சிறப்புக் கவிதைகள்: கார்த்திக் திலகன்
சிறப்புக் கவிதைகள்: கார்த்திக் திலகன்

தொடர் 5 : சிறப்புக் கவிதைகள் – கார்த்திக் திலகன்

 

 

 

 

1) நிழல் திருடன்

மரத்தின் அடியில் நின்று
அதன் நிழலுக்குள் கனிந்திருக்கும் குளுமையை
திருடித்திருடி உடலெங்கும் பதுக்கிக் கொண்டிந்தேன்
வெயில் நாய்கள் என்னைப் பார்த்து விட்டன
நிழல் திருடன் நிழல் திருடன்
என்று குரைத்தபடி
கூட்டமாக என்னைத் துரத்தின
சுற்றி வளைத்துக் கடித்துக் குதறின
உடலெங்கும் உதிரமாக வழிந்தது
வியர்வை

2) சோம்பேறிக் கணவன்

 

குழந்தைகள் கால்மாறி கால்மாறி உறங்கிக் கொண்டிருந்தார்கள்
கொஞ்ச நேரம் நின்று ரசித்தேன்
நீ குளிக்கப் போயிருக்கிறாய்
படுக்கையில்
சிதறிக் கிடந்த உன்னுடைகளைப் பார்த்து
புன்னகைத்தபடி கதவைச் சாத்தினேன்
முற்றத்தில் என்
பாத அணிகளோடு உன்னுடையதும் குழந்தைகளுடையதும்
கலந்து கிடந்தன
அவற்றைக் கலைக்க மனமின்றி வெறுங்காலோடு வாசலுக்கு வந்துவிட்டேன்
நீ குளித்துவிட்டு வந்து
எங்கே என் சோம்பேறிக் கணவன்
என்று தேடுவாய்தானே
அதுவரைக்கும்
ஒரு நொடியில் இருந்து இன்னொரு நொடி பிறப்பதை
வேடிக்கை பார்த்துக் கொண்டு
வெளியே நிற்கிறேனே என் செல்ல மனைவியே

 

3) திருமார்பு

ஆதிநீரில் ஒரு பகுதி என் நெஞ்சில் நஞ்சாக நிறைந்திருக்கிறது
காலாதிகாலமாய் நானும் மடியில் கிடக்கிறேன்
நீ கச்சையை விலக்காமல் அந்நஞ்சு கரையாது
நஞ்சு திரிந்து அமுதாகும் வண்ணம்
பாலூட்ட வல்லது காணுன் திருமார்பு

4) நீர்மச் சிணுங்கல்

கடலின் உப்புப் பொய்களுக்கு
இடையேதான் உண்மையின் மீன்கள் வாழ்கின்றன
மொத்த உண்மைகளையும் வெளிக்கொண்டு வந்துவிடலாம் என்று
என் விரல்களை வலையாக்கி
கடலை மூடினேன்
கடலின் அலை கொஞ்சல்களுக்கும்
நீர்மச் சினுங்கல்களுக்கும் மயங்கி
அந்த யோசனையைக் கைவிட்டு விட்டேன்

 

5) மஞ்சள் பேருந்து

கூட்டம் நசநசக்கும் இரவுப் பேருந்துப் பயணம்
வெளிவானில் நீலத்தார்ச் சாலையில்
ஓடிவரும் மஞ்சள் பேருந்தை
ஆசையோடு பார்க்கிறார்கள் பயணிகள்
உடல்களை அங்கேயே விட்டுவிட்டு
மஞ்சள் பேருந்தில் அனைவரும் தாவி அமர்ந்து கொள்கிறார்கள்
ஓட்டுநர் மேகத்துக்குள் பேருந்தினை நுழைக்கிறார்
மஞ்சள் பேருந்தை மழைக்கொத்துக்கள் உரசும் குளுமை
தித்திப்பாய்க் கரையும் திரவ வினாடிகள்
பூத்துக் குலுங்கும் மஞ்சள் மகிழ்ச்சி
ஜன்னலோர கன்னங்களில் மேகங்கள் எழுதிய ஆச்சர்ய குறி
இன்பம் எனும் வார்த்தையை முதல்முறை எழுத்துகூட்டி படிப்பது போல எழுந்த
சந்தோஷக் கூக்குரல்கள் சரிகின்றன அந்தியின் தோள் மீது

 

6) அலைப் பாம்புகள்

பல ஆண்டுகளுக்குப் பிறகு அம்மாவுடன் கடற்கரைக்குப் போயிருந்தேன்
அவள் முகத்தில் படர்ந்திருந்த
துயரத்தின் ஆழ்ந்த சுருக்கங்களும்
ஒளி இழந்த கண்களின் சோபையும்
என் சொற்களை வழிமறித்தன
எடை மிகுந்த ஒரு மாலையின் பாரம் சரிந்து கொண்டிருந்தது
எடையின் பாரத்தை விட
எடையின்மையின் பாரம்
தாள முடியாதிருந்தது
பாம்பின் கண்கள் கொண்ட அலைகள்
எங்கள் பாதங்களில் வழுவழுத்தன
நீல நிற அன்பால் விரிந்திருக்கும் கடலின் ஒரு துளிதான் அம்மா
சுருங்கி வலுவிழந்த கைகளால் எனது கைகளைப் பற்றிக் கொண்டாள்
எனக்குள் அலையடித்துக் கொண்டிருந்த
கடலின் மடியில்
முகம் புதைத்து அழுதது ஒரு நதி

 

