குற்றவாளிக்குத் தண்டனைதரும் அரசு ஆணவக் காப்பகம்
– தேனிசீருடையான்
தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு வித்தியாசமான நூல். வரலாற்றை அடிநாதமாகக் கொண்ட இலக்கிய மகத்துவம். வரலாறு என்றால் சிறைத்துறையின் நவீன வரலாறு. சிறையில் இருக்கும் கைதிகளும் அவர்களை ஆட்சி செய்யும் அதிகார வர்க்கமும் என அது ஒரு தனி ராஜ்யமாய்த் திகழ்வதை இந்த நூல் விவரிக்கிறது.
சின்னத் தம்பி என்ற இயற்பெயர் கொண்ட மதுரை நம்பி இந்நூலை எழுதியுள்ளார். அவர் சிறைக் காவலாராகவும் அதிகாரியாகவும் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்களை எளிமையான தமிழில் தொகுத்துத் தந்துள்ளார். கட்டுரைகளா, சிறுகதைகளா என்று பிரித்துப் பார்க்க முடியாதபடி இலக்கிய நயம் சொட்டுகிறது.
சிறைக்கு வெளியில் தவறு செய்பவர்கள் தங்கள் தவறைத் திருத்திக் கொள்ளும் விதமாக சிறைக்கு அனுப்பப்படுகின்றனர். உணர்ச்சிவேகத்திலோ அறியாமையிலோ தவறு செய்பவர்கள் திருந்தி சமூகத்தின் வெற்றியாளனாக வெளிவந்து வாழ்ந்து காட்டுகிறான். ஆனால், திமிர்த்தனமாகவும் அசட்டையாகவும் பணத்தாசை கொண்டும் கொலை கொள்ளைகளில் ஈடுபடுபவர்கள் சிறைக்குள்ளும் காவல்துறையில் இருக்கும் சில கருப்பு ஆடுகளின் உதவியோடு அதே தவறைச் செய்து, பெரும் குற்றவாளியாகி ஊர் திரும்பி தாதா என்ற உயரத்துக்குச் செல்கின்றனர்.
குற்றவாளியின் கையில் காசுபணம் நிறையப் புழங்குகிறது என்பதுதான் அடிப்படையான குற்றச் செயலுக்கான தரவு. குற்றத்தைத் தூண்டும் எத்தனையோ கருவிகளில் பணம் முக்கியமானது. செலாவணிக் கரன்சிகளும் தங்கம் என்ற உலோகமும் மனித சமுதாயத்தை எப்படி ஆட்டிப் படைக்கிறது என்பதை காரல்மார்ஸ் தனது “மஞ்சள் பிசாசு” என்ற நூலில் துல்லியமாய்ச் சுட்டிக் காட்டுகிறார். குற்றவாளியிடமே பணம் வாங்கிக் கொண்டு சிறைக்குள் அவனுக்குக் கஞ்சா கிடைக்கவும் மிரட்டல்காரனாக மாறவும் திகாரிகள் அனுமதிக்கின்றனர். சிறைக்குப் போவது திருந்துவதற்கு என்ற கோட்பாடு சிறை அதிகாரிகளாலேயே சிதைக்கப் படுகிறது என்ற செய்தி வாசகனை உலுக்குகிறது.
உதாரணத்துக்கு மணல்மேடு சங்கர் என்ற கைதியைக் குறிப்பிடலாம். அவன் ஒரு தாதா. சிறைக்குள்ளேயே அவன் கையில் ஏராளமான பணம் புழங்குகிறது. இவன் சொல்வதைக் கேட்டால் காவலர்களுக்கு நன்மை. எதிர்த்தால் சிறைக்குள் இருந்தபடி தனது அடியாட்களை ஏவித் தீர்த்துக் கட்டிவிடுவான்.
அவனுக்கு வெளியில் இருந்து நிறையப் பணம் வந்து சேர்ந்தபோது பலருக்கும் பகிர்ந்து தந்து கொடைவள்ளலாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டான். ஒரு காவலர் அவனிடம் ஐயாயிரம் கேட்டபோது எந்தத் தடங்க்லுமின்றி எண்ணித் தந்து சிநேகிதம் செய்துகொள்கிறான்.
சங்கரின் செயல்பாடுகள் காவல்துறை வட்டாரத்தில் பேசுபொருள் ஆயின. சிறைக்குள் இருந்தபடியே சிறைக்கு வெளியில் இருக்கும் அடியாட்கள் மூலம் தாதா ராஜ்யம் நடத்துகிறான். சிறைக்குள் இருக்கும் சக கைதிகளையும் தனது அடிவருடிகளாய் மாற்றி, சிறைக் காவலர்களைப் பயமுறுத்தித் தனது பிடிக்குள் இருக்கும்படி செய்கிறான். சிறைக் காவலர்களும் மனிதர்கள்தானே? தமது குடும்பம், வாழ்க்கை என்ற பௌதீக இயல்போடு பயம் கொண்டு சங்கருக்கு சேவகம் செய்பவர்களாய் மாறுகின்றனர்.
மேலிடத்து அதிகாரிகள் சங்கரின் அடாவடித்தனங்களைப் புரிந்து அவனை விட்டு வைத்தால் பேராபத்து என உணர்ந்தபோது அவனை என்கவுண்ட்டர் செய்து கொன்றுவிட்டனர். கொலைசெய்யப் படப் போகிறோம் என்று முன்கூட்டியே தெரிந்து கொண்டு மதுரை நம்பியிடம் சொல்லிவிட்டு தூய ஆடைகளை அணிந்துகொண்டு விடைபெறுகிறான். மறுநாள் செய்தித் தாள்களில் சங்கரின் என்கவுண்ட்டர் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த இடத்தில் என்கவ்ண்டர் செய்வது சரியா என்ற மனிதநேயக் கேள்வி எழுந்தபோதும் சரிதான் என்று சொல்லும்படியாக சங்கரின் செயல்பாடுகள் இருக்கின்றன. என்கவ்ண்டர் என்பது ஒரு வகையில் அதிகார வர்க்கத்தின் ஆணவக் கொலைதான். அதிகாரிகளே அவனை உருவாக்கிவிட்டு, அவர்களே அவனைத் தீர்த்துக் கட்டுவது என்று முடிவெடுப்பது ஜனநாயக யுகத்திலும் நடக்கிறது என்பதுதான் இயக்க முரண்.
நூலாசிரியர் மதுரை நம்பியின் வாசிப்பு அனுபவமும் மனிதாபிமான சிந்தனைகளும் நூலெங்கும் பரவி விரவிக் கிடக்கின்றன. ஒவ்வொரு கைதிக்குள்ளும் ஒரு மனிதன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக்காட்டுகி|றார். உள்ளிருக்கும் மனித பிம்பம் ம்கத்தானது. சூழ்நிலை காரணமாக கைதிகளாகி, ஏதேனும் தவறு செய்து சிறைக்குள் வருகிறார்கள். திருந்துவோர் சிலபேர்; இன்னும் பெரிய குற்றவாளியாகி வெளியேறுபவர் பலபேர். சிறையிலும் வெளியிலும் மாறி மாறி வாசம் செய்பவர்களால்தான் சிறைக்கூடங்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டிருக்கின்றன.
மனித நாகரீகம் தோன்றிய காலத்திலிருந்து, அதாவது சமூகக் கட்டுப்பாடுகள் உருவாகி, அரசு என்ற அதிகார மையம் உருவான நாளில் இருந்து சிறைக்கூடம் என்பது நிர்வாகத் தளங்களில் ஒன்றாக மாறிவிட்டது. குற்றம் செய்பவர் தண்டனை பெறுவது திருந்தத்தான் என்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக சிறைக்கூடங்கள் கூடிக் கொண்டே இருப்பது ஏன்? ஏனென்றால் அரசுபீடம் ஓர் அடக்குமுறைக் கருவி. அடக்க அடக்க மனிதன் உணர்ச்சிவசப் பட்டு கோபக்காரனாகி, என்ன ஆனாலும் சரி என்று வைராக்கியம் கொண்டு மேலும் பெரிய குற்றவாளியாகிறான்.

நிர்பயா வல்லுறவுக் குற்றவாளிகள் மரணதண்டனை பெற்றுத் தூக்கில் ஏற்றப்பட்ட பின்னும் பாலியல் குற்றவாளிகளின் எண்ணிக்கை குறந்தபாடில்லை. பயமுறுத்துவது, அதிகாரத்தை ஏவி அடக்குவது என்பதெல்லாம் குற்றச் செயல்களைக் குறைக்கப் பயன்படாது என வரலாறு நிரூபித்தபடி இருக்கிறது. சிறைக்கூடம் இல்லா உலகம் புலரவேண்டும் என்றால் ஏற்றத்தாழ்வில்லா சமுதாயம் உருவாக வேண்டும்.
சிறைக்குள் வருகிற நூற்றுக் கணக்கான மனிதர்களில் ஒருசிலர் மட்டுமே திருந்திய மனோநிலையோடு வெளியேறுகின்றனர்.
அரசு செய்யும் குற்றத்தை எதிர்த்துக் கேட்டுப் போராட்டம் நடத்திச் சிறையேகும் அரசியல் கைதிகள் சிறைக் கூடத்தைக் கல்விச் சாலையாக மாற்றிய செய்திகளும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. சமுதாயச் சீர்குலைவுக் குற்றவாளிகள் சிறைக்குள் இருக்க அதிகார ஆணவக் குற்றவாளியான அரசு வெளியில் இருந்து தண்டனை வழங்குகிறது. இந்த ஏற்றத் தாழ்வான தண்டனைமுறைகள் மாறினால் ஒருவேளை சிறைச் சாலைகள் குறைய வய்ப்பு வரலாம்.
இப்படிச் சிந்திக்கத் தூண்டுகிறது “சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள்” (Siraiyil Olirum Natchathirangal) சிறை வளாக மமதைகளை ஒழிக்க இப்படியான நூல்கள் ஓரளவு உதவி செய்யும் என்று நம்பலாம்.
தோழர் மதுரை நம்பி அவர்களின் சமுதாய மற்றும் இலக்கியப் பணி வெகுகாலம் வரை நினைவுகூரப்படும்.
நூலின் விவரம்:
நூல்: சிறையில் ஒளிரும் நட்சத்திரங்கள் (Siraiyil Olirum Natchathirangal)- ஒரு சிறைக் காவலரின் அனுபவப் பதிவு
ஆசிரியர்: மதுரை நம்பி
வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
பக்கம்: 312.
விலை: ரூ. 330/
நூல் அறிமுகம் எழுதியவர்:
தேனி சீருடையான்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
