1.அம்னீஷியாவில் தூரிகை
அமெரிக்க மாகாணம்
பேரிருளில் மூடுண்டு கிடக்கிறது
உதித்த சூரியன்
திசையெங்கும்
காற்றுக்குப் போட்டியாய்
ஒப்பாரி ஓலம்
சுருதி சேர்ந்த கிட்டார் நரம்புகளில்
வழிகிறது வெற்று இராகம்
இந்த மண்ணின் சித்திரத்தை
எங்ஙனம் தீட்டுவதெனக்
குழம்பிக் கிடக்கிறது
தூரிகை
காணும் இடமெல்லாம்
நச்சுக் கொடியென நிறைந்து கிடக்கின்றன
கிளை பரப்பி ஆயுதங்கள்
அதிலொன்று மீசை முளைக்காத
ராட்சசனிடம்
நடுவே
ஒருத்தி பள்ளிக்குப் போனாள்
இன்னொருத்தி விட்டுவரப் போனாள்
வேறொருவன் பாடம் நடத்தப் போனான்
போனவர் போனவர்தான்
திடீரென ராட்சசன் பிடுங்கி எறிகிறான்
டேன்டேலியன் களைகளாய்
உயிர்களை
மீதமுள்ள
கண்களில் அப்பிக்கிடக்கின்றன
தீராக் கலக்கம்
மரண பயம்
சதைப் பிண்டங்களின்
மூடாக் கண்களில்
இன்னும்
எஞ்சியிருக்கிறது வாழ்வு பற்றிய கனவு
தூரிகை இவர்களின் உருக்களைத்
தீட்டத் தீட்ட வடிகிறது
குருதி
பிறகு
சீடர் மர இலைகளுக்கு
இரத்த வண்ணம் தீட்டி
அதன் கீழ்
மேரி மாதாவிற்கு எலும்புக் கூடுகளால்
அணிவிக்கிறது மாலை
புத்தன் முகத்து அமைதியை
அழித்து
எழுதுகிறது அகோரத்தையும்
கைகளில் AR-15 துப்பாக்கியையும்
உறவுகளின் பிரிவுத்துயரைத் தீட்டுகிறது
நிழலின் இருள் கவிழ்ந்த
வர்ணத்தில்
இம்மண்ணில் அவர்களுக்கு
அஃதே அழகு
ஆனால்
மண்ணைச் சபித்து
ஆயுதத்தைத் துப்பியவனின்
முக அவலத்தைச் சித்தரிக்கும் பொழுதினில்
மட்டும்
அம்னீஷியாவில் அவதிப்படுகிறது
தூரிகை.
( துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த பள்ளி மாணவர்களுக்கும்
ஆசிரியர்களுக்கும்… )
2. எல்லாவற்றையும் மறந்து மன்னித்துவிடலாம்..
கால வீதியில் பரபரப்போடு எந்திரமாய் விரைந்தபோது
வால்மார்ட் வளாக நுழைவாயிலில்
பசிக்குக் கையேந்தும் ஈராக்கியனை
அவனிடம் எங்கிருந்து வந்தாயோ அங்கேயேச் செல் எனக் கூச்சலிட்ட
இனவெறியனை
டியாலா பதுங்குகுழிக்குள் ஒண்டும் பிஞ்சின் விழிகளை ஒத்த
அவனின் நடுக்கத்தை
வேண்டைக் நெடுஞ்சாலையில்
விபத்துக்குள்ளாகிக் கவிழ்க்கப்பட்ட வாகனத்தில்
வெளியே நீட்டிக்கொண்டிருந்த தொடை எலும்பை
துப்பாக்கிச் சூட்டிற்கு மாணவர்களைப் பலிகொடுத்துக் கதவடைத்துக் கிடக்கும்
பள்ளியை
தீயில் கருகத் தவறிய ஒரு கழிப்பறைக் காகிதத்தை
எல்லாவற்றையும் எல்லாவற்றையுமே மறந்துவிடலாம்
ஆனால்
ஜீன் பெர்ரி மர நிழலில்
சூரியனும் இறங்கி மறைந்த பின்மாலையில்
விளையாடும் பொழுதில் அடர் ஹைட்ரேஞ்சா புதருக்கடியில்
ஒரு பதின் பருவ சிறுமிக்கு நடந்த வன்கொடுமையில்
நகாசு பேச்சில் வஞ்சிக்கப்பட்டு நடக்கும்
பாலியல் கொடூரங்களில்
பெண் என்றாலே படுக்கையில் தள்ளிப் புணரும்
ஆணாதிக்க பலாத்காரத்தில்
பிடுங்கி எறியப்பட்ட டேண்டெலியன் களைகளாய்
பெண்களின் கனவுகள் தீயிலிட்டுப் பொசுங்க
அதில் அழிக்கவோ அழியவோ அல்லது அவமானப்படவோ
உருத்தரித்தவற்றைக்
கருவறுக்கக் கூடாதென எதிர்ப்பு தெரிவிக்கும்
அரசியல் பெருச்சாளிகளையும்
ஏதும் தெரியாமலேயே ராம்பூல்லட் செம்மறி ஆட்டு மந்தையாய்த் தொடரும்
அரசியல் வெறியர்களையும்
எல்லாம் தெரிந்தும் புரோடெஸ்டில் கொடி பிடிக்கும்
மெத்தப் படித்த அறிவற்றவர்களையும்
எப்படி மறக்க மன்னிக்க..?
3. பண நாற்றம்
டாலர் நோட்டுகளின்
மடிப்பில் தொற்று நோய்
இன்னொரு கை மாறினால்
இற்றுப்போகும் மதுக் குப்பிகளின்
மூடிகளில்
சில மணி நேரங்களில்
தாளின் பயணம் நீண்டது
எந்திரக் கூடலில்
சிதறும் உதிரச் சொட்டுகளுடன்
மஸ்காரா கரைந்தொழுகும்
ஈர நிறக் கண்ணீர் தீட்டிய ஓவியமாய்க்
காய்ந்தும் காயாமலும் அவர்களின்
கரங்களிலிருக்கும்
பெஞ்சமின் பிராங்க்கிளின் முகத்தின்மீதில்
தலையணைப் பிசுக்கு
நீலவெளியில் விந்துக் கறை
இண்டிபெண்டென்ஸ் ஹாலின் உச்சியில்
எச்சில் பூச்சு
மடிப்பின் ஓரம்
விரல்களின் தடயம்
விரட்டுவார்கள்
விரட்டப்படுவார்கள்
சூதாடுவார்கள்
பணயம் வைக்கப்படுவார்கள்
இரவும் பகலும்
இழப்பதும் மீட்பதுமாய்
கற்பனை உலகில் பைபிள் வாசித்து
சொர்க்கமும் போய் நரகமும்
பார்ப்பார்கள்
அழுகலை மற
ஜோ மலோன் இங்கிலீஷ் பியர் &
ஃப்ரீசியா அத்தர் வாங்கு
நாற்றமென்ன நாற்றம்?
இன்றைய நாற்றங்களே நாளைய
வாசனைகளெனத்
தேற்றிக்கொள்கிறார்கள்
தம்மைத்தாமே.
4. புறநிலைக்கு அப்பாற்பட்டவள்
கோப்பை அல்ல
கோருவதற்குப் பரிசு அல்ல
உணர்ச்சிகளைக் கொண்ட ஓர் ஆன்மா
எரியும் சுடர்
தென்றலில் மென்மையான மலர்
யாரோ கைப்பற்றும் உடைமை அல்ல
நதியின் ஓட்டத்தைப் போல
வலிமையும் கருணையும் பெற்றிருந்தாலும்
பிறருக்கருளும் பொருளல்ல
மற்றவர் ஒளியின் பிரதிபலிப்பு
மட்டுமல்ல
உள்ளே சாத்தியங்களின் பிரபஞ்சம்
கண்களில் எண்ணங்களின்
விண்மீன்கள்
இறக்கையின் கீழ் கொத்திச் செல்ல
செத்த உயிரல்ல
இதயத்தைப் பார்க்க வேண்டிய உலகில்
வெறும் சொத்தாகப் பார்க்கப்படும்
அவள்
ஒரு நபர்
ஒரு மனிதர்
ஒரு சக்தி.
5. கண்ணுக்குத் தெரியாத இருப்பு
நேர ஓட்டமில்லாத
உலகில்
சாயலற்ற சித்திரப்படமொன்று
வெற்றுப் பாத்திரமாய் அலைகிறது
கடலில்
காலியிடத்தைப்
பிரதிபலிக்கும் கண்ணாடியாய்
வாழ்வழிந்த இடத்தில்
பிசானின் அருங்காட்சியகம்
எண்ணப்படுகுழியின்
இடைவெளிகளைக் கடந்து செல்ல
மூச்சுச்சொலியொன்று
எதிரொலிக்கிறது மெல்ல
சொல்லப்படாத கதைகளைக்
கேட்க ஏங்குகையில்
கால் தடங்களையும் தடயங்களையும்
விட்டுச் செல்லாமல்
கால் பெருவிரலை ஊன்றி
காற்றில் சுற்றாட்டமாடும்
பைரூட் நடனக் கலைஞரைப் போலச்
செல்கிறது
கண்ணுக்குத் தெரியாத மனதில்
பட்டாம்பூச்சிப் பறப்பது போலக்
குறியும் நினைவாற்றலும் இல்லை
புரியாத புதிருக்குள்
இல்லாதவொன்றை இருப்பதாக நினைத்து
உழல்கையில்
அலையத் தூண்டுகிறது வெறுமை
அக்கணத்தில்
ஒரு துளி அன்புடன் முகங்காட்டும்
மூச்சொலி
ஆழமாகப் பிரதிபலிக்கிற அர்த்தங்களில்
மாறுபாடு அறியப்படும்பொழுது
பேரழகாகிறது அதன்
இருப்பு.
6. தீப்பிழம்பு
கொந்தளிப்பான ஆழத்தில்
காற்று ஊளையிடும் இடத்தில்
குவிகின்றன
நிச்சயமின்மைகள்
உள்ளுக்குள் எரியும் பல்லவியின் குரல்
விரட்டுகிறது இரவை
அதிகார துஷ்பிரயோகங்கள்
கடுமையான சவால்கள்
இடைவிடாத இன்னல்கள்
சந்தேக சாரம்சங்கள்
விரக்தி வலிகளின்
நிழல்கள்
விகாரங்களாய்
இடியாய் முழங்கு
புயலாய் வீசு
பலிபீடமாய் இரு
சவால்கள்தான் படிக்கட்டுகள்
உயரமான நிலத்திற்கு ஏற
இருள் சூழ் கிரகணத்தில் சந்திரனைப் போன்ற
வைரம் நான்
பரந்த சவன்னாவின் சிங்கத்தைப் போன்றது
எனது துணிவு
நினைவில் கொள்ளுங்கள்
ஒவ்வொரு போரிலும்
வென்று
பெரும் சக்தியுடன் வெளிப்படுவேன்
சண்டைக்கு எரிபொருளாக
அடக்க முடியாத தீப்பிழம்பாய்
என்னுள் பிறக்கிறது
வலிமை
உங்களைச் சந்திக்க; கடக்க; சகித்து;
மீண்டும் பிறக்க.
7. கற்பனைச் சக்தி
பறக்கும் பன்றிகள்
குரைக்கும் பூனைகளாகிய
தருணத்தில் தான்
பசுக்கள் மியாவ் என்கின்றன
பிடில் வாசிக்கும் சிலந்தியின்
இரையாக நிலவு ஒளிர
இன்பத்தில் குதிக்கும் பசுவைப் போல
நவீன உடையில் கோமாளி
நடனமிடுகிறான்
நிலத்தில் நடக்கும் மீன்கள்
நீரினுள் நீந்தும் பறவைகள்
இறக்கைகள் சுருங்கிய வண்ணத்துப் பூச்சிகள்
கம்பளிப் பூச்சிகளின் கூட்டுப்
புழுக்களாகின்றன
விடியலின் வண்ணத்தை
வண்ணத்துப் பூச்சிகள்
வரைந்து பறக்கின்றபொழுதில்
இரவு மறையும் வரை
இரகசியங்களைக்
கிசுகிச்சுக்கும் ஒரேயொரு
நட்சத்திரம் மின்னிக் கொண்டிருக்கிறது
பச்சை வானமும்
நீலப் புற்களும் சந்திக்கிற
இடங்களில் சந்திரனைப்
பாலாடைக்கட்டிகளால் செய்ய முடிவதில்லை
மேகமும் வானவில்லும்
தழுவும் நொடிப் பொழுதில்
புதையலுக்கு இட்டுச் செல்லும் சூரியன்
மாறுதிசையில் உதிக்கிறது
மாறுதிசையில் மறைகிறது
மழையோ மேல்நோக்கி எழுகிறது
பாடும் பாறைகளும்
நடனமாடும் மரங்களும்
பேசும் பூக்களும் ஒன்றையொன்று
முத்தமிட்டுக் கொள்கிற பொழுதில்
எலிகள் கர்ஜிக்கின்றன
சிங்கங்கள் முணுமுணுக்கின்றன
தேநீர் கோப்பைகளில்
யானைகள் ஒளிகின்றன
நெருப்பையுமிழும் யூனிகார்ன்
தேவதைகளோடு
யாழ் இசைக்கிறது
சுடரிலிருந்து பிரிந்த
பொறியொன்று இணை பாடலைப்
பாடுகிற மேடையில்
நாற்காலிகள் ஒலிபெருக்கியை
அடைகின்றன
தானே எழுதிக்கொள்ளும் பென்சில்கள்
தீர்ந்து போகிறபோது
புத்தகங்கள் உறங்க
வைக்கின்றன.
8. நியமம்
கனவுலகிலிருந்து
அவ்வப்பொழுது வந்திறங்குகிறாள்
ஒருத்தி
அடுத்தவர் பிருஷ்டத்தைத் தேடி அலையும்
மனிதர்களின் மத்தியில்
நீ சாதனைப் படைத்த பொழுதெல்லாம் கைகுலுக்கி
உன்னைப்போல யாருண்டெனக் கோஷமிடுகிறாள்
வாழ்த்தொலித்து
முகவரி தேடும் முகங்களுக்கிடையே
கோட்டையை நிறுவித்
தூற்றுபவர்களின் சொற்களிடையே
சிக்கித் தவிக்கையில்
அவல மனங்களின் உருக்களுள் உன்னை
வார்ப்படஞ் செய்யாதேயென
எச்சரிக்கிறாள்
வயிறு குமட்டும் சீழ் நாற்ற செயல்களால்
சமூகம் குதறுகையிலும்
மனிதப் பலவீனமெனத் தள்ளி வைக்கவியலா
அருவருப்பில் துடிக்கும் கணங்களிலும்
மனநோயில் சிக்குண்டு அவதியுறுகையிலும்
உணர்வுகளைத் தீயிலிடுயெனக் கூக்குரலிடுகிறாள்
செவியதிர
நாள்பட நாள்பட
உந்தன் சித்தத்தின் தேடலுக்குச் சிறைப்படாமல்
சுயமிழந்து
நனவிலிருந்து விடுபட நினைக்கையில்
அந்த ஒருத்தியின் கூக்குரல்களுக்கு
எட்டாத் தொலைவில்
நீ
நிணமூறி குருதியழுகிய
வசைபாடும் மாந்தர்களும் வருவார்கள்
உனது நடுகல்லுக்கும்
என்பதை மாத்திரம் மறவாதேயெனச் சன்னதமாடுகிறாள்
போர்முரசு கொட்டி
விழிக்கடையில் சிந்தும் நீருடன்
மெல்ல மீண்டு வருகிறாய்
வேர் பரப்பி உறுதிகொள்ளும்
பெருங்காதலுடன்
மீதமிருக்கும் வாழ்வைச் சுவைக்க.
9. காற்றாக நீ
உணர்வுகள் மிகுந்து ஆன்மாவை வருடும்
அன்பின் நொடிகளில்
மகிழ்ச்சியைத் தூண்டும் இயற்கை சக்தியான
காட்டுக் காற்றின் கர்ஜனைக்கு
ஒப்பிடுகிறேன்
உன்னை
சூடாகவும் குளிர்ச்சியாகவும்
மென்மையான திரளில் தீண்டும் காற்றாய்
இதயத்தைத் தழுவுகிறது
பார்வை
எப்பொழுது வேகமெடுக்குமென
அறியாக் காற்றைப் போல
மாறுகிறது
மென் தீண்டலிலிருந்து புயலின் சறுக்கலுக்கு
செஃபிரின் பாடலான ‘Sweet Nothing’யை போல
இனிமையான வார்த்தைகளால் ஆத்மாவில்
ஆசையைக் கிளறி தீடிர் காற்றாய்க்
கனவுகளைக் காதல் நிறைந்த வானத்திற்குக்
கொண்டு செல்லும்
நீயே தான்
மௌன வருத்தத்தில் ஏங்க வைத்து
மனதின் ஆழத்தில்
நினைவுகளை மட்டும் விட்டுச் செல்கிறாய்
திசைமாறும் காற்றாய்
கருணையுடன் திரும்புகையில்
கனன்று கொண்டிருக்கும்
நேச நெருப்பை உணர்ச்சிக் காற்றில் ஊதி ஊதி
அரவணைக்கிறாய்
நுரையீரலை ஆசை சுவாசத்தால் நிரப்பி
சுதந்திரக் காற்றாய் அலைந்து திரிந்து
உலகெங்கும் சுற்றினாலும்
நம்மிடையேயிருக்கும் பாதையை மட்டும்
நீ செப்பனிடத் தவறியதே
இல்லை
உனது இருப்பில்
நான் மூச்சு விடாத குழந்தையாகவும்
இருக்கிறேன்
புயலில் சிக்கிய இலையாகவும் நடனமாடுகிறேன்
‘நான் நானாக’ இருக்க விடும் ‘நீ’ என்றும்
கட்டிவைக்க முடியாத காற்றாகவே
இரு
என் அன்பே!
10. அவளோர் அசடு
விண்ணை முட்டும் மரக்கவடுகளின் இடுக்கில்
வெய்யோனின் பொன் மஞ்சள் காட்டும்
கலைடாஸ்கோப் அழகைக் கண்ணுள் பதித்தால்
பட்ட மரத்தின் கிளைகளைக் கண்டு
அநாதைகளாய் கையேந்துகின்றவையெனப் பிதற்றுவாள்
முதுகில் ராமர் தடவிய கோடுகளென
அணில்களை வியந்தால்
முற்றத்துத் தோட்டத்தில்
வெறும் பனி கிளறி உணவு தேடுகின்றவையென
அங்காலாப்பாள்
சிலையைக் கண்டு
சிற்பியை நினைத்துக் கல்லை மறந்தால்
வெற்றுக் கால்களில்
மொட்டைப் பாறையின் முரட்டுச் சுரசுரப்பை
உரசி இரசிப்பாள்
அவளைப் பார்த்து
சுவர்த்தட்டில்
மூடிய விழிகளுடன் அமர்ந்திருக்கும்
புத்தன் சிலையின்
இதழ்க்கடையின் குறுநகை கூட பரிகசிக்கிறது
அவள் பேச்சைக் கேட்காதே
அவளோர் அசடு என்று.
பிரியா பாஸ்கரன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்