வளவதுரையன் கவிதைகள்
1. வருணதேவன்
வாய்திறந்து கொட்டுகிறானே
வழியெங்கும் வெள்ளமாய்.
வாடும் பயிருக்குத்
தனைவிட்டால் யாருமில்லை
என்றெண்ணி அவ்வப்போது
மறக்காமல் பெய்கிறது
இந்த மாமழை.
இதுபோன்று பெய்தால்
இனியதுதான்.
விரைவில் நின்றுவிடும்.
தூளியை ஆட்ட ஆட்டத்
தூங்காமல் சிணுங்கும்
சிறு குழந்தையாய்
வரும் தூறல்கள்தாம்
எப்போதும் தொல்லை’
ஒதுங்கவும் முடியாமல்
ஓடவும் இயலாமல்
ஒண்டிக்கொண்டு அல்லல்படும்
நொண்டி ஆட்டுக்குட்டிதான்
கண்முன் நிற்கிறது
2. ஒளிகிறான்
காலையில் அழகாகக்
கனிவுடன் இருக்கிறான்.
அவன் பார்வையில்
கையில் கலப்பையுடன் செல்லும்
கடும் உழைப்பாளிகள்
கட்டுசுமக்க, களையெடுக்க
அறுப்பறுக்கப் போகும்
மகளிர் கூட்டம்
மேலும்
கசங்காத மடிப்பு ஆடையுடன்
அலுவலகம் போகும்
கருத்தாலுழைக்கும்
அதிகார அடிமைகள்
மதியம் உச்சி வேளையிலும்
அவர்களைப் பார்க்கிறான்.
ஆண்டைகளும் கொழுத்தவர்களும்
கார்ப்பரேட் முதலாளிகளும்
அளித்த வெப்ப்ப் பெருமூச்சுகளால்
வாடிய கீரைத்தண்டாய்
வதங்கிப் புலம்புகின்றார்
அவன் கண்கள் சிவக்கின்றன.
என்ன செய்யலாம்
என்று சிந்திக்கிறான்.
ஒன்றும் செய்ய முடியாமல்
மாலையில் மஞ்சள் அழுகையுடன்
மலைகளில் ஒளிகிறான் கதிரவன்.
3. குலதெய்வம்
இரண்டாம் ஆட்டம்
பார்த்துவிட்டு
இரவில் வருகையில்
சிறு சலசலப்பும்
சில்லென்று அடிமனத்தில்
அச்சமூட்டும்.
அதுவும்
கட்டைப்புளிய மரம்
நெருங்க நெருங்க
அதில் ஊசலாடிய கம்சலா
உள்மனத்தில்
உட்கார்ந்து கொள்வாள்.
அங்கிருக்கும்
சுமைதாங்கிக்கல்
அந்த இருட்டில்
ஆறு பேர் நிற்பதாகத் தோன்றும்.
பகலெல்லாம்
அதனடியில்
பழம்பொறுக்கிச் சீட்டாடும்
பாவிகள் எங்குதான் போனார்கள்
என்று என்மனம் ஏசும்.
நடையை வேகமாகப் போட
நான் நினைத்தாலும்
கால்கள் பின்னலிடும்.
இத்தனைக்கும்
புளியமரம் பக்கத்திலிருக்கும்
வேப்பமரம்தான்
எங்கள் குலதெய்வம்.
4. சிட்டுக்குருவி
உன்னுடைய உடைகள்
கொடியில் தொங்கி
என்னைக்
கோபப்டுத்துகின்றன.
ஆறு மாதங்களுக்கு முன்
அலங்கரிக்க வாங்கிவந்த
அந்தப் பூ ஜாடி
மலரின்றி வாடி
அனாதையாக அழுகிறது.
பேருந்தின்
சன்னல் கம்பியில்
என் கைமேல் உன்
விரல்களை அழுத்தமாகப்
பதிந்து ஆறுதல் சொன்னாயே.
அது எவ்வளவு நாள்தான்
தாங்கும்?
நீ அறிவாயா
சிட்டுக்குருவிபோல்
விரைவாய்ப் பறந்து வா!
5. முத்தம்
கல்லூரி மாணவனின்
அடையாள அட்டை
அநாதையாகக் கிடக்கிறது.
ஓட்டுநர் முன்பக்கம் சாய்ந்து
உறங்குவதுபோலக் கிடக்கிறார்.
முதுகு ஏறி இறங்குகிறது.
காலைப் பிடித்துக் கொண்டு
கதறும் கிழவர் ஒருவர்
கதறலை நிறுத்தவே இல்லை.
அலுவலகமோ பள்ளியோ
செல்லவேண்டிய
அந்தப் பெண்மணி
கீழே கிடக்கும்
சாப்பாட்டுப் பெட்டியின்
நசுங்கலைப் பார்க்கிறார்.
நகரம் பார்க்கலாம்
என்றிருந்த காய்கறிகள்
வழி தெரியாமல்
கீழே சிதறி அழுகின்றன.
லேசாகத்தான் மோதினாய்
பரவாயில்லை என்கிறது
புளியமரம்
தன்னை முத்தமிட்டு நிற்கும்
அந்தப் பேருந்திடம்.
6. மௌனச்சிறை
வந்ததிலிருந்து பார்க்கிறேன்
ஏனடி இந்த மௌனம்?
இதற்கா நான் ஓடி வந்தேன்.
பேசாமலேயே அழவைக்கிறாய்
பேசிப் பேசித் தாமதத்துக்குப்
பொய்க்கதைகள் பூசி மெழுகுகிறாய்;
ஒன்றிரண்டு சொல்வாயடி
சில நேரங்களில் நீ பேசுவதும்
பலநேரங்களில் இப்படிப்
பேசாமல் இருப்பதும்
பயமாக இருக்கிறது.
அணில்கள் கூட முகர்ந்தும்
எறும்புகள் தொட்டும்
கிளிகள் அலகுரசியும்
ஆடுகள் உராய்ந்தும்
நாய்கள் ஓடிப்பிடித்தும்
அளவளாவுகின்றன பாரடி!
நாம் உயர்திணையாயிற்றே
பேசத் தெரிந்தவர்கள்
வாய்திறந்து பேசு.
போகிறேன் என்றாவது
சொல்லிவிட்டுப் போ
7. பரிதாபம்
அஞ்சல் கொண்டுவந்து தரும்
அஞ்சல்காரர் போல
ஒரு சில வீடுகளுக்கு முன்
ஓயாமல் வந்து நிற்கிறது /
வெள்ளைப் பசு மாடு.
ஒன்றுமே போடாததால்
அழைத்தழைத்துப் பார்த்துவிட்டு
நகர்ந்துவிடும் பரதேசியாய்
அதுவும் போகிறது.
பாலைக் கறந்துவிட்டு
வெளியே விரட்டிவிட்டப்
பரிதாபம் அதன் கண்களில்.
அடைக்க இயலாதவர்
வாங்கிய கடன்போல
வளர்க்க இடமில்லாதவர்
வாங்கிய ஜீவன் அது.
கன்றுக்குக் கொஞ்சமாவது
சுரக்க வேண்டுமெனச்
சுவரொட்டியையும்
நெகிழியையும் தேடிப் போகிறது
நம் தேசத்தில்
8. தரையில் விழுந்த மீன்
வலையைக் கரையில்
உதறும்போது
விழுந்த மீன்களில்
ஒன்று மட்டும்
தரைக்கும் நீருக்குமாய்த்
தத்தளிக்கிறது.
அலைவந்து அழைக்கவில்லை
அவனுமதை எடுக்கவில்லை
பெருநீர்ப்பரப்புக்க்குப்
போனால் பேரானந்தம்.
அவனிடம் சென்றால்
அரும்பசி தீர்க்கலாம்.
தப்பித்தலுக்கு இடம் தேடித்
துள்ளித் துள்ளிக் குதிக்கிறது
எட்டாப்பழத்துக்குக்
கொட்டாவி விடுவது போல்.
இருந்தாலும் இன்னுமது
தாவித் தாவி விழுகிறது.
உயிர் வாழ்வதே வேண்டாம்
என அது
உள்ளே நினைக்கையில்
பறந்து வந்த காகமதைப்
பாய்ந்து கொத்துகிறது
9. இல்லறப் பேரவை
சிவன் கோயில்மணி கேட்டு
விழிப்பு வந்தது; இனி
சிவனே என்றிருத்தல் ஆகாது
என்றெழுந்தேன்.
காப்பி கொடுக்கும்போதே நாளை
காப்பிப்பொடி இல்லை;
மனைவியின் அவசரத் தீர்மானம்.
செய்தித்தாள் படிக்கப் படிக்கச்
செக்கச் சிவந்த வானமாயிற்று முகம்;
பாலியல் வன்முறை, கடத்தல்,
கொலை கொள்ளை, இலஞ்சம் கைது
வாகன விபத்து எனக் கவன ஈர்ப்புகள்
தலையில் தண்ணீர் ஊற்றி
மனத்தை உடலைக்
குளிரச் செய்தேன்.
பெட்ரோல் விலை ஏறுவதால்
இருசக்கர வாகனமில்லை;
பேருந்தில் பிதுங்கி வழிந்து
அலுவலகம் அடைதல்
அதிகாரத்திடம் மல்லுக் கட்டிவிட்டு
கோப்புகளில் மூழ்கிவிட்டுக்
கரையேறி இல்லறக் கரையில்
தரை தட்டினேன்.
வீடுவந்தால் மனைவி நினைவூட்டினாள்
தான் கொடுத்த அவசரத்தீர்மானத்தை
ஆளும் கட்சியால்
தள்ளுபடி என்றேன்.
இப்படித்தான் இன்று
இல்லறப் பேரவை நிகழ்ச்சிகள்
இனிதே நிறைவு
10. அணையா நெருப்பு
அன்று வெள்ளை ஆடை
அணிந்த மகான் ஏற்றியது.
இன்றும் அணையவில்லையாம்.
வழிவழி வந்தவர்கள்
தொடர்கிறார்களாம்.
வாய்ச்சொல்லில் மட்டுமன்று
வள்ளன்மையிலும்
இருக்கிறார்கள்.
நாளாக நாளாக
மரங்கள் பட்டுப் போகின்றன.
குளங்கள் வற்றிப் போகின்றன
மனங்கள் மரத்துப் போகின்றன
சாலை ஓரத்தில்
கையேந்துபவரைப் பார்த்தால்
கண்களை மூடுகிறார்.
இன்றும்
அணையா நெருப்பு
அவரவர் வயிற்றுள்ளே!
எழுதியவர்
வளவதுரையன்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.