எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய "சிறார் இலக்கியமும் அறநெறிகளும்" கட்டுரை | Children's Literature Tamil Article | www.bookday.in

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய “சிறார் இலக்கியமும் அறநெறிகளும்” கட்டுரை

சிறார் இலக்கியமும் அறநெறிகளும்

– உதயசங்கர்

முதலில் அறம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்வோமா? அது ஏதோ யாராலும் கடைப்பிடிக்க முடியாத, அபூர்வமான, கடினமான, சிக்கலான யாருக்கும் புரியாத ஏதோ ஒரு வஸ்து என்பதைப் போல பெரிய பில்டப் கொடுத்து வைத்திருக்கிறார்கள். அதைப் பற்றி யாரும் உரையாடவோ, விவாதிக்கவோ முன்வருவதில்லை.

எப்போது இந்த அறநெறிகள் உருவாயின? அறநெறிகளின் பின்னணி என்ன? அதன் தத்துவம் என்ன? என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதேயில்லை. ஆனால் சிறார் இலக்கியமென்று வந்து விட்டால், குழந்தைகளை நல்வழிப்படுத்த வேண்டும். அறநெறிகளைப் போதிக்க வேண்டும். நன்னெறிகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு படைப்பிலும் நீதிபோதனைகள் இருக்க வேண்டும். என்ற கூக்குரல்கள் எழுந்து கொண்டேயிருக்கின்றன. இதில் முற்போக்காளர்களும் விதிவிலக்கல்ல.

முதலில் அறம் என்றால் என்ன? விலங்குகள் உணவு, ( உயிர் வாழ்தல், தன்னைத் தக்கவைத்துக் கொள்ளுதல்,) இனப்பெருக்கம் ( தன் வாரிசுகள் அல்லது தன்னினத்தை பெருக்குதல் ) இந்த இரண்டு இயற்கையின் அடிப்படையான விதிகளுக்கேற்பவே நடந்து கொள்ளும். பசி வந்தாலும் சரி இனப்பெருக்கத்துக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்கின்றன. வலிமையுள்ளது வாழும். சூழ்நிலைகளுக்கேற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்ளும் விலங்குகள் தொடரும். அவ்வளவு தான். அதைத் தாண்டிய அறிவு வளர்ச்சி கிடையாது. மற்றபடி தாய்மை, தந்தைமை எல்லாம் உயிரியல் இயல்புணர்ச்சிகள். சமூகமாக வாழ்ந்தாலும், தனியாக வாழ்ந்தாலும் இந்த விதிகளைத் தான் கடைப்பிடிக்கின்றன.

ஆனால் கிட்ட த்தட்ட இரண்டரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே நவீன மனிதனான ஹோமோசேப்பியன்ஸ் ( சேப்பியன்ஸ் என்றால் பகுத்தறிவுள்ள ) தோன்றியபோதே அறநெறிகள் தோன்றிவிட்டன. வேட்டையாடிக் கிடைத்த உணவைத் தன்னுடைய கூட்டத்தாருடன் பகிர்ந்து கொள்ளுதல் ( எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் ) என்ற அறத்தை உருவாக்கியது ஹோமோசேப்பியன்ஸ். அதேபோல தன் கூட்ட த்தின் அங்கத்தினருக்கு உதவிசெய்தல் உதாரணத்துக்கு வேட்டையில் காயம்பட்டவரைக் காப்பாற்றுதல், மற்ற மனித இனங்களுடன் நடக்கும் சண்டைகளில் காயம்பட்டவர்களைக் காப்பாற்றி மருத்துவம் பார்த்தல் காப்பாற்றுதல், இறந்தவரைப் புதைத்தல் இவையெல்லாம் ஹோமோசேப்பியன்ஸின் தனித்துவமான குணாதிசயங்களென ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இதுவே மானுட அறத்தின் ஆதி விதைகள். எனலாம்.

கவனிக்க வேண்டிய விஷயம் அவர்களுடைய வாழ்க்கையிலிருந்தே இந்த அறநெறிகளை உருவாக்குகிறார்கள். ஏனெனில் மானுடவியல் ஆராய்ச்சியாளர் யுவால் நோவா ஹராரி தன்னுடைய சேப்பியன்ஸ் நூலில் மற்ற மனித இனங்களிடம் ( ஒன்பது வகையான மனித இனங்கள் இருந்திருக்கின்றன ) இந்தக் குணம் இல்லை. நியாண்டர்தால் மனிதர்கள் ஹோமோசேப்பியன்ஸை விட வலுவுள்ளவர்களாக இருந்தபோதிலும் அவர்கள் கூட்ட த்தைச் சேர்ந்தவர் தாக்கப்படும்போது வேடிக்கை மட்டுமே பார்த்தார்கள் என்கிறார்.

இதில் ஆச்சரியம் தருகின்ற விஷயம் என்னவென்றால் கட்டுக்கதைகள் அல்லது புனைவுகள் தான் தன் கூட்டம், தன் இனம் என்ற ஒற்றுமை உணர்வுகளை உருவாக்கியது என்பது தான். இந்த அடிப்படை அறவிழுமியங்கள் தோன்றி லட்சக்கணக்கான ஆண்டுகளாகி விட்டன. அப்போது எந்தக் கடவுளர்களோ சமயங்களோ மதங்களோ அரசுகளோ சட்டங்களோ உருவாகவில்லையென்பதை மனதில் இருத்திக் கொள்ளுங்கள்.

ஆதியில் வேட்டை சமூகமாக வாழ்ந்த மனிதன் உணவுக்காகப் புலம்பெயர்ந்து போகும்போது சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் விவசாயத்தைக் கண்டுபிடித்தான். விவசாயம் அவனுடைய புலம்பெயர் வாழ்வை மடைமாற்றியது. ஒரே இட த்தில் வாழும் சூழல் உருவானது. வேளாண்மை சமூகமே முதல் தனியுடமைச் சமூகத்தின் தொடக்கம் எனலாம். வேளாண்மையினால் உற்பத்தி பெருகியது. உபரி உருவானது. பண்டமாற்றுமுறை நடைமுறைக்கு வந்த து. அதுவரை இயற்கையை, ஆவிகளை வழிபட்டுக் கொண்டிருந்த மக்கள் அத்துடன் தங்களுடைய முன்னோர்களையும் புதிய கடவுளரையும் உருவாக்கினார்கள். சடங்குகள் உருவாயின. அடிமை முறையும் உருவானது. வேளாண் சமூகத்தின் பொருளாதார அடிப்படைகளைக் காப்பாற்றுவதற்கு அதாவது தனியுடமையைப் பாதுகாப்பதற்குத் திருடாமை, வாக்குத் தவறாமை, நேர்மையாக இருத்தல் விசுவாசம், கடமை ஈகை, எஜமானருக்காக உயிரைக் கொடுத்தல், தியாகம் போன்ற அறங்கள் உருவாயின. அரசுகள் உருவாயின. நிலவுடமைச் சமூகத்தின் அறங்களை நியாயப்படுத்த புராண இதிகாசங்கள், கட்டுக்கதைகள், எல்லாம் உருவாக்கப்பட்டன.

வாய்மொழியாக கடத்தப்பட்ட அடிப்படையான அறவிழுமியங்கள் பிறகு ஆளுகின்ற வர்க்கத்துக்குச் சாதகமாக எழுத்து வடிவமாகவும்  அரசதிகாரத்தின் சாசனமாகவும் மாற்றப்பட்டன. இந்தியா போன்ற நாடுகளில் ஆளும்வர்க்கம் வர்ணாசிர்மதர்மம் போன்ற சட்டங்களை உருவாக்கி மக்களை வர்ணங்களாக சாதிகளாகப் பிளவு படுத்தியது. இந்த அறமற்ற அறநெறிகளை மக்கள் மனங்களில் கட்டுக்கதைகள், சட்டம், நடைமுறை, தண்டனை ஆகியவற்றின் மூலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநிறுத்தி வைத்திருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமானால் அறவிழுமியங்கள் ஆதியில் ஒரு குழு உயிர்வாழ்வதற்கும் தங்களைத் தக்கவைத்துக் கொள்வதற்கும் நடைமுறைகளையே உருவாக்கியது.  பிறகு வர்க்கசமூகம் உருவான பிறகு ஆளும்வர்க்க நலன்களை முன்னிறுத்தி சமூகம் ஆளுமவர்க்கத்துக்குச் சாதகமாக இயங்கச் செய்யும் விதிமுறைகளாக மாறியது. அதுவே மதங்களின் கோட்பாடுகளாகவும் மதங்களின் தத்துவங்களாகவும் நடைமுறையிலிருக்கிறது. இந்த மதங்களின் கோட்பாடுகளையே நாம் அறவிழுமியங்கள் என்கிறோம். வர்க்க சமூகத்தில் வர்க்க அறம் மட்டுமே நடைமுறையிலிருக்கும். பொதுவான அறம் என்ற ஒன்று இருக்காது. அப்படி ஏதாவது இருந்தால் அது ஆதிப்பொது அறத்தின் கூறுகளான உதவுதல், பகிர்தல் என்பதாக இருக்கும்.

ஆக மதங்களில்லாத காலத்திலேயே அறவிழுமியங்கள் இருந்திருக்கின்றன. எனவே மதங்களைச் சாராமல் அறவிழுமியங்களை மனித சமூகம் கடைப்பிடிக்க முடியுமில்லையா?

லட்சக்கணக்கான ஆண்டுகளாக மனித சமூகம் தன்னுடைய அனுபவத்திலிருந்து உருவாக்கிய அறவிழுமியங்களை ஒழுக்கவிதிகளை மனிதர்கள் கடைப்பிடிக்கிறார்களா?

பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் ஒழுக்கம் என்றால் என்ன? என்று கேட்டுப்பாருங்கள். கீழ்ப்படிதல், எதிர்த்துப்பேசாமை, சொன்னபடி செய்தல், கெட்டவார்த்தைகள் பேசாதிருத்தல், பொய் சொல்லாமை, பெரியவர்களை மதித்தல் என்பதாகவே இருக்கும். இவற்றைத் தண்டனைகள் மூலமாகப் பயமுறுத்திக் குழந்தைகள் கடைப்பிடிக்கச் செய்யவேண்டும். மேலோட்டமாகப் பார்க்கும்போது இவையெல்லாம் சரியானதாகத் தோன்றவும் செய்யும். உண்மையில் இவற்றியெல்லாம் அந்தப் பெற்றோர்களும் ஆசிரியர்களும் கடைப்பிடிக்கிறார்களா என்பது ஒரு பக்கம் என்றால் இந்த ஒழுக்கவிதிகளுக்குப் பின்னாலிருக்கிற தத்துவம் என்ன என்பதைப் பற்றி யோசித்திருக்கிறோமோ என்ற கேள்வியுமிருக்கிறது.

முதலில் பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, சமூகமோ கடைப்பிடிக்காத அறவிழுமியங்களை அல்லது நன்னெறிகளை அல்லது ஒழுக்கவிதிகளைக் குழந்தைகளைக் கடைப்பிடிக்கச் சொல்வது எவ்வளவு அபத்தமென்று யோசிக்க வேண்டும். இரண்டாவது இந்த மாதிரியான ஒழுக்கநடைமுறைகள் கீழ்ப்படிதலுள்ள எதையும் கேள்விகள் கேட்காத, சுதந்திரமான சிந்தனைகளை அடக்கி ஒடுக்குகிற எப்போதும் யாரையாவது சார்ந்திருக்கும் சார்பு மனநிலையை உருவாக்கும். இவை ஆளும்வர்க்கத்தின் சுரண்டலை நீடித்திருப்பதற்கும் குழந்தைப்பருவத்திலிருந்தே கேள்விகேட்கும் அறிவுநிலையை ஒடுக்குவதற்கும் உருவாக்கப்பட்ட து. அப்படியென்றால் குழந்தைகள் தங்கள் விருப்ப ப்படி வாழமுடியுமா? சமூகத்தில் ஒழுங்கு வேண்டாமா? என்ற அக்கறையுடன் வருபவர்களுக்கு ஒரே பதில் தான்.

நீங்கள் எதையெல்லாம் குழந்தைகளுக்குப் போதிக்க வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். குழந்தைகள் கற்றுக் கொள்வார்கள். அடுத்த து தண்டனைகள் மூலம் மட்டுமே மனிதர்களை நல்வழிப்படுத்த முடியுமென்றால் இன்றைய மொத்த சமூகமும் நல்வழிப்பட்டிருக்க வேண்டும். காலாவதியான மதச்சிந்தனைகளைக் குழந்தைகளின் மனதில் திணிக்கக்கூடாது.

அப்படியென்றால் குழந்தைகளை எப்படித்தான் நல்வழிப்படுத்துவது? அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும். சுதந்திரமாக உணரச்செய்ய வேண்டும். படைப்பாற்றலைத் தூண்டி விட வேண்டும். கேள்விகளைக் கேட்க சுதந்திரம் வேண்டும். இந்தத் திசைவழியிலேயே சிறார் இலக்கியம் நடைபோட வேண்டும்.

இவற்றைச் சமூகம் அக்கறையுடன் கவனிக்கவும் நடைமுறைப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.

📚 எழுதியவர்:

எழுத்தாளர் உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *