1
காகங்கள் பாடும் கவிதைகள்
வேம்பு பூக்கத்துவங்கிவிட்டது
இளவேனில் பருவத்தின் அடையாளம் அது
கனிபழுக்கும் காலத்துக்கு
முதுவேனில் வரை காத்திருக்க வேண்டும்
அதுவரை
மிஞ்சிய ஒன்றிரண்டு புழுக்களையோ
செத்த மாட்டின் குடலையோ
உண்டுதான் உயிர்த்திருக்க வேண்டும்
வேப்பங்கிளைக் காகங்கள்
அதற்காக யாரும் அவற்றைக்
கொல்லப்போவதில்லை
நல்லவேளை அவை
மனிதர்களாகப் பிறக்கவில்லை
நம்பிக்கையோடு காத்திருக்கும்
அவை
காலைதோறும் கவிதை பாடுகின்றன
மனிதர்கள்
கவிதையை உரைநடையாக்கிவிட்ட காலத்திலும்
எதுகை மோனை சந்தத்தோடு
பழைய கவிதைகளைப் பாடுகின்றன காக்கைகள்
நீர்நிலைகளைப் பரிதி உறிஞ்சியபோது
செத்து மிதந்த மீன்கள்
அநேகமாகத் தீர்ந்துவிட்டன
கூழாங்கற்களை மட்டுமே விட்டுவிட்டு
மணல்திட்டுகள் லாரியேறிப் போய்விட்டன
தப்பிப்பிழைத்து வெளியேறிய தவளைகள்
குளியலறைக் கதவிடுக்கில் சிக்கியும்
லாரிச்சக்கரங்களுக்கடியில் தலைகொடுத்தும்
கதறியபடியே உயிர்துறக்கும் நிலத்தில்
நீர்ப்பழங்களில் பதுங்கிப் பிழைக்கும் நதிகளின் மீது
மிளகாய்த்தூள் தூவுகிறது கோடை
நெருஞ்சிகள் கொன்றைகள் ஆவாரம்பூக்கள்
தங்கள் மஞ்சள் பல்தெரியச் சிரிக்கும் கோடையில்
காகங்கள் மட்டுமே கவிதைபாடுகின்றன
இன்று
உலகக் கவிதைகள் நாள்
நானொரு
கவிதைபாடும் காகம்
நாம்
கோடையைப் பாடுவோம்
பிறகு
தவளைகளை அழைப்போம்
அவை
கூட்டுப்பிரார்த்தனைகளால் அழைக்கும்போது
மஞ்சள் தட்டான்கள் மழைகொண்டு வரும்
2
பெருகும் இரவு
கவிழ்த்துவைத்த கோப்பையாய்க் கிடக்கிறேன்
நீயகன்ற அந்திக்குப்பின்
பெருகத்துவங்கிவிட்டது இரவு
கடைசி நட்சத்திரமும் கருகி விழும்வரை
கதறிக்கொண்டிருந்த காற்றுக்குப்
பித்தேற்றியிருந்தது பிரிவு
அசாதாரணமாக வந்து
சாதாரணமாகப் பிரிந்துபோவது
வாடிக்கை உனக்கு
பிடுங்கி வீசப்பட்ட தென்னை பிறகென் இரவு
மின்மினிப்பூச்சி என் கனவு
களிமண் உருண்டையில் பதிக்கப்பட்ட அதன் விதியின் வெளிச்சத்தை
நிலாவென்று நினைத்துச் சிரிக்கின்றன
சிறகுமுதிராத பறவைக்குஞ்சுகள்
வருவதும் போவதுமாயிருக்கிற காதலின்
வேதனைததும்பும் பாடல்களால்
அழுகிக்கிடக்கும் இதயம்
கார்கால அந்தியின் மேஜையில்
ஒரு தேநீர்க்கோப்பை
இப்போது அது கவிழ்ந்துகிடக்கிறது
பருகப்படாத தேநீரின் முன்பு
பார்த்தபடியே அமர்ந்திருந்துவிட்டு
விடைபெறுமுன் ஞானம் அலாதியானது
என்னைப்பருகி விடைபெறுகின்ற
உன்னைப்பருகி போதையேறிய விழிகள்
கண்ணீர் வடிப்பது கொடூரமானது
வரும்
இன்னொரு கார்காலம் அதிலொரு அந்தி
வருவாய் நீயும்
இன்னொரு மழையாய்
கவிழ்ந்துகிடக்கிற இந்தக் கோப்பையில்
நிரம்பும் மறுபடி இன்னொரு தேநீர்
முன்னொரு பிறவியின் இன்னொரு பிறவியின்
கனவிலும் நினைவிலும்
இந்தப் பிறவியைக் கடப்பது என்பது
சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனிக்ஸை
இறந்த நதிக்கரையில் தேடித்திரிவது
3
புராதன நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன
வெகுதொலைவு அலைச்சத்தம்
அது உன் குரல்
வெகுகாலம் ஆகிவிட்டது
கனவுகளை இழந்து
திமிங்கிலங்கள் கரையொதுங்கிய கடலில்
கரைநெடுக கவிழ்ந்த தோணிகள் அவை
உருவியெடுத்து
கொக்கியில் மாட்டப்பட்ட
துடிக்கும் இதயம் காதல்
விலைமலிவு இப்போது
சொற்கள் இறந்த நிகழ்காலத்தின்
வெறித்த கண்களில்
கோடைப்பரிதி தீமூட்டுகிறது
பற்றியெரிகிறது பகல்
மழையுடனோ
மழையாகவோ
நீ வருவாய் என்கிற
புராதன நம்பிக்கைகள் பொய்த்துவிட்டன
கவித்துவம் என்பது
அஜினோமோட்டோ தூக்கலான
கேஎஃப்சி இறைச்சி
ச்சாஸ் தேவைப்படுகிறது கூடுதலாக
சில
கைத்த நினைவுகளை மறைக்க
கால்தொட்ட மணலின் கர்வம்
அலைகளின் கிளர்ச்சி
யாவும் கொண்ட கடற்கரை இன்று
தகித்துக் கிடக்கிறது
மாலைக்குள் அநேகமாக
மழைவரக்கூடும்
4
உன்னை நினைத்து …
வறண்ட வானிலை நிலவுமென்று
வானொலி நிலையம் சொல்லிய அன்று
நீ வந்தாய்
மழைவந்து விட்டது…
மழையோடு நீவரும்
மாலைகள்
சொர்க்கத்தின் கதவுகளினூடே நம்மை
இரவுக்குள் அழைத்துச் செல்பவை
சொற்கள் மூர்ச்சிக்கும் முன்னிரவில்
புலன்கள் மானுடத்தின் ஆதிமொழி பேச
முனகல்களின் சங்கீதம்
பெருமூச்சின் பாடல்
அதிர்ந்தடங்கும் தந்திகளில்
அபூர்வ ராகங்கள் …
நெடிய பகல்களின் நிறைவில்
அதிசயமாய் வந்த
அந்த இரவுதான்
காகமாய் அமர்ந்து கரைந்து கொண்டிருக்கிறது
வாசல் வேப்பமரக் கிளையில் இப்போது
எல்லாமே மாறிவிட்டன இப்போது வாழ்வில்
குளமிழந்த தவளை நான் இப்போது
நீ
கண்களில் ஆறு பெருகப் போனதிலிருந்து
நீயற்ற மழை வெறும்
திரவப் பொழிவு
அதில்
பழைய கதகதப்பு இப்போது இல்லை
லாரிகளின் ஊளையொலி
ஹாரன்களின் தொடர் இரைச்சல்
நாளெல்லாம் கேட்கும் பழைய நதிக்கரை
வெறும் சுடுகாடு இப்போது
நானொரு பிணம்
நடமாடும் நடைப்பிணம்
தேனொழுகும் மலர்களின்
பாடல்களின் நறுமணத்தைப்
பின்தொடரும் வண்டுகளின் பித்தேற்றும்
யாழிசை
நிறைந்த அந்த நாட்களின் நினைவில்
களைத்துக் கிடக்குமிந்தக்
கோடைப்பகலில்
எங்கிருந்தோ ஒரு பறவை கூவி
இணையை அழைக்கிறது
கூவல் அதன் மொழி
கவிதை என் மொழி…
5
தூர்ந்த கிணற்றில் மிதக்கும் சூரியன்
அறம் நீதி சட்டம் போன்ற
பயனற்ற சொற்கள்
வழக்கொழிந்த நிலத்தில்
தெருவிளக்கை மொய்த்துக்
கருகிவீழ்ந்த ஈசல்களுக்கு
நம்பிக்கை என்றே
பெயர்சூட்டியிருந்தோம்
எல்லா இரவுகளும் விடியும் என்கிற
பழைய கதைகளை
மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருந்த
முதிய மனிதர்களின் தொணதொணப்பை
யாரும் கேட்பதில்லை
இப்போதெல்லாம்
காலம் மாறிவிட்டது என்பதை
தற்செயலாய் அறிந்துகொண்ட
ஒரு நட்சத்திரம்
கடலில் வீழ்ந்தபோது
அது
தவறிவிழுந்ததாகவே பலர் நினைத்தனர்
போன்சாய் மரத்தடியில் தியானம் செய்தவன்
ஞானம் பெற்றபோது சொன்னான்
இனி மரணமே விடுதலை
தவளைகள் பாம்புகளைப் பின்தொடர்ந்து
மனிதர்களும் இடம்பெயர்ந்தபிறகு
பெருமூச்சு விட்டபடி தனித்துக்கிடக்கும்
முதிய மனிதர்கள் நிரம்பிய கிராமங்கள்
தமக்குத்தாமே தங்களது
பழைய கதைகளை முனகிக்கொண்டிருக்கின்றன
கைவிடப்பட்ட சுமைதாங்கி ஒன்றின்மேல்
களைத்த காகம் ஒன்று
அரற்றிக்கொண்டிருக்கிறது
எப்போதோ இறந்துவிட்ட மனைவியின் பெயர்சொல்லி
காக்கா கத்துது பார்
விருந்தாடி வரப்போவுது என
சத்தமாய்ச் சொல்லுகிற கிழவர்
ஏதோஒரு காலத்தில் உறைந்துபோனவர்
கருணை தீர்ந்த உறைகிணறுகளைக்
காலம் தூர்த்தபிறகு
நதிக்கரை நெடுக லாரிகள் அணிவகுத்த
காலமும் முடிந்தது
அலைகள் வெகுதொலைவில்
ஓலமிடுகின்றன
அவை
புரிந்த துயரத்தைப்
புரியாத மொழியொன்றில் பாடுகின்றன
கனவு என்பது வேறொன்றுமில்லை
கட்டடத்துக்கடியில் புதையுண்ட குளம்தான் என்று
மெல்லிய குரலில் சொல்லிவிட்டுத்தான்
லாரிச்சக்கரங்களுக்கடியில் தலைவைத்துப் படுத்தது
கடைசித்தவளை
6
மௌனக்கவிதைகள் இறந்துவிட்டன
நாம்
வரலாறு நெடுக
வஞ்சிக்கப்பட்டவர்கள்
கொல்லப்பட்டுக்
கடவுளானவை
நம் குலதெய்வங்கள்
நடுகற்களாய் மிஞ்சிய அவற்றையும்
உடைத்துப் புதைத்தே எழுப்பப்பட்டவை
நம்மை வெளியே நிறுத்திய
பெருங்கோயில்கள்
பரிதி உறிஞ்சியும்
தீராத நீர்நிலைகளை
பன்னாட்டுக் கம்பெனிகள்
உறிஞ்சித் தீர்க்க
பானைகளைப் பறிகொடுத்த நதிகள்
பாட்டில்களில் அடைபட்ட காலம் கொடிது
தாய்மொழி மறந்த சந்ததிகள்
தாயையும் தந்தையையும் மறப்பதே இயல்பு
அந்நிய நிலங்களில் அவர்கள்
அடிமைகளாய் உழல
அநாதைகளாய்ச் சுடுகாடு போகும்
முதுமை நமது
பெண்களின் பாடு
இன்னும்
பெரும்பாடு
மடலேறுதலில் தொடங்கிய காதல்
உடன்கட்டை ஏற்றுவதில்
போய் முடிந்தபோது
அடிமைவிலங்குகளே ஆபரணம் ஆயின
மௌனம் என்பது தியானம் அல்ல
மரணம்
இனியாவது நாம் பேசுவோம் …
முழக்கம் இல்லையெனினும்
முனகவாவது வேண்டும் நாம்
கதறல் பெருகிக்
காற்றை நிறைக்கையில்
கலையக்கூடும்
காலத்தின் பேரிருள்
நமக்கு நாம்தான்
யாருமில்லை வேறு
நான் நானெனத் தனித்திருக்காமல்
நாமாகி எழுவோம்
நாமினி வெல்வோம்
கூச்சல்தான் கவிதை நமக்கு
மௌனக்கவிதைகள்
இறந்துவிட்டன …
7
ஊரிழக்கும் வலி…
குடமுருட்டிக் குளியல்
அதிகாலையில்
திரும்பிவரும் வழியில்
இரவெல்லாம் பேருந்துப்பயணிகள்
வீசிவிட்டுப் போன
காசுகளைப் பொறுக்கி
உண்டியலில் போட்டுவிட்டு
நெற்றி நிறையத் திருநீறு பூசிக்கொண்டு
மரம்வெட்டித் தெருவில் இருந்த
விடுதி திரும்புவோம்
அவ்வப்போது புழுக்கள் கிடக்கும்
அசைவக் கஞ்சியைச் சிறிது பருகி
அவசரம் அவசரமாய்ப் பள்ளிக்கு ஓடுவோம்
சிரிப்பே முகமாகப் பூத்திருக்கும் செல்வராணி
பேச்சில் பிரமிப்பூட்டும் ஷகிலா விஜயகுமாரி
கவிதையை ரசிக்கவைக்கும் ராசாங்கம் வாத்தியார்
கணக்கை வெறுக்கவைத்த குடுமி வாத்தியார்
நினைவுகளை அசைபோடும் மனத்தில்
ஆஞ்சநேயா ஸ்வீட்ஸில் அப்பா வாங்கித்தரும்
அல்வா இனிக்கிறது இப்போதும்
சீதளாதேவி மாரியம்மன்
ஊரைக் குளிர்விக்க
பாடைகட்டித் திருவிழா
பங்குனிக்கு அழகூட்ட
பேரீச்சை நுங்கு ராட்டினங்கள் நாடகம்
இரவின் திருவிழா
இளமைக்குப் பெருவிழா
அப்பாவும் இல்லை
அம்மாவும் இல்லை
அவர்கள் வாழ்ந்த குடிசைவீடும் இல்லை
ஊரோடு இருந்த
தொடர்புமில்லை உறவுமில்லை
முகம்பார்த்தால் புன்னகைக்க
யாருமில்லை இப்போது
கும்பகோணத்திலிருந்து மன்னார்குடி போகும்
பயணத்தில்
பேருந்து
சிலநிமிடம் நிற்கிறது கோவில் வாசலில்
சீதளம் இல்லாத கோடையில்
சீதளாதேவி சிறிதே புன்னகைக்கிறாள்
சின்னஒரு பெருமூச்சு
எழுகிறது இறக்கிறது
பெரிய ஒரு துயரம் அதில்
இருக்கிறது
தகிக்கிறது
ஊரிழக்கும் வலி ஒரு ஊமைவலி
யாரிடத்தும்
பகிர்ந்துகொள்ள முடியாத
பால்கட்டிய மார்பின் வலி..
8
மூதாதைகளின் சாபம்
கலப்பையை எரித்துத் தீமூட்டி
விதைநெல்லை அவித்து அரிசியாக்கிக் கொதிக்கவைத்து
கதியற்ற குலசாமிக்குக்
கட்டக்கடைசியாய்ப் பொங்கல் வைத்தவன்
போயிறங்கிய பெருநகரம் கடல்போலிருந்தது
கடலோடும் இருந்தது
ஆவலோடு ஓடி அலைகளிலே கால்நனைத்தால்
சாபங்களை அள்ளி இறைக்கிறது கடல்
காற்றும் வெளிச்சமும் நுழையாத அறையில்
தூக்கம் தடைப்படும் நள்ளிரவுகளில்
கெட்ட கனவுகள் எழுகின்றன
தாழிடப்பட்ட கதவுகளைத்
தட்டிக்கொண்டேயிருக்கிறது வெறுமை
எரியும் விழிகளை அணைக்காத உறக்கம்
கனவுகளால் கிழிபட்டு வீதியில் அலைகிறது
பசித்த குடல்கள் சாராயத்தில் அழுகி
தமனிகளின் நதியூடே
பாறைகள் முளைக்கின்றன
தறிகெட்டுத் துடிக்கும் இதயமும்
புழுக்கள் நெளியும் மூளையும்
புயலிலாடும் தென்னைபோல
உடலைப் பிடுங்கி வீச
மரப்பாச்சிப் பொம்மைபோல மூர்ச்சையுற்றுக் கிடக்கிறான்
பால்யத்தின் நீர்நிலைகள்
உறக்கத்தில் உருகிக்
கனவில் பெருகி
விழிகளில் கசிந்து
கன்னத்தில் வழிந்து
மார்பை நனைக்கும் நேரத்தில்
மூதாதைகளின் சாபம்போல் ஆந்தைகள் ஒலியெழுப்புகின்றன
வெகுஅருகே எங்கோ
பிணமெரியும் நாற்றம்
உண்மையில்
உள்ளுக்குள் அவன்தான் எரிந்துகொண்டிருக்கிறான்
ஒருபோதும் அவன் இனித் திரும்பமுடியாத
வயோதிகக் கிராமம் தன் நோய்ப்படுக்கையில்
முனகிக்கொண்டிருக்கும் ஒலி
இரவுகளை அலைக்கழிக்கிறது
மதுவும் தோற்றுவிடும் துயிலா இரவுகளில்
காதுகளில் ஒலிக்கும் துயரார்ந்த பாடல்
கைவிடப்பட்ட மூதாதைகளுடையது
அவர்கள்
ஆவிகளாய் இன்னும் அலையுமாறு
சாபமிடப்பட்டு
காலத்தில் மிதக்கிறார்கள்
மின்விசிறி மீதிருந்து
பிணத்தை இறக்குபவர்கள்
அது எடையற்று இருப்பதை
அதிர்ச்சியோடு உணர்கிறார்கள்
எடையற்று உணர்வற்று கதியற்று
எதுவுமற்ற மனிதர்கள்
வசிக்கிறார்கள் வாழ்வதில்லை
வாழ்வது என்பது
உயிரோடிருப்பது மட்டுமில்லை
9
படுகொலைகள் பெருகும் காலம்
மனிதர்களைக்
கூட்டம்கூட்டமாகவும்
நீர்நிலைகளைத்
தனித்தனியாகவும்
படுகொலை செய்கிற உத்தி
மிகப்புதிது
கூழாங்கற்களைப் படுகைகளில் கதறியழ விட்டுவிட்டு
ஆற்றின் பிணத்தை ஏற்றிப்போகும் லாரியின் ஊளையொலி
அதிகாலை இசையாகிவிட்டது இப்போது
குவாரிகளில்
பாறைகளின் கதறல்
மிச்சமிருக்கிற மலைகளில் எதிரொலிக்கிறது
நசுங்கிக்கிடக்கும் நத்தைகளின்
குருதிபெருகும் நெடுஞ்சாலை
அரளிப்பூ சூடிச் சிரிக்கிறது
ஒரே பாணியில் கொல்லப்பட்ட
மூன்று பிணங்களை
அநேகமாக எல்லோரும் மறந்துவிட்டோம்
விராட்கோலி தரவரிசைப் பட்டியலில்
முதலிடம் பிடித்துவிட்டார் மீண்டும்
சந்திராயன்
ஐந்தாம் கட்டப் பயணத்துக்குள் நுழைந்துவிட்டது
பெருமாள்
பச்சைப்பட்டுடுத்தி கருடவாகனத்தில் அருள்பாலிக்கிறார்
மணிப்பூர்
அதை விடுங்கள்
அம்பேத்கர் படங்கள் அகற்றப்பட்டு
இந்துக்கடவுளர்கள் நீதிமன்றச் சுவர்களில் குடியேறுவார்கள்
சிட்டுக்குருவிகள் அழிந்துவருகின்றன
மலையுச்சிக் கழுகுகள் கீழிறங்கி வரும்போது
விருந்து தயாராக இருக்கிறது
கவிதை ஒரு ஊதிப்பெருத்த பிணம்
அதன்மீது
சொற்கள் அல்ல
புழுக்கள் ஊர்ந்து நெளிகின்றன
காற்றில் வெப்பம் கூடுகிறது
கனவையும் ஆக்கிரமித்த படுகொலைகள்
இயல்பாக மிக இயல்பாக
ஒரு வழிபாட்டுச்சடங்கு போல
நிறைவேற்றப்படும்போது
தேசபக்திப் பாடல்களும்
கடவுள் வாழ்த்துப் பாடல்களும்
நிலமெங்கும் ஒலிக்கின்றன
கதறல்கள் யாருக்கும் கேட்பதில்லை
காதுகளில் கேட்பிகள்
கண்களின்முன் ஒளிர்திரைகள்
பிம்பங்களின் வன்முறை
பெருகுகிறது நிறைகிறது வழிகிறது
நேரமில்லை யாருக்கும் இப்போது
நேரவில்லை நமக்கு அது இன்னும்
எனும்வரை …
10
துயர்மிகு வரிகளுள்ள கவிதை
சாம்பல்நிறப் புறாக்களைப்
பதற்றமுற வைக்கும்
கோபுரஉச்சி ஒலிபெருக்கி
பிரார்த்தனைப்பாடல்களால்
பயனொன்றுமில்லை
இனி
கைவிடப்பட்ட கடவுள்களின் கண்ணீர்
காலத்தின்மீது படரும் அமிலம்
பிரார்த்தனைப் பாடல்களில் இப்போதெல்லாம்
துயரமே மேலோங்குகிறது
அதிகாரத்தின் கண்ணிகள்
கண்ணுக்குத் தெரியாத அளவுக்கு நுண்ணியவை
கண்காணிப்புக் கேமிராக்களே
அதன் விழிகள்
அந்தரங்கம் கொல்லப்பட்ட காலத்தின்
முழுநிர்வாண உடல்கள் நமது
எதைப் பேசவேண்டும்
என்பதையும்கூட
எவரெவரோ தீர்மானிக்கும் காலத்தில்
எதைப் பேசினாலும் அதில்
குரல்மட்டுமே நமது
பசிநிறைந்த குடல்களின்
நெடுங்காலப் பாடல்களைப்
புதைத்த சவக்குழியில்
கள்ளிப்புதர்கள் அடர்ந்துவிட்டன
சிலந்திவலைகளில் சிக்கிக்கிடக்கும்
சொற்கள்
மரணமே விடுதலை என்பதறிந்து
தியானிக்கின்றன
மௌனமாக …
கடைசியாக நாம்பார்த்த பௌர்ணமி
மணல்அள்ளும் லாரியில்
கிளிஞ்சல்களோடு போனபோது
தேம்பித்தேம்பி அழுததைக் கவனித்து
மனம்பிறழ்ந்த ஒருவன்
தன் கக்கத்து இடுக்குச் சாக்குப்பையில்
எரிநட்சத்திரங்களோடு நடக்கிறான்
அழுதும் சிரித்தும்
நதிகளற்ற பாலங்களின் கீழ்
புதையுண்ட இருள்வெளிகளில்
இவ்வாறாக
அழகியலைத்
தன் பழைய காதலியைப்போல் பிரிந்த கவிதை
ஒப்பாரியாய் மாறிய கதையை
சொல்லமுடியாமல் திகைத்த மொழியின்
கன்னத்தில் வழிகிறது காலத்தின் அமிலம்
மணல்வெளியில் காயும்
இறந்த மீன்களைக்
காகங்கள் இப்போது சீந்துவதில்லை
துயர்மிகு வரிகளுள்ள கவிதையை
மறதியின் புதைசேற்றில் விதையாக வீசிவிட்டு
மௌனம் சூடுகிறது மொழி
அது
புதைகுழி மேட்டுப் பூக்களின் மணத்தோடு
அகதிகளின் பாடலில் சீழாகக் கசிகிறது
நாம்
மிகப்பழைய காலங்களில் தொலைத்த
மலையருவிப் பாறைகளை
முகத்துவாரம் நெருங்கும் நதிகளில் தேடுகிறோம்
அதனிடமோ
பெருமூச்சைத் தவிர வேறெதுவும் மிச்சமில்லை
ஆந்தைகள் விழித்திருக்கும் நள்ளிரவில்
பழம்தின்னி வௌவால்கள் பதற்றத்தோடு அலைகின்றன
அவை
நெடுந்தொலைவுப் பறவைகளின் கண்ணீரின் முன்பு
நினைவிழந்த நீர்நிலைகள் இறந்த கதையை
மரம்தோறும் பாடி அரற்றும்போது
மலட்டு நிலங்களில் சூனியம் விளைகிறது
நம்பிக்கையூட்டும் சொல் ஒன்றைத் தேடி
நத்தையைப்போல் ஊர்ந்தலையும் சொற்கள்
லாரிச்சக்கரங்களுக்கடியில் நசுங்கின கதையை
பார்த்தவர்கள் சொல்லவில்லை யாருக்கும்
சொன்னவர்கள் போனார்கள்
தொலைந்து
காலத்துள்
கண்விழிக்கும்போது நம்பிக்கை ஊட்டிய
கடைசிநட்சத்திரம்
கருந்துளைக்குள் குதித்தபோது
கவிதையைவிட்டு வெளியேறிய கடைசிச்சொல்
அது
மலட்டு நிலங்களில் மண்புழுக்கள் தேடி
பூமியின் அடிவாரத்துக்குப் போய்விட்டது
இறந்த அந்தச் சொல்லுக்கு மாற்றாக
என்னிடம் இருக்கிறது ஒருசொட்டுக் கண்ணீர்
அது
கனவுகளின் சமவெளியின்
கடைசிநதி …
எழுதியவர்
கலியமூர்த்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.