1.
கனவுக்குள் நுழைய விடாமல்
குறுக்குக் கட்டைகளால்
இரவை, பகலால் அடைக்கிறார்கள் யாரோ.
தனது குறிப்பேட்டில் வரைய
இரு கைகளாலும் ஒரு சிறுவன்
நிலவின் ஒளியை மடக்குகிறான்.
தன் கோலத்தில் பதிக்க
சில நட்சத்திரங்களைப் பறிப்பவளுக்கு
நெற்றிக் கற்றைகள் ஒதுங்க மறுக்கும்
வட்ட முகம்.
அந்த இசையமைப்பாளனுக்கு
இன்னும் நெருக்கமாகிவிட்டன
சில்வண்டுகள்.
ஆந்தைகளையும் வௌவால்களையும்
ஒரே கூண்டில் அடைத்தவன்
வெற்றிச் சின்னம் காட்டியபடி வாங்குகிறான் சம மனநிலைச் சான்று.
ஒலிக்கப் போகும் ஒப்பாரிப்பாடலின் கடைசிவரியின் மீது
காலைத் தூக்குகிறது வளர்ப்பு நாய்.
தண்ணீரே கலக்காமல்
தொட்டுக் கொள்ள ஏதுமின்றி மிடறுமிடறாக இரவைக் குடித்தவன் மல்லாந்து கிடக்கிறான்
விடியலின் ஒருமுனையில்.
திருஷ்டிச் சூடம் அணைந்ததும்
கதவு சாத்தப்படுகிறது.
ஒன்றுமே நடவாதது போல்
ஒருச்சாய்ந்து படுத்துத்
தூங்கத் தொடங்குகிறது இரவு.
2.
மரங்கொத்தியின் கூருடன்
குற்றச்சாட்டுகளை முன்வைத்தவள்
பத்மினியின் சாயலில்.
அருகாமைக் கூட்டத்தில்
எருமையைப் போல மறைந்திருக்கிறான்
குற்றங்களுக்குச் சொந்தக்காரன்.
அங்கே ஒலிக்கும் குத்துப்பாட்டு
மேலும் எரிச்சலூட்டுகிறது அவளை.
ஒரு பாடலுக்கும்
இன்னொரு பாடலுக்கும் இடையே
ஓங்கி விழும் வசைச் சொற்கள், அவன் நெற்றி வியர்வையைத் துடைக்கின்றன.
பதுங்கு குழியிலிருந்து எட்டிப் பார்க்கும்
யோக்கியத்தின் சுண்டுவிரல் தட்டையானது.
பொய்மையின் சாயங்களைப் பூசித்
தப்பிப்பவன் மீது பெய்யெனப் பெய்கிறது செயற்கை மழை.
குற்றங்கள் ஆழவேரூன்றிய
சதுப்புநிலக் காட்டில்
தயாராக இருக்கிறது அவன் படகு.
அவனை மீனாகக் கற்பனை செய்தவள்
மீன்கொத்தியின் அலகாக மாற்றுகிறாள் தன்னை.
மரங்கொத்தி மற்றும் மீன்கொத்திகளின்
இசைக் கூடாரமாகிறது சதுப்புநிலக் காடு.
3.
நீலக் குளுமையுடன்
அந்தரத்தில் நிற்கிறேன் கனவு வானில்
இரு தேநீர்க் கோப்பைகளுடன் வந்தவன்
புதிதாகக் காண்பது போல
ஏன் இத்தனை புள்ளிகள் என்றவாறே
என் முகத்தில் ஓவியம் புனைகிறாய்
நாணம் திரண்டு திரண்டு
நெற்றியில் படர்கிறது நீள்பொட்டாய்
இதுவரை காணாத பூவொன்றின்
வாசனையில் மயங்கி
நுகரத் தயாரான கைகளைத்
தட்டிவிடுகிறாய்
பொத்தென விழுகிறது பூநாகம்
மிரட்சியுடன் கண் விழிக்கிறேன்
கையெழுத்தும் தேதியுமற்ற
உன் ஓவியம்
வரவேற்பறையில் தொங்குகிறது
துக்கம் மட்டும் விசாரித்து
சொல்லிக் கொள்ளாமல் நகர்கிறார்கள்
ரசனையற்றவர்கள்
மறக்காமல் கழுவிக் கவிழ்த்து வை
அந்தத் தேநீர்க் கோப்பைகளை.
4.
என் பயணத்தில் திரும்பத் திரும்ப
ஒலிக்கிறது ஒரே பாடல்.
பழக்கப்படாத பறவையின் குரல் ரசிக்கும்
மழைக்கு முந்தைய
மரத்தின் தலையாட்டல் எனக்குள்.
