கவிதைகள்- Poems | NaveArul-சூரியதாஸ்

தொடர் 10 : சிறப்புக் கவிதைகள் –  சூரியதாஸ் 

1. ‘ கனல் இல்லையானால்…’

கனல் இல்லையானால் கதிரவனில் கூடக் கரிப் பிடிக்கும்

எதிர்ப்பில்லையானால் எலி கூடப் பூனையை முறைக்கும்

முயற்சி இல்லையானால் முட்டையிலேயே குஞ்சின் மூச்சடங்கும்

குரல் இல்லையானால்
காக்கைகள் கூடக் குயிலாய் நடிக்கும்
துடிப்பில்லையானால் இதயம் கூடத் துருப்பிடிக்கும்

வெளிச்சம் இல்லையானால் விளக்கும் கூட வீண் சுமையாகும்

கலைகள் இல்லையானால் கவலைகள் நம் கரம் பிடிக்கும்

இலக்கு இல்லையானால் இலக்கியத்தில் கூட இலையுதிர் காலம் வரும்

சீச் … சீ … என்ன கனவு?

அதோ ஒரு திருடன் சுவரேறிக் குதிக்கிறான் முறைப்புடன் ஒரு நாய் முன்னுக்கு வருகிறது

வெல்லக் கட்டி ஒன்றை வீ சி எறிகிறான்
‘ ஆஹா! இவருக்கு நம் மேல் எத்தனை அன்பு’

ஆசையோடு ஒரு கனவும் வீரிகிறது

அடுத்த முறையும் இவர் தான் வரவேண்டும்

சீச் … சீ என்ன கனவு இது? எழுந்து பார்க்கிறேன்

” தேர்தல் வரப்போகிறது ” மேசையில் செய்தித்தாள்.

 

2. ‘கடவுளே ! கடவுளே !’

சிலுவையில் இயேசு செத்துக் கொண்டிருந்தார்.
காயங்களில் இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

ஆணிகள் கைகளில் ஆழமாய்ப் பதிந்திருந்தன. ஆவி துடிதுடிக்க இயேசு அந்தரத்தில் தொங்கினார்.

அங்கிருந்தொருவர் வேகமாய் வந்தார் ஆணிகளைப் பிடுங்கி அப்பால் எறிந்தார்.

பிதாவே மன்னியுமெனப் பிரார்த்தனை செய்தார். இயேசுவை இறக்கிக் கீழே வைத்தார்.

சிலுவையை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியாய் வீட்டுக்குப் போனார்.

3. ‘அதற்கு அப்பாலும்…’

ஆணிகளில் தொங்கும் அழகிய ஓவியங்களுக்குப் பின்னால் காயம்பட்டுக் கிடக்கின்றன சுவர்களும் ஆணிகளும்.

உலக உயிர்களுக்கெல்லாம் உணவளித்தாலும் வயிற்றில் நெருப்போடுதான் உழவனும் பூமியும்.

பேய்களைப் பற்றிய அச்சத்தால் பூரணகும்பம் தீர்க்காயுசுடன் பூசாரிகளும் கடவுளும்.

ஒவ்வொரு மரமும் பூக்களின் மூலம் பிரகடனப் படுத்துகிறது வேர்களின் அழகையும் அவஸ்தையையும்

மின் துகள்களோடு ஒவ்வொரு அணுவின் உட்கருவும் அடைகாக்கிறது சிவனையும் பிரம்மனையும்.

சிவப்பு விளக்குப் பெண்களின் இதயங்களில் புதைந்து கிடக்கின்றன சோரம்போன ஆண்களின் முகங்களும் முகவரிகளும்.

துாரங்களுக்கப்பால் தூரங்களும் துயரங்களுக்கப்பால் துயரங்களும் விரிந்து கொண்டே செல்கின்றன.

நிகழ்வுகளுக்கப்பால் நிகழ்த்துவதன் மூலம் உணரும் நிகழ் தளங்களில் இருக்கிறது நிகழ்வுகளுககான தீர்வு

அஸ்தமனங்களுக்கு அப்பாலும் ஆற்றலோடு எழுகின்றன நம்பிக்கையுள்ள இதயமும் உதயமும்.

 

4.”பின்னிரவுப் பாடகன்”

தூக்கம் வராத இரவுகளில் உடல் விட்டோடும் இதயம் தொலைதூர ரயிலோசையில் ஏறிக் கண்டங்களைக் கடக்கிறது

ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டாமலே நேசத்துக்குரியவர்களின் முகம் பார்த்துத் திரும்புகிறது

நினைவின் தடமறியும் நெஞ்சங்கள் கனவில் முகம் பார்த்துப் புன்னகைக்கலாம்

பெருங் சூரலெடுத்துப் பாடவியலா ஒரு பின்னிரவுப் பாடகனாய் உள்ளோடு மௌனமாய்ப் பாடுகிறது.

சிலரோடு நீண்ட உரையாடலைத் தனக்குத் தானே நிகழ்த்திவிட்டு நிம்மதியாய் வீடு திரும்புகிறது

அந்த அகால இரவிலும் உறங்கா நினைவுகளின் நெரிசலில் பிதுங்கி வழிகிறது ரயிலோசை.

 

5. ‘மூக்குத்திப் பூ ‘

தொலைந்து போன என் இதயம் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. அவள் ஒற்றை மூக்குத்தியில்

காற்றோடு ஏதோ பேசுகிறது அலையலையாய்ச் செய்திகள் அவள் கருங் கூந்தலும் அலைபேசி

மூடிக் கிடக்கும் பூவிதழ் திரும்பிவிட்டது முத்தம் மை பூசிய உதடுகள்

பூங்காவில் உலவுகிறாள் மீண்டும் மீண்டும் உரச முயற்சிக்கிறது. நிறமிழந்த வண்ணத்துப் பூச்சி

ஓவியங்களைப் பார்வையிடுகிறாள் தலையைக் குனிந்து கொள்கின்றன தூரிகைகள்

அவள் திரும்பிப் பார்க்கிறாள் மொழி பெயர்க்கிறது இதயம் அவள் விரும்பிப் பார்ப்பதாய்

விழியெல்லாம் விழுங்கி நிறைந்த பின்னும் மிச்சமிருக்கிறது அப்படியே அவளின் அழகு

 

6. ‘ இன்னும் பால்பற்கள் விழாதவள் ‘

கை சூப்புவதைப் பற்றியெல்லாம் கவலைப்படத் தெரியா வயதினள் கண்டிக்கும் பொழுதெல்லாம் கன்னக் குழியில் கவிதை நிரப்பிச் சிரிப்பைத் தருபவள்

இன்னும் பால்பற்கள் விழாத அவள் தூங்கி எழுந்தால் பாயும் பாவாடையும் நனைந்திருக்கும்

இரவை ஈரமாக்கிய கனவின் தேவதைகள் பற்றி அவள் கதை சொல்லும் அழகில் மனசெங்கும் அத்தர் மணக்கும்

பிறப்புறுப்புச் சிதைந்து இன்று ரத்தப் பிசுக்கோடு வலியில் மிரண்டு அரற்றும் அவளிடம் நிலைத்த பார்வையும் கனத்த மௌனமும் தவிரச் சொல்லக் கதையுமில்லை கனவுமில்லை

ஒருவேளை என்றேனும் நினைவு திரும்பி நடந்த கதை சொன்னால் கேட்கும் தைரியம் உண்டா எவருக்கேனும்.

7. ‘எனது சட்டையில் இன்னொருவர் வாசனை’

குளிரூட்டி  அலங்கரிக்கப்பட்ட அதிநவீன அங்காடியில் பேரமின்றி எடுத்துவரப்பட்ட எனக்குப் பிடித்தமான சட்டையிது

உடுத்துவதற்கு முன் உற்று நோக்கிய போதுதான் தெரிந்தது அதனுள்ளே பல பேர் ஒளிந்திருப்பது

அரை நிர்வாண உடையணிந்து ஏர் பிடித்து ஒருவன் ஆழமாய் உழுதுகொண்டிருக்கிறான்

கை நிறைய பருத்தியுடன் நடந்து போகிறாள் சூரியனில் கருத்த ஒருத்தி

சடக் சடக் எனும் தறி ஓசையுடன் இரு கால்களும் கைகளும் இழை பின்னிக்கொண்டிருக்கின்றன

சாயத்தின் நிறத்தைக் கைகளிலும் நெடியை நுரையீரலிலும் நிரப்பியபடி ஒருவன் இருமிக்கொண்டிருக்கிறான்.

அழுக்குச் சட்டைகள் கரித்துணியாகா வண்ணம் முதுகில் மூட்டையுடன் தீர்நிலை தேடி அலைகிறான் ஒருவன்

கையில் அரிவாளுடனும் கவட்டைக் கம்புடனும் பதிந்து கிடக்கிறது கரிமூட்டம் போடும் ஒருவனின் முகம்

முறுக்கிப் பிழிந்த சட்டையின் சுருக்கம் அகற்றச் சூடான பெட்டியுடன் நிற்கும் கதகதப்பான ஒருவன்

எனது சட்டையின் மீது உணரப்படும் விதவிதமான வாசனைகள் இவர்கள் வேர்வையின் நறுமணமாகவே இருக்கக்கூடும்

இந்தச் சட்டை எனக்கு அழகாயிருப்பதாய்ச் சொல்லும் போதெல்லாம் பெருமையாய் உளறுகிறேன்

அதை வாங்கிய கடையைப் பற்றியும் அதன் விலையைப் பற்றியும் மட்டுமே.

8.’ சாலையில் புணரலாம்’

கமகமக்கும் உன் ஞாபகங்களில் மதநீர் ஒழுக மந்தையில் நிற்கிறேன்

காதல் பித்தேறி உனை ஆலிங்கனம் செய்யப் புழுதிபரத்தி நம் ஆதி நிலம் தேடுகிறேன்

நம் தாய்வழிச் சாலை மறித்து நமதொத்த மலை உதிர்த்து மதில் எழுப்பியிருக்கிறார்கள்

நடை தளர்ந்த நம் வயோதிகத் தாய் படுத்துப் பசியாறிய புல் தரையிலே தான் பட்டுக் கம்பளம் விரித்திருக்கிறார்கள்

நாம் கிளர்ந்தெழ கீதமிசைக்கும் சிற்றுயிர்களைச் சிதைத்து அலங்கரித்திருக்கிறார்கள்.

துதிக்கையால் நீர் தெளித்து விளையாடிய நீர்த்தேக்கத்தைக் குளியலறையாய்ப் புனைந்து பூக்குழாயில் புனித நீராடுகிறார்கள்

அன்பே நம் மதன நீர்
சிந்திய இடங்களில்
தீர்த்தம் வாங்கிப் பருகுகிறார்கள்

நாம் கலவி முடிந்து களைத்துத் தூங்கிய இடங்களில் கடவுளைத் தியானிக்கிறார்கள்

பனிக்குடம் உடைந்து நம் மழலைகள் இரத்தப் பிசுக்கோடு மண் தொட்ட இடத்தில்தான் சிம்மாசனம் அமைத்து ஆசீர்வதிக்கிறார்கள்

நீள்குறியால் உனை நெகிழச் செய்த இடத்திலே தான் நெடுஞ் சிலைகள் நிறுவி கூனிட்டுத் தாழ வணங்குகிறார்கள்

கொம்பன் என்றெனைக் கூடி விரட்டும் குருடர்கள் மத்தியில் அகதியாய் உன் மேல் ஆசையில் பிளிறுகிறேன்

அன்பே
அத்தனைக்கும் ஆசைப்படும் காருண்ய சீலர்கள் நம் அந்தப்புரங்களை ஆக்கிரமிப்பு செய்து விட்டதால்

சாலையில் புணர்வோம் வா.

9.* பூ நூல்

கூடைநிறைய உதிரி மல்லிகையைச் சுமந்துகொண்டு அந்தத் தெருவின் வீடுகளையெல்லாம் கோர்க்கிறாள் அதன் வாசனையால்

*நகரத்து மழை

தவளைச் சத்தம் கேட்காத
மழையிரவு பூக்கள் கசங்காத முதலிரவு

*விளைவு

நெற்றிக் கண்ணைத் திறந்து காட்டினேன் குளிர் காய்கிறாள் என் பாதி.

*வரம்

கையேந்தும் யானை காசா கேட்கிறது? காட்டையல்லவா கேட்கிறது!

*கவிச் சொல்

சிலை ஒன்றின் கண்களைத் திறப்பதாயிருக்கிறது காதலின் முதற்சொல்லும் கவிதையின் இறுதிச் சொல்லும்.

*இயலாமை

எதைக் கொண்டு மூடுவாள் பாவம் தனது நிர்வாணத்தை காமக் கதிர்விழிகள் எதிரில்

 

10.*தாய்

சிறு குழந்தையை இடுப்பில் ஏந்தி
சாலையைக் கடக்கிறாள்
ஒரு தாய்
அவளுக்கு வயது ஏழு

*கல்வி

கோடிட்ட இடத்தின் மீது நீட்டிப் படுத்திருக்கிறான் நியூட்டன் ஒரே ஒரு மதிப்பெண்ணுக்காக

*விலக்கு

மாத விலக்குகளால் சுத்தமான பெண் அசுத்தப்படுத்தப்பட்டாள் மத விலக்குகளால்

*சிலை

உன் மெளனத்தை உடைக்கும்
உளியொன்றைச்
செதுக்கிக்கொண்டிருக்கிறேன்.

*மது

முதன் முதலாக நாம் சந்தித்த பொழுது பருகிய முதல் கோப்பைத் தேநீருக்கு மது
என்று பெயர்

*வரவேற்பு

தெய்வத்தை வாசலில் பார்த்தேன் தேவதையை வரவேற்க நீ கோவிலுக்கு வருகிறாய்.

எழுதியவர் 

 சூரியதாஸ் 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 1 Comment

1 Comment

  1. சூரியதாஸ்

    மிக்க மகிழ்ச்சி.
    நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *