சிற்பி கவிதைகள்

 

ஹளபேடு அழகி

*************************

Image

முத்துவடம் தொட்ட

மொக்குத் தாமரை

மார்பகங்கள்

பித்துப் பிடிக்க வைக்க

சந்தனக் கிண்ணக்

காம்புபோல் இடை

வெண்ணையாய்க் குழைந்திருக்க

பாதரசம் மௌனித்த கால்கள்

ஒய்யாரம் கண்டிருக்க

கவிதை கலகலக்கும் வளையல்கள்

சப்தமின்றி கவனம் கொண்டிருக்க

சந்திரப் பிறையும்

சூரியப் பிறையும்

தலையலங்காரக் கர்வத்தில் வீற்றிருக்க

இடக்கரம் ஏந்திய

கல் கண்ணாடியில்

முறுவலித்து முறுவலித்து

நூற்றாண்டுகளாய் முகம் பார்க்கிறாயே…..

திகட்டவில்லையோ உனக்கு?

தீரவில்லையோ தாகம்?

சொந்த அழகில்

சொக்கிக் கிடப்பவளே

உனக்குத் தெரியுமா?

அந்த அழகைக்

கண்ணில் சுமந்தபடி

நிற்கிறது காலம்.

      ஃஃஃஃஃஃ

காலை இரவானது

***************************

Image

அதிகாலைப் பிரம்ம முகூர்த்தத்தில்

சாதகம் செய்ய எழுந்தார்

நாதசுரச் சக்கரவர்த்தி

எண்பது வட்டம்

சூரியனை வலம் வந்த

பூமியின் வயது

முகம் கழுவித் திருநீறணிந்தார்

சீவாளியை ஈரப்படுத்தினார்

நாதசுரத்தை

மழலையாய் ஏந்தும்போது

பரிசுப் பதக்கங்களின் கொண்டாட்டம்

விரல்கள் துளைகளில்

விளையாடக் காத்திருந்தன

ஆனந்த பைரவி

ஆலாபனை ஆரம்பம்…

எங்கோ பிசிறு…

அய்யோ… அபசுரம்

நழுவி மடியில் விழுந்தது

நாதசுரம்

முத்து முத்தாய்க்

கண்களில் அரும்புகள்

மௌனம் கீற

அறுந்தது சங்கீதம்

மூச்சுக்காற்று

இப்போது

பிரபஞ்ச வெளியில்

குழல்

உயிரற்று…

ஃஃஃஃஃஃஃஃ

காணாமல் போன பூனை

***************************************

Image
 ஓவியம் ஆர்.பி.பாஸ்கரன்

இப்பொழுதெல்லாம்

குழந்தைகளை வசீகரிக்கும்

பூனைகளின் ‘மியாவ்’

கேட்பதே இல்லை.

உறைக்குள் இருக்கும் கத்தியென

கால்நகங்களைப் பொதிந்து வைத்து

மீசை முறுக்குவதில்லை.

வஞ்சம்

கண்களில் கசிய

எலிகளைத் துரத்துவதில்லை.

பால் பாத்திரங்களைத்

தேடி உருட்டுவதில்லை.

மாயப் பூனைகளாய் மாறிக்

கண்ணில் படுவதேயில்லை.

காடுகளுக்குப் போய்

புலிகள் ஆகி இருக்குமோ?

அல்லது

சாமியார்களின் காலமென

அகலிகை ஆசிரமம் பக்கம்

தவம் செய்யப் போயிருக்குமோ?

Image

–  சிற்பி