இசைக் கோர்வைக்குள்
பசித்த புழுவாய் நெளிகிறது என் துயரம்.
தன் பிம்பம் கொத்தி சுய இன்புறும்
தேன்சிட்டின் அலகு
சொற்களில் படிந்த என் மௌனம்.
உச்ச தொனி பருகத் துடிக்கிறது
என் கண்ணீரின் ஒரு துளி.
தொடைகளை லயமின்றித் தட்டும்
என் விரல்களில் அப்பியுள்ளது
இசையின் மகரந்தம்.
கண்களுக்குள் நீளும் ஒருவழிப்பாதையில்
தலைகோதுகிறது கதாநாயகத்தனம்.
மீதச் சில்லறை கொடுத்து
இறக்கி விடப்பட்ட என் நிறுத்தத்தில்
தன் பயணத்தைத் தொடர்பவருக்கு
என் கனவின் சாயல்.
5.
இருப்பு ஒன்று தான்
தளர்தல் மாபெரும் கவனச் சிதறல்
நூலளவு தான்
தொங்குவதில் தயக்கம் எதற்கு?
தற்கொலையா செய்யப் போகிறாய்?
இழுவிசை இருக்கும் மட்டும் பட்டம் பறக்கும்
தழுவிச் சிலிர்க்க மென்காற்று
ஆணிவேரோடு பிடுங்கியெறிய ஆடிக்காற்று
நிர்வாணத்தின் மீது படிந்த ஆடையை
இருவிரல்களால் அகற்று
எஞ்சிய கசடு அங்கேயே இருக்கட்டும்
அவலட்சணமே பேரழகின் பிரமாண்டம்
திருத்துதல் திருட்டுத்தனம்
வருத்துதல் வஞ்சம்
கொழுப்பால் பெருத்த உடலத்தை
எறும்புகள் கடித்துத் தின்ன
தினவுகள் வெளிப்படும் தடிப்பாக
திமிரென்பது கண்ணீரல்ல
வியர்வையின் ஊற்றுக்கண்
வடியட்டும்… வடியட்டும்…
திமிர் வடிந்து வற்றட்டும்
முதலைக் குளங்கள்.
6.
இப்போதும் மணி 5.45 தான் காட்டுகிறது அந்தக் கடிகாரம்
அவ்வப்போது தன் மணிக்கட்டைத்
திருப்பிப் பார்க்கும் பொழுது
ரத்தநாளங்கள் துடிக்கிற உணர்வு
இம்மை மறுமை விசாரணைகளை
முட்களைப் போலல்லாமல்
எளிதாக எதிர்கொள்கின்றன
டிஜிட்டல் எண்கள்
எக்காலத்திலும் தீர்ந்து போகாத பேட்டரிகளைக் களவாடுபவன் தான் இப்போதைக்குப் பெரு முதலாளி
வலது கையில் மணி பார்ப்பவனை
இடது கையால் குறித்துக் கொள்பவன்
சற்றேறக்குறைய காலத்தின் சகலையே
சரியான இடத்திற்கு
சரியான நேரத்திற்கு வருபவர்
சரியான நபரென
முத்திரை குத்தப்பட்டவரின்
முதுகுக் கறை வெளியில் தெரிவதில்லை
தன் பங்குக்குக்
கூடுதலாக ஒரு உபதேசம் செய்கிறது
மணிக்கொரு முறை அடிக்கும் அலாரம்
மீப்பெரும் பழுதெனக் கருதப்பட்டதை
மீச்சிறு திருகால் சரிசெய்பவனுக்கு
காலம், ஒரு தத்துப்பிள்ளை.
7.
ஒழுங்கு என்பது
சிற்சில வியாதிகளால் ஆனது
எந்நேரமும்
அதுவொரு நல்ல உடலத்தை தேடுகிறது
கால் பெருவிரலில் ஒட்டியுள்ளது
99.9 சதவீத கிருமிகளைக் களையக்
கைகளில் பிதுக்கிய நாசினிப் பசை
தயார் நிலையிலிருக்கும் ஊசிமுனையில்
முதலில் காற்று
சொட்டுச் சொட்டாக வெளியேறுகிறது
மூலையில் சாய்த்து வைக்கப்பட்ட
துடைப்பம் ஒழுங்கைப் பார்த்துப் புன்னகைக்கிறது கேலியாக
ஈரம் உலர்வதற்குள், இன்னொரு ஒழுங்கு குழந்தையைப் போல
மடமடவென உள்ளே நுழைகிறது
சாவி ரிமோட் கண்ட்ரோல் உள்ளாடை கசங்கிய காகிதம் அதனதனிடத்தில் சரியாகப் பொருந்தக் கட்டளையிடுகிறது
தேவையின்றி எரியும் விளக்கை நோக்கி எறியத் தயாராக வைத்திருக்கிறது
ஒரு கல்லை
மடிப்பு கலையாமல் இருத்தலின் மீது
புழுதியாய்ப் படிந்துள்ளது ஒழுங்கு
சவரக்கத்தியும் கத்தரியும் சீராக்கிய அன்றைய மாலையே
மயிராக வளரத் தொடங்கிவிட்ட ஒழுங்கையே
பாஸ்போர்ட் அளவு புகைப்படமாக ஒட்டுகிறார்
ஒரு விண்ணப்பதாரர்.
8.
ஏதாவது படம் வரையப்பட்டிருக்கிறதா
சில கோடுகளேனும்
புள்ளியாவது இல்லாமலிருக்காது
வாலைச் சுருட்டிக் கொண்டு
கனத்த மௌனம் தூங்குகிறதா
அதெப்படி, பிற்காலம் அறியாதபடி
தடம் அழிக்கப்பட்டிருக்குமே
திறந்து வைக்கப்பட்டிருக்கிறதா
திறந்தது தெரியாதபடி மூடியுள்ளதா
ஒரு சொட்டுக் கண்ணீராவது உலர்ந்திருக்குமே
உற்றுப் பார்த்தால், புன்னகை அல்லது நக்கலின் மெல்லிய கோடு
ஒரு ஓரமாய் ஒளிந்திருப்பது தெரிகிறதா
மறந்து போன அல்லது
சொல்லத் தயங்கிய வார்த்தையாக
மூலை மடிப்பு இருக்கலாம்
புழுதி படிந்த தேவையற்றதைக் கிழித்து காலம், ஆய் துடைக்கும் போது
வேடிக்கை பார்க்கும் உங்களில் ஒருவன் இப்போது எந்தக் கடிதத்தையும்
கைகளால் எழுதுவதில்லை
தினமும் சரியாய் மாலை 5.30க்கு அஞ்சல்பெட்டியைத் திறந்து மூடுபவர் அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார்
கண்டுகொள்ளப்படாத அறையில்
படபடத்துக் கொண்டிருக்கிறது
வேறொரு வெள்ளைத் தாள்.
9.
எதுவுமே இல்லாமல்
பெண்ணொருத்தி காற்றில் வரைகிறாள்
ஒரு வண்ணத்துப்பூச்சியின் பறத்தலை.
வளைந்து வளைந்து
பறக்குமிடமெங்கும் தன் வண்ணங்களைத் தூவிச் செல்கிறது.
கால்களைச் சுருக்கி பூவில் அமர்ந்து
சற்றுமுன் இணையிடமிருந்து விடுபட்ட துள்ளலைப் பகிர்கிறது.
தேனுறிஞ்சும் ஆவலில்
மகரந்தம் ஒட்டியதைக் கவனிக்கவில்லை.
பார்த்துக் கொண்டிருக்கும் போதே
பச்சோந்தியின் வாயில் துடித்தடங்கிய அந்தக் கண்களின் படபடப்புக்குப்
பசி என்றும் பெயரிட்டவள்
கைகளை ஓங்கி உதறுகிறாள்…
இன்னொரு வண்ணத்துப்பூச்சி பறக்கிறது.
10.
நான் ஏன் இங்கு இருக்க வேண்டும்?
விடிவதற்கு முந்தைய பொழுதென்றால்
மேலும் இருட்டாகத் தான் வேண்டுமா?
என் வானத்தைக்
கூரைக்குள் திணித்தது யார்?
நிலவு நட்சத்திரம் பறவை பட்டம்
எல்லாவற்றையும் களவாடியது யார்?
கழுத்து வரை நிரம்பும் மழைநீரில்
பசியை மறந்து
இந்த அறையில் எப்போது நீச்சலடிப்பேன்?
என் சக தோழனாக
புழுக்கத்தை அங்கீகரிக்கும் பெரிய மனது
உங்களுக்கு வாய்த்தது என் புண்ணியம்.
புற ஓசை கேட்காதபடி
அழுந்தத் திணிக்கப்பட்ட பஞ்சுகள்
திணிக்கப்பட்டே இருக்கட்டும்…
பொதுவெளி வேடிக்கை பார்க்க
நிர்வாணமாகவாவது
என்னை வெளியில் கடத்துங்கள்.
அதற்குமுன் கொஞ்சம் அனுமதி கொடுங்கள்…
எந்தப் பேயும் அண்டாதபடி
வாசலில் படுக்க வைத்திருக்கும்
தொழில்நுட்பத் துடைப்பத்தை
ஒரு ஓரமாய் சாத்தி வைத்துவிட்டு
வந்துவிடுகிறேன்.
– மா. காளிதாஸ்