சிறார் அறிவியல் சிறுகதை: "அய்யனின் விண்வெளி கனவு" - ஆயிஷா இரா.நடராசன் | Sirar Ariviyal Sirukathai - Ayesha Era Natarasan | www.bookday.in

சிறார் அறிவியல் சிறுகதை: “அய்யனின் விண்வெளி கனவு” – ஆயிஷா இரா.நடராசன்

சிறார் அறிவியல் சிறுகதை:

“அய்யனின் விண்வெளி கனவு” 

– ஆயிஷா இரா.நடராசன்

அய்யன் என்றதும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு அவனுடைய சக்கர நாற்காலியும் சேர்ந்தே ஞாபகத்திற்கு வரும்.. அவன் முழுப்பெயர் அய்யன் அமுதன். ஆனால் அய்யன் என்றே நிலைத்துவிட்டது.. சிறுவயதில் படுக்கையிலிருந்து கீழே தவறி  விழுந்து முதுகெலும்பில் அடிபட்டு விட்டதால் சக்கர நாற்காலி அய்யன் ஆனான் அவன்… அவனுடைய பெரிய கனவு விண்வெளி.. அவனுடைய வீடு இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் ஆரம்பகால ஆய்வகமொன்றின் அருகில்தான் இருந்தது..

எனவே அடிக்கடி அவன் ராக்கெட்டுகள் ஏவப்படுவதை மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் தன்னுடைய வீட்டின் மொட்டை மாடியிலிருந்து ரசித்துக் கொண்டே இருப்பான்.. இரவு வானத்தை பார்த்து நட்சத்திரங்களோடு பேசிக் கொண்டிருப்பான்.. அவன் படிக்கும் பள்ளிக்கூடத்தில் ஒரு நூலகம் இருந்தது. அற்புதமான வானவியல் புத்தகங்களை மூன்றாம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்தே எடுத்து படம் பார்ப்பது வாசிப்பது அவனுடைய பொழுது போக்குகளில் ஒன்று.

என்னுடைய எதிர்காலம் என்கிற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது  ‘நான் விண்வெளி வீரர் ஆவேன்’ என்று அவன் மிகுந்த நம்பிக்கையோடு ஒரு கட்டுரை ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுதே எழுதியிருந்தான் அது இரண்டாம் பரிசு பெற்றது.. ஆனால் பலரும் வேடிக்கையாக சிரித்தார்கள் சக்கர நாற்காலியில் யாராவது விண்வெளிக்கு போக முடியுமா.. சிலர் உச்சுக்கொட்டியபடி பரிதாப பட்டார்கள்

அப்படி இப்படி என்று அவன் எட்டாம் வகுப்புக்கு வந்து விட்டான்.. அப்போதுதான் அந்த வினோதமான போட்டி அறிவிக்கப்பட்டது. இஸ்ரோ இணைந்து நடத்திய வானவியல் குறித்த மாணவர்களுக்கான திறந்த போட்டி.. ட்ரோன் செய்யும் போட்டி. ஏற்கனவே இரண்டு முறை அறிவியல் கண்காட்சிகளில் அவன் நேரடியாக பங்கேற்று ராக்கெட் மாதிரிகளை வைத்து தன்னுடைய விண்வெளி ஆர்வத்தை வெளிப்படுத்தி இருக்கிறான்.. ஆசிரியராக பணிபுரியும் அய்யனின் தந்தை அந்த விஷயத்தில் குறையேதும் வைக்கவில்லை.. உள்ளூரில் ஒரு ஜவுளி கடையில் பில் போடும் பணியாற்றும் அவனுடைய அம்மா அறிவியல் கண்காட்சி போட்டி என்று வந்தால் அன்று ஒருநாள் பணிக்கு விடுப்பு எடுத்துக் கொண்டு அவனோடு பயணிப்பதையும் அவனை உற்சாகப்படுத்துவதையும் கடமையாக செய்தார்.

இஸ்ரோ நடத்துகின்ற ட்ரோன் பறக்க விடும் போட்டி பற்றி பேசாதவர்களே இல்லை.. பெரிய அளவில் பணம் செலவுசெய்து ட்ரோன் ஒன்றை வாங்கி கொடுக்கும் அளவிற்கு அய்யன் வீட்டில் வசதி கிடையாது. தவிர ஒரு சக்கர நாற்காலி குழந்தை அவனாலே எவ்வளவு முடியும் என்பதற்கு ஒரு எல்லை இருக்கிறது என்று அய்யனின் தாயும் தந்தையும் கவலைப் பட்டார்கள்..

போட்டி வினோதமானது .. ஒரு எட்டாம் வகுப்பு மாணவன் ட்ரோன்  உருவாக்க முடியுமா.. அதற்கு வழிகாட்டுதலும் தொழில்நுட்ப அறிவும் சில சோதனை முயற்சிகளும் தேவையல்லவா.. ஆனால் அய்யன் எவ்வளவு பிடிவாதமானவன்.. என்பது அம்மாவுக்கு தெரியும். இஸ்ரோ நடத்தும் சிறுவர்களுக்கானரோன் கண்காட்சியில் பங்குபெற தனக்கு ஒரு வாய்ப்பு வழங்குமாறு பள்ளியில் அவன் ஏற்கனவே ஆசிரியர்களிடம் ஒரு கடிதம் எழுதி கொடுத்து இருந்தான்..

போட்டி சிக்கலானது சக்கர நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவனால் சாதிக்க முடியுமா என்று ஆசிரியர்கள் விவாதித்தனர்.. தன்னுடைய அப்பாவின்  மடிகணினியை விரித்த அய்யன் செயலில் இறங்கினான் ட்ரோன்கள் இன்று விவசாயம் மருத்துவம் பேரிடர் மீட்பு விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ராணுவம் உள்ளிட்ட துறைகளில் எப்படிப் பங்காற்றுகிறது என்பதை சுயமாக கற்றுக் கொண்டான்..

தன்னுடைய குரலுக்கு கட்டுப்படும் குரல் கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தோடு கூடிய ஒரு சிறிய ட்ரோன்.. அதுதான் அய்யனின் கனவு.. அம்மா அப்பாவை நச்சரித்து அவன் பிடிவாதமாக செயலில் இறங்கினான் ஒரே வாரத்தில் மிக சிறிய பறக்கும் குரல் கட்டுப்பாட்டு ட்ரோன் ஒன்றை அவன் செய்திருந்தான்.. நான்கு மிக சிறிய மோட்டார்கள் நான்கு மூலையிலும்  பொருத்தினான்.. குச்சிகள் குளிர்பானம் குடிக்கும் ஸ்ட்ரா இவற்றை பயன்படுத்தி காற்றாடி ரக்கைகள் அமைத்தான்.. சட்டகங்கள் அமைத்தான்.. இவை உந்துவிசையை உருவாக்குவதற்கு எடை குறைவாக இருக்குமாறு பார்த்துக் கொண்டான் தன்னுடைய குரலின் மூலம் மோட்டார்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் தானியங்கி ஒன்றை மின்னணு சாதன கடையில் இருந்து பெற்று அதற்கு மூளையாக அமைத்தான்.. ஒரு சிறிய ட்ரோன் தயார்.

ஆனால் போட்டிக்கு அவன் தேர்வு பெறவில்லை.

அதை நினைத்து அய்யன் மிகவும் விருந்தினான்.. தான் தேர்வு பெறாமல் போனதற்கான காரணங்கள்குறித்து பலவார் யோசித்தான்.. காரணம் என்று பிரத்யேகமாக எதுவும் இல்லை.. ஏனைய மாணவர்கள் வசதி படைத்தவர்கள். தேர்வு செய்யப்பட்டிருந்த அவர்கள் பள்ளியின் மூன்று டிரோன்களும் மாணவர்கள் செய்தது அல்ல. வெளியில் நிறைய பணம் செலவழித்து தொழில்நுட்பவாதிகளிடம் கொடுத்து செய்யப்பட்ட பொம்மைகள்.. கவர்ச்சியாக இருந்தன ஆடம்பரமாக இருந்தன எனவே அவை தேர்வு பெற்றுவிட்டன.. கோபத்திற்கு நடுவில் அவனுக்கு அழுகை வந்துவிட்டது.. தானே முயற்சி செய்து உருவாக்கியிருந்த தன்னுடைய ட்ரோனைப் பார்த்தான்.. அதில் அழகு அம்சத்தை விட.. அறிவியல் அம்சம் நிறைந்திருப்பதை அவனுடைய அப்பா மட்டும் பாராட்டினார்..

‘போட்டி நடக்கும் மைதானத்திற்கு என்னை அழைத்துச் செல்வீர்களா அம்மா?’  நள்ளிரவில் தூக்கத்தில் அவன் உளறிக்கொண்டிருந்தான்.. அப்புறம் என்ன.. எப்படியோ போட்டி நடந்த மைதானத்திற்கு சென்று பார்வையாளர்களில் ஒருவராக அவனை அம்மா அமர வைத்தார்.. அங்கே விதவிதமான ட்ரோன்களை பறக்க விட்டார்கள்.. யார் யாரோ விஞ்ஞானிகளும் அதிகாரிகளும் வந்திருந்தார்கள்.. கூட்டம் நிரம்பி வழிந்தது.. அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்த ஒரு பெரிய ட்ரோன் முதலில் பறக்கவிட்டு காட்டப்பட்டது அது இஸ்ரோவுக்கு சொந்தமானது.. ஆனால் பலரும் அதிர்ச்சி அடையும் விதமாக அந்த ட்ரோன் உயரே சென்று ஒரு மரத்தில் சிக்கிக் கொண்டது

என்ன நடந்தது என்று கொஞ்ச நேரம் யாருக்கும் புரியவில்லை.. ஆனால் உடனடியாக அய்யன் புரிந்து கொண்டான்.. தன்னுடைய புத்தகப் பையில் அவன் எடுத்து வந்திருந்த குட்டி ட்ரோனை வெளியே எடுத்தான்.. ‘பறந்து போ மரம் நோக்கி செல்ல வேண்டும்’ என்று தன் குரலால் கமாண்ட் கொடுத்தான்.. என்ன ஒரு அதிசயம்.. அவனுடைய குட்டி ட்ரோன் பறந்து சென்று மரத்தில் சிக்கிக் கொண்டிருந்த ட்ரோன் அருகே மரத்தை அப்புறப்படுத்தி அந்த பெரிய இஸ்ரோ ட்ரோன் கருவியை பழையபடி பறக்க வைத்திருந்தது.. அனைவருமே அசந்துபோனார்கள்..

சக்கர நாற்காலியிலேயே மேடைக்கு அழைக்கப்பட்ட அய்யன் பாராட்டு மட்டும் பெறவில்லை.. இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ‘மாணவர் டேக் தொழில்நுட்ப பயிற்சி திட்டத்தில் நாங்கள் இந்த மாணவர் அய்யன் அவர்களையும் தேர்வு செய்கிறோம்..’ என்று அறிவித்தார்..

‘வெறும் பறந்து செல்லும் பொம்மை அல்ல டிரோன் என்பது.. மனிதனின் ஆபத்துக்கு மனிதனால் செல்ல முடியாத இடத்தை நோக்கி சென்று உதவி செய்வதற்குத்தான் கண்டுபிடிக்கப்பட்டவை டிரோன்கள்.. அப்படிப் பார்த்தால் இந்த சிறுவனின் பங்களிப்பு அபாரமானது’ என்றார் வேறு ஒரு விஞ்ஞானி.

சக்கர நாற்காலியில் இருக்கும் ஒரு சிறுவனை எப்படி தேர்வு செய்தீர்கள் என்பது போல கூட்டம் அதிர்ந்தபொழுது..’விண்வெளி அறிவியலுக்குள் நுழைய.. நடக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை சிறப்பாக சிந்திக்க தெரிந்தால் போதும்’ என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள்… அவ்வளவுதான் அய்யன் உற்சாகத்தில் துள்ளினான். பிறகு என்ன ஐயன் என்றால் இப்போதெல்லாம் யாருக்கும் அவனுடைய சக்கர நாற்காலி நினைவுக்கு வருவதில்லை மாறாக ஐயன் என்றாலே டிரோன் தான் ஞாபகத்திற்கு வருகிறது.

எழுதியவர்: 

ஆயிஷா இரா.நடராசன்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *