சிறப்புக் கவிதைகள் (Sirappu Kavithaikal) - கனகா பாலன் (Kanaga Balan)

தொடர் 9: சிறப்புக் கவிதைகள் – கனகா பாலன்

1.**அம்மா**

நிலாவைக் காட்டி
நாயைத் தடவிக் கொடுத்து
மீசைமாமாவைப் பூச்சாண்டியாக்கி
உணவூட்டும் அம்மாவின் பசி
அரைகுறையாகத்தான் அடங்குகிறது
அழும் குழந்தையால்

படுக்கை ஈரத்தின்
நனையா இடைவெளிகளைத்
தேடித் தேடி
மழலையை நகர்த்திப் போட்டவள்
மறந்தேதான் போகிறாள்
இரவு தூங்கவேண்டுமென்பதை

தப்புக்குத் தண்டனைதரும்
அப்பாவிடமிருந்து
தப்பித்துக் கொள்ள ஏதுவாய்
தாராளமாக இடங்கொடுக்கும்
வியர்வை மணந்த
அம்மாவின் முந்தானையில்
ப்ரியத்தின் ரேகைகள்

தோளணைத்துத் தோழியாக
தலைகோதி முத்தமிட
வேண்டலாகத்தான் இருக்கிறது
அம்மாவின் அருகாமை
நானொரு அம்மாவாகியுங்கூட…

***

2.**அன்பின் விடுமுறை**

என்
அனுமதி கேட்பதில்லை
எப்போதும் அவள்
விரும்பி உள்நுழைந்து
வியாபித்துக் கிடப்பாள்
வீடெங்கிலும் விசாலமாய்

சேலைக் கொசுவத்திலும்
லீலைகள் காண்பிப்பாள்
வேலைப் பொழுதினில்
வந்தென்னைக் கொஞ்சிச் செல்வாள்

தோழர் தோழிகளோடு
தொய்வின்றி அவள்
பொழுதுகள் இருக்க
வேளா வேளைக்கு
திண்பண்டம் மட்டும்
என் பங்காக இருக்கும்

சண்டை சச்சரவுக்கெல்லாம்
நாட்டாமை நான்தான்
எதிர்பக்கத் தீர்ப்பாயின்
எரிந்து விழுவதும் என்மேல்தான்…

முறைத்துக் கொள்ளும்
அவள் பார்வைக்கங்கே
முத்தமொன்றைக் கப்பங்கட்டி
இழுத்தணைத்து
இறுக்கிக் கொள்ளுதல்
பிரியமெனக்கு

உணர்வொழுகும் கண்ணீரோடு
விடைபெறுகையில் சொல்கிறாள்
“விடுமுறை நாளென்பது
அன்புக்கு இல்லைதானே அத்தே? ”

**
3.**அழைப்பு மணி**

விளையாட்டுக்கேனும்
அடித்துவிட்டுச் செல்லுங்களேன்
யாரேனும் அந்த அழைப்பு மணியை

எத்தனை நேரம்தான்
துணிகளோடும் தூண்களோடும்
உரையாடிக் கொண்டிருப்பது

தோட்டப் பூச்செடி
சிரித்த வண்ணமே
இருக்கிறதே தவிர
எதிர்த்து ஒரு வார்த்தையையும்
எனக்கு அனுப்புவதேயில்லை
எப்போதுமே

அந்தப் பூனைக்குட்டிக்கு
எப்போதும் சுயநலம்தான்
கொஞ்சச் சொல்லி
மடியில் படுத்துக் கொள்ளும்
தேடச் சொல்லி
மூலையில் ஒளிந்து கொள்ளும்

வேகப் பட்டுவாடாவில்
நொடித் தரிசனமாகும்
தபால்காரரின் உரத்த குரலும்
பால்காரரின் பழகிய முகமும்
நாளுக்கொரு தரம் மட்டுமே

நகரத்தில் தனிமையை
நாமாக ஏற்றுக்கொள்வது
நரகத்தின் சாயலை
நம்மீது திணிப்பதாகுமோ

அக்கம் பக்கத்து வீடெல்லாம்
அடைத்தபடியே இருக்க
தேவைப்படலாம் இந்த வாசகம்

ஒருவருக்கொருவர்
ஒத்தாசையாக இருக்கட்டும்
பேசத் தெரிந்த மனிதர்கள் சூழ் வாழ்வென்று
மனம் நம்பட்டும்

விளையாட்டுக்கேனும்
அடித்துவிட்டுச் செல்லுங்களேன்
யாரேனும் அந்த அழைப்பு மணியை.

