ரிக்க்ஷாக்காரர்

கால்கள்
மேலும் கீழுமாக
முன்னும் பின்னுமாய்
சீரலைவு இயக்கத்தில் இயங்க
கைகளால் மணியடித்தவாறே
கூட்டத்தை விலக்கியபடி
கடக்கிறார் ரிக்ஷாக்காரர்.
ஆங்கில நாளிதழ் ஒன்றை
சாவகாசமாகப் படித்தவாறு
அமர்ந்திருப்பவருக்கு
கால்களிரண்டும் நன்றாக இருக்கின்றன.
சவாரி முடியும்
தருணத்தை எதிர்நோக்கியபடி
மூச்சிரைக்க இரைக்க
பெடல்களை மிதிக்கிறார்,
ரிக்க்ஷாக்காரர்.
தேசிய முக்கியத்துவம்மிக்க
கட்டுரை ஒன்றை
வாசித்து முடித்திருந்தார், பயணி.
மனித உழைப்புச்
சுரண்டலுக்கெதிரான
மாபெரும் இயக்கத்தின்
செயல்பாட்டாளர்
இறங்குவதற்கான
இடத்திலிருந்து வெகுதூரத்திலிருக்கிறது,
டாஸ்மாக்.
மீண்டும்
மிதிக்க வேண்டும்
மூச்சிரைக்க இரைக்க.

இருவர்

இந்நீதிமன்றத்தின்
எல்லாக் கதவுகளையும்
அடைத்துக் கொண்ட
காற்றின் பிடியில்
ஊசலாடத் தொடங்குகின்றன,
அவர்களின் புகைப்படங்கள்
வாத பிரதிவாதங்களின் போது
மௌனத்தின் ஒலியை
இசையவிட்டு
புன்னகைக்கின்றனர்.
வாழ்வின் இருண்மையை
நீதிமன்றத்தின் ஒரு
மூலையில்
இறுதித் தீர்ப்புரை
ஒளித்து வைத்திருந்ததை
அறியாத அவர்கள்
தங்கள்
மூக்குக்கண்ணாடிகளை மட்டும்
புகைப்படச் சுவரிலேயே
தொங்க விட்டுவிட்டு,
தத்தம் புகைப்படத்திலிருந்து
இறங்கி
நீதிமன்றத்தை விட்டு
வெளியேறுகிறார்கள்.
ஒருவர் முன்வாயில் வழியே;

மழை வனம்

சட்டென்று நிறம் மாறும்
விசும்பினின்று
வீழத்தொடங்குகின்றன
துளிகள்.
குளிர்ந்த வனத்தின் மலை மடுவெங்கும்
ஆகாசப் பெருவெளியில்
தன் சாகசங்களை நிகழ்த்தவிருக்கிறது மழை.
மழையின் தாளகதிக்கு தனது
பரிவாரங்களை அனுப்பும் வனம்.
இலைகள் மடல்கள் தழைகள்
ஈரமும், ஈரம் தெறித்த
தூறலுமாக
தனித்து நின்ற மரமொன்றின்
எல்லாப் பகுதிகளிலும் முத்தத்தைப்
பதித்தபடி பயணிக்கிறது, மழை.
முத்தச் சாரலின் வன்மையில்
மூழ்கிய வன ஜீவன்கள்
மழையை வெற்றி கொள்ளவும்
மழைக்கும் வனத்திற்குமான
போரை வலுக்கவும்
மழையின் வசீகரத்திற்கு
வளைந்து கொடுக்கலாயின.
சட்ட் சட்ட் தடத் தடத்…
சட்ட் சட்ட் தடத் தடத்…
சட்ட் சட்ட் தடத் தடத்…
ஓய்ந்த மழையும்,
காய்ந்த வெயிலுமாக
சிலிர்த்துக் கிடக்கிறது வனம்.

செருப்புத் தைப்பவர்

சூரியன் வந்த பிறகு
சூடான தேநீர் அருந்திவிட்டு,
பழைய அந்தச்சாக்கு மூட்டையிலிருந்து
ஒவ்வொரு ஜோடியாக எடுத்து வைக்கிறார்.
நடை பாதையிலும்
தார்ச்சாலையிலும் வருவோர் போவோரின்
கால்களையே
பார்த்துக்கொண்டிருக்கிறார்,
கொக்கைப் போல.
குத்தாணியும் தைக்கும் லினென் நூலும்
இரும்பினால் ஆன ஒருவகை மனையும்
பாலீஷ் டப்பாக்களும்
(பொதுவாக பிரவுன் மற்றும் கறுப்பு) பிரஷும்
அவரது கடையை
கதையை அலங்கரிப்பவை.
செருப்பைத் தைத்துக் கொள்ளவோ,
பாலிஷ் போட்டுக் கொள்ளவோ,
யாரும் வராத சமயங்களில்
பழைய செருப்பின் சோடிகளே
பாக்கியவான்கள்.
நாவல் பழங்களைக் கண்களாகப் பெற்ற ஒருவன்
இப்போது வந்து சேர்ந்தான்
ஒரு ஜோடி பழைய பூட்சுகளோடு
செருப்புத் தைப்பவர்
கால்கள் நுழைய வேண்டிய பூட்சுகளில் ஒன்றில்
வலக்கையை நுழைத்துக் கொண்டார்
இடக்கை பிரஷும் பாலிஷுமாக
இயங்க
பளபளப்பாகிக் கொண்டிருந்தது,

அவன், அவள் மற்றும் அவள்

கூடல் பற்றி
ஏதுமறியாப் பெதும்பை
பார்ப்பதை அறிந்தே
அவர்கள் கூடிக்கொண்டிருந்தனர்
உடல்கள் இணைவதும்
குரல்கள் முனகுவதும்
விநோத மெய்ப்பாடுகள் நிகழ்வதும்
விலக்காத திரைவழியே உடல்கள்
விலகிப் பிரிந்ததையும்
ஆற்று தீரில்
அசையாதிருக்கும்
ஒரு பூவைப்போல
பார்த்துக்கொண்டேயிருந்தான்
குளிர்ந்த பௌர்ணமி
குளிர்வித்த கிணற்றில்
கட்டிய கயிற்றோடு
இறக்கினான் வாளியை
கிணற்றிலிருந்து மொண்டெடுத்த
வாளியில் நிரம்பிய காமத்தை
தலையில் ஊற்ற
நீராய் எரிந்துகொண்டிருந்தாள்
பெதும்பை.

குருடனின் கண்கள்

இன்று திங்கள் கிழமை
கடவுளை வாங்க
நல்ல நேரம்
காலை 9:15 முதல் 10:15 வரை
தெருவெங்கும் ஆங்காங்கே
முளைத்திருந்த கடவுள் கடைகளில்
கடவுளைச் செய்பவன்
களிமண்ணில் கடவுளைச் செய்தான்
அப்போது தோன்றிய கடவுளைப் போன்றே
அந்தக் கடவுள் பிரகாசமாக இருந்தார்
ஒருவன் பித்தளைத் தாம்பாளத் தட்டில்
ஒருவன் எவர்சில்வர் தட்டில்
ஒருவன் மனைப்பலகையில்
ஒருவன் உலர்ந்த வாழைத்தட்டில்
ஒருத்தி அலங்கரிக்கப்பட்ட பரீட்சை அட்டையில்
கடவுளைக் கொண்டு போனார்கள்
கடவுள் போகும் வழியில்லாம்
முளைத்திருந்தன
அருகம்புற்கள்
மலர்ந்திருந்தன
எருக்கம் பூக்கள்
குட்டி கடவுளுக்கென
குடை விற்றுக்கொண்டிருந்தனர்
சிறுமிகள்
இன்று விசேஷமாதலால்
தெருமுனையில்
கடவுளைப் பாடிய
குருடனின் கண்களையே
களிமண்ணால்
தன்னைச்செய்தவன்
பரிசளித்த
இரண்டு குண்டுமணிக் கண்களால்
பார்த்துக்கொண்டே செல்கிறார் கடவுள்.

தெப்பக்குளம்

வாசலில் பூத்திருக்கும்
செவ்வரளியும்
மஞ்சள் திருவாட்சியும்
அம்மாவின் கரங்களில் மாலையாகி
கடவுள்களை அலங்கரிக்கும்
மார்கழி முப்பது நாளும்
உலகளந்தானுக்கு
அலங்காரம் முப்பது
கலச ஒலியில் பிறக்கும்
மாலை நேர
விஷ்ணு சகஸ்கர நாமம்
இகபர வெளியில் மிதந்து
செவிகளை அடையும்
கிரணங்களால் பொலிவுறும் பினாகினி நதி சுழித்தோடிய தடங்களில் நானும் தங்கைகளும் துண்டு விரித்து கெண்டி மீன்கள் பிடிப்போம்
தெப்பக்குளத்துத் தீர்த்தவாரியில்
மிதக்கும் தாயார் அம்மனை பூங்கோதை நாச்சியாரை திருவிக்கிரமன் கைத்தாங்கலாகப் பற்றுவதைப் போல
கூட்டத்தில் அவரவர் நாச்சியாரின் கரங்களைக் கைத்தலம் பற்றுவர் பலர்
இரவின் ஒளியில் யாரும் அறிகிலார்
இதை
பகல் பத்து முடிந்த
பதினொன்றாம் நாள் வைகுண்டத்தில் சொர்க்க வாசல் திறந்து காத்திருப்பார்கள் ஆண்டாள்கள்
மார்கழிப் பனி ஈரத்தில் மூக்கடைத்த மாதர் கொங்கை சரிய
கோலமிட்ட தெருக்கள்
வண்ணங்களால் வரையப்பட்டிருக்கும்
ஏகாதசிக்குப் பிறகான இராப் பத்துக்கும் பிறகான தேய்பிறையின் கடைசி நாளிலிருந்துதான்
வற்றிப் போனது தெப்பக்குளம்.

வீடு வந்த கடல்

அனுமதி அளிக்கப்பட்டிருந்த
கடற்கரையில் சிதறிக்கிடக்கும்
நேற்றைய எச்சங்களைப் பகிர்ந்துண்ண
வரும் காகங்கள்
அப்பொழுதுதான் எழுந்தருளும்
சிவப்புப் பந்தைக் கடந்து போகின்றன.

மலைகளுக்குப்பின் நேற்றைய மாலையில்
தொலைத்த அதே பந்துதான்
எல்லாக் கடல்களிலும்
முகம் அலம்பி சிகப்புப் பொட்டிடுகிறது.

கடல் மேல் நடக்கும் பறவைகள்
கட்டுமரங்களுக்கு வழிகாட்டுகின்றன.

கடலைக் கரையிலிருந்து பார்ப்பதும்
கடலைக் கடலிலிருந்து பார்ப்பதும்,
வேறு வேறு என்கின்றனர் கடலோடிகள்.

தொடுவானத்தின்
கடல்
தொடும் கோட்டில்
கீழிறங்குகின்றன.
பொன்னொளிக் கிரணங்கள்
பரிதியொளியின் தாழ்வெம்மை
மேற்பொருந்தும்

மடிப்பு அலைகளில்
மிதந்து வரும் கொண்டல்
ஈர மணலில்
தூர தேசத்தில் இருப்பவர்களின்
வாழ்வெழுதிப் போகின்றது.

கார் பருவத்து கருமேக நிழல் கவியும்
கடல்தனில் குதியமாடும் குழந்தைகளுடன்
மணல் அப்பிய ஆடைகளுடன்
வீடுவந்து சேர்ந்தோம்
வீடெல்லாம் மணல்…
மனசெல்லாம் கடல்…

விமோசினி

ஹெய்சன்பெர்க்கின் நிச்சயமில்லாக்
கோட்பாட்டின்படி
அல்லது
நிலையில்லாக் கோட்பாட்டின்படி
அல்லது
கோடைகால சம பகலிரவு நாளன்று உதித்து
மறையாத சூரியனையும் நிலவையும் போன்றதுதான்
அல்லது எனது கைகளில் தொங்கும் பனியூசிப்
பாறைகளின் வெம்மையைக் கொழுமையாகச்
சொட்டிக் கொண்டேயிருக்கும்
பேருண்மையைப் போல்தான்
பாஞ்சியாவின் முட்டை உடைந்து
பான்தலசாவின் மீள் கூடுகையின்போது
உருவாகிற ஏழு கண்டங்களின் உண்மையான
இருத்தலைப் போல்தான்
நீலப் பசும்பாசியின் பாலிலி
இனப்பெருக்கத்தைப் போல்தான்
அண்டங்களின் தன்னுள் தானே பிளவிப் பெருகும்
தன்மையைப் போல்தான்
பெருகியோடும் குருதி நதியெங்கும்
உயிர்வளியைச் சுமந்து செல்லும்
படகைப் போல்தான்
எனக்குக் கவிதை

பாப சங்கீர்த்தனம்

1.

சமையலறையில் வெகுநாளாக
உருட்டிக் கொண்டிருந்ததன் மூலம்
இரவின் அமைதியைக் களவாடிக் கொண்டிருந்த
அதை
அன்றொரு நாள்
ஒரு மலரை ஏந்துவது போலத்தான் இலாவகமாகக்
கையில் பிடித்தேன்.
பயத்தில் கொறிக்கும் சிறிய பற்களால் கடித்தது.
விடுவேனா.
வலியில் அதன் சிறு கழுத்தை இறுக்கினேன்.
கொலைதான்
வெளியே நின்றிருந்த நாய்க்கு வீசி
நிம்மதியாக உறங்கினேன்.

2.

சரியாக மூன்று நாள் கழித்து
வரவேற்பறை முழுதும் கசிந்தது
பிணத்தின் வாடை.
வாடை வரும் அலமாரியின்
அடிப்பகுதியில் அழுகிக் கிடந்தது
ஒரு குஞ்சு.
அலமாரியின் கீழ்த்திறப்பைத் திறந்தால்
அருகருகே மேலும் சில குஞ்சுகள்
அவற்றையும் அப்புறப்படுத்தினேன்.
வெளியில் நின்றிருந்த நாய்க்குக் கொடுத்தேன்.
கொலை பழகிவிட்டது இப்போது.

3.

காலம் பிசகிய நாளா
கவனத்தில் காணாமல் போன தினமா
தெரியவில்லை.
வசந்த காலத்தின் இறுதி நாளொன்றில்
எதேச்சையாக காணாமல் போயிருந்தது நாய்.

4.

முதுவேனில் இளங்காலையொன்றில்
வாயில் கதவினைத் திறந்தேன்.
விநோத ஒலியில்
வாயில் கவ்வியக் குட்டியோடு
ஒன்பது நாய்க்குட்டிகளை
வாயிலில் ஈன்றிருந்தது.
காலை மங்கலில்
ஒன்பதும் ஒன்பது
எலிக்குஞ்சுகளாகக் கீச்சிட்டன.

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *