உழவர் பேரணி
————————-
நாங்கள் வருகிறோம்
நாட்டின் பசியை
நீக்கும் உழவர்கள்
நாங்கள் வருகிறோம்
எழு கதிரோடும்
மழை முகிலோடும்
பிறந்தவர் நாங்கள்
அழகிய மண்ணைத்
தாயின் மடியாய்
அணைத்தவர் நாங்கள். (நாங்கள்)
ஏர்முனை என்னும்
எழுத்தாயுதத்தை
மண்ணில் நாட்டுவோம்
வேரபிடித் தெழுகிற
பச்சைக் கதிர்மணிக்
காவியம் தீட்டுவோம். (நாங்கள்)
வயல்கள் வயல்கள்
வயல்கள் வயல்கள்
எங்கள் வீடதுவே
துயர்கள் துயர்கள்
துயர்கள் துயர்கள்
எங்கள் நிலைஇதுவே (நாங்கள்)
பொறுமை கலைந்து
புது விதி படைக்கப்
புறப்பட்டு வருகிறோம்
கருமை கருமை
கருமைச் சட்டங்கள்
தொலைக்க வருகிறோம். (நாங்கள்)
சாணக்கியத்தைச்
சாணத்தில் கரைத்து
மெழுக வருகிறோம்
நாணமில்லாதவர்
படையைத் தடையை
உடைக்க வருகிறோம். (நாங்கள்)
பிரளய காலத்தின்
உறுமி எழுகிற
புயலாய் வருகிறோம்
இறுகிய மனங்களில்
ஈரத்தைப் பொழிய மழையாய் வருகிறோம்
நாங்கள் வருகிறோம்
நாட்டின் பசியை
நீக்கும் உழவர்கள்
நாங்கள் வருகிறோம்
–சிற்பி பாலசுப்பிரமணியம்