7) விரல் மலர்கள்

இமைகளுக்குக் கீழே உருளும்
கிருஷ்ணனின்
வெண்ணெய் உருண்டை போன்ற
உனது கண்களை நான்
எப்படி மறப்பேன் நண்பா
வண்ணங்களின் மீது
உனக்கப்போது தீராத காதல்
சிறகசைத்து ஒலிஎழுப்பும்
மைனாவின்
வண்ணத்தைப் பற்றிக் கேட்பாய்
அது உன் சிலிர்ப்பின் வண்ணத்தில் இருக்கும் என்பேன்
காலுரசும் பூனையின்
வண்ணத்தைப் பற்றிக் கேட்பாய்,
அது உன் காமத்தின் வண்ணத்தில் இருக்குமென்பேன்
உன் ஊன்றுகோல்
பூமியில் தட்டப்படும் ஓசை
இப்போதும் என் செவியில் விழுகிறது
எத்தனை முறை தட்டியும்
திறக்காத இந்த பூமியை
அத்தனை பிரார்த்தனைக்குப் பிறகும் திறக்காத அந்த வானத்தை
கருணையின் வண்ணமாய்
காணும் நண்பனே
உன் பாதம்பட்ட இடத்திலெல்லாம்
புத்தனின் கண்கள் விழித்திட
நீ எங்கே சென்றாய்
என்றாவது ஒருநாள்
எனது சாலைகள் உன்னிடம்
என்னை கூட்டிச் செல்லும்
அப்போது
பூக்களைப் போன்ற
உன் விரல்களை என் கன்னங்களில்
சூடிக்கொள்ள வேண்டும்.
எனது நிராசைகளின் வண்ணம்
உன் கண்களைப் போல இருக்கிறது
என்று சொல்ல வேண்டும்
ஒரு அல்லி மலரைப் போல
கைகளைக் கூப்பியபடி
உன் கண்ணீரின் வண்ணத்தில் நான்
கரைந்து போகவேண்டும்.
எங்கிருக்கிறாய் என் நண்பா

 

8) உதிரிப்பூக்கள்

இரவு என்பது உண்மையில் புலிதான்
தனிமையின் காட்டுக்குள் நுழைந்து
அது உறுமும் போதுதான் அதைக் கண்டுபிடித்தேன்
பயப்படாதே பௌர்ணிகா
அணைத்துக்கொண்டு கிடக்கும் உயிர்களை அது ஒன்றும் செய்யாது

யானை என்று நினைத்து
மேகத்தைக் கட்டி
இழுத்து வந்து விட்டாய்
நீருக்கு மதம் பிடித்தால்
நீ தாங்க மாட்டாய்
வேண்டாம் நண்பா
அதை அவிழ்த்து விட்டு விடு

வா நண்பா
மடத்தனத்தின் மீது ஏறி
ஒரு சுற்றுப் போய் வருவோம்
இப்போதைக்கு
அதுதான்
புத்திசாலித்தனமானது

யாருடைய சிகரெட்டில் கங்கு?
இந்தச் சூரியன்
ஆழமாய் உள்ளிழுத்து
மேகமாய்ப் புகைவிட்டு
வானத்தை அழகாக்கும்
இந்தச் செயின் சுமோக்கர்
யாராக இருக்கும்?

உயிரை யோனி வடிவில் படைத்தது இறுதியில் மரணம் புணரத்தான்
ஆனால்
அந்த உச்ச சுகத்தை ஒரு உயிரும் சொன்னதில்லை

 

9) மடிநிறைய வார்த்தைகள்

பள்ளத்தாக்கு உதடுகளை அசைத்துப் பேசுவதை
வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தேன்
இரண்டு காதல் இதயங்கள் ஒன்றாகத் துடிப்பதைப் போன்ற
ஒத்திசைவில் இருந்தது அதன் பேச்சு
அடர்ந்த மொழியின் பச்சை வாசத்தில் நான் கிறங்கினேன்
பள்ளத்தாக்கின் வார்த்தைகளைச் சேகரித்து
மடி நிறைய கட்டி வைத்துக் கொண்டேன்
அவற்றை என் தோட்டத்து குயில்களுக்காக நான் கொண்டு செல்கிறேன்
பள்ளத்தாக்கின் வார்த்தைகளைக் குயில்கள் இசையமைத்துப் பாடுகையில்
அவை மூன்று வசந்த காலங்களை ஊடுருவிச் செல்லும்

 

10) “ஆம்”கள்

தன் முகத்தைப் பார்க்க நினைத்தது
ஒரு கண்ணாடி
அதற்கு இன்னொரு கண்ணாடி உதவியது
கண்ணாடிக்குள் தெரிந்தது இன்னொரு கண்ணாடி
அதுவும் அப்போது தன் முகத்தைப் பார்க்க ஆசைப்பட்டது
இரண்டு புறமும் கண்ணாடிக்குள் கண்ணாடிக்குள் கண்ணாடிக்குள் கண்ணாடிகள்
முதலாவது கண்ணாடி
கோபத்தில் தனது நாற் புறச் சட்டமும் தெறிக்குமாறு சத்தமிட்டது
நான் முகம் பார்க்க நினைத்தது
தவறா தவறா என்று
அனைத்து கண்ணாடிகளும் உரக்கக் கூவின ஆம் ஆம் ஆம் என்று
வெள்ளைப் பன்றி குட்டிகளைப் போல
குறுக்கும் நெடுக்கமாக கண்ணாடிகளுக்குள் அலைந்து கொண்டிருந்த “ஆம்”கள்
பார்க்க அழகாய் இருந்தன

-கார்த்திக் திலகன்

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *