சிந்தனைச் சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும் - பேரா. எ. பாவலன் | ம. சிங்காரவேலர் வாழ்க்கை வரலாறு | Singaravelar History in Tamil - www.bookday.in

சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும் – பேரா. எ. பாவலன்

சிற்பி சிங்கார வேலரின் அகமம் புறமும்

சிந்தனைச் சிற்பி ம. வெ. சிங்காரவேலர் ஓர் இந்திய போராட்ட வீரர்; பௌத்த பேரறிஞர்; திராவிட இயக்கச் சிந்தனையின் போர்வாள்; தென்னிந்தியாவின் முதல் பொதுவுடமையாளர்; முதலில் மே தினம் கொண்டாடியவர்; வழக்கறிஞர்; களப்போராளி; பெண் விடுதலை வீரர்; மேடைப் பேச்சாளர்; எழுத்தாளர்; தொழிலாளர் போராட்ட வீரர்; சாதி எதிர்ப்பாளர்; மொழிபற்றாளர்; ஆய்வறிஞர்; அறிவியல் சிந்தனையாளர்; பன்மொழி வித்தகர்; கல்வியாளர்; புத்தகக் காதலர்; இப்படி அவருக்கு எண்ணற்ற முகங்கள் உண்டு. எனினும் காலம் தந்த மிகப் பெரிய பரிசு சிந்தனைச் சிற்பி சிங்கார வேலர் இந்த பூமியில் பிறந்தது என்பது குறிப்பாக தமிழ் மண்ணில் பிறந்தவர் என்பதும் நம் காலத்தின் பயன். அந்த சிறப்பும் பயனும் பெருமையையும் தமிழர்களாய் பிறந்த நம் ஒவ்வொருவரையும் சாரும். அவரின் அகமும் புறமும் பற்றி ஆராய்ச்சி செய்யும் தன்மையில் இக்கட்டுரை அமைகிறது.

சிந்தனை சிற்பி சிங்காரவேலர் என்றதும் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது அவர் ஒரு பொதுவுடமை இயக்கச் சிந்தனையாளர் என்பதுதான். மறுக்க முடியாது; மாற்றுக் கருத்தும் இல்லை; பொதுவுடமை இயக்கத்தைச் சார்ந்தவர் என்பது எந்த அளவிற்கு உண்மையோ? அதே அளவிற்கு பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு சில காலம் பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையைப் பரப்பியவர். ஆனால் அதற்கு முன்பாக அவர் ஒரு பௌத்தச் சிந்தனையாளர் என்பதையும் மறுக்க முடியாது. பௌத்தம் குறித்து அவர் நீண்ட நெடிய ஆராய்ச்சி மேற்கொண்டவர். அவர் ஒரு பௌத்தக் கோட்பாட்டு ஆய்வாளர். பௌத்தத்தின் மீது அவருக்கு அளவு கடந்த காதல் இருந்தது. அதன் அடிப்படையில் பண்டிதர் அயோத்திதாசருடன் நீண்ட நெடிய தொடர்பும் அவருக்கு இருந்தது. இளமைக்காலத்தில் சிங்காரவேலர் சமூக அநீதிகளைக் குறிப்பாக தீண்டாமைக் கொடுமைகளை எதிர்க்க துணிவு கொண்டார். அக்காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் போர் குறளாக பண்டிதர் அயோத்திதாசர் (1854 -1914) விளங்கினார் . சிங்காரவேலருக்கு அவருடன் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக புத்த நெறியில் ஈடுபாடு ஏற்பட்டது.

பண்டிதர் அயோத்திதாசார் அடையாறு தியாசபிகல் சொசைட்டியைச் சார்ந்த கர்னல் ஆல்காட் (Conel Olcot) அவர்களும் இணைந்து, சென்னைக்கு வருகைத் தந்துள்ள புத்த நெறியாளர், அனகரிகா தம்மபாலாவிற்கு வரவேற்பு அளிக்க விரும்பினர். 1898 ஆகஸ்ட் 8 அன்று சிங்காரவேலரின் இராயப்பேட்டை இல்லத்தில் இலங்கை புத்த நெறியாளர் தம்மபாலாவிற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியின் போது மகாபோதி சங்கம் சென்னையில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை ஐஸ் ஹவுசுக்கு (Ice House)ப் பக்கத்தில் மகாபோதி சங்கம் ஒரு கட்டடத்தில் இயங்கி வந்துள்ளது. அங்கே நடைபெறும் கூட்டங்களில் திரு.வி.க.தன் மாணவப் பருவத்தில் நண்பர்களுடன் சென்று கலந்து கொள்வார். சொற்பொழிவுகளுக்கிடையே கேள்விகள் கேட்டு விடை பெறமுயற்சிப்பார். சில நேரங்களில் கலவரமும் விளைவிப்பார். ஒருநாள் சிங்காரவேலர் டார்வின் கொள்கையைத் தமிழில் விளக்கினார். திரு.வி.க அச்சொற்பொழிவினைக் கேட்டு தன்னை இழந்தார். பின்னர் சிங்காரவேலரின் நண்பரானார்.

தொடக்கத்தில் அயோத்திதாசர் பண்டிதரோடு இணைந்து பௌத்தத்தை மக்களிடையே பரப்பினார். பின்னாளில் அவரோடு கருத்து முரண்பட்டு தம் வீட்டில் மகாபோதி சங்கம் என்ற பௌத்த சங்கத்தை உருவாக்கினார். 1899 ஆம் ஆண்டு புத்தரின் நினைவாண்டை தம்வீட்டிலேயே பௌத்தர்களோடு இணைந்து சிறப்பாகக் கொண்டாடினார். மாதந்தோறும் பௌத்தக்கொள்கைகளை விளக்கியும் மூடநம்பிக்கைக்கும் சாதி வேற்றுமைக்கும் எதிராகப் பலகருத்துக்களை மக்களிடம் பரப்பினார்.

பௌத்த பேரறிஞர் கோசாம்பியுடன் ஏற்பட்ட தொடர்பு

தர்மானந்த கோசாம்பி (1876-1947) அவர்கள் சிறந்த பௌத்த ஆராய்ச்சியாளர். அவர் பௌத்தத்தை மறுமலர்ச்சி செய்வதிலும் அதன் வரலாற்று மீட்டுருவாக்கம் செய்வதிலும் முக்கிய பங்காற்றியவர். அவரது கௌதம புத்தர் மிகவும் முக்கியமான நூல். பௌத்தத்தின் வரலாற்றை அறிவதற்காக இந்தியாவின் பல பகுதிகளுக்கும் நேபாளம், இலங்கை, பர்மா உள்ளிட்ட நாடுகளுக்குப் பயணித்து பௌத்தம் பற்றி அறிந்து கொண்டார். தன் வாழ்நாளில் மேலும் பௌத்தம் குறித்து கற்றறிய தெற்காசியா முழுக்கப் பயணித்தார். அதன் ஒரு பகுதியாக 1902ஆம் ஆண்டு இலங்கை நோக்கி பயணித்தபோது சென்னையில் தங்கிச்சென்ற பயணத்தின் அனுபவங்களைத் தனது வாழ்க்கை வரலாற்றில் பதிவு செய்துள்ளார். அப்பயணத்தின் போதே சிங்காரவேலர், அயோத்திதாசர், லட்சுமி நரசு ஆகியோரை சந்திக்கிறார். சுமார் ஏழு மாதங்கள் சென்னையில் தங்கி பௌத்தப்பணியாற்றினார். அப்பொழுது அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை தன்னுடைய வாழ்க்கை வரலாற்று ஆத்ம நிவேதன் நூலில் பதிவு செய்துள்ளார். அதில் ஒரு பகுதியாக சென்னையில் மிகவும் சிரமத்திற்கு இடையே சிங்காரவேலரின் வீட்டை அடைந்தவரை, அவர் புன்முறுவலுடன் வரவேற்று விருந்தோம்பியுள்ளார். சிங்கார வேலருக்கு இந்தி தெரியாததாலும் கோசாம்பிற்கு ஆங்கிலம் பரிச்சயம் இல்லை என்பதாலும் செய்கை மொழியிலேயே இருவரும் பேசிக் கொண்டனர். சிங்காரவேலரின் தம்பி இந்தி அறிந்தவர் என்பதால் அவர் மூலமாக தனது தேவையை கோசாம்பி வெளிப்படுத்தியுள்ளார். தூத்துக்குடியில் மருத்துவ அதிகாரியாக இருந்த தன் நண்பருக்கு சிங்காரவேலர் கடிதம் கொடுத்து அனுப்பியதோடு தேவை ஏற்பட்டால் பணம் அனுப்புவதாகவும் தெரிவித்து கோசாம்பிகை வழி அனுப்பியுள்ளார்.

ஓராண்டு கழித்து 1903ஆம் ஆண்டு மார்ச் 26ஆம் நாள் மீண்டும் கோசாம்பி சென்னை திரும்பியவர் சிங்கார வேலரை சந்தித்துள்ளார். கொழும்புவில் இருந்த காலத்தில் ஓரளவு ஆங்கிலம் பயின்றதால் சிங்காரவேலருடன் நேரடியாக தொடர்பு கொண்டுள்ளார். சிங்காரவேலர் அவருக்கு உணவளித்து உபசரித்தாலும் கல்கத்தா செல்ல பயணச்சீட்டு வாங்கித்தர மறுத்துவிட்டதாக குறிப்பிடுகிறார். சிங்காரவேலர் நடத்திய பௌத்த சங்கம் பொருளாதார ரீதியாக நலிவடைந்து இருந்ததால் உதவமுடியவில்லை என்று மறுத்துள்ளார். அதே வேளையில் இலங்கையில் இருந்து பணம் கிடைக்கும் வரை தங்களை பராமரித்துள்ளார். பிறகு பௌத்த சங்கம் ஒன்றை நிறுவி அதில் கோசாம்பி அவர்களை அமர்த்தவும் சிங்காரவேலர் திட்டமிட்டுள்ளார். இலங்கையில் இருந்து எவ்வித உதவியும் கிடைக்காததால் சிங்காரவேலரின் திட்டத்தை வேறு வழியின்றி ஏற்றுள்ளார். கோசாம்பி ராயப்பேட்டையில் ஒரு சிறிய குடிசையில் பௌத்த ஆசிரமம் ஒன்றை புதிதாக நிறுவி, ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மாலையும் பௌத்தம் பற்றிய உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளது. பாலி மொழியில் உள்ளவற்றை கோசாமி படித்து விளக்கிட சிங்காரவேலர் அதனை தமிழில் விளக்க உரை ஆற்றியுள்ளார். பல்வேறு சமூக மதப் பிரிவினரும் இந்த சொற்பொழிவினைக் கேட்க வந்துள்ளனர். இந்த சபையின் செயல்பாடுகள் எந்த ஒரு பௌத்த பிரசாரகளுக்கும் உவப்பளித்திருக்கும் என்கின்றார் கோசாம்பி.

பௌத்த மரபு பொதுவுடமை சித்தாந்தத்தை உள்ளடக்கியதாகவும் இயற்கையை பேசும் தத்துவங்களைக் கொண்டதாகவும் விளங்குகிறது. புத்த சமயத்தில் ஆன்மா என்பது கிடையாது. ஆனால் மறுபிறப்பை வலியுறுத்துகிறது. இது ஒரு இடைச்செருகள். ஆதி புத்த சமயம் பொருள் முதல்வாதத்தோடு நெருங்கி வருவதாக இருக்கிறது. உண்மையில் கடவுளின் இருப்பை தகர்த்தெறிந்தவர் புத்தபிரான். பகுத்தறிவு சமயத்தை நிறுவனமாக்கியவர் இயேசுபிரான்.

நபிகள் நாயகம் அன்பு சமயத்தை நிறுவ முயன்றார். காலப்போக்கில் வேறு மரபில் உள்ள மறுபிறப்புக் கொள்கையை இவையெல்லாம் ஏற்றுக்கொண்டு விட்டன. பளிச்சென்று சொல்லப் போனால் புத்த மதத்திற்குள் வேறு மரபு ஊடுருவியது. ஊடுருவி அதன் மூலத்தை உறிஞ்சி விட்டது. அதுவே மகாயானம் என்றார் பேராசிரியர் அருணன்.

பண்டிதர் அயோத்திதாசரின் பதிவுகள் குறித்த ஆராய்ச்சியின் வழியாய் சிங்காரவேலரின் பௌத்தம் தொடர்பான செயல்பாடுகள் குறித்து இதுவரை பதியப்படாத புதிய தரவுகள் வெளிவந்துள்ளது. அயோத்திதாசரின் சிந்தனை மரபு தலித் இலக்கியம் அரசியல் குறித்து தொடர்ந்து எழுதி வரும் முனைவர் ஸ்டாலின் ராஜாங்கம் அவர்கள் அயோத்திதாசரின் தமிழன் இதழில் வெளியான சிங்காரவேலர் அயோத்திதாசர் இடையே எழுதப்பட்ட கடிதங்களை நூலகர் பதிப்பித்துள்ளார். இந்த பதிவானது சிங்காரவேலர் பௌத்த சங்கத்தில் செயல்பட்ட காலம் குறித்து பதிவினை நமக்கு கொடுக்கிறது. இப்பதிவின் வழியே சிங்காரவேலரும் அயோத்திதாசரும் இணைந்து பௌத்தப்பணி ஆற்றியதும் அவர்களுகிடையே இருந்த உடன்பாடும் முரண்பாடும் அறிய முடிகிறது. இரண்டு ஆளுமைகளின் கருத்தியல் பலம் மற்றும் அறிவுக்கூர்மையை வெளிப்படுத்துபவையாக இந்த ஆவணம் அமைந்துள்ளது. இதைப் போன்று வரலாற்றில் இடுக்குகளின் மறைந்திருக்கும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர இருக்கும் வாய்ப்புகளை மேலும் கண்டடைய வேண்டும்.

புத்தகம் மீது ஏற்பட்ட காதல்

வாழ்க்கையில் சாதித்துள்ள பெரிய அறிஞர் பெருமக்கள் பெரும்பாலும் புத்தக வாசிப்பை நேசித்தவர்களாக இருந்திருக்கிறார். டாக்டர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் உள்ளிட்டவர்கள் கல்வி அறிவாலும் வாசிப்பு திறத்தாலும் ஒரு தத்துவவாதிகளாகவே மக்களிடம் அறியப்பட்டுள்ளனர். வாசிப்பு மிக முக்கியமான வேலையை செய்யும் என்பதற்கு ம. வெ. சிங்காரவேலர் ஒரு சாட்சியாகவே திகழ்கிறார். அதன் அடிப்படையில் அவருக்கு எப்பொழுதும் புத்தகத்தின் மீது மிகப்பெரிய காதல் இருந்துள்ளது அதை பின்வருமாறு காண முடியும். சிங்காரவேலர் விரிவாக வாசிக்கும் பழக்கம் கொண்டவர். அவருக்கு புத்தகத்தின் மீது பெரும் காதல் இருந்தது. ஒரு பக்கம் மார்க்சிய நூல்களைப் பயின்றதோடு மற்றொரு பக்கம் இந்திய அரசியலையும் உலக அரசியலையும் கூர்ந்து கவனித்து வந்தார். அவர் வீட்டில் 20,000 புத்தகங்கள் கொண்ட சிறந்த நூலகம் இருந்துள்ளது. அதனை பெரும் தலைவர்கள் பயன்படுத்தியுள்ளனர். சிங்காரவேலரை செதுக்கியதில் நூல்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு ஜார்ஜ் ஆட்சியில் ரஷ்ய மக்கள் அனுபவிக்கும் துயரங்கள் அவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் வாழ்விலும் சிந்தனையிலும் நிரந்தரமான ஒரு மாற்றத்தையும் உண்டாக்கியது அதன் தொடர்ச்சியாகவே இந்திய விடுதலைப் போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.

அவர் தனக்கு வேண்டிய புத்தகங்கள் எல்லாம் ஆக்ஸ்போர்ட் பிரஸ், மேக் மில்லியன், ஹிக்கிம் பாதம்ஸ், பிரிட்டிஷ், அமெரிக்க போன்ற புகழ்பெற்ற புத்தக கம்பெனிகளிடம் இருந்து கடல் வழியாக வரவழைத்து படித்தவர். தன் வாழ்நாளின் இறுதிவரை புத்தக பைத்தியமாகவே இருந்தார் என்பது அவரோடு அணுக்கமாக இருந்த தமிழக தலைவர்களின் கூற்றாக உள்ளது. லண்டன், நியூயார்க்கை சார்ந்த புத்தகப் பதிப்பாளர்கள் தங்களது விண்டர் ஆட்டம் புத்தகப் பட்டியலை சிங்காரவேலருக்கு அனுப்பிவைப்பார். அதிலிருந்து தனக்கு வேண்டிய புத்தகங்களை தேர்வு செய்து கொள்வார். அன்று பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட பொதுவுடமை சித்தாந்த நூல்களைக் கப்பல் மூலமாக புதுவை வழியாக வரவழைக்கப்பட்டன.

உலகப் புகழ் பெற்ற எழுத்தாளர்களான சேக்ஸ்பியர், மில்டன், பிராய்ட், ரசல், ஜாஸ் போன்றோர் படைப்புகளை விரும்பிப் படித்ததைக் காண முடிகிறது. மேலும் ஹெர்பர்ட், ஸ்பென்சன், தாந்தே, ஹெல்லர், எல்லீஸ், போன்ற தத்துவவாதிகளின் நூல்களையும் தாஸ்தா வெஸ்கி, லியோ டால்ஸ்டாய் போன்ற தத்துவவாதிகளின் நூல்களையும் புஸ்கின், செக்காய், வால்ட் விட்மன் இப்படி உலகப் புகழ்பெற்ற கவிஞர்களையும், அறிஞர்களையும் எழுத்தாளர்களையும் தன்னுடைய நூலகத்தில் அலங்கரித்து வைத்திருந்தவர். தாய்மொழி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கை எழுதவும் படிக்கவும் கற்றுத் தேர்ந்தவர். மேலைநாட்டு மொழிகளான ஜெர்மன, ரஷ்யா, பிரெஞ்சு உள்ளிட்ட மொழிகளைக் கற்றதனால் அவர்களுடைய எழுத்துக்களையும் படித்தவர்.

தென்னிந்தியாவில் தனிநபர் நூலகங்களில் மிகப்பெரிய நூலகம் சிங்காரவேலர் வீட்டு நூலகம். இவருடைய நூலகத்தில் முன்னர் குறிப்பிட்டதை போல 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை சேகரித்து வைத்திருந்தார். இந்த நூலகத்திற்கு மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தவர். இவற்றில் 9000க்கும் மேற்பட்ட நூல்கள் பொதுவுடமைச் சார்ந்த நூல்கலாகும். சிங்காரவேலர் சேகரித்த நூல்களில் ஒரு பகுதி ரஷ்யாவில் உள்ள பெரிய நூலகமான லெனின் நூலகத்தில் சிங்காரவேலர் நூலகம் என்ற பிரிவில் இன்றும் உள்ளது. அவருடைய நூலகம் தலைவர்கள் பலரின் சிந்தனை மாறுதலுக்கு உந்துகோளாய் இருந்தது. பொதுவுடமை இயக்க வரலாற்றில் அறியப்பட்ட எம். என். ராய், இ.எம்.எஸ். நம்பூதிரி பாட் போன்றோர் நூலகத்தை பயன்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் பேரறிஞர் அண்ணா, பா. ஜீவானந்தம், மகாகவி பாரதி, குத்தூசி குருசாமி, ஏ. எஸ். கே. அய்யங்கார், புதுச்சேரி வா. சுப்பையா, எம். பி. எஸ். வேலாயுதம் போன்ற அறிஞர் பெருமக்களும் இந்த நூலகத்தைப் பயன்படுத்தியதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

பேரறிஞர் அண்ணாதுரையும் தோழர் ஜீவானந்தம் போன்றவர்கள் அந்த நூலகத்தின் மேன்மையை அறிந்து பல மணி நேரங்கள் அந்தநூலகத்திலேயே செலவிட்டனர். நூல்களை விரும்பி பேரார்வத்துடன் படிக்கும் எவருக்கும் நூல்களை எடுக்கும் தம் நூலகத்திலே இருந்து அங்கேயே படிக்க தருவார். அவரது நூலகத்திலிருந்து எவரும் புத்தகங்களை எடுத்துச் செல்ல ஒருபோதும் விரும்பியதில்லை.

திரும்பும் பக்கமெல்லாம் நூல்களின் வரிசை. அவர் வீடே நூலகம் அவர் சுவாசிப்பதே வாசிப்பாய் இருந்தது. அறிவியல், அரசியல், உளவியல், சமூகவியல், மானுடவியல், தத்துவவியல் போன்ற எண்ணற்ற துறைகளுடைய நூல்களில் வெளிநாடுகளில் இருந்து வரவழைத்துப் படிக்கும் திறன் அவருக்கு இருந்தது. தடை செய்யப்பட்ட கம்யூனிஸ்ட் நூல்களை ரகசியமாக கப்பலில் வரவழைத்து பின்னர் புதுச்சேரியில் இருந்து மீன் கடையிலும் பூக்கடையிலும் புகை வண்டியில் ஏற்றப்பட்டு அவருக்கு வந்து சேரும்.

“சென்று விடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்” என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப ஐரோப்பா, லண்டன், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளில் இருந்து நூல்களை வரவழித்து திரட்டி பெரும் பொருட்செலவில் தம் வீட்டிலேயே ஒரு நூலகத்தை ஏற்படுத்தினார்.

சிங்காரவேலர் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றுள் அறிவியல், தத்துவம் சார்ந்த கட்டுரைகளே அதிகம். பேய் பிசாசு பற்றிய தெளிவும் உலகம் தோன்றிய விதமும் கடவுளை மறுக்கும் விதமும் மிகவும் சுவாரஸ்யமானவை. ஐந்து கண்ணன் பூச்சாண்டி போன்ற நடைமுறை விஷயங்களோடு பொருத்தி தான் எடுத்துக்கொண்ட தலைப்பை விளக்குவது அருமை. இவரின் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சிந்தனை சிற்பி சிங்காரவேலரின் சிந்தனைகள் என்று மூன்று தொகுதிகளாக வெளியிட்டுள்ளன

குடியரசு இதழில் கட்டுரை எழுதுதல்

தமிழ்நாட்டில் மக்களை பகுத்தறிவு சிந்தனை கொண்டவர்களாக உருவாக்கிய பெருமை தந்தை பெரியாரைச் சாரும். அவர் தன் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நேரடியாகவும் இதழ்கள் வாயிலாகவும் மக்களிடம் கொண்டு போய் சேர்த்தார். குடியரசு இதழ் அதற்கு மிக முக்கிய பங்காற்றியது. அந்த வகையில் தந்தை பெரியார் 1931 ஆம் ஆண்டு ஓராண்டு ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்பொழுது தான்வரும் வரை குடியரசு ஏட்டிற்கு கட்டுரைகள் எழுதி வழிகாட்ட வேண்டும் என்று சிங்காரவேலரை கேட்டுக்கொண்டார். அவர் வேண்டுகோளை ஏற்று குடியரசு இதழில் பெரியாரின் சிந்தனையை மக்களிடம் கொண்டு சென்றார்.

ம.சிங்காரவேலர் படைப்புகள்

1 உலகம் சுழன்று கொண்டே போகிறது.

2 கடவுளும் பிரபஞ்சமும்.

3. கல்மழை உண்டாகும் விதம்‌.

4 கோழிமுட்டை வந்ததும் காணாமல் போனதும்.

5. சமதர்ம உபன்யாசம்.

6. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 1

7. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 2

8. சுயராஜ்யம் யாருக்கு? பாகம் 3

9. தத்துவஞான விஞ்ஞானக் குறிப்புகள்

10. தத்துவ விஞ்ஞான பொருளாதாரக் குறிப்புகள்

11. நடத்தை என்ற நவீன ஆராய்ச்சி

12. பகுத்தறிவென்றால் என்ன?

13. பிரகிருத ஞானம்

14. பிரபஞ்சத் தற்காலப் பிரச்சினை

15. பிரபஞ்சத்தில் தற்காலப் பிரச்சினை

16. பிரபஞ்சப் பிரச்சினைகள்

17. பேய் பிசாசு

18. மனித உற்பவம்

19. மனிதனும் பிரபஞ்சமும்

20. மனோ ஆலய உலகங்கள்

22. மெய்ஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்

23. விஞ்ஞான முறையும் மூடநம்பிக்கையும்

24. விஞ்ஞானத்தின் அவசியம்

25. ஜோதிட ஆபாசம்.

இதுபோன்ற எண்ணற்ற கட்டுரைகளை எழுதிப் பகுத்தறிவுக் கருத்துக்களை கொண்டு போய் சேர்த்தார் .

பொதுவுடைமைச் சித்தாந்தம் :
பின்னி ஆலைப் போராட்டம்.

உலக வரலாற்றில் தொழிலாளர்களுக்கு எதிராக பல்வேறு காலகட்டங்களில் அநீதிகள் ஏற்பட்டு வருவதை யாரும் மறுக்க முடியாது. அதிகார மமதையில் துட்சமென நினைக்கும் மக்களுக்கு ஆதரவாக நின்று அதிகாரத்தின் வரை எடுத்து உருவான அமைப்பு பொதுவுடமை இயக்கம். இந்த பொதுவுடமை இயக்கம் லாப நட்ட கணக்கு பார்த்து மக்கள் பணியாற்ற விரும்புவதில்லை. மக்கள் பணியே மகத்தானது என்ற கோட்பாட்டின் அடிப்படையில் எப்பொழுதும் மக்களுக்கு துணையாக இருக்கும் அமைப்பு.அந்த வகையில் பின்னி மில் மக்கள் போராட்டமாக மாறிய வரலாற்றைப் பற்றி காணலாம். 1918 ஆம் ஆண்டில் சிங்காரவேலர் நெருங்கிய தோழரும் தமிழறிஞருமான திரு.வி.கலியாணசுந்தரம் சென்னை பின்னி. கர்னாட்டிக் ஆலைத் தொழிலாளருக்காகச் சென்னை தொழிலாளர் சங்கத்தைத் தொடங்கினார். இவரது நெருங்கிய நண்பர். சிங்கார வேலரும் அந்த சங்கக் கூட்டங்களுக்கு வந்து தனக்கு உதவி செய்ய வேண்டுமென கேட்டுக் கொண்டார். அதையேற்று சிங்கார வேலர் அந்தச் ஆர்வம் காட்டினார். அச்சமயத்தில் இந்த இரண்டு ஆலை(மில்)களிலும் சுமார் 14 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளிகளின் ஊர்வலங்களிலும் அவர் பங்கெடுத்தார். 1920 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் தேதியன்று ஆங்கிலேய காவல்துறை பின்னி ஆலைத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் குடு நடத்தி இரண்டு தொழிலாளிகளைக் கொன்றது. அவர்களின் உடல்களை அடக்கம் செய்யும் நிகழ்ச்சியின் போது அந்த இரு உடல்களைத் தூக்கிச்சென்றவர்களில் சிங்காரவேலரும் ஒருவர். அதன்பின் 1921ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதியன்று காவலதுறையினர் நடத்திய மற்றொரு துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண் உள்பட ஏழு பின்னி ஆலைத் தொழிலாளிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட சிங்கார வேலர் அதைக் குறித்து ஒரு உருக்கமான கட்டுரை எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பினார்

பொதுவுடைமைக் கட்சி தொடக்கம்

ம. சிங்காரவேலர் Archives - கிழக்கு டுடே

1922 இல் பம்பாயைச் சேர்ந்த எஸ்.ஏ.டாங்கேயுடன் தொடர்பு ஏற்பட்டது. 1922 இல் எம் என் ராய் வெளிப்படுத்திய திட்டத்தால் கவரப்பட்டு அவருடன் தொடர்ந்து கடிதப் போக்குவரத்து வைத்துக்கொண்டிருந்தார். 1923 இல் அவர் மே தினம் கொண்டாட இந்துஸ்தான் உழவர் உழைப்பாளர் கட்சி (லேபர் கிசான் பார்ட்டி ஆஃப் இந்துஸ்தான் எல்.கே.பி.எச்) என்கிற கட்சியைப் புரட்சிகரத் திட்டத்துடன் தொடங்கினார். லேபர் கிசான் கெஜட் என்ற பெயரில் ஆங்கிலத்தில் வார இதழையும், தொழிலாளன் என்ற தமிழ் வார இதழையும் ஆசிரியராக இருந்து பதிப்பித்து வெளியிட்டார். மார்ச் 1924 இல் கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கில் சிங்காரவேலர் குற்றம்சாட்டப்பட்டார். அவர் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டிருந்ததால் அவருக்கு எதிரான நடவடிக்கை கைவிடப்பட்டது.இவ் வழக்கே இந்திய மண்ணில் பொதுவுடைமை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற காரணமானது. 1922இல் கயாவில் நடைபெற்ற காங்கிரசில் சிங்கார வேலர் கலந்துகொண்டார் இந்த மாநாட்டில் தான் எஸ்.ஏ. டாங்கேயைச் சந்தித்தார். தொழிலாளர் ஸ்தாபன அமைப்பு என்ற தலைப்பில் சிங்காரவேலர் பேசினார். அப்பொழுது, தலைவர் அவர்களே! தோழர்களே! நான் உலகக் கம்யூனிஸ்டுகளின் பிரதிநிதியாக உங்கள்முன் நிற்கின்றேன். உலகக் கம்யூனிஸ்டுகளின் வாழ்த்துகளை உரித்தாக்குகின்றேன். நமது காங்கிரசு இயக்கம் சுதந்தரம் பெறப்போராடிக் கொண்டிருக்கிறது. இவ்வுரிமைகளை எல்லோரும் பெறவேண்டும். சிலர் கைகளில் அதிகாரம் குவிவதை நாம் விரும்பவில்லை. சுயராஜ்ஜியம் என்பது மக்களும் உண்மையான விடுதலையைப் பெறுவதாக இருக்க வேண்டும். ஆகையால் தோழர்களே, நாம் தொழிலாளர்கள் நலத்தில் மிகுதியான கவனம் செலுத்த வேண்டும் என்று நான் வேண்டுகின்றேன். தொழிலாளரை நேரடியாக அணுகி நாட்டிலுள்ள தொழிற் சங்கங்களை காங்கிரசு அமைப்பின் ஒரு பகுதியாக ஒன்று திரட்ட வேண்டும். கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் சமத்துவம் சகோதரத்துவம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் அத்தகைய மனித இன ஒற்றுமையை உண்டாக்க இந்தியத் தொழிலாளரும் உதவி செய்வர் என்று பதிவு செய்துள்ளார்.

மே நாள்

உழைக்கும் பாட்டாளிகளே ஒன்று கூடுதல் என்ற தாரக மந்திரத்திற்கு அழுத்தம் தரும் நாள்தான் மே தினம். இந்த மே தினத்தில் உழைக்கும் மக்களை தலை நிமிர செய்யும் வகையில் கொண்டாட கூடிய தினமாக பார்க்க முடியும். இது உலகில் எல்லா நாடுகளிலும் உழைக்கும் தொழிலாளர்களுக்கு வந்தனம் செய்யும் தினம்
உலகமுற்றும் தொழிலாளர்களால் கொண்டாடப்படும் மே நாள்,

சிங்காரவேலர் பொதுவுடமை இயக்கத்தின் போர்வாள் என்று சொல்ல முடியும் அதன் அடிப்படையில் தொழிலாளர் தினத்தை குறிப்பாக மே தினத்தை கொண்டாடியதை பற்றி பின்வருமாறு காணலாம் இந்தியாவில் முதன்முதலாக 1923ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் சிங்காரவேலர் கொண்டாடினார். அன்றைய தினமே கட்சியைத் தொடங்கினார். அக்கட்சி புரட்சிகர ஜனநாயக சமத்துவத் திட்டத்திற்காகக் காங்கிரசுக்குள்ளேயே செயலாற்றிட வேண்டுமென்று அதனைத் தொடங்கினார்.

சிங்காரவேலர் தலைமையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட்களின் முதல் மாநாடு

கான்பூர் பத்திரிக்கையாளரான சத்திய பக்த் என்பவர் சட்டபூர்வமான இந்திய பொதுவுடைமைக் கட்சி’ அமைக்கப்பட்டிருப்பதாக 1924 செப்டம்பர் மாதம் அறிவித்தார். இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் முதல் மாநாடு சிங்காரவேலரின் தலைமையில் தான் 1925-ம் ஆண்டு டிசம்பர் 28 முதல் 30 வரை கான்பூரில் நடந்தது.

சென்னை நகரின் தொழிலாளர் போராட்டங்களிலும், தென்னிந்திய ரயில்வே போராட்டங்களிலும் மும்முரமாகப் பங்கேற்றதுடன் தனது பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலும் கட்டுரைகள் எழுதியும் பொதுக் கூட்டங்கள் நடத்தியும் ஓய்ச்சல் ஒழிவின்றி கம்யூனிசப் பிரச்சாரம் செய்து வந்தார் மே தினம் உலக அமைதி தினம்

அறிஞர்களின் பார்வையில்
இன்குலாப் பார்வையில்

கட்சியைத் தச்சு செய்ததில்
மே தினச் செங்கொடியை உயர்த்தியதில்
தன்மான இயக்கத்தின் தடங்களில்
விடுதலைப் போரின் தகிக்கும் வெளிகளில்
அனைத்திலும் முதலாவதாக அவரது சுவடு!
அவர் பெயர் சுட்டாது”

சிங்காரவேலர் குறித்து பாரதிதாசன்

சுயமரியாதை இயக்கதோடு மிகநெருங்கிய நட்பைக் கொண்டிருந்தார். பாவேந்தர் பாரதிதாசன் சிங்காரவேலர் குறித்து எழுதும்போது,

சிங்காரவேலனைப்போல் எங்கேனும் கண்டதுண்டோ?
பொங்கிய சீர்திருத்தம் பொலிந்ததும் அவனால்
பொய் புரட் டறியாமை பொசிந்ததும் அவனால்
சங்கம் தொழிலாளர்க் கமைந்ததும் அவனால்
தமிழர்க்குப் புத்தெண்மை புகுந்ததும் அவனால்
மூலதனத்தின் பொருள் புரிந்ததும் அவனால்
புதுவுலகக்கனா முளைத்ததும் அவனால்
கோலப் பொதுவுடைமை கிளைத்ததும் அவனால்
கூடிய அறிவியல் அரசியல் அவனால்
தோழமை உணர்வு தோன்றியது அவனால்
தூய தன்மானம் தொடர்ந்ததும் அவனால்
ஏழ்மைஇலாக் கொள்கை எழுந்ததும் அவனால்
எல்லோர்க்கும் எல்லாம் என்றுணர்ந்ததும் அவனால்!
போர்க்குணம் மிகுந்தநல் செயல் முன்னோடி
பொதுவுடைமைக் கேகுக அவன் பின்னாடி”

என்று பாரதிதாசன் பாராட்டியுள்ளார். இன்னுமின்னும் அறிஞர் பெருமக்கள் தங்கள் கருத்துக்களை வலிமையாக பதிவுசெய்துள்ளனர். பண்டித்ர் அயோத்திதாசர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா உள்ளிட்டவர்கள் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலரின் தியாகத்தைப் போற்றும் வகையில் பதிவு செய்ததை தனியாக ஆராயப்பட வேண்டும். இது அடுத்த தலைமுறைக்கு நாம் காட்டி செல்லும் நற்பாதையாகும். சிங்காரவேலரின் வரலாற்றை அடுத்த தலைமுறையினர் அவரின் அகற்றியும் புறத்தையும் அறிந்து கொள்ள நல்வாய்ப்பாக அமையும்.

(குறிப்பு: இந்தக்கட்டுரையை ஓராண்டுக்கு முன்பே எழுதுவதற்கு திட்டமிட்டேன். அப்பொழுது பல நூல்களையும் இணையதள கட்டுரைகளையும் வாசித்தேன். அவர்களை இந்நேரத்தில் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்).

எழுதியவர்: 

பேரா. எ. பாவலன்,
உதவிப் பேராசிரியர்,
அகர்சந்த் மான்மல் ஜெயின் கல்லூரி
சென்னை – 61

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *