ஆசிரியரின் என் உரையில் சிறைத்துறையில் வேலை செய்யும் காவலர் நலனுக்காக 8 மணி நேர வேலைக்குக் குரல் கொடுத்து இருமுறை பணி நீக்கம் செய்யப்பட்டதையும் பணியிட மாறுதல் ஊதிய வெட்டு போன்ற சிரமத்திற்கு ஆளானதையும் குறிப்பிடுகிறார். ஆசிரியரின் சிறைத்துறை வேலையிலிருந்த ஆர்வத்தையும் நேர்மையையும் எடுத்துரைப்பதாக இருக்கிறது. அவரின் அனுபவங்களை எழுத்துக்களாக உருவாக காரணமாக இருந்த, தோழர்களின் ஊக்கமும் உற்சாகமும், எழுதத் தோன்றியதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார். இந்த அனுபவக் கட்டுரை புத்தகமாக இன்று நம் கைகளில் மலர்கிறது..
சிறையில் நடந்த பலதரப்பட்ட சிறைக்கைதிகளின் உண்மைச் சம்பவங்கள்…
31 அத்தியாயங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.. ஒவ்வொரு சம்பவமும் நம் கண் முன்னே அழுத்தமான நிகழ்வுகளைச் சொல்கிறது.
சிறைக்கைதி நாகு கோனார், பறவைகள் மீது கொண்ட நேசமும், சிறையை விட்டு வெளியேறும் போது, கூண்டு பறவைகளை எடுத்துச் சென்றதும், நாக கோனாரின் இயற்கையோடு இணைந்த அன்பைக் காட்டுகிறது. ஐயப்பனின் சிறைவாழ்வில் அவன் நேர்மையாக இருப்பது போலவே தெரிகிறது. அவனை எதிர்நோக்கி சிறைச்சாலை நண்பர்கள் காத்திருக்கும் அளவிற்கு நல்லவனாக இருக்கிறான். அவனுக்குப் பிடித்ததை செய்து, இருக்கும் இடத்தில் மகிழ்வாக வாழ்கிறான்.
சிறை நிரப்பும் போராட்டத் தலைகள் வருகையை பற்றியும், அவர்கள் வரும்போது சிறை அதிகாரிகளின் மனநிலை கொண்டாட்டமும் உண்மையை உரைக்கிறது. பூமணி ஜெயா என்கிற திருநங்கை கைதிகளின் நடனத்திற்கு வசூல் செய்த பொருட்களை பணமாக்கி, சிறைக்குள்ளே விநாயகர் கோயில் கட்ட, சேர்ப்பதற்காகப் பணம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, தங்கள் ஜாமீனை நிராகரித்து, தாமதமாக வெளியேறியது குறித்த பதிவு வியக்கச் செய்கிறது. சாமி ஏட்டையாவின் முயற்சியில் எழுந்த பிள்ளையார் கோவில் இன்றும் சிறைச்சாலை உள்ளே அவர் பெயர் சொல்வதாக இருப்பதாக தோன்றுகிறது.
ஆட்டோ சங்கரின் மறுபக்கம் சொல்கிறது அவரது அமுத கானங்களை..ஆட்டோ ஷங்கரின் மைத்துனர் குருசாமியின் வாழ்க்கையில், பேசியே மனிதனை மிருகமாக மாற்றி, கொலை செய்யும் அளவிற்கு கொண்டு சென்று, ஜெயில் வாழ்க்கையில் குருவி குருசாமிக்கு இருந்த பாசம் நெகிழ வைத்திருக்கிறது.
தானாய் எல்லாம் மாறவில்லை என்ற கடைசி தலைப்பிற்கு ஏற்ப தோழர் பி.ராமமூர்த்தி அவர்களின் மகள், தன் தந்தை 35 வருடங்களுக்கு முன்பு இருந்த சிறைச்சாலையை கண்டு, மனித உரிமை ஆணையத்தின் மூலம், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் கூடுதலாக கழிப்பறைகளும், குடிநீர் குழாய்களும், தரமான உணவும், மருத்துவ வசதிகளும் நிறுவப்பட்டு உள்ளது என்பது நல்ல மாற்றம்.
ஒவ்வொரு அத்தியாயமும் குற்றமும் பின்னணியும் போல, நாவல் படிப்பது போல இருந்தாலும், சிறைக்குள் இருக்கும் மனங்களின் வெளிப்பாடாகவே இந்த நூலை படித்து முடிக்கிறேன். சிறைப்பறவைகளின் மனங்களை உணர்ந்து, எழுத்துகள் மூலம் வெளிக்கொணர்ந்த ஆசிரியருக்கு நன்றிகள்.
கவிதா பிருத்வி
தஞ்சை
நூல் பெயர்: சிறையில் ஒளிரும் நட்சத்திரம் {ஒரு சிறை காவலரின் அனுபவ பதிவுகள்}
ஆசிரியர்: மதுரை நம்பி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.