ஜி.சிவக்குமாரின் சிறப்புக் கவிதைகள்
ஜி.சிவக்குமாரின் சிறப்புக் கவிதைகள்

சிறப்புக் கவிதைகள் – ஜி.சிவக்குமார்

 

 

1.

 

உள்ளிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
வெளியிலிருந்து இதன் வழியே
எத்தனையோ பேர்
எத்தனையோ பார்த்திருந்தார்கள்.
இதுவும் எத்தனை எத்தனையோ
பார்த்திருந்தது.
எல்லோரையும் பார்த்தபடியிருக்கிறது
எவரும் பார்க்காத
கை விடப்பட்ட வீட்டொன்றின் ஜன்னல்

2.

 

இப்போது ப்ளூட்டோவும் இல்லை
கோடி கோடி நுண்ணடுக்குகளாலான
பொன் மலரை
நீதான் கையளித்தாய்.
கொடுந்துயரில் வழிந்த கண்ணீர்
உலர்ந்தது உன் மென் விரல்களில்தான்.
என் நாட்களின் தட்ப வெப்பத்தை
நீதான் தீர்மானித்தாய்
பெருஞ் சுழற்காற்றிலும்
உன் கரங்களுக்குள் சுடர்ந்தேன்.
அப்போது
சூரியக் குடும்பத்தில் ப்ளூட்டோ இருந்தது

 

3.

 

நீயற்ற வாழ்வு
நூற்றுக் கணக்கான மிருகங்கள்
ஆயிரக்கணக்கான பறவைகள்
லட்சக்கணக்கான தாவரங்கள்
கோடிக்கணக்கான உயிர்கள்
இருக்கட்டுமே
துதிக்கையுயர்த்திக் கிளையொடிக்க,
மண் விசிற,நீர் விசிற,
வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பிண்டமிட
கண் நிறைக்க,மனம் நிறைக்க
யானையற்ற
காடென்ன காடு.

4.

 

தெரிந்த ஒருவர்
எரிந்து கொண்டிருக்கிறார்
காத்திருக்கிறோம்
காத்திருப்போர் கூடத்தில்

 

5.

 

எல்லோரிடமும் போல
என்னிடமும் இருக்கின்றன
பகிரவும் முடியாத
அழிக்கவும் முடியாத
சில புகைப்படங்கள்.

6.

 

சொல்ல இல்லாமலில்லை
சொல்லத் தெரியாமலில்லை
சொல்ல விருப்பமில்லாமலில்லை
சொல்ல முடியவில்லை அவ்வளவுதான்.
சொல்ல இல்லாமலில்லை
சொல்லத் தெரியாமலில்லை
சொல்ல முடியாமலில்லை
சொல்ல விருப்பமில்லை அவ்வளவுதான்.
சொல்ல இல்லாமலில்லை
சொல்ல முடியாமலில்லை
சொல்ல விருப்பமில்லாமலில்லை
சொல்லத் தெரியவில்லை அவ்வளவுதான்
சொல்ல முடியாமலில்லை
சொல்ல விருப்பமில்லாமலில்லை
சொல்லத் தெரியாமலில்லை
சொல்ல ஏதுமில்லை அவ்வளவுதான்

7.

 

குவிந்திருந்த அழுக்குத் துணிகளிலிருந்து
அப்படியொரு வீச்சம்.
முகத்தைச் சுளிக்கிறேன்.
அத்தனையும் உன் அழுக்கடா
அதிர்கிறது ஒரு குரல்.

8.

 

கவ்வியிருந்த மீனை மேலே விசிறி
கீழிறங்குகையில்
அலகில் பிடித்துண்ணும்காட்சியை
பார்த்தும்,
பதிவு செய்யத் தவறினேன்.
இன்னொரு வாய்ப்புக்கு
வெகுநேரம் காத்திருந்தேன்.
கெஞ்சும் என்னிடம்,
இப்போதைக்கு
இந்த முத்தம் மட்டுந்தான்
போவென்று
முதுகில் கை வைத்துத் தள்ளும்
உன்னைப் போலவே
மூழ்கி மறைந்தது பாம்புத்தாரா

9.

 

வளைவுகளில் ஒலி எழுப்பாதவர்கள்,
பதில் ஒலிக்காதவர்கள்
இஷ்டப்படி திரும்புகிறவர்கள்
நோ என்ட்ரியில்,எதிர்த் திசையில்
அதி விரைவாய் வருபவர்கள்
தனக்கு மட்டுமேயானது சாலையென
உறுதியாக நம்புகிறவர்கள்
பின் வரும் உங்களின் முகத்தில்
சைலன்ஸரின் கரி பூசுபவர்கள்,
அதிர வைக்கும் புயல் வேகத்தால்,
காதுகள் கூசும் வித்தியாசமான ஒலிகளால்
தடுமாற வைப்பவர்கள்
கொலை வெறியுடன் பரபரக்கும் சாலைகளில்,
அடிபட்டு வீழ்வதற்கான
சகல சாத்தியங்களுடன்தான்
உயிர்ப்புடனிருக்கும் ஓட்டுநர் உரிமத்தை
வைத்திருக்கும்,
சாலை விதிகளைப் பின்பற்றும் நீங்கள்,
வீட்டு வாசலில்,
சரியான இடைவெளிகளில் சர்வீஸ் செய்யப்படுகிற
உரிமம் முறையாகப் புதுப்பிக்கப்பட்ட
உங்கள் வாகனத்தை உயிர்ப்பிக்கிறீர்கள்.

10.

 

பழைய பொருள்கள் விற்கும் கடையொன்றில்
பார்த்தேன்
சிலந்தி வலைப் பின்னல்களுடன்
மூலையில் கிடந்த அந்த விளக்கை.
துதிக்கை உலோக நுனியைப்
பார்த்துச் சிரித்தபடி கேட்டேன்.
இது என்ன, அலாவூதீனின் அற்புத விளக்கா?
நீண்ட வெண்தாடியை வருடியபடி
ஆமாமென்றார் கடைக்காரர்.
தேய்த்தால் பூதம் வருமா?
வராது.கேட்பாரற்றுக் கிடக்கிறது பல காலமாய்.
அறிவிக்கப்படாத ஆவணி மாதத் தள்ளுபடியும் தந்தார்.
கையில் வாங்கியதும்
ஆலம்பனா,நான் உங்கள் அடிமைய்ய்ய்
என்று வெளியதிர்ந்தது.
புளி,EXO பவுடரெல்லாம் தேய்த்து
பளபளவென மின்னுமதை
முணுமுணுக்கும் வீட்டைப் புறக்கணித்து
வரவேற்பறையில்தான் வைத்திருக்கிறேன்.
இந்தப் பக்கமாக வந்தால் வாருங்கள்.
இளஞ் சூட்டில் தேநீர் பருகியபடி
அலாவூதீன் விளக்கின்,பூதத்தின் அற்புதங்களை
கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருக்கலாம்.

ஜி.சிவக்குமார்
மதுரை 

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *