஒரு எழுத்தாளருக்கு இதைவிட வேறென்ன வேண்டும்.