“ஒரு கிராமத்து நதி” கவிதை தொகுப்பு – சிற்பி (நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியீடு)
2012இல் வெளிவந்த இந்த கவிதை தொகுப்பு 2024க்குள் 13 பதிப்புகளைக் கண்டுள்ளது. கவிஞர் சிற்பி வாழ்ந்து பழகிய கவிஞர்கள் பெயர்களோ தமிழ்க் கவிதையின் வரலாறு போல தெரிகிறது. பாவேந்தர் பாரதிதாசன், நாமக்கல் கவிஞர், கவிமணி. சுத்தானத பாரதி, திருலோக சீதாராம், தமிழ் ஒளி, தமிழழகன், சாமி பழமியப்பன், மு.அண்ணாமலை, பெரி.சிவனடியான், மீ.ப.சோமு, தர்மு சிவராம், பசுவய்யா, நகுலன், எஸ்.வைத்தீஸ்வரன், ரகுநாதன், கே.சி.எஸ்.அருணாசலம், க.நா.சு, ஞானி, புவியரசு, மீரா என நினைவு கூறுகிறார். ‘ஒரு கிராமத்து நதி’ தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்துள்ளது. மீரா, பாலா, கார்த்திகேசு சிவத்தம்பி, வா.செ.குழந்தைசாமி, கல்யாண்ஜி ஆகியோரின் பாராட்டுரைகள் பின்னிணைப்புகளாக உள்ளன.
மாற்றங்கள்
ஆத்துப் பொள்ளாச்சி என இவருடைய ஊர் பெயரிலேயே ஆறு இருப்பது ஒரு நயமான சுவைதான். நதியின் கதை சிறுகதையாக, சித்திர துணுக்குகளாக, புதினங்களாக, கிராமத்து மனிதர்களின் ஆளுமை விரிப்புகளாக ஓடுகிறது. கிராமத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கும் எதிர்மறை மாற்றங்களை எல்லாவற்றிற்கும் ‘சாட்சியாய் எனக்கென்ன என்று அவலத்தை மறைத்துக் கொண்டு தன் பாட்டுக்கு போய்க்கொண்டிருக்கிறதாம் நதி’. ஆனால் மனிதன் நதியையும் விட்டுவைக்கவில்லை என்று சொல்ல தோன்றுகிறது. இலஞ்சம், ஊழல், வகுப்பு வாதம் போன்ற அலங்கோலங்களைக் கொண்ட முதலாளித்துவ கட்சிகளை நினைத்து ‘பாழாய்ப் போன கட்சி அரசியலும்’ என்கிறாரோ கவிஞர்? அதேபோல் தொலைக்காட்சி எனும் அருமையான ஊடகத்தை வணிக நோக்கத்திற்காக சீரழிப்பதை மனதில் கொண்டு ‘ படையெடுப்பு நடத்தியிருக்கும் தொலைக்காட்சியும்’ என்று சொல்கிறார் என்று கொள்ளலாம்.
மூட நம்பிக்கைகள் :
கிராமத்தில் அதிகமாகவும் நகரங்களில் சற்று குறைவாகவும் காணப்படும் மூட நம்பிக்கைகளை நாசூக்காக சுட்டிக்காட்டுகிறார்.‘நெஞ்சுக்குழி மேல் தண்ணீர் ஒட்டாது போனால் பத்து நாளில் சாவு நிச்சயம்’ என்று சொன்ன சாமியார் பாப்பன் என்றழைக்கப்படும் ஆறுமுகம் ரயில் பாதையில் இறந்து கிடந்ததை ‘இவன் நெஞ்சுக்குழியில் பத்து நாள் முன் தண்ணீர் ஒட்டாமல் இருந்திருக்குமோ?’ என்று கேள்வியை எழுப்பி நம்மை சிந்திக்க வைக்கிறார். அதே போல் வெள்ளத்தில் வந்து ஒதுங்கியவரை ‘வெள்ள சாமியார்’ ஆக்கிய கதையை இன்னொரு முறை வெள்ளம் வந்து வடிந்தபோது
‘மாகாளி இருந்தாள்
காவடி இருந்தது
காவி வேட்டியும் துண்டும் இருந்தன
வெள்ளச் சாமியார்
எங்கு தேடியும் தட்டுப்படவே இல்லை’
என்று முடிக்கிறார்.
‘அம்மன் பண்டிகை’ என்கிற கவிதையில் சாமி வந்து ஆடிய நபர் பின்னால் ஓடும்போது
‘அடேய் ….மரியாதையா நட
இல்லீணா ஒரே அப்பு’
என்று கை ஓங்கியதைக் கண்டதும் சாமி மலையேறி விட்டது என்று வெளிப்படையாகவே எழுதுகிறார்.
‘கொடும்பாவி சாகாளோ ‘ என்கிற கவிதையில் மழை பெய்வதற்காக கிராமத்து மக்கள் பல சடங்குகள் செய்தும் மழை பெய்யவில்லை. இறுதியில் பிள்ளையாருக்கு பூசை செயதபோது மழை பெய்ததாம்.
‘தற்செயலா?
பிள்ளையார் தனிச் செயலா?
மக்களது நம்பிக்கை
மழைப் பூவாய் பூத்ததுவா?
யாருக்கு தெரியும் அந்த
இயற்கை செய்யும்
திருக்கூத்து?
என்று முடிக்கிறார். இயற்கையை முழுவதுமாக கணிக்க முடியாது என்றாலும் இப்போது அறிவியல் பெரும்பாலும் சரியாகவே கணித்து விடுகிறது.
காதலும் காமமும்
‘அங்கீகரிக்கப்படாத காதல்’ என்கிற கவிதையில் ஒரே சாதியை சேர்ந்தவர்களாயினும் காதலித்து திருமணம் செய்தவர்களை புறக்கணிக்கும் மக்களை சாடுகிறார். ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. ‘குதிக்கட்டுமா என்று
பாய்ச்சல் காட்டும் இளவட்டங்களுக்கு
கடைக்கண்ணால் மறுதலிக்கும்
கொமரிகள் ஒரு பக்கம்’
என்ற விவரிப்பில் காதல் சுவையாக காட்டப்படுகிறது. பாரதிதாசனின்
கடைகண் பார்வை தன்னை கன்னியர் தம்
காட்டிவிட்டால்
மண்ணில் குமரருக்கு மாமலையும் ஒர் கடுகாம்
என்பதற்கு நேர் எதிராக இங்கு காட்டப்படுகிறது.
பல கவிதைகளில் கிராமத்தில் அரசல் புரசலாக நடைபெறும் பாலுறவு விசயங்களை பார்க்க முடிகிறது. ‘கிட்னவேணி கிட்ட வாலாட்டின ஊமையன்’, தெருக்கூத்து முடிந்ததும் வண்டியில் மைனருடன் ஒட்டி உட்கார்ந்து போகும் கதாநாயகி’ இப்படி பல காட்சிகள்.
வர்ணனைகள்
புத்தகமெங்கும் ரசிக்கக்கூடிய உவமைகள், வர்ணனைகள் கொட்டிக் கிடக்கின்றன. நதி
‘நான் தவழ்ந்த கோரைப்பாய்
முகம் பார்த்த கண்ணாடி
என் காதலின் வீணை
ஏகாந்தங்களின் பள்ளியறை’
என்பது புதுமையாய் உள்ளது.
பாட்டியாவின் அனுபவங்கள் ‘மளமளவென்று உதிரும் வேப்பம்பூக்களைப் போல’ இருக்குமாம். நதியிலுள்ள பாறைகளை இவரைப்போல யாரும் வர்ணித்திருப்பார்களா தெரியவில்லை. ஒரு எடுத்துக்காட்டாக
‘பனங்கருக்கு வாள் வீசும்
அழுக்கு சட்டை இளவரசர்களுக்கு
கற்பனை வளர்க்கும்
கோட்டை மதில்கள்’
என்பதில் கிராமத்து சிறுவர்களின் விளையாட்டை சித்தரிப்பதோடு அவர்கள் அழுக்கு சட்டை இளவரசர்கள் என்று எதார்த்தத்தையும் சேர்த்து தருகிறார். கிட்டத்தட்ட ஒரு சங்கப் பாடல் காட்சியைப் போல இது தோன்றுகிறது.
ஆறு வற்றிக் கிடப்பதை
‘வறுமைக்கு பயந்து
நகைகளை விற்று தொலைத்தவளின்
கழுத்தில் மிஞ்சிய
தாலிக்கயிறு போல்
வற்றிக் கிடந்தது ஆறு’
என்கிறார். ‘விற்றவளின்’ என்று சொல்லியிருக்கலாம். ‘விற்று தொலைத்தவள்’ என்கிறார். அந்த வார்த்தைகளில் நகைகளை விற்கும்போது ஏற்படுகிற கோபம் தெறிக்கிறது. அங்கம்மாவின் மூக்கு ‘கூரையின் வெட்டுக்கை போல்’ அழகுதான். ஆனால் அதன் பக்கத்தில் இருக்கும் ஒரு அம்மைத் தழும்பு ‘அதன் கருவத்தை சற்றே அடக்கி வைக்குமாம்’. நதி அடித்துக்கொண்டு போவது ‘பிள்ளையார்களை மட்டுமல்ல பிள்ளைப் பருவத்தையும் கூட’ என்பதில் எவ்வளவு ஏக்கம் தெரிகிறது.
உணர்வுகள்
இளமைப் பருவ நிகழ்வுகளை நினைத்துப் பார்க்கும் கவிதைகள் சுவையாக இருக்கின்றன.
‘சின்னூண்டு வயசிலே
சவாரி ஓட்டறதிலே
துடியா இருப்பேன்
சுத்து வட்டாரத்திலே
எவனும் வாலாட்ட முடியாது’
என்று சொல்லும் மாப்பிள்ளை கவுண்டர்
‘கறிதின்னும் அப்பாவுக்கு
கை கூசாமல் சமைத்தளிக்கும்
கடும் சைவைக்காரி’ அம்மாவை
‘பட்டுப் புடவையில் பார்த்ததே இல்லை
அப்பா எடுத்துக் கொடுக்க
இல்லையோ என்னவோ’
அண்மையில் படித்த ஒரு கவிதையில்
அப்பா வருடா வருடம்
கிணற்றை தூர் எடுப்பார்
அம்மாவின் மனதை மாட்டும் கவனிக்கவேயில்லை ‘
என்பது நினைவுக்கு வருகிறது. ஆண்கள் மனைவிகளை மனிதர்களாக பார்க்க வேண்டும் என்பதை இப்படிப்பட்ட வரிகள் காட்டுகின்றன. ஆனால் அம்மாவோ தன் கணவன் வாங்கித் தந்த பெல்ஜியம் கண்ணாடியில் உயிரையே வைத்திருக்கிறாளாம்.
கிராமத்து ஆளுமைகளும் சொலவடைகளும்
‘வில்லியும் கம்பனும் நாவில் சடுகுடு விளையாடும்’ தெற்கு வளவுப் பாட்டையா, இடுங்கி காணாமல் போன கண்களில் குறும்பு மட்டும் தெரியும் ’ மாப்பிள்ளை கவுண்டர், ‘மசப்பந்து ஆட்டத்தில் மரடோனா போல் குறுக்கே நுழையும்’ சின்னக் கண்ணாள், ‘நின்றால் கூரைகள் குனியும்’ ஊமையன்,இப்படி பலவிதமான மனிதர்கள்.
பேராண்டி, ஈசானிய மூலை, இடத்தான், வலத்தான், வாக்கணம், ஒணத்தி, செம்பிலி, சீவக்கட்டை போன்ற கிராமத்து சொற்கள் அந்த வட்டார மக்களுக்கு இயல்பாக வரும். மற்றவர்கள் புரிந்து கொள்ளலாம்.
கிராமங்களின் முகமும் மனிதர்களும் பேச்சு மொழியும் மாறி வருகிறது. ஆனாலும் இது போன்ற கவிதை தொகுப்புகள் ஒரு வரலாற்று ஆவணமாக இருக்கும்.
நூலின் விவரம்:
நூல்: ஒரு கிராமத்து நதி – கவிதை தொகுப்பு
ஆசிரியர்: சிற்பி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New Century Book House)
விலை: ரூ.100
எழுதியவர்:-
✍🏻 இரா. இரமணன் (Era.Ramanan)
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.