**

4.**முதுமையின் பரிசு**

பக்தி ததும்பிய அம்முகத்தில்
கொஞ்சம் அச்சமும் இருந்தது
வயோதிகத்தின் தாக்கமென
புரிந்து கொண்ட எனக்கு
வழி சொல்லத் தெரியவில்லை

வாஞ்சையாய் வீசிய பார்வையில் சிறிது
பெற்றிருக்கலாம் ஆறுதல்

ஊன்றிய கைப்பிடியை
தூக்கிப் பிடித்து வழங்கிய
ஆசீர்வாதத்தின் பாக்கியசாலி நான்

கடந்து செல்கையில்
உள்ளங்கையில்
ஒத்தியெடுத்து
அனுப்பி வைத்த முகம்
எடுத்துச் சென்றது
பாசத்தின் வாசனையை

கரையக் கரைய
சேகரித்த நொடிகளை
நெஞ்சுக்குழியில் பத்திரமாக்கினேன்
அன்பு நாணயமாய்

இருக்கட்டும் அப்படியே
வேண்டுமென கேட்கவரும்
வேறொரு முதியவளுக்கும்
பகிர்ந்தளிக்க உத்தேசமெனக்கு.

***

5.பூங்கா புகார்கள்

வேர்க்கடலைக்கும் சுண்டலுக்கும்
காசுயில்லை கையில்
விற்க வருபவனிடம்
பேச்சுக் கொடுத்தால்
மூக்கு முட்ட நிறைந்து போகும் வாசனை

நேர்க்குத்து மின்சாரக் கம்பத்தில்
காகங்கள் இரண்டு
காதலித்துக் கொண்டிருக்கின்றன
பகுமானமாய் ஊட்டிவிட்டும்

சிறுவன் தின்று வீசிய
ஐஸ்கிரீம் கோப்பைக்குள்
கொன்றை மலரொன்று
குத்த வைத்திருக்கிறது

மறதியில் விட்டுச்சென்ற
யாரோ ஒருவருடைய
வாசனையோடு
கைக்குட்டை ஒன்று கல்மேசையில்

அடர் புற்களை
உருவமாற்று செய்கின்றான்
வீச்சுக்கத்தி கொண்டு
யானை ஒட்டகம்
மயிலென்றாகிறது அது

பனித்துளிக் கிரீடம்
நாளையில்லையென்ற
வருத்தத்தில்
நுனிகள் சிதறிக் கதறுகின்றன
மண்மீது…

ஒழுங்கு சரியில்லை
காரணத்திற்காக
உடனுக்குடன் வெட்டப்படுவதில்லை
எந்தவொரு மனிதனின்
தலையையும்

அடிதடியாகப் பொழிந்த மழை
அவசரமாக விரட்டிவிட்டது
பூங்காவிலிருந்து.

**

6.மூக்குப்பொடி பெரியம்மா

மூக்குப் பொடியும்
முன்னெத்துன பல்லும்தான்
அடையாளம்
தெக்கு வீட்டு
பெரியம்மாவுக்கு

உள்ளூரு விசயம்
ஒன்னுவிடாம சேர்த்துவச்சி
ஒலுங்கு கடி பொறுக்க
ஒரலு மேல குத்தவச்சி
கூடக் கொறைய திருச்சினாச்சும்
பொரணி பேசுவா
அத்தை ,சித்தி, பாட்டிககூட..

சுப்பம்மாக்க ஓட்டுவீட்டை
கார வீடாக்க
செங்கலு ஒருபக்கம்
மண்ணு மறுபக்கம்னு
மலை போல குமிஞ்சி கெடக்கும்
தெருக்கரண்டு இல்லாத
நாளு
பொடிசுக கூட்டத்துக்கு
பொலபொலனு அவுத்துவிடுவா
ராசாக் கதைகளை

ஒத்தையடிப்பாதை வழி
ஒரு கூட்டம்
அவ பின்னாடி போக
பக்கத்து ஊரு கொட்டகையில
ஒத்தப் படம் பாக்கியில்லாம
பார்த்து ரசிப்பா
மறுநாளு முழுக்க
வரிவரியாச் சொல்லுவா மத்தவக கிட்ட

துஷ்டி வீடு
தூங்காம இருக்கனும்னா
கடுங்காப்பி கூட வேணாம்
கதை சொல்ல அவ இருக்கையில

கல்யாண வீட்டு
காய் நறுக்கும் கூட்டத்தில
பலகைபோட்டு
சிரிக்க சிரிக்கப் பேசுவா
பலபேரப் பத்தி

பெரியய்யா போயி
பத்து வருஷமாச்சி
பெரியம்மாவுக்கு பேச்சு வந்தும்தான்.

**

7.**பாறை முட்டைகள்**

யுகங்கள் எடுத்து
உருண்டோடி வந்திருந்த
கூழாங்கற்களின் தடத்தில்
இருக்கலாம்
எத்தனையோ காடுகளும்
மலைகளும்

பூமி பூஜையில்
விழுந்து வணங்குகையில்
முழங்காலில் வழவழத்துக்
பிசுபிசுத்துக் கிடக்கின்றன
பன்னீர்த் துளிகளில்
கடைமைக்காக இருந்தது
மணந்த வாசம்

வெள்ளித் தட்டில்
குங்குமமும் சந்தனமும்
தொட்டுக் கொள்ளக்
கூறிய மொழியில் செயற்கையின் கூடு

மொய்யெழுதி
திரும்பி வருகையில்
நின்று களைத்து
நீட்டினர் தாம்பூலத்தை
பதிலுக்கு நன்றியுரைத்து
கேள்வி தொடுத்தேன்
சாப்ட்டீர்களா?

8.**வன்மக் கிறுக்கல்கள்**
 
விளம்பரப் படுத்தியிருக்கிறான்
பெண்ணின் பெயரோடு
கைபேசி எண்ணினையும்
கழிவு இறக்க வந்தவனின்
கழிவிரக்கமற்றச்  செயலுக்கு
காறித் துப்பியும்
வெகுண்டெழும் கோபம்
ஆற்றாமையின் ரணம்
சுவற்றுக் கிறுக்கலாய்
வரைந்திருந்த படத்தில்
வரம்புகள் தாண்டிய
சபலக் கூறுகளின்
எச்ச புத்தி.
ஓங்கிச் சாத்திய
கழிவறைக் கதவின்
கைப்பிடிக் கம்பியில்
பிசுபிசுத்துக் கிடக்கிறது
குரூரக்காரனின் ரேகைகள்
அவசரமென்று
தத்தளிக்கும் மகளை
அடுத்தடுத்தப் பெட்டியாக
சோதித்து இழுத்தலைகிறாள்
அம்மா
சுகமென்று அனுபவிக்கும்
ரயில் பயணத்தின்
சன்னலோர இருக்கை
புழுங்குகிறது எனக்கு.
 
9.**ஐந்தாம் வகுப்பு கற்பகம்**
வெயில் காய்ந்துகிடக்கும்
குடிதண்ணீர்க் குழாய்முன் வரிசையாகக் காத்திருக்கின்றன
வெற்றுக் குடங்கள்
பச்சைக்குப் பின் சிகப்பு
சிறியதற்குப் பின் பெரியது
உங்களுக்குப் பின் நானென முன் நிற்பவளிடம்
ஒப்புவித்தவளுக்கு
கசந்துகிடக்கிறது காத்திருப்பு..
பத்தடி தூரத்தில்
பச்சை எலுமிச்சை மரத்தின்
புளிப்பு நிழலை
தலையில் பூசி
பேச்சுத் துணைக்கு ஆள்தேடுகிறது
தனித்திருக்கும் குத்துக்கல்
கூடிக் களித்திருக்கும்
தேன்குழல் பூவின்
இனிப்பெல்லாம் உறிஞ்சியவள்
பார்வையோடு விட்டுவிடுகிறாள்
பறக்கும் தட்டான்களை
வரிசை நெருங்கியதாக
யாரோ குரல்கொடுக்க
பாஸா?  பெயிலா? வுக்கு
பதில் தெரியாமலே
பாதியில் விட்டுவந்தாள்
எருக்கம் பூவை
ஐந்தாம் வகுப்பு  கற்பகம்.
 
10.**நகல்**
 
அவர்கள் வாடகைக்கு
எடுக்கப்பட்டிருந்த
வாசல் வரவேற்பாளர்கள்
உணர்வற்ற புன்னகையை
நேர்த்தியாக உதிர்க்கத் தெரிந்த
உயிருள்ள சிலைகள்
ஒட்டவேயில்லை மனதில்
முலாம் பூசிய முகத்தில்
ஒளித்து வைத்த
கவலை ரேகைகளை
கண்டுபிடித்தல் சாத்தியமற்றது
ஒப்புக்குத் தெளித்தப்
பன்னீர்த் துளிகளில்
கடைமைக்காக இருந்தது
மணந்த வாசம்
வெள்ளித் தட்டில்
குங்குமமும் சந்தனமும்
தொட்டுக் கொள்ளக்
கூறிய மொழியில் செயற்கையின் கூடு
மொய்யெழுதி
திரும்பி வருகையில்
நின்று களைத்து
நீட்டினர் தாம்பூலத்தை
பதிலுக்கு நன்றியுரைத்து
கேள்வி தொடுத்தேன்
சாப்ட்டீர்களா?

     எழுதியவர்

— கனகா பாலன